2 நாளாகமம் 15 : 1 (RCTA)
அப்பொழுது கடவுளின் ஆவி ஒதேதின் மகன் அசரியாசின் மேல் இறங்கியது.
2 நாளாகமம் 15 : 2 (RCTA)
உடனே அவர் ஆசாவிடம் சென்று அவனை நோக்கி, "ஆசாவே, யூதாவின் புதல்வரே, பென்யமீன் குலத்தினரே கேளுங்கள்: நீங்கள் ஆண்டவரோடு இருக்கும் வரை அவரும் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைப் புறக்கணித்தால், அவரும் உங்களைப் புறக்கணிப்பார்.
2 நாளாகமம் 15 : 3 (RCTA)
இஸ்ராயேல் நடுவே பல நாளாய் உண்மைக் கடவுள் இல்லை; போதிக்கக் குருக்களும் இல்லை; திருச்சட்டமும் இல்லை.
2 நாளாகமம் 15 : 4 (RCTA)
ஆனால் இஸ்ராயேலர் துன்பப் புயலில் அகப்பட்டுத் தங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் மனம் திரும்பி அவரைத் தேடுவார்கள். அப்பொழுது அவர்கள் அவரைக் கண்டடைவர்.
2 நாளாகமம் 15 : 5 (RCTA)
அக்காலத்தில் யாரும் அமைதியில் நடமாட முடியாது. ஏனெனில் மண்ணக மக்கள் அனைவருக்குள்ளும் பயங்கரக் குழப்பம் ஏற்படும்.
2 நாளாகமம் 15 : 6 (RCTA)
நாடு நாட்டையும், நகர் நகரையும் எதிர்த்து எழும். கடவுள் அவர்களைப் பற்பல இடுக்கண்களாலும் துன்புறுத்துவார்.
2 நாளாகமம் 15 : 7 (RCTA)
நீங்கள் கலங்க வேண்டாம்; தைரியமாய் இருங்கள்; ஏனெனில் உங்கள் செயல்களுக்கு ஏற்ற கைம்மாறு கிடைக்கும்" என்றார்.
2 நாளாகமம் 15 : 8 (RCTA)
ஒதேதின் மகனான இறைவாக்கினர் அசரியாசு உரைத்த இறைவாக்கைக் கேட்ட போது ஆசா வீறு கொண்டான்; யூதா நாட்டிலும் பென்யமீன் நாட்டிலும், தான் கைப்பற்றியிருந்த நகர்களிலும், எப்பிராயீம் மலை நாட்டிலும் அகப்பட்ட சிலைகளை அகற்றி, ஆண்டவரின் மண்டபத்திற்கு முன்பாக இருந்த ஆண்டவரின் பலிபீடத்தைப் புதுப்பித்தான்.
2 நாளாகமம் 15 : 9 (RCTA)
பிறகு யூதா மக்களையும் பென்யமீன் மக்களையும், அவர்களோடு எப்பிராயீமிலும் மனாசேயிலும் சிமேயோனிலும் வாழ்ந்து வந்த புறவினத்தாரையும் ஒன்று திரட்டினான். கடவுளாகிய ஆண்டவர் ஆசாவோடு இருக்கிறதைக் கண்டு இவர்களில் பலரும் இஸ்ராயேலை விட்டு அவனிடம் தஞ்சம் அடைந்தனர்.
2 நாளாகமம் 15 : 10 (RCTA)
அவர்கள் எல்லாரும் அரசன் ஆசாவின் பதினைந்தாம் ஆண்டில் யெருசலேமில் கூடி வந்தனர்.
2 நாளாகமம் 15 : 11 (RCTA)
தங்கள் கொள்ளைப் பொருட்களில் எழுநூறு மாடுகளையும் ஏழாயிரம் கடாக்களையும் அன்று ஆண்டவருக்குப் பலியிட்டனர்.
2 நாளாகமம் 15 : 12 (RCTA)
அவர்கள் முழு ஆன்மாவோடும் முழு மனதோடும் தங்கள் முன்னோர்களின் கடவுளாகிய ஆண்டவரை தேடுவோம் என்றும்,
2 நாளாகமம் 15 : 13 (RCTA)
சிறியோர் பெரியோர், ஆண் பெண் அனைவரிலும் இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரை யார் யார் தேடாமல் இருக்கிறார்களோ அவர்கள் சாகக்கடவர் என்றும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்கள்.
2 நாளாகமம் 15 : 14 (RCTA)
பூரிகைகளும் எக்காளங்களும் ஒலிக்க, மிகுந்த ஆரவாரத்துடன் ஆண்டவரின் திருப் பெயரால் ஆணையிட்டார்கள்.
2 நாளாகமம் 15 : 15 (RCTA)
இதன் பொருட்டு யூதா மக்கள் அனைவரும் மகிழ்ந்தனர். தங்கள் முழு இதயத்தோடும் ஆணையிட்டுத் தங்கள் முழுமனத்தோடும் அவரைத் தேடிக் கண்டடைந்தனர். ஆண்டவரும் அவர்களுக்கு அமைதி அளித்தார்.
2 நாளாகமம் 15 : 16 (RCTA)
ஒரு சிலைத்தோப்பிலே அரசனின் தாய் மாக்கா பரியப் என்ற அருவருப்பான ஒரு சிலையைச் செய்து வைத்திருந்தாள். அதைக் கேள்வியுற்ற ஆசா அவளை அரசியாய் இராதபடி விலக்கி வைத்தான். மேலும் அச்சிலையை உடைத்து நொறுக்கிக் கெதிரோன் பள்ளத்தாக்கிலே அதைச் சுட்டெரித்தான்.
2 நாளாகமம் 15 : 17 (RCTA)
மேடைகள் இன்னும் இஸ்ராயேலிலே ஒழிந்தபாடில்லை. ஆசாவோ தன் வாழ்நாள் முழுவதும் நேரிய வழியிலேயே நடந்து வந்தான்.
2 நாளாகமம் 15 : 18 (RCTA)
தன் தந்தையும் தானும் நேர்ந்து கொண்ட வெள்ளியையும் பொன்னையும் பலவிதத் தட்டுமுட்டுகளையும் ஆசா கடவுளின் ஆலயத்திற்குச் செலுத்தினான்.
2 நாளாகமம் 15 : 19 (RCTA)
ஆசாவினது ஆட்சியின் முப்பத்தைந்தாம் ஆண்டு வரை நாட்டில் போரே இல்லை.
❮
❯