1 சாமுவேல் 27 : 1 (RCTA)
தாவீது தனக்குள், "நான் என்றாவது ஒரு நாள் சவுல் கையில் அகப்படுவேன். சவுல் இனி இஸ்ராயேலின் எல்லா எல்லைகளிலும் என்னைக் கண்டு பிடிக்கலாம் என்ற நம்பிக்கையே அற்றுப் போகும்படி, நான் பிலிஸ்தியர் நாட்டுக்கு ஓடிப் போய்த் தப்பித்துக் கொள்வது மிகவும் நல்லது. இவ்வாறு நான் அவர் கைக்குத் தப்புவேன்" என்று சொல்லிக் கொணடான்.
1 சாமுவேல் 27 : 2 (RCTA)
தாவீது தன்னோடு இருந்த அறுநூறு பேரையும் அழைத்துக் கொண்டு கேத் அரசனாகிய மாவோக்கின் மகன் ஆக்கீசிடம் போனான்.
1 சாமுவேல் 27 : 3 (RCTA)
அங்கே தாவீதும் அவன் ஆட்களும் அவரவர் வீட்டாரும், தாவீதோடு அவனுடைய இரு மனைவியரான ஜெஸ்ராயேல் ஊராளான அக்கினோவாளும், நாபாலின் மனைவியும் கார்மேலைச் சேர்ந்தவளுமான அபிகாயிலும் கேத் நகரத்தில் ஆக்கீசிடம் தங்கியிருந்தார்கள்.
1 சாமுவேல் 27 : 4 (RCTA)
தாவீது கேத்திற்கு ஓடிப்போனான் என்று சவுலுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவர் அதன் பிறகு அவனைத் தேடுவதை விட்டு விட்டார்.
1 சாமுவேல் 27 : 5 (RCTA)
தாவீது ஆக்கீசை நோக்கி, "உம் கண்களில் எனக்குத் தயை கிடைத்தால், நான் வாழும்படி இந்நாட்டு ஊர்களுக்குள் ஒன்றில் எனக்கு இடம் கொடும்; உம் அடியான் உம்மோடு தலைநகரில் வாழ்வது முறையன்று" என்றான்.
1 சாமுவேல் 27 : 6 (RCTA)
அதைக் கேட்டு ஆக்கீசு, அவனுக்குச் சிசெலேக்கைக் கொடுத்தான். அதன் பொருட்டுச் சிசெலேக்கு இன்று வரை யூதாவின் அரசர்களுக்குச் சொந்தமாயிருக்கிறது.
1 சாமுவேல் 27 : 7 (RCTA)
தாவீது பிலிஸ்தியர் நாட்டில் நான்கு திங்கள் தங்கியிருந்தான்.
1 சாமுவேல் 27 : 8 (RCTA)
தாவீதும் அவனுடைய ஆட்களும் புறப்பட்டு, ஜெசூரியர் மேலும் கெர்சியர் மேலும் அமலேக்கியர் மேலும் படை எடுத்து அவர்களுடைய நகரங்களைக் கொள்ளையிடுவதுண்டு. சூர் துவக்கி எகிப்து நாடு வரை உள்ள அந்த நாட்டில் பண்டு தொட்டுக் குடியிருந்தவர்கள் இவர்களே.
1 சாமுவேல் 27 : 9 (RCTA)
தாவீது அந்த நாடு முழுவதையும் கொள்ளையடித்து வந்த போது ஆண்களையும் பெண்களையும் உயிரோடு தப்ப விடுவதில்லை. ஆடு மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் முதலியவற்றை எடுத்துக் கொண்டு ஆக்கீசிடம் திரும்பி வருவான்.
1 சாமுவேல் 27 : 10 (RCTA)
நீர் இன்று எங்குக் கொள்ளையிடச் சென்றீர்? என்று கேட்கையில் அவன், "யூதாவின் தெற்குப் பகுதியில் அல்லது ஜெராமேலின் தெற்குப் பகுதியில் அல்லது சேனியின் தெற்குப் பகுதியில் கொள்ளையிட்டேன்" என்று மறுமொழியாகச் சொல்வான்.
1 சாமுவேல் 27 : 11 (RCTA)
தாவீது ஆண்களையோ பெண்களையோ உயிருடன் விட்டு வைத்ததில்லை. காரணம், அவர்களில் யாரையாவது கேத்துக்குக் கொண்டு வந்தால் அவர்கள், 'இவ்வாறெல்லாம் தாவீது எங்களுக்குச் செய்தான்' என்று தன்னைப்பற்றி அரசனிடம் கூறிவிடுவார்கள் என்று தாவீது அறிந்திருந்தான். அவன் பிலிஸ்தியர் நாட்டில் குடியிருந்த காலமெல்லாம், இதுவே அவன் தொழிலாய் இருந்தது.
1 சாமுவேல் 27 : 12 (RCTA)
எனவே, ஆக்கீசு தாவிதை நம்பி, "தாவீது தன் மக்களாகிய இஸ்ராயேலுக்கு அதிகத் தீமைகளைச் செய்துள்ளபடியால் என்றென்றும் அவன் எனக்கு ஊழியனாய் இருப்பான்" என்று சொன்னான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12

BG:

Opacity:

Color:


Size:


Font: