1 தீமோத்தேயு 6 : 1 (RCTA)
அடிமைத்தளையில் கட்டுண்டிருப்பவர் எல்லாரும் தங்கள் தலைவர்களை முழு மரியாதைக்கு உரியவர்களாகக் கருத வேண்டும். அப்பொழுதுதான் கடவுளுடைய பெயருக்கும் போதனைக்கும் இழுக்கு ஏற்படாது.
1 தீமோத்தேயு 6 : 2 (RCTA)
விசுவாசிகளைத் தலைவர்களாகக் கொண்டுள்ள அடிமைகள், தலைவர்கள் சகோதரர்கள் தானே என்று மதிப்புக் கொடுக்காதிருந்தால் தவறு. தங்கள் ஊழியத்தால் பயன் பெறுபவர்கள் விசுவாசிகளும் கடவுளுடைய அன்பர்களுமாக இருப்பதால், அடிமைகள் இன்னும் ஆர்வத்துடன் ஊழியம் செய்யவேண்டும். நீர் தரும் போதனைகளும் அறிவுரைகளும் இதற்கேற்ப அமையட்டும்.
1 தீமோத்தேயு 6 : 3 (RCTA)
யாராவது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நலமிக்க வார்த்தைகளிலும், பக்தி நெறிக்கு ஒத்த போதனையிலும் நிலைத்திராது மாறுபட்ட கொள்கைகளைப் போதித்தால், அவன் ஓர் அறிவிலி.
1 தீமோத்தேயு 6 : 4 (RCTA)
இறுமாப்புக் கொண்டு குருடனானவன். வீண் வாக்குவாதம் செய்வதிலும், வெறும் சொற்களைப் பற்றிச் சண்டையிடுவதிலும் பைத்தியம் கொண்டவன். இவற்றினின்று தான் பொறாமை, சண்டை, சச்சரவு, பழிச்சொல், பிறர் மீது பொல்லாத சந்தேகங்கள்.
1 தீமோத்தேயு 6 : 5 (RCTA)
சீரழிந்த மனத்தவர்களிடையே மோதல்கள் முதலியனவெல்லாம் உண்டாகின்றன. இப்படிச் சீரழிந்தவர்கள் உண்மையை இழந்தவர்களாய், பக்தி நெறியை ஆதாயம் தரும் தொழில் எனக் கருதுகிறார்கள்.
1 தீமோத்தேயு 6 : 6 (RCTA)
ஆம், பக்தி நெறி நல்ல ஆதாயம் தருவதுதான்; ஆனால் போதுமென்ற மனமுள்ளவர்களுக்கே தரும்.
1 தீமோத்தேயு 6 : 7 (RCTA)
பிறந்த பொழுது நாம் ஒன்றையும் கொண்டுவரவில்லை. இறக்கும் பொழுது எதையும் எடுத்துச் செல்லவும் முடியாது.
1 தீமோத்தேயு 6 : 8 (RCTA)
எனவே, உணவு, உடையோடு மனநிறைவுகொள்வோம்.
1 தீமோத்தேயு 6 : 9 (RCTA)
செல்வம் சேர்க்க விரும்புகிறவன் சோதனைகளில் வீழ்கிறான்; பேயின் வலையில் சிக்குகிறான். தீமை விளைவிக்கும் மதிகேடான பல்வேறு ஆசைகளில் அமிழ்ந்து விடுகிறான். இவையோ அவனைக் கேட்டிலும் அழிவிலும் ஆழ்த்திவிடும்.
1 தீமோத்தேயு 6 : 10 (RCTA)
பண ஆசைதான் எல்லாத் தீமைகளுக்கும் வேர். அந்த ஆசையால்தான் சிலர் தங்களையே ஊடுருவக் குத்திக்கொள்வதுபோல் பல துன்பங்களைத் தங்கள்மேல் வருவித்துக்கொண்டார்கள்.
1 தீமோத்தேயு 6 : 11 (RCTA)
ஆனால், கடவுளின் அடியாராகிய நீர் இவையெல்லாம் தவிர்த்துவிடும். நீதி, பக்தி, விசுவாசம், அன்பு, மனவுறுதி, சாந்தம் இவற்றைக் கடைப்பிடியும்.
1 தீமோத்தேயு 6 : 12 (RCTA)
விசுவாச வாழ்வு என்னும் சீரிய பந்தயத்தில் தளராதீர். முடிவில்லா வாழ்வைக் கைப்பற்றிக் கொள்ளும். அதற்காகவே அழைக்கப் பெற்றிருக்கிறீர். அதை முன்னிட்டே பல சாட்சிகள் முன்னிலையில் சிறந்த விசுவாச அறிக்கை செய்தீர்.
1 தீமோத்தேயு 6 : 13 (RCTA)
அனைத்திற்கும் உயிரளிக்கும் கடவுள் முன்னிலையிலும், போஞ்சு பிலாத்தின் முன் நின்று சிறந்த விசுவாச அறிக்கையைச் செய்த இயேசு கிறிஸ்து முன்னிலையிலும் உமக்கு வலியுறுத்திச் சொல்லுகிறேன்.
1 தீமோத்தேயு 6 : 14 (RCTA)
நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பிரசன்னமாகும் வரை எக்குற்றத்திற்கும் இடம் தராமல் இக்கட்டளைகளைக் கடைப்பிடியும். அப்பிரசன்னத்தைக் கடவுள் குறித்த காலத்தில் நாம் காணச் செய்வார்.
1 தீமோத்தேயு 6 : 15 (RCTA)
அப்பேரின்பக் கடவுள் ஒரே வேந்தர், அரசர்க்கெல்லாம் அரசர். ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர்.
1 தீமோத்தேயு 6 : 16 (RCTA)
இறப்பே அறியா ஒருவர், அணுக முடியா ஒளியில் உறைபவர். அவரைக் கண்டவர் யாருமே இலர். காணக்கூடியவர் ஒருவரும் இலரே! அவருக்கே என்றென்றும் மகிமையும், வல்லமையும் உரியன, ஆமென்.
1 தீமோத்தேயு 6 : 17 (RCTA)
இவ்வுலகில் செல்வம் படைத்தவர் இறுமாப்புக் கொள்ளலாகாது. நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல், நமது இன்பத்துக்காக எல்லாவற்றையும் ஏராளமாக அளிக்கும் கடவுளில் மட்டுமே நம்பிக்கை வைக்க வேண்டும்.
1 தீமோத்தேயு 6 : 18 (RCTA)
அவர்கள் நன்மை செய்து, நற்செயல்கள் என்னும் செல்வம் சேர்ப்பார்களாக, தங்களுக்குள்ளதைப் பிறரோடு தாராள மனத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் நீர் அவர்களுக்கு எடுத்துச் சொல்லும்.
1 தீமோத்தேயு 6 : 19 (RCTA)
அவ்வாறு அவர்கள் தங்கள் வருங்கால வாழ்விற்கான சிறந்ததொரு சேமிப்பைச் சேர்த்து வைப்பார்கள். அதைக் கொண்டு அவர்கள் உண்மை வாழ்வை அடைய இயலும்.
1 தீமோத்தேயு 6 : 20 (RCTA)
தீமோத்தேயுவே, உம்மிடம் ஒப்படைத்துள்ளதைப் பாதுகாப்பீராக. இலௌகீக வீண் பேச்சுக்கும், போலியறிவின் முரண்பாடான கருத்துக்களுக்கும் காது கெடாதீர்.
1 தீமோத்தேயு 6 : 21 (RCTA)
அந்தப் போலியறிவைக் காட்டிக்கொண்ட சிலர் விசுவாசத்தைவிட்டு விலகினர். இறையருள் உங்களோடு இருப்பதாக.
❮
❯