1 சாமுவேல் 9 : 1 (RCTA)
பெஞ்சமின் கோத்திரத்தில் சீஸ் என்ற பெயருள்ள ஆற்றல் வாய்ந்த ஒரு மனிதன் இருந்தான். இவன் அபயேல் மகன்; இவன் சேரோர் மகன்; இவன் பெக்கோராத் மகன்; இவன் அபியா மகன்; இவன் பெஞ்சமின் கோத்திரத்தானான ஒரு மனிதனின் மகன்.
1 சாமுவேல் 9 : 2 (RCTA)
அவனுக்குச் சவுல் என்ற பெயருள்ள மகன் ஒருவன் இருந்தான். இவன் மிகவும் சிறந்தவன், நல்லவன். இஸ்ராயேல் மக்களில் இவனைவிட அழகு வாய்ந்தவன் வேறு ஒருவனும் இல்லை. அவர்கள் அனைவரும் இவருடைய தோள் உயரமே இருந்தனர்; இவன் அவர்களை விட உயர்ந்தவன்.
1 சாமுவேல் 9 : 3 (RCTA)
சவுலின் தந்தை சீஸ் என்பவனின் கழுதைகள் காணாமல் போயின. சீஸ் தன் மகன் சவுலை நோக்கி, "வேலைகாரரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு போய்க் கழுதைகளைத் தேடு" என்றான்.
1 சாமுவேல் 9 : 4 (RCTA)
அவர்கள் இருவரும் எபிராயீம் மலையிலும் சலிசா நாட்டிலும் அவற்றைத் தேடி அங்குக் காணாததால், அவற்றைக் கடந்து சலிம் நாட்டுக்கு வந்தார்கள். அங்கேயும் காணவில்லை. ஜெமினி நாட்டில் கூடத்தேடியும் அகப்படவில்லை.
1 சாமுவேல் 9 : 5 (RCTA)
அவர்கள் சூப் என்ற நாட்டிற்கு வந்தபோது, சவுல் தன்னுடன் இருந்த ஊழியனை நோக்கி, "என் தந்தை ஒருவேளை கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு நம் பேரில் ஏக்கமாயிருக்கலாம். எனவே, வா, திரும்பிப் போவோம்" என்றான்.
1 சாமுவேல் 9 : 6 (RCTA)
அதற்கு அவன், "இந்த ஊரிலே கடவுளின் மனிதர் ஒருவர் இருக்கிறார்; அவர் பெருமகனார். அவர் சொல்வதெல்லாம் தவறாது நடக்கும். இப்போது அங்குப் போவோம். நாம் எதற்காக வந்தோமோ அந்த வழியை அவர் ஒருவேளை நமக்குக் காட்டுவார்" என்றான்.
1 சாமுவேல் 9 : 7 (RCTA)
அப்போது சவுல் தன் வேலைக்காரனைப் பார்த்து, "சரி, வா, போவோம். ஆனால் கடவுளின் மனிதருக்கு என்ன கொண்டு போவது? நம் சாக்குகளில் உரொட்டி இல்லை. கடவுளின் மனிதருக்குக் கொடுக்கப் பணமும் இல்லை" என்று சொன்னான்.
1 சாமுவேல் 9 : 8 (RCTA)
திரும்பவும் ஊழியன் சவுலுக்கு மறுமொழியாக, "ஸ்தாதேர் என்ற வெள்ளிக் காசில் கால்பங்கு என்னிடம் இருக்கிறது. நமக்கு வழி காட்டும்படி கடவுளின் மனிதருக்கு அதைக் கொடுப்போம்" என்றான்.
1 சாமுவேல் 9 : 9 (RCTA)
முற்காலத்தில் இஸ்ராயேலில் கடவுளிடம் ஆலோசனை கேட்கப்போகிற எவனும், "திருக்காட்சியாளரிடம் போவோம். வாருங்கள்" என்பான்; ஏனெனில், இன்று இறைவாக்கினர் என்று சொல்லப்படுகிறவர் அக்காலத்திலே திருக்காட்சியாளர் என்று அழைக்கப்பட்டு வந்தார்.
1 சாமுவேல் 9 : 10 (RCTA)
சவுல் வேலைக்காரனை நோக்கி, "நீ சொல்வது தான் நல்லது; வா, போவோம்" என்று சொன்னான். அப்படியே அவர்கள் கடவுளின் மனிதரிருந்த நகருக்குப் போனார்கள்.
1 சாமுவேல் 9 : 11 (RCTA)
அவர்கள் நகரின் மேட்டில் ஏறினபோது பெண்கள் தண்ணீர் மொள்ள வரக்கண்டு, "இங்குத் திருக்காட்சியாளர் இருக்கிறாரா?" என்று அவர்களைக் கேட்டனர்.
1 சாமுவேல் 9 : 12 (RCTA)
அவர்கள் அதற்கு மறுமொழியாக, "ஆம், இதோ உங்களுக்கு முன் இருக்கிறார்; உடனே விரைந்து போங்கள்; இன்று மக்கள் மேட்டில் பலியிடுவதனால் அவர் இன்று நகருக்கு வந்திருக்கிறார்.
1 சாமுவேல் 9 : 13 (RCTA)
நீங்கள் நகரில் நுழைந்தவுடன் அவர் சாப்பிட மேட்டிற்கு ஏறிச் செல்லும் முன் அவரைக் காண்பீர்கள்; அவர் வரும் வரை மக்கள் சாப்பிடாது இருப்பார்கள்; ஏனெனில் அவர் பலியை ஆசீர்வதித்த பின்பே அழைக்கப்பட்டவர்கள் சாப்பிடுவார்கள். இப்போது ஏறிச்செல்லுங்கள். அவரை இன்று காணலாம்" என்றனர்.
1 சாமுவேல் 9 : 14 (RCTA)
அவர்கள் நகருக்குள் போய் நகரின் நடுவே வந்து சேர்ந்தனர். அப்போது சாமுவேல் மேட்டின் மேல் ஏறுகிறதற்குப் புறப்பட்டு வரக் கண்டனர்.
1 சாமுவேல் 9 : 15 (RCTA)
மேலும் சவுல் வர ஒரு நாளைக்கு முன்பே ஆண்டவர் சாமுவேலுக்கு வெளிப்படுத்தி,
1 சாமுவேல் 9 : 16 (RCTA)
நாளை இதே நேரத்தில் பெஞ்சமின் நாட்டானாகிய ஒரு மனிதனை உன்னிடம் அனுப்புவோம்; நம் மக்களாகிய இஸ்ராயேலுக்குத் தலைவனாக அவனை அபிஷுகம் செய்வாய். அவன் பிலிஸ்தியர் கையினின்று நம் மக்களை மீட்பான். ஏனெனில், நம் மக்களைக் கண்ணோக்கினோம்; அவர்கள் குரலொலி நமக்கும் எட்டியது" என்று சொல்லியிருந்தார்.
1 சாமுவேல் 9 : 17 (RCTA)
சாமுவேல் சவுலைக் கண்ட போது, "இதோ, நாம் உனக்குச் சொன்ன மனிதன்; அவன் தான் நம் மக்களை ஆளுவான்" என்று ஆண்டவர் அவருக்குச் சொன்னார்.
1 சாமுவேல் 9 : 18 (RCTA)
சவுல் வாயில் நடுவில் சாமுவேலை அணுகி, "திருக்காட்சியாளருடைய வீடு எது எனத் தயவு செய்து காண்பியும்" என்றான்.
1 சாமுவேல் 9 : 19 (RCTA)
சாமுவேல் சவுலுக்கு மறுமொழியாக, "திருக்காட்சியாளர் நானே. என்னுடன் இன்று சாப்பிடும்படி எனக்கு முன் மேட்டிற்கு ஏறிப்போ; நாளை உன்னை அனுப்பி வைப்பேன்; உன் உள்ளத்தில் இருப்பவற்றை எல்லாம் உனக்குச் சொல்வேன்.
1 சாமுவேல் 9 : 20 (RCTA)
மூன்று நாளுக்கு முன் இழந்த கழுதைகளைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்; அவை கிடைத்து விட்டன. இஸ்ராயேலில் சிறந்தவை யாருக்கு இருக்கும்? உனக்கும் உன் தந்தை வீட்டுக்கும் அல்லவா?" என்றார்.
1 சாமுவேல் 9 : 21 (RCTA)
சவுல் மறுமொழியாக, "நானோ இஸ்ராயேலின் மிகச்சிறிய கோத்திரத்தைச் சேர்ந்த ஜெமினி மகன். என் சந்ததியும் பெஞ்சமின் கோத்திரத்து வம்சங்களில் எல்லாம் மிகவும் அற்புதமானது. அப்படியிருக்க நீர் இவ்வாறு என்னிடம் பேசுவது ஏன்?" என்றான்.
1 சாமுவேல் 9 : 22 (RCTA)
சாமுவேல் சவுலையும் அவன் வேலைக்காரனையும் கூட்டிக்கொண்டு அவர்களை உணவறைக்குள் அழைத்துக் போய், அழைக்கப்பட்டவர்களுக்குள் முதலிடத்தை அவர்களுக்குக் கொடுத்தார். ஏறக்குறைய முப்பது மனிதர்கள் அங்கு இருந்தனர்.
1 சாமுவேல் 9 : 23 (RCTA)
சாமுவேல் சமையற்காரனைப் பார்த்து, "நான் உன் கையிலே ஒரு பாகத்தைக் கொடுத்து அதைப் பாதுகாத்து வைக்கச் சொல்லியிருந்தேனே, அதைக் கொண்டு வந்து வை" என்றார்.
1 சாமுவேல் 9 : 24 (RCTA)
அதற்குச் சமையற்காரன் ஒரு முன்னந் தொடையை எடுத்துச் சவுல்முன் வைத்தான். அப்பொழுது சாமுவேல், "இதோ, அது உனக்கென்று வைக்கப்பட்டது; அதை உன்முன் வைத்துச் சாப்பிடு. நான் மக்களை அழைத்த போது அது உனக்காகவே ஒதுக்கி வைக்கப்பட்டது" என்று சொன்னார். அன்று சவுல் சாமுவேலுடன் சாப்பிட்டான்.
1 சாமுவேல் 9 : 25 (RCTA)
பிறகு அவர்கள் மேட்டிலிருந்து நகருக்கு இறங்கி வந்தனர். சாமுவேல் மேல் மாடியில் சவுலோடு பேசினார். சவுல் மேல் மாடியில் படுக்கை தயாரித்துத் தூங்கினான்.
1 சாமுவேல் 9 : 26 (RCTA)
இருவரும் காலையில் எழுந்திருந்தனர். வெளிச்சமான போது, சாமுவேல் மேல் மாடியிலிருந்த சவுலைக் கூப்பிட்டு, "உன்னை அனுப்பி வைக்க வேண்டும்; எழுந்து வா" என்றார். சவுலும் அப்படியே எழுந்து வந்தான். பிறகு இருவரும் புறப்பட்டு சென்றனர்.
1 சாமுவேல் 9 : 27 (RCTA)
அவர்கள் நகர எல்லையை அடைந்த போது சாமுவேல் சவுலைப் பார்த்து, "உன் வேலைக்காரனை நமக்கு முன் நடந்து போகச்சொல். நீ சற்று நில்; நான் ஆண்டவருடைய வார்த்தையை உனக்குத் தெரிவிப்பேன்" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: