1 சாமுவேல் 31 : 1 (RCTA)
நிற்க, பிலிஸ்தியர் இஸ்ராயேலரோடு போர் புரிந்தனர். இஸ்ராயேல் மனிதர்கள் பிலிஸ்தியருக்குப் புறமுதுகு காட்டி ஓடி, கெல்போயே மலையில் வெட்டுண்டு விழுந்தார்கள்.
1 சாமுவேல் 31 : 2 (RCTA)
பிலிஸ்தியர் சவுல் மேலும், அவர் மக்கள் மேலும் பாய்ந்து சவுலின் புதல்வர்களாகிய யோனத்தாசையும் அபினதாபையும் மெல்கிசுவாயையும் வெட்டி வீழ்த்தினர்.
1 சாமுவேல் 31 : 3 (RCTA)
சவுல் இருந்த இடத்தில் சண்டை மிகவும் கொடூரமாய் இருந்தது. வில் வீரர்கள் அவரைத் தொடர்ந்தார்கள். அவரும் பெரும்காயம் அடைந்தார்.
1 சாமுவேல் 31 : 4 (RCTA)
அப்பொழுது சவுல் தம் பரிசையனை நோக்கி, "அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் ஒருவேளை என்னை அவமானப்படுத்திக் கொல்லாதபடி, நீயே உன் வாளை உருவி என்னை வெட்டிப் போடு" என்றார். அச்ச மிகுதியால் பரிசையன் அதற்கு இணங்கவில்லை. ஆகையால் சவுல் தம் வாளைத் தரையில் குத்தி வைத்துத் தாமாகவே அதன் மேல் விழுந்தார்.
1 சாமுவேல் 31 : 5 (RCTA)
சவுல் இறந்ததைக் கண்ட பரிசையனும் தன் வாள்மேல் விழுந்து அவரோடு மடிந்தான்.
1 சாமுவேல் 31 : 6 (RCTA)
ஆகையால், அன்று சவுலும் அவருடைய மூன்று புதல்வர்களும் அவருடைய பரிசையனும் எல்லா மனிதர்களும் ஒருங்கே அதே நாளில் உயிர் துறந்தனர்.
1 சாமுவேல் 31 : 7 (RCTA)
இஸ்ராயேலர் ஓடிப்போனார்கள் என்றும், சவுலும் அவர் புதல்வர்களும் மடிந்தார்கள் என்றும் பள்ளத்தாக்குக்கு அப்பாலும் யோர்தானுக்கு இப்பாலும் இருந்த இஸ்ராயேல் மக்கள் கண்ட போது, அவர்கள் தங்கள் நகர்களை விட்டு ஓடிப்போனார்கள். அப்போது பிலிஸ்தியர் அங்கு வந்து குடியேறினர்.
1 சாமுவேல் 31 : 8 (RCTA)
மறுநாள் பிலிஸ்தியர் வெட்டுண்டவர்களைக் கொள்ளையிட வந்த போது, சவுலும் அவருடைய மூன்று புதல்வர்களும் கெல்போயே மலையில் மடிந்து கிடக்கக் கண்டனர்.
1 சாமுவேல் 31 : 9 (RCTA)
சவுலின் தலையைக் கொய்து, அவருடைய ஆயுதங்களைக் கொள்ளையிட்ட பின், தங்கள் சிலைகள் இருந்த கோவிலிலும், மக்களுக்குள்ளும் செய்தியைப் பறைசாற்றும் பொருட்டு அவற்றைப் பிலிஸ்திய நாடெங்கினும் அனுப்பினார்கள்.
1 சாமுவேல் 31 : 10 (RCTA)
கடைசியில் அவர்கள் அவருடைய ஆயுதங்களை அஸ்தரோத்தின் ஆலயத்தில் வைத்தனர். அவரது உடலையோ பெத்சான் நகர மதிலில் தொங்கவிட்டனர்.
1 சாமுவேல் 31 : 11 (RCTA)
பிலிஸ்தியர் சவுலுக்குச் செய்தவற்றைக் காலாத் நாட்டு யாபேசுக் குடிகள் கேள்விப்பட்ட போது,
1 சாமுவேல் 31 : 12 (RCTA)
அவர்களுள் ஆற்றல் படைத்தவர் அனைவரும் எழுந்து இரவு முழுவதும் நடந்து சென்று பெத்சானின் நகர் மதிலிலிருந்து சவுலின் சடலத்தையும், அவருடைய புதல்வர்கள் சடலங்களையும் எடுத்துக் காலாதில் இருந்த யாயேசுக்குக் கொண்டு வந்து, அங்கு அவற்றைச் சுட்டெரித்தனர்.
1 சாமுவேல் 31 : 13 (RCTA)
பின் அவர்களுடைய எலும்புகளைப் பொறுக்கி எடுத்து யாபேசு நாட்டில் அடக்கம் செய்து ஏழு நாட்கள் நோன்பு காத்தனர்.
❮
❯