1 சாமுவேல் 16 : 1 (RCTA)
ஆண்டவர் சாமுவேலைப் பார்த்து, "சவுல் இஸ்ராயேலின் அரசனாய் இராதபடி நாம் அவனைத் தள்ளியிருக்க, நீ எத்தனை காலம் அவனுக்காக ஏங்கிக் கொண்டிருப்பாய்? கொம்பினால் செய்யப்பட்ட உன் கிண்ணத்தை எண்ணெய்யால் நிரப்பிக் கொண்டு வா; பெத்லகேமைச் சேர்ந்த இசாயினிடம் நாம் உன்னை அனுப்புவோம். நாம் அவன் புதல்வர்களில் ஒருவனை அரசனாகத் தேர்ந்து கொண்டுள்ளோம்" என்றருளினார்.
1 சாமுவேல் 16 : 2 (RCTA)
அதற்குச் சாமுவேல், "எப்படிப் போவேன்? சவுல் கேள்விப்பட்டால் என்னைக் கொன்றுவிடுவானே?" என்றார். மறுபடியும் ஆண்டவர், "நீ மாட்டு மந்தையில் ஒரு கன்றுக்குட்டியைப் பிடித்துக் கொண்டு: 'ஆண்டவருக்கு பலியிட வந்துள்ளேன்' என்று சொல்லி, இசாயியைப் பலிக்கு அழைப்பாய்.
1 சாமுவேல் 16 : 3 (RCTA)
பின்னர் நீ செய்ய வேண்டியதை உனக்கு நாம் காட்டுவோம். நாம் உனக்கு எவனைக் காண்பிப்போமோ, அவனை நீ அபிஷுகம் செய்வாய்" என்று சொன்னார்.
1 சாமுவேல் 16 : 4 (RCTA)
ஆண்டவர் தமக்குச் சொன்னபடி சாமுவேல் செய்து பெத்லகேமுக்குப் போனார். அவ்வூரின் மூப்பர்கள் வியப்புற்று அவர் முன் ஓடிவந்து, "உமது வருகை எங்களுக்குச் சமாதானத்தைத் தருமா?" என்று கேட்டனர்.
1 சாமுவேல் 16 : 5 (RCTA)
அதற்கு அவர், "ஆம், ஆண்டவருக்குப் பலிசெலுத்த வந்துள்ளேன். நீங்கள் உங்களைத் தூயவராக்கிக் கொண்டு என்னுடன் பலியிட வாருங்கள்" என்று சொன்னார். மேலும் இசாயையும் அவனுடைய புதல்வர்களையும் தூய்மைப்படுத்தி அவர்களைப் பலிக்கு அழைத்தார்.
1 சாமுவேல் 16 : 6 (RCTA)
அவர்கள் வந்த போது சாமுவேல் எலியாபைக் கண்டு, "ஆண்டவரால் தேர்ந்து கொள்ளப்பட்டவன் இவன் தானோ?" என்று கேட்டார்.
1 சாமுவேல் 16 : 7 (RCTA)
ஆண்டவர் சாமுவேலை நோக்கி, "அவனுடைய முகத்தையும் உடல் உயரத்தையும் பார்க்காதே; ஏனெனில் நாம் அவனைத் தள்ளி விட்டோம். மனிதன் பார்க்கிறது ஒருவிதம், நாம் தீர்ப்பிடுவது வேறுவிதம். மனிதன் வெளிக்குத் தோன்றுபவற்றை மட்டும் பார்க்கிறான்; ஆண்டவரோ இதயத்தை பார்க்கிறார்" என்று சொன்னார்.
1 சாமுவேல் 16 : 8 (RCTA)
அப்போது இசாயி அபினதாபை அழைத்து அவனைச் சாமுவேல் முன்பாகக் கூட்டி வந்தான். அவர், "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்றார்.
1 சாமுவேல் 16 : 9 (RCTA)
இசாயி சம்மாவைக் கூட்டி வந்தான். அவர், "இவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்று சொல்லி விட்டார்.
1 சாமுவேல் 16 : 10 (RCTA)
இவ்வாறு இசாயி தன் புதல்வர்களில் எழுவரைச் சாமுவேல் முன் கொண்டு வந்தான். "இவர்களுள் ஒருவனையும் ஆண்டவர் தேர்ந்து கொள்ளவில்லை" என்று சாமுவேல் இசாயினிடம் சொன்னார்.
1 சாமுவேல் 16 : 11 (RCTA)
அப்பொழுது இசாயியைப் பார்த்துச் சாமுவேல், "உன் பிள்ளைகள் எல்லாம் இவ்வளவுதானா?" என்று கேட்டார். அதற்கு அவன், "இன்னும் ஒரு சிறுவன் இருக்கிறான்; அவன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறான்" என்று மறுமொழி சொன்னான். அப்பொழுது சாமுவேல் இசாயியை நோக்கி, "நீ ஆள் அனுப்பி அவனை வரச்சொல்; அவன் வரும் வரை நான் உண்ணாது இருப்பேன்" என்றார்.
1 சாமுவேல் 16 : 12 (RCTA)
இசாயி ஆள் அனுப்பி அவனை அழைத்துவரச் செய்தான். அவனோ சிவந்த மேனியும், பார்வைக்கு அழகும், முகப்பொலிவும் உள்ளவனாய் இருந்தான். அப்பொழுது ஆண்டவர், "இவன் தான்; எழுந்து இவனை அபிஷுகம் செய்" என்று சொன்னார்.
1 சாமுவேல் 16 : 13 (RCTA)
அப்பொழுது சாமுவேல் கொம்பினால் செய்யப்பட்ட எண்ணெய்க் கிண்ணத்தை எடுத்து அவனுடைய சகோதரர் நடுவில் அவனை அபிஷுகம் செய்தார். அன்று முதல் ஆண்டவருடைய ஆவி தாவீதின் மேல் இறங்கி எப்பொழுதும் இருந்தது. சாமுவேல் எழுந்து ராமாத்தாவுக்குத் திரும்பினார்.
1 சாமுவேல் 16 : 14 (RCTA)
ஆண்டவருடயை ஆவி சவுலை விட்டு நீங்கினதுமன்றி ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி அவரை அலைக்கழித்துக் கொண்டுமிருந்தது.
1 சாமுவேல் 16 : 15 (RCTA)
அப்பொழுது சவுலின் ஊழியர்கள் அவரை நோக்கி, "கடவுளால் அனுப்பப்பட்ட தீய ஆவி இதோ உம்மை வதைக்கிறதே;
1 சாமுவேல் 16 : 16 (RCTA)
எங்கள் தலைவராகிய நீர் அனுமதி அளித்தால் உமது முன்னிலையில் ஏவல் புரியும் நாங்கள் சென்று யாழிசைஞன் ஒருவனைத் தேடிக் கொண்டு வருவோம். ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி உம்மைப் பிடிக்கையில் அவன் தன் கையினால் அதை மீட்டுவான். உமது துன்பம் ஓரளவு குறையும்" என்றனர்.
1 சாமுவேல் 16 : 17 (RCTA)
சவுல் தம் ஊழியர்களைப் பார்த்து, "நீங்கள் போய் யாழிசைஞன் ஒருவனை என்னிடம் கொண்டு வாருங்கள்" என்றார்.
1 சாமுவேல் 16 : 18 (RCTA)
அப்பொழுது அவருடைய ஊழியர்களில் ஒருவன் மறுமொழியாக, "இதோ பெத்லகேம் ஊரானான இசாயி மகனைப் பார்த்தேன். அவனுக்கு யாழ் மீட்டத் தெரியும்; அவன் வலிமை வாய்ந்தவன்; போர் வீரன்; பேச்சுத் திறமுள்ளவன்; அழகானவன். ஆண்டவர் அவனுடன் இருக்கிறார்" என்று சொன்னான்.
1 சாமுவேல் 16 : 19 (RCTA)
அதைக்கேட்டு, "ஆட்டு மந்தைகளோடு இருக்கிற உன் மகன் தாவீதை எம்மிடம் அனுப்பு" என்று சொல்லச் சவுல் இசாயிக்குத் தூதர்களை அனுப்பினார்.
1 சாமுவேல் 16 : 20 (RCTA)
அப்பொழுது இசாயி ஒரு கழுதையைக் கொணர்ந்து, அதன் மேல் அப்பங்களையும், ஒரு துருத்தித் திராட்சை இரசத்தையும், ஒரு வெள்ளாட்டுக் குட்டியையும் சுமத்தித் தன் மகன் தாவீதின் மூலம் அவற்றைச் சவுலுக்கு அனுப்பி வைத்தான்.
1 சாமுவேல் 16 : 21 (RCTA)
அப்படியே தாவீது சவுலிடம் வந்து அவர்முன் நின்றான். சவுல் அவன் மீது மிகவும் அன்பு கொண்டு: அவனைத் தம் பரிசையனாக நியமித்தார்.
1 சாமுவேல் 16 : 22 (RCTA)
தாவீது எம் அவையில் இருப்பான். ஏனெனில் எம் கண்களில் அவனுக்கு தயை கிடைத்துள்ளது என்று சவுல் இசாயிக்குச் சொல்லி அனுப்பினார்.
1 சாமுவேல் 16 : 23 (RCTA)
பின்பு ஆண்டவரால் அனுப்பப்பட்ட தீய ஆவி சவுலைப் பிடிக்கும் போதெல்லாம் தாவீது யாழை எடுத்து மீட்டுவான். அதனால் சவுல் தேறி ஒருவாறு நலம் பெறுவார். தீய ஆவி அவரை விட்டு நீங்கும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23