1 சாமுவேல் 26 : 1 (RCTA)
ஜிப் ஊரார் காபாவில் இருந்த சவுலிடம் வந்து, "இதோ தாவீது பாலைவனத்துக்கு எதிரான அக்கிலா குன்றில் ஒளிந்திருக்கிறான்" என்று சொன்னார்கள்.
1 சாமுவேல் 26 : 2 (RCTA)
சவுல் எழுந்து ஜிப் பாலைவனத்துக்குப் புறப்பட்டார். இஸ்ராயேலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூவாயிரம் மனிதர்கள் அவரோடு ஜிப் பாலைவனத்தில் தாவீதைத் தேடச் சென்றார்கள்.
1 சாமுவேல் 26 : 3 (RCTA)
சவுல் பாலைவனத்துக்கு எதிரே அக்கிலா வழி அருகே இருந்த காபாவில் பாசறை அமைத்தார். தாவீதோ பாலைவனத்தில் தங்கியிருந்தான். சவுல் பாலைவனத்தில் தன்னைப் பின் தொடர்ந்து வரக் கண்டு,
1 சாமுவேல் 26 : 4 (RCTA)
ஒற்றரை அனுப்பி, உண்மையில் சவுல் அங்கு வந்திருந்தார் என்று அறிந்து கொண்டான்.
1 சாமுவேல் 26 : 5 (RCTA)
அப்பொழுது தாவீது இரகசியமாய் எழுந்து சவுல் இருந்த இடத்திற்கு வந்தான், சவுலும் அவர் படைத் தலைவனாகிய நேரின் மகனான அப்நேரும் தூங்கும் இடத்தை அறிந்து, சவுல் பாசறையிலும் மற்ற ஆட்கள் அவரைச் சுற்றிலும் தூங்குவதைக் கண்டான்.
1 சாமுவேல் 26 : 6 (RCTA)
தாவீது எத்தையனாகிய அக்கிமெலேக்கையும், யோவாபின் சகோதரனும் சார்வியாவின் மகனுமாகிய அபிசாயியையும் நோக்கி, "சவுல் இருக்கும் பாளையத்திற்கு என்னோடு வருவது யார்?" என்று கேட்டான். அதற்கு அபிசாயி, "நான் உம்முடன் வருகிறேன்" என்றான்.
1 சாமுவேல் 26 : 7 (RCTA)
அப்படியே தாவீதும் அபிசாயியும் இரவில் ஆட்கள் இருந்த இடத்திற்கு வந்து, சவுல் தம் கூடாரத்தில் படுத்துத் தூங்குகிறதையும், அவர் தலைமாட்டில் அவருடைய ஈட்டி தரையில் குத்தியிருக்கிறதையும், அப்நேரும் மற்ற ஆட்களும் அவரைச் சுற்றிலும் தூங்குகிறதையும் கண்டனர்.
1 சாமுவேல் 26 : 8 (RCTA)
அபிசாயி தாவீதைப் பார்த்து, "இன்று கடவுள் உம் எதிரியை உமது கையில் ஒப்படைத்தார். இப்பொழுது நான் அவனை ஈட்டியினால் இரண்டாம் முறை குத்தாமல், ஒரே குத்தாய் நிலத்தில் பாயக் குத்தப்போகிறேன்" என்றான்.
1 சாமுவேல் 26 : 9 (RCTA)
தாவீது அபிசாயியை நோக்கி, "அவரைக் கொல்லாதே, ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரின் மேல் கை வைப்பவன் குற்றவாளி அன்றோ?" என்று சொன்னான்.
1 சாமுவேல் 26 : 10 (RCTA)
மேலும் தாவீது, "ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவர் அவரை அடித்தாலோ காலம் வந்ததனாலோ போரிலோ அவர் மாண்டால் அன்றி,
1 சாமுவேல் 26 : 11 (RCTA)
நான் ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவரின் மேல் கை வைக்காதபடி ஆண்டவர் என் மேல் இறங்குவாராக! எனவே இப்போது அவர் தலைமாட்டில் இருக்கிற ஈட்டியையும் தண்ணீர்ப் பாத்திரத்தையும் நீ எடுத்துக்கொள், போவோம்" என்றான்.
1 சாமுவேல் 26 : 12 (RCTA)
ஆகையால் தாவீது ஈட்டியையும், சவுல் தலைமாட்டிலிருந்த தண்ணீர்ப் பாத்திரத்தையும் எடுத்துக் கொண்டு இருவரும் புறப்பட்டுப் போயினர். ஒருவரும் காணவுமில்லை, அறியவுமில்லை, விழிக்கவுமில்லை. ஆண்டவர் அவர்களுக்கு ஆழ்ந்த தூக்கத்தை அனுப்பியிருந்தபடியால் அவர்கள் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தார்கள்.
1 சாமுவேல் 26 : 13 (RCTA)
தாவீது நடந்து சற்றுத் தொலைவிலிருந்த மலையுச்சியை அடைந்தான். இரு திறத்தாருக்கும் இடையே அதிக தூரம் இருந்தது.
1 சாமுவேல் 26 : 14 (RCTA)
அவ்விடத்திலிருந்து தாவீது ஆட்களையும், நேரின் மகனாகிய அப்நேரையும் பலத்த குரலில் கூப்பிட்டு, "அப்நேர், நீ மறுமொழி சொல்லமாட்டாயா?" என்றான். அதற்கு அப்நேர், "சப்தமிட்டு அரசரின் தூக்கத்தைக் கெடுப்பவன் யார்?" என்று கேட்டான்.
1 சாமுவேல் 26 : 15 (RCTA)
தாவீது அப்நேரை நோக்கி, "நீ ஓர் ஆண்மகன் அன்றோ? இஸ்ராயேலில் உனக்கு இணையானவர் உளரோ ? பின் நீ உன் தலைவராகிய அரசரை ஏன் காக்கவில்லை? ஒருவன் உன் தலைவராகிய அரசரைக் கொல்லும் படி வந்திருந்தானே!
1 சாமுவேல் 26 : 16 (RCTA)
நீ செய்தது நல்லதன்று. ஆண்டவர் மேல் ஆணை! ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவராகிய உங்கள் தலைவரைக் காக்காத நீங்கள் சாவின் மக்களாய் இருக்கிறீர்கள். இப்போது அரசருடைய ஈட்டி எங்கே என்றும், அவர் தலைமாட்டில் இருந்த தண்ணீர்ப் பாத்திரம் எங்கே என்றும் பார்" என்று சொன்னான்.
1 சாமுவேல் 26 : 17 (RCTA)
அந்நேரத்தில் சவுல் தாவீதின் குரலை அறிந்து கொண்டு, "என் மகன் தாவீதே, இது உன் குரல் தானே?" என்று சொன்னார். அதற்குத் தாவீது, "என் தலைவராகிய அரசே, இது என் குரல் தான்" என்று சொன்னான்.
1 சாமுவேல் 26 : 18 (RCTA)
மேலும் அவன், "என் தலைவர் தம் ஊழியனைத் துன்பப்படுத்த வேண்டியதன் காரணம் என்ன? நான் என்ன செய்தேன்? நான் புரிந்த குற்றம் தான் என்ன?
1 சாமுவேல் 26 : 19 (RCTA)
என் தலைவராகிய அரசே, உம்மை மன்றாடுகிறேன். உம் அடியானின் வார்த்தைகளை கேளும். ஆண்டவர் உம்மை எனக்கு விரோதமாய் ஏவி விட்டிருப்பின் அவர் என் பலியை ஏற்றுக் கொள்ளட்டும்! ஆனால் மனிதர்கள் உம்மை அப்படி ஏவி விட்டிருந்தார்களேயாகில், அவர்கள் ஆண்டவர் திருமுன் சபிக்கப்படுவார்கள். ஏனெனில் அவர்கள் இன்று ஆண்டவருடைய உரிமையிலிருந்து என்னைத் துரத்தி விட்டு, 'நீ போ, அன்னிய தெய்வங்களை வழிபடு' என்று என்னைத் தள்ளிப்போட்டார்கள் அன்றோ?
1 சாமுவேல் 26 : 20 (RCTA)
இன்று ஆண்டவர் திருமுன் என் இரத்தம் தரையில் சிந்தப் படாமலிருப்பதாக! மலைகளில் ஒரு கவுதாரியை வேட்டையாடுவது போல், இஸ்ராயேலின் அரசர் ஓர் உண்ணியைத் தேடி வந்தாரே!" என்றான்.
1 சாமுவேல் 26 : 21 (RCTA)
அப்பொழுது சவுல், "என் மகன் தாவீதே, நான் பாவம் செய்தேன்; நீ திரும்பி வா. என் உயிரை இன்று நீ இவ்வளவு மதித்த படியால், இனி மேல் உனக்கு நான் தீங்கு இழைக்க மாட்டேன். மூடத்தனமாய் நடந்து கொண்டேன் என்றும், பல காரியங்களை அறியாதிருந்தேன் என்றும் எனக்குத் தெரியவருகிறது" என்று சொன்னார்.
1 சாமுவேல் 26 : 22 (RCTA)
தாவீது மறுமொழியாக, "இதோ, அரசருடைய ஈட்டி இங்கே இருக்கிறது. அரசரின் ஊழியர்களில் ஒருவன் இவ்விடம் வந்து அதை எடுத்துக் கொண்டு போகட்டும்.
1 சாமுவேல் 26 : 23 (RCTA)
ஆனால் அவனவன் நீதிக்கும் பிரமாணிக்கத்திற்கும் தகுந்தபடி ஆண்டவர் ஒவ்வொருவனுக்கும் பலன் கொடுப்பார். ஆண்டவர் உம்மை இன்று என் கையில் ஒப்படைத்தார். நானோ ஆண்டவரால் அபிஷுகம் செய்யப்பட்டவர் மேல் கை வைக்கத் துணியவில்லை.
1 சாமுவேல் 26 : 24 (RCTA)
உமது உயிர் இன்று என் கண்களுக்கு அருமையாய் இருந்தது போல, என் உயிர் ஆண்டவர் கண்களுக்கு அருமையாய் இருக்கக்கடவது. அவர் எல்லா இக்கட்டிலுமிருந்தும் என்னை மீட்பாராக" என்று சொன்னான்.
1 சாமுவேல் 26 : 25 (RCTA)
சவுல் தாவீதை நோக்கி, "என் மகன் தாவீதே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்; நீ நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பாய்; ஆற்றல் படைத்தவன் ஆவாய்" என்று சொன்னார். பின்பு தாவீது தன் வழியே சென்றான். சவுல் தம் இடத்திற்குத் திரும்பி வந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25

BG:

Opacity:

Color:


Size:


Font: