1 தீமோத்தேயு 3 : 1 (RCTA)
' விசுவாசிகளை மேற்பார்வையிடும் அலுவலை ஏற்க விழைபவன் ஒரு மேன்மையான தொழிலையே விரும்புகிறேன் ' என்பது உண்மையான வார்த்தை.
1 தீமோத்தேயு 3 : 2 (RCTA)
எனவே, அவ்வலுவலை ஏற்பவர் பிறருடைய குறைச் சொல்லுக்கு ஆளாகாதிருக்க வேண்டும். ஒரு முறை மட்டும் திருமணம் புரிந்தவராய், மிதமிஞ்சிக் குடியாமல் விவேகம், நயமான நடத்தை, விருந்தோம்பல் கற்பிக்கும் ஆற்றல் ஆகிய நல்லியல்புகள் வாய்க்கப்பெற்று,
1 தீமோத்தேயு 3 : 3 (RCTA)
குடிவெறி, கலகம், வீண்சண்டை, பொருளாசை இவற்றை விலக்கிக் கனிந்த உள்ளத்தினராய் இருத்தல் வேண்டும்.
1 தீமோத்தேயு 3 : 4 (RCTA)
குடும்பத்தை செவ்வனே ஆண்டு, தம் மக்களைக் கீழ்ப்படிதலிலும் ஒழுக்கத்திலும் வளர்க்கத் தெரிந்தவராகவும் இருத்தல் வேண்டும்.
1 தீமோத்தேயு 3 : 5 (RCTA)
தம் குடும்பத்தையே ஆண்டு நடத்தத் தெரியாதிருந்தால் கடவுளின் சபையை எவ்வாறு கண்காணிக்க முடியும்?
1 தீமோத்தேயு 3 : 6 (RCTA)
அவர் புதுக் கிறிஸ்துவனாகவும் இருத்தல் கூடாது. 'இருந்தால் இறுமாப்புக்கொள்ளக் கூடும். அதனால் அலகைக்குக் கிடைத்த தண்டனையை அடையலாம்.
1 தீமோத்தேயு 3 : 7 (RCTA)
மேலும், திருச்சபையைச் சேராதவர்களுடைய நன்மதிப்பைப் பெற்றவராயிருக்க வேண்டும். இல்லையேல், இகழ்ச்சிக்காளாகலாம்; அலகையின் வலையிலும் விழக் கூடும்.
1 தீமோத்தேயு 3 : 8 (RCTA)
அவ்வாறே திருப்பணியாளர்கள் இரட்டை நாவுள்ளவர்களாகவோ, மதுபானப் பிரியர்களாகவோ, இழிவான முறையில் ஊதியம் தேடுபடுவர்களாகவோ இராது கண்ணியமுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
1 தீமோத்தேயு 3 : 9 (RCTA)
விசுவாசத்தின் மறை பொருளைத் தூய மனச்சாட்சியோடு காத்துவரவேண்டும்.
1 தீமோத்தேயு 3 : 10 (RCTA)
அவர்களை முதலில் சோதித்துப் பார்க்கவேண்டும். யாதொரு குறைச் சொல்லுக்கும் ஆளாகாதிருந்தால் திருப்பணிக்கு ஏற்றுக்கொள்ளலாம்.
1 தீமோத்தேயு 3 : 11 (RCTA)
அவர்களுடைய மனைவியரும் அவ்வாறே கண்ணியம் உள்ளவர்களாக இருக்கவேண்டும். புறணிபேசாமல், மிதமிஞ்சிக் குடியாது, எல்லாவற்றிலும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் இருக்கட்டும்.
1 தீமோத்தேயு 3 : 12 (RCTA)
திருப்பணியாளர்கள் ஒருமுறை மட்டுமே திருமணம் செய்தவர்களாய்த் தம் மக்களையும் குடும்பத்தையும் செவ்வனே நடத்துபவர்களாயிருக்க வேண்டும்.
1 தீமோத்தேயு 3 : 13 (RCTA)
திருப்பணியை நன்கு ஆற்றுவோர் உயர்நிலையடைவர். இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப்பற்றிப் பேசத் துணிவும் பெறுவர்.
1 தீமோத்தேயு 3 : 14 (RCTA)
நான் இதை எழுதும்போது விரைவில் வந்து உம்மைக் காணும் நம்பிக்கையோடு எழுதுகின்றேன்.
1 தீமோத்தேயு 3 : 15 (RCTA)
ஒருவேளை நான் வரத் தாமதித்தால், நீர் கடவுளின் வீட்டில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதை இக்கடிதம் உணர்த்தும். இவ்வீடு உயிருள்ள கடவுளின் திருச்சபையே. அதுவே உண்மைக்குத் தூணும் அடிப்படையுமாகும்.
1 தீமோத்தேயு 3 : 16 (RCTA)
மெய்யாகவே, நமது விசுவாசத்தின் மறை பொருள் பெரியது, ஐயமே இல்லை. ஊன் உருவிலே அவர் தோன்றினார். தேவ ஆவியின் செயலாலே அவர் இறைவனுக்கு ஏற்புடையவரென விளங்கினார். வானத்தூதர்க்குத் தமைக் காண்பித்தார். புறவினத்தார்க்கு அறிவிக்கப்பெற்றார். விசுவாசத்தோடு உலகில் ஏற்கப்பெற்றார். மாட்சிமையிலே அவர் விண்ணேற்பு அடைந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16