1 சாமுவேல் 19 : 1 (RCTA)
தாவீதைக் கொல்லவேண்டும் என்று சவுல் தம் மகன் யோனத்தாசிடமும், தம் எல்லா ஊழியர்களிடமும் கூறினார். ஆனால் சவுலின் மகன் யோனத்தாசு தாவீதுக்கு மிகவும் அன்பு செய்து வந்தான்.
1 சாமுவேல் 19 : 2 (RCTA)
யோனத்தாசு தாவீதுக்கு இதைத் தெரிவித்து, "என் தந்தை சவுல் உன்னைக் கொல்லத் தேடுகிறார்; ஆகையால் நாளைக் காலையில் விழிப்பாய் இரு; இரகசியமான இடத்தில் தங்கி மறைவாக இரு.
1 சாமுவேல் 19 : 3 (RCTA)
நான் எழுந்து, நீ வெளியில் எங்கெங்கு இருப்பாயோ, அங்கெல்லாம் என் தந்தை அருகில் நான் நிற்பேன். நான் உன்னைக் குறித்து என் தந்தையிடம் பேசி எனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் உனக்கு அறிவிப்பேன்" என்றான்.
1 சாமுவேல் 19 : 4 (RCTA)
யோனத்தாசு தன் தந்தை சவுலிடத்தில் தாவீதைக் குறித்து நல்லன பேசி, "அரசே, தாவீது உமக்குத் துரோகம் செய்ததில்லை; அவன் செயல்கள் எல்லாம் உமக்கு மிகவும் பயன்படுகிற படியால், நீர் உம் அடியானாகிய அவனுக்கு விரோதமாய்ப் பாவம் செய்ய வேண்டாம்.
1 சாமுவேல் 19 : 5 (RCTA)
அவன் தன் உயிரை ஒரு பொருட்டாய் எண்ணாது அப் பிலிஸ்தியனைக் கொன்றான். ஆண்டவர் இஸ்ராயேல் முழுவதற்கும் பெரும் மீட்பைத் தந்தார். நீர் அதைப் பார்த்து மகிழ்வுற்றீர். காரணமின்றித் தாவீதைக் கொன்று குற்றமற்ற இரத்தத்தைச் சிந்த நினைத்துப் பாவம் செய்ய வேண்டுமா?" என்று சொன்னான்.
1 சாமுவேல் 19 : 6 (RCTA)
சவுல் யோனத்தாசின் சொற்களைக் கேட்டு அமைதி அடைந்து, "ஆண்டவர் மேல் ஆணை! அவன் கொலை செய்யப் படமாட்டான்" என்று சத்தியம் செய்தார்.
1 சாமுவேல் 19 : 7 (RCTA)
யோனத்தாசு தாவீதை அழைத்து இவ்வார்த்தைகளை எல்லாம் அவனுக்குத் தெரிவித்தான். பின்னர் தாவீதைச் சவுலிடம் கூட்டி வந்தான். அவனும் முன்போலவே சவுலின் அவையில் பணியாற்றினான்.
1 சாமுவேல் 19 : 8 (RCTA)
மீண்டும் போர் மூண்டது. தாவீது புறப்பட்டுப் பிலிஸ்தியரோடு சண்டையிட்டு அவர்களில் எண்ணற்றோரைக் கொன்று குவித்தான். அவர்கள் அவனுக்கு முன்பாகச் சிதறியோடினார்கள்.
1 சாமுவேல் 19 : 9 (RCTA)
ஆண்டவரால் அனுப்பப்பெற்ற தீய ஆவி சவுலின் மேல் வந்தது. அவர் அரண்மனையில் ஈட்டியைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தார். தாவீது தன் கையால் யாழை மீட்டிக் கொண்டிருந்தான்.
1 சாமுவேல் 19 : 10 (RCTA)
சவுல் ஈட்டியால் தாவீதைச் சுவரோடு சேர்த்துக் குத்த முயன்றார்; ஆனால் தாவீது அதைத் தவிர்த்து விலக்கினதால், அது குறி தவறிச் சுவரில் பாய்ந்தது. தாவீது அன்று இரவே ஓடிப்போய்த் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.
1 சாமுவேல் 19 : 11 (RCTA)
தாவீதைக் காவல் செய்து அவனை மறுநாட் காலையில் கொல்லும் படி சவுல் அவன் வீட்டுக்குத் தம் காவலரை அனுப்பினார். தாவீதின் மனைவி மிக்கோல் இதை அவனுக்குத் தெரிவித்து, "நீர் இன்று இரவே உம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளாவிட்டால், நாளைச் சாவீர்" என்று சொன்னாள்.
1 சாமுவேல் 19 : 12 (RCTA)
பின் அவனைச் சன்னல் வழியே இறக்கிவிட்டாள். அவன் அவ்விதமே தப்பி ஓடினான்.
1 சாமுவேல் 19 : 13 (RCTA)
மிக்கோலோ ஒரு பொம்மையை எடுத்துக் கட்டிலின்மேல் கிடத்தி வெள்ளாட்டு மயிர்த்தோலை அதன் தலைமாட்டில் வைத்து அதைப் போர்வையால் மூடினாள்.
1 சாமுவேல் 19 : 14 (RCTA)
தாவீதைப் பிடிக்கச் சவுல் காவலரை அனுப்பின போது, அவன் நோயுற்றிருப்பதாக மறுமொழி சொல்லப்பட்டது.
1 சாமுவேல் 19 : 15 (RCTA)
மறுபடியும் சவுல் தாவீதைப் பார்க்கும்படி தூதர்களை அனுப்பி, "அவனைக் கொன்று போடும்படி கட்டிலுடன் அவனை எம்மிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.
1 சாமுவேல் 19 : 16 (RCTA)
தூதர்கள் வந்த போது கட்டிலின் மேல் பொம்மையும் அதன் தலைமாட்டில் இருந்த வெள்ளாட்டுத் தோலும் இருக்கக் கண்டனர்.
1 சாமுவேல் 19 : 17 (RCTA)
பிறகு சவுல் மிக்கோலைப் பார்த்து, "என்னை ஏன் இப்படி ஏமாற்றினாய்? என் பகைவனை ஏன் தப்பவிட்டாய்?" என்று கேட்டார். மிக்கோல் அவரை நோக்கி, "'அவர் என்னைப் போகவிடு, இல்லாவிட்டால் நான் உன்னைக் கொன்று போடுவேன்' என்று என்னிடம் சொல்லி மிரட்டினார்" என்றாள்.
1 சாமுவேல் 19 : 18 (RCTA)
தாவீது தப்பியோடி ராமாத்தாவிலிருந்த சாமுவேலிடம் வந்து சவுல் தனக்குச் செய்தவற்றை எல்லாம் அவருக்குச் சொன்னான். அப்பொழுது அவனும் சாமுவேலும் போய் நயோத்தில் தங்கியிருந்தனர்.
1 சாமுவேல் 19 : 19 (RCTA)
தாவீது ராமாத்தாவுக்கு அடுத்த நயோத்தில் இருக்கிறான்" என்ற செய்தி சவுலின் காதுகளுக்கு எட்டியது.
1 சாமுவேல் 19 : 20 (RCTA)
அப்போது தாவீதைப் பிடிக்கச் சவுல் காவலரை அனுப்பினார். அவர்கள் இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்த இறைவாக்கினர் கூட்டத்தையும், இவர்களுக்குத் தலைவராகச் சாமுவேல் உட்கார்ந்திருந்ததையும் கண்ட போது, அவர்கள் மேலும் ஆண்டவருடைய ஆவி இறங்க, அவர்களும் இறைவாக்கு உரைக்கத் தொடங்கினார்கள்.
1 சாமுவேல் 19 : 21 (RCTA)
இது சவுலுக்கு தெரிவிக்கப்பட்ட போது அவர் வேறு தூதர்களை அனுப்பினார். அவர்களும் இறைவாக்கு உரைக்க ஆரம்பித்தார்கள். மறுபடியும் சவுல் தூதரை அனுப்ப, இவர்களும் இறைவாக்கு உரைக்கத் தொடங்கினார். சவுல் கடுங்கோபம் கொண்டு,
1 சாமுவேல் 19 : 22 (RCTA)
தாமே ராமாத்தா நோக்கிப் புறப்பட்டு, செக்கோத்தில் இருந்த ஒரு பெரும் கிணற்றருகே வந்து, "சாமுவேலும் தாவீதும் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?" என்று கேட்டார். "அதோ ராமாத்தாவுக்கடுத்த நயோத்தில் இருக்கிறார்கள்" என்று அவருக்கு அறிவிக்கப்பட்டது.
1 சாமுவேல் 19 : 23 (RCTA)
அப்போது அவர் ராமாத்தாவுக்கடுத்த நயோத்துக்குச் சென்றார். அவர் மேலும் ஆண்டவருடைய ஆவி இறங்கினது; அவரும் ராமாத்தாவிலிருந்து நயோத் வரும் வரை இறைவாக்கு உரைத்துக் கொண்டே நடந்து சென்றார்.
1 சாமுவேல் 19 : 24 (RCTA)
தம் சட்டைகளைக் கழற்றிவிட்டுச் சாமுவேலுக்கு முன்பாக மற்றவர்களோடு அவரும் இறைவாக்கு உரைத்தார். அன்று பகல் முழுவதும் இரவிலும் ஆடையில்லாமல் விழுந்து கிடந்தார். இதனால், "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ ?" என்னும் பழமொழி வழங்கலாயிற்று.
❮
❯