2 நாளாகமம் 20 : 1 (RCTA)
பின்னர் மோவாபியரும் அம்மோனியரும், அவர்களோடு மெயூனியருள் சிலரும் சேர்ந்து கொண்டு யோசபாத்துக்கு எதிராகப் படையெடுத்து வந்தனர்.
2 நாளாகமம் 20 : 2 (RCTA)
சிலர் யோசபாத்திடம் வந்து, "ஏராளமான படை வீரர் கடலின் அக்கரையிலுள்ள சீரியாவிலிருந்து உம்மேல் படையெடுத்து வருகின்றனர். அவர்கள் இப்பொழுது எங்காதி என்ற அசாசோந்தமாரிலே இருக்கிறார்கள்" என்று அறிவித்தனர்.
2 நாளாகமம் 20 : 3 (RCTA)
அதைக்கேட்ட யோசபாத் அஞ்சி, ஆண்டவரை முழுமனத்தோடும் மன்றாடினான்; யூதா மக்கள் அனைவரும் நோன்பு காக்கக் கட்டளையிட்டான்.
2 நாளாகமம் 20 : 4 (RCTA)
அவ்வாறே யூதா மக்கள் தங்கள் நகர்களிலிருந்து வந்து ஒன்று கூடினார்கள்; ஆண்டவரின் உதவியைத் தேடி மன்றாடினார்கள்.
2 நாளாகமம் 20 : 5 (RCTA)
அப்பொழுது யோசபாத் ஆண்டவரின் ஆலயத்தில் புது வளாகத்தின் முன் நின்று கொண்டு, யூதா மக்களும் யெருசலேம் குடிகளும் பார்க்கக் கடவுளை நோக்கி,
2 நாளாகமம் 20 : 6 (RCTA)
எங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரே, விண்ணகக் கடவுள் நீரே! நாடுகளின் அரசுகளை எல்லாம் ஆளுகிறவரும் நீரே! வலிமையும் ஆற்றலும் வாய்ந்தவரும் நீரே! எனவே, உம்மை எதிர்த்து நிற்க ஒருவராலும் இயலாது.
2 நாளாகமம் 20 : 7 (RCTA)
எங்கள் கடவுளே, நீர் அன்றோ உம் மக்கள் இஸ்ராயேலுக்கு முன்பாக இந்நாட்டு மக்கள் அனைவரையும் கொன்றுபோட்டு, அந்நாட்டை உம் நண்பன் ஆபிரகாமின் வழித்தோன்றல்களுக்கு நிரந்தரமாகக் கொடுத்தவர்?
2 நாளாகமம் 20 : 8 (RCTA)
ஆகவே அவர்கள் இந்நாட்டில் குடியேறி இதில் உமது திருப்பெயர் விளங்கும்படி இத்திருவிடத்தைக் கட்டினார்கள்.
2 நாளாகமம் 20 : 9 (RCTA)
போர், கொள்ளைநோய், பஞ்சம் முதலிய எவ்விதத் தீங்கும் எங்கள் மேல் வந்துற்றால், உமது திருப்பெயருக்குப் புகழ்ச்சியாகக் கட்டப்பட்ட இவ்வாலயத்திற்கு நாங்கள் வந்து உம் திருமுன் நின்று, எங்கள் துன்பவேளையில் உம்மைப் பார்த்துக் கூப்பிடுவோம். நீரே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளி, எங்களை மீட்பீர் என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
2 நாளாகமம் 20 : 10 (RCTA)
இதோ! அம்மோனியரும் மோவாபியரும் செயீர் மலை நாட்டாரும் ஒன்று கூடி எங்கள் மேல் படையெடுத்து வருகிறார்கள். எகிப்து நாட்டிலிருந்து இஸ்ராயேலர் வந்த காலத்தில் இவர்களின் நாட்டின் வழியாகப் போக நீர் அவர்களை அனுமதிக்கவில்லை; எனவே, இஸ்ராயேலர் அவர்களை விட்டு விலகி, அவர்களை அழிக்காது விட்டு வைத்தார்கள்.
2 நாளாகமம் 20 : 11 (RCTA)
இப்பொழுதோ அவர்கள் நன்றி கொன்றவர்களாய் நீர் எமக்கு உடமையாக்கின இந்நாட்டிலிருந்து எங்களைத் துரத்திவிட முயலுகிறார்கள்.
2 நாளாகமம் 20 : 12 (RCTA)
எங்கள் கடவுளே, அவர்களுக்கு நீர் நீதி வழங்க மாட்டீரோ? எங்களுக்கு எதிராக வருகிற இப்பெரும் படையை எதிர்த்து நிற்க எங்களுக்கு வலுவில்லை என்பது உண்மையே. நாங்கள் செய்ய வேண்டியது எதுவெனத் தெரியவில்லை. ஆகையால் உம் உதவியை நாடுவதை விட, வேறு வழி அறியோம்" என்று மன்றாடினான்.
2 நாளாகமம் 20 : 13 (RCTA)
யூதா குலத்தார் அனைவரும் அவர்களின் குழந்தைகளும் மனைவியரும் புதல்வர்களும் ஆண்டவரின் திருமுன் நின்று கொண்டிருந்தனர்.
2 நாளாகமம் 20 : 14 (RCTA)
அந்நேரத்தில் ஆண்டவரின் ஆவி சபையார் நடுவிலே இருந்த யகாசியேலின் மேல் இறங்கியது. இவர் ஆசாப்பின் குலத்தில் உதித்த ஒரு லேவியர். இவருடைய தந்தை பெயர் சக்கரியாஸ்; இவனுடைய தந்தை பெயர் பனாயியாஸ்; இவன் தந்தை பெயர் ஏகியேல்; இவன் தந்தை பெயர் மத்தானியாஸ்.
2 நாளாகமம் 20 : 15 (RCTA)
யகாசியேல் எழுந்து மக்களை நோக்கி, "யூதாவின் மக்களே, யெருசலேமின் குடிகளே, அரசர் யோசபாத்தே, அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள். ஆண்டவர் சொல்லுகிறதாவது: 'நீங்கள் எதிரிகளின் பெரும் படையைக்கண்டு அஞ்சவும் வேண்டாம்; நிலை கலங்கவும் வேண்டாம். இப்போர் கடவுளின் போரேயன்றி உங்களது போரன்று.
2 நாளாகமம் 20 : 16 (RCTA)
நாளைக்கு நீங்கள் அவர்களுக்கு எதிராகப் படையெடுத்துச் செல்லுங்கள்; அவர்கள் சீஸ் என்ற குன்று வழியாய் வருவார்கள்; நீங்கள் போய் எருவேல் பாலைவனத்திற்கு எதிரேயுள்ள ஆற்றின் கடைக்கோடியில் அவர்களைச் சந்திக்க வேண்டும்.
2 நாளாகமம் 20 : 17 (RCTA)
நீங்கள் போராட வேண்டியதே இல்லை. திடமனத்துடன் நின்றாலே போதும். யூதாவின் மனிதரே, யெருசலேமின் குடிகளை, உங்களுக்குத் துணையாக ஆண்டவர் எவ்விதமாய் எழுந்து வருவாரென்று உங்கள் கண்ணாலேயே காண்பீர்கள். அஞ்சாமலும் நிலை கலங்காமலும் இருங்கள். நாளைக்கு அவர்கள் மேல் படையெடுத்துச் செல்லுங்கள். ஆண்டவர் உங்களோடு இருப்பார்' என்பதே" என்றார்.
2 நாளாகமம் 20 : 18 (RCTA)
இதைக் கேட்டவுடன் யோசபாத்தும் யூதா குலத்தார் அனைவரும் யெருசலேமின் குடிகளும் நெடுங்கிடையாய் விழுந்து ஆண்டவரை ஆராதித்தனர்.
2 நாளாகமம் 20 : 19 (RCTA)
காகாத்தின் புதல்வர்களான லேவியர்களும் உரத்த குரலில் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை வாழ்த்தத் தொடங்கினார்கள்.
2 நாளாகமம் 20 : 20 (RCTA)
அவர்கள் அதிகாலையில் எழுந்து தேக்குவா என்ற பாலைவனத்தின் வழியாய் நடந்து போயினர். அப்பொழுது யோசபாத் அவர்களின் நடுவே நின்று, "யூதாவின் மனிதரே, யெருசலேமின் குடிகளே, நீங்கள் அனைவரும் எனக்குச் செவி கொடுங்கள். உங்கள் கடவுளாகிய ஆண்டவர்பால் உங்கள் நம்பிக்கை வையுங்கள்; வைத்தால் உங்களுக்குத் தீங்கு ஒன்றும் வராது. அவருடைய இறைவாக்கினரின் சொல்லை நம்புங்கள்; நம்பினால் எல்லாம் உங்களுக்கு வெற்றிகரமாய் முடியும்" என்று சொன்னான்.
2 நாளாகமம் 20 : 21 (RCTA)
இவ்வாறு அவன் மக்களுக்குப் புத்திமதி கூறி, அவர்களுடைய அணிகளுக்கு முன்னே நடக்கவும் ஆண்டவரைத் துதிக்கவும், பாடகர்களைக் கூட்டம் கூட்டமாய் நிறுத்தி, "ஆண்டவரைப் போற்றுங்கள்; ஏனெனில் அவர்தம் இரக்கம் என்றென்றும் உள்ளது" என்று பாடவும் கட்டளையிட்டான்.
2 நாளாகமம் 20 : 22 (RCTA)
அவர்கள் அவ்வாறே பாடி ஆண்டவரைத் துதிக்கத் தொடங்கினர். உடனே யூதாவை எதிர்த்து வந்த பகைவர்களான அம்மோனியரும் மோவாபியரும் செயீர் மலைநாட்டாரும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகி ஆண்டவரது வல்லமையினால் வெட்டுண்டு விழுந்தனர்.
2 நாளாகமம் 20 : 23 (RCTA)
அதாவது, அம்மோனியரும் மோவாபியரும் செயீர் மலை நாட்டாரைத் தாக்கி அவர்களைக் கொன்று போட்டனர். அவர்களைக் கொன்றழித்த பின்போ அவர்கள் தங்களுக்குள்ளே கைகலந்து ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டனர்.
2 நாளாகமம் 20 : 24 (RCTA)
யூதா மனிதர் பாலைவனத்தை நோக்கியிருந்த ஒரு மேட்டின் மேல் ஏறிச் சுற்றிலும் பார்த்தனர். அப்பொழுது எங்குப் பார்த்தாலும் ஒரே பிணங்களாகவே கிடந்தன. இதைக் கண்ணுற்ற அவர்கள் தங்கள் எதிரிகளில் ஒருவனாவது உயிர் தப்பவில்லை என்று அறிந்து கொண்டனர்.
2 நாளாகமம் 20 : 25 (RCTA)
உடனே யோசபாத்தும் அவனுடைய மக்களும் சென்று மடிந்தோரின் உடைமைகளைக் கொள்ளையிடத் தொடங்கினார்கள். பிணங்களின் அருகே ஏராளமான பொருட்களும் ஆடையணிகளும் விலையுர்ந்த பொருட்களும் கிடக்கக் கண்டு, மூன்று நாட்களாக அவற்றைக் கொள்ளையிட்டனர்.
2 நாளாகமம் 20 : 26 (RCTA)
நான்காம் நாள் புகழ்ச்சிப் பள்ளத்தாக்கிலே அவர்கள் ஒன்று கூடினர். அங்கே ஆண்டவரைப் புகழ்ந்து பாடினர். எனவே இன்று வரை அவ்விடம் 'புகழ்ச்சிப் பள்ளத்தாக்கு' என்று அழைக்கப்பட்டு வருகிறது.
2 நாளாகமம் 20 : 27 (RCTA)
அங்கிருந்து யூதாவின் மனிதர் யாவரும், யெருசலேம் நகர மக்கள் அனைவரும் யோசபாத்தைப் பின்பற்றி மகிழ்ச்சியோடு யெருசலேமுக்குத் திரும்பினர். ஏனெனில் ஆண்டவர் அவர்களுடைய பகைவர்களை முறியடித்ததன் மூலம் அவர்கள் மகிழ்வுறச் செய்திருந்தார்.
2 நாளாகமம் 20 : 28 (RCTA)
ஆகையால் அவர்கள் யெருசலேமுக்கு வந்து, தம்புருகளையும் ஒலித்து ஆண்டவரின் ஆலயத்திற்குள் நுழைந்தனர்.
2 நாளாகமம் 20 : 29 (RCTA)
ஆண்டவர் இஸ்ராயேலின் எதிரிகளோடு போரிட்டார் என்ற செய்தியை கேள்வியுற்ற எல்லா நாட்டினரும் ஆண்டவருக்கு அஞ்சினர்.
2 நாளாகமம் 20 : 30 (RCTA)
கடவுளின் அருளால் யோசபாத்தின் அரசு எங்கணும் அமைதி நிலவியது.
2 நாளாகமம் 20 : 31 (RCTA)
யோசபாத் யூதா நாட்டை ஆண்டு வந்தான். அவன் அரியணை ஏறின போது அவனுக்கு வயது முப்பத்தைந்து. இருபத்தைந்து ஆண்டுகள் அவன் யெருசலேமில் ஆட்சி புரிந்தான். அவன் தாய் சேலாகீயின் மகள் அஜுபா.
2 நாளாகமம் 20 : 32 (RCTA)
அவன் தன் தந்தை ஆசாவின் வழிகளை விட்டு விலகாது ஆண்டவர் திருமுன் நேர்மையாய் நடந்து வந்தான்.
2 நாளாகமம் 20 : 33 (RCTA)
ஆயினும் அவன் மேடைகளை அழித்துவிடவுமில்லை; மக்களும் தங்கள் முன்னோரின் கடவுளாகிய ஆண்டவரிடம் இன்னும் மனம் திரும்பி வரவுமில்லை.
2 நாளாகமம் 20 : 34 (RCTA)
யோசபாத்தின் முழு வரலாற்றையும் இஸ்ராயேல் அரசர்களின் வரலாற்றில் காணலாம். அனானியின் மகன் ஏகு அதை மேற்சொன்ன ஏட்டினிலே எழுதி வைத்தான்.
2 நாளாகமம் 20 : 35 (RCTA)
யூதாவின் அரசன் யோசபாத் இறுதியில் மிகவும் கெட்ட நடத்தையுள்ள ஒக்கோசியாஸ் என்ற இஸ்ராயேலின் அரசனோடு தோழமை கொண்டான்.
2 நாளாகமம் 20 : 36 (RCTA)
மேலும் தார்சீசுக்குப் போகும்படி கப்பல்களைக் கட்ட அவனோடு ஒப்பந்தமும் செய்து கொண்டான். அக்கப்பல்கள் அசியோங்கபேரில் கட்டப்பட்டன.
2 நாளாகமம் 20 : 37 (RCTA)
ஆனால் மரேசா ஊரானாகிய தோதாவின் மகன் எலியெசர் யோசபாத்தை நோக்கி, "நீர் ஒக்கோசியாசோடு தோழமை கொண்டமையால், கடவுளாகிய ஆண்டவர் உம் ஆக்கச் செயல்களைக் கெடுத்துவிடுவார்" என்று இறைவாக்கு உரைத்தார். அவர்களின் கப்பல்கள் உடைந்து போய்த் தார்சீசுக்குச் செல்ல முடியாது போயின.
❮
❯