1 சாமுவேல் 15 : 1 (RCTA)
பிறகு சாமுவேல் சவுலை நோக்கி, "ஆண்டவர் தம் மக்களாகிய இஸ்ராயேலின் அரசனாக உம்மை அபிஷுகம் செய்யும்படி என்னை அனுப்பினார். இப்போது ஆண்டவர் சொல்வதைக் கேளும்.
1 சாமுவேல் 15 : 2 (RCTA)
சேனைகளின் ஆண்டவர் சொல்கிறதாவது: 'அமலேக் இஸ்ராயேலருக்குச் செய்தவற்றையும், இவர்கள் எகிப்து நாட்டினின்று புறப்பட்டு வந்த போது அமலேக் அவர்களை வழியில் எதிர்த்து நின்றதையும் மனத்தில் வைத்திருக்கிறேன்.
1 சாமுவேல் 15 : 3 (RCTA)
இப்போது நீ போய் அமலேக்கைக் கொன்று அவன் உடைமைகள் அனைத்தையும் அழித்து விடு; அவன் மேல் இரக்கம் கொள்ளாதே; அவனுடைய சொத்துக்களில் ஒன்றையும் விரும்பாதே. ஆனால் ஆண் பிள்ளைகள் முதல் பெண் பிள்ளைகள் வரை, சிறுவர், பால் குடிக்கிற பிள்ளைகள், மாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் முதலியவற்றைக் கொன்று விடு' என்பதாம்" என்றார்.
1 சாமுவேல் 15 : 4 (RCTA)
சவுல் மக்களுக்குக் கட்டளையிட்டு, அவர்களை ஆட்டுக் குட்டிகளைப் போல் கணக்கிட்டார். காலாட் படையினர் இருநூறாயிரம் பேரும் யூதா கோத்திரத்தார் பதினாயிரம் பேரும் இருந்தனர்.
1 சாமுவேல் 15 : 5 (RCTA)
சவுல் அமலேக் நகர் வரை வந்த போது ஓர் ஓடையில் பதிவிடை வைத்தார்.
1 சாமுவேல் 15 : 6 (RCTA)
சவுல் கினையர்களைப் பார்த்து, "போங்கள்; அவனிடமிருந்து போய்விடுங்கள். அமலேக்கோடு நான் உங்களையும் அழிக்காதபடி அவனை விட்டுப் போய்விடுங்கள்; ஏனென்றால் இஸ்ராயேல் மக்கள் அனைவரும் எகிப்திலிருந்து வரும் போது நீங்கள் அவர்களுக்கு இரக்கம் காட்டினீர்கள் அன்றோ?" என்றார். கினையர் அதைக்கேட்டு அமலேக்கை விட்டுச் சென்றனர்.
1 சாமுவேல் 15 : 7 (RCTA)
ஏவிலா முதல் எகிப்துக்கு எதிரே இருக்கிற சூரு வரை சவுல் அமலேக்கியரை முறியடித்தார்.
1 சாமுவேல் 15 : 8 (RCTA)
அவர்களுடைய அரசன் ஆகாகை உயிரோடு சிறைப்படுத்தினார்; மக்கள் அனைவரையும் வாள் முனையால் கொன்று குவித்தார்.
1 சாமுவேல் 15 : 9 (RCTA)
சவுலும் மக்களும் ஆகாகையும், ஆட்டு மாட்டு மந்தைகளில் நல்லவற்றையும் ஆட்டுக் கடாய்களையும் ஆடைகளையும், எல்லாவற்றிலும் அழகானவற்றையும் அழிக்காமல் விட்டு வைத்தனர்; அவற்றை அழிக்கவும் அவர்களுக்கு மனம் இல்லை. ஆனால் அற்பமானவை, பயனற்றவை அனைத்தையும் அழித்துப் போட்டனர்.
1 சாமுவேல் 15 : 10 (RCTA)
அப்போது ஆண்டவருடைய வார்த்தை சாமுவேலுக்குக் கேட்டது.
1 சாமுவேல் 15 : 11 (RCTA)
அவர்: "நாம் சவுலை அரசனாக ஏற்படுத்தினதைப் பற்றி வருந்துகிறோம். ஏனெனில், அவன் என்னைப் புறக்கணித்து என் சொற்களையும் நிறைவேற்றவில்லை" என்றார். அதைக் கேட்டு சாமுவேல் வருந்தி இரவு முழுவதும் ஆண்டவரிடம் மன்றாடினார்.
1 சாமுவேல் 15 : 12 (RCTA)
வைகறை வேளையில் சவுலைச் சந்திக்கலாம் என்று எண்ணிச் சாமுவேல் அதிகாலையில் எழுந்திருந்த போது, சவுல் கார்மேலுக்குப் போய் தனக்கு ஒரு வெற்றித்தூண் நாட்டினதாகவும், அங்கிருந்து கல்கலாவுக்கு இறங்கிச் சென்றதாகவும் சாமுவேலுக்குத் தெரிவிக்கப்பட்டது. சாமுவேல் சவுலிடம் வந்தார். சவுலோ அமலேக்கியரிடமிருந்து கொண்டு வந்திருந்த கொள்ளைப் பொருட்களில் முதலானவற்றை ஆண்டவருக்குத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்துக் கொண்டிருந்தார்.
1 சாமுவேல் 15 : 13 (RCTA)
சாமுவேல் சவுலிடம் வரவே, சவுல் அவரை நோக்கி, "ஆண்டவரின் ஆசீர் பெற்றவர் நீரே. நான் ஆண்டவருடைய வார்த்தையை நிறைவேற்றியுள்ளேன்" என்றார்.
1 சாமுவேல் 15 : 14 (RCTA)
அதற்குச் சாமுவேல், "என் காதுகளில் ஒலிக்கின்ற ஆடு மாடுகளின் இச்சத்தம் என்ன?" என்று கேட்டார்.
1 சாமுவேல் 15 : 15 (RCTA)
அதற்குச் சவுல், "அவற்றை அமலேக்கியரிடமிருந்து கொண்டு வந்தார்கள்; உம் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலிசெலுத்தும்படி மக்கள் ஆடுமாடுகளில் மேலானவற்றை அழிக்காது விட்டுவைத்தார்கள்; மற்றவற்றைக் கொன்றுபோட்டோம்" என்றார்.
1 சாமுவேல் 15 : 16 (RCTA)
அப்பொழுது சாமுவேல், "எனக்கு விடை கொடுத்தால் இந்த இரவில் ஆண்டவர் எனக்குச் சொன்னதை உமக்குச் சொல்வேன்" என்றார். அவர், "சொல்லும்" என்றார்.
1 சாமுவேல் 15 : 17 (RCTA)
சாமுவேல், "நீர் உமது பார்வைக்குச் சிறியவராய் இருந்த போதன்றோ இஸ்ராயேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்? ஆண்டவரும் உம்மை இஸ்ராயேலின் அரசராக அபிஷுகம் செய்தார்.
1 சாமுவேல் 15 : 18 (RCTA)
பிறகு அவர் உம்மை வழி நடத்தி, 'போ, பாவிகளாகிய அமலேக்கியரைக் கொல்; அவர்கள் அழியும் வரை அவர்களுடன் போரிடுவாய்' என்று அனுப்பினார்.
1 சாமுவேல் 15 : 19 (RCTA)
ஆனால், நீர் ஆண்டவருடைய சொல்லைக் கேளாமல் கொள்ளைப் பொருட்களின் மேல் ஆசை வைத்து ஆண்டவர் கண் முன் பாவம் செய்தது ஏன்?" என்றார்.
1 சாமுவேல் 15 : 20 (RCTA)
சவுல் சாமுவேலை நோக்கி, "நான் ஆண்டவருடைய சொற்படிதான் நடந்தேன். ஆண்டவர் என்னை அனுப்பின வழியில் தான் சென்றேன். அதன்படி அமலேக்கியரின் அரசனான ஆகாகைக் கொண்டு வந்தேன்; அமலேக்கியரைக் கொன்று குவித்தேன்.
1 சாமுவேல் 15 : 21 (RCTA)
மக்களோ கொள்ளைப்பொருட்களில் முதற்பலன் என்று ஆடுமாடுகளில் மேலானவற்றைத் தங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குக் கல்கலாவிலே பலியிடுவதற்காகக் கொண்டுவந்தார்கள்" என்று மறுமொழி சொன்னார்.
1 சாமுவேல் 15 : 22 (RCTA)
அதற்கு சாமுவேல், "ஆண்டவர் தகனப் பலிகளையும் வேறு பலிகளையுமா ஆசிக்கிறார்? அதை விட மனிதன் ஆண்டவரின் குரல் சத்தத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்று கேட்கிறாரன்றோ? பலிகளைக் காட்டிலும் கீழ்ப்படிதலே மேலானது. ஆட்டுக் கடாக்களின் கொழுப்பை அவருக்கு ஒப்புக்கொடுக்கிறதை விட அவருக்குச் செவிகொடுத்தலே சிறந்தது.
1 சாமுவேல் 15 : 23 (RCTA)
ஆகவே கிளர்ச்சி செய்வது சூனியம் பார்ப்பதற்குச் சமம்; கீழ்படியாமை சிலை வழிபாட்டுக்குச் சமம். நீர் ஆண்டவருடைய வார்த்தையைத் தள்ளினதால் நீர் அரசராய் இராதபடி ஆண்டவர் உம்மைத் தள்ளிவிட்டார்" என்று சொன்னார்.
1 சாமுவேல் 15 : 24 (RCTA)
அப்பொழுது சவுல் சாமுவேலை நோக்கி, "நான் மக்களுக்கு அஞ்சி அவர்களுடைய குரலுக்குச் செவி சாய்த்து, ஆண்டவருடைய சொல்லையும் உம் வாக்குகளையும் மீறினதினால் பாவம் செய்தேன்.
1 சாமுவேல் 15 : 25 (RCTA)
ஆனால் இப்போது நீர் தயவு செய்து என் பாவத்தை மன்னித்து, நான் ஆண்டவரை வழிபடும் படி என்னுடன் திரும்பி வாரும்" என்று கெஞ்சினார்.
1 சாமுவேல் 15 : 26 (RCTA)
அதற்குச் சாமுவேல், "ஆண்டவருடைய வாக்கைத் தள்ளி விட்ட இஸ்ராயேலின் மேல் நீர் அரசராய் இராதபடிக்கு ஆண்டவர் உம்மையும் தள்ளி விட்டார்; ஆதலால் உம்முடன் நான் வரமாட்டேன்" என்றார்.
1 சாமுவேல் 15 : 27 (RCTA)
பின்னர், சாமுவேல் போகத் திரும்பினார்; அவர் இவருடைய போர்வையின் மேற்புறத்தைப் பிடித்தார்; உடனே அது கிழிந்து போயிற்று.
1 சாமுவேல் 15 : 28 (RCTA)
சாமுவேல் அவரைப் பார்த்து, "இன்றே ஆண்டவர் உமது கையிலிருந்த இஸ்ராயேல் அரசைக் கிழித்து உம்மை விட மேலான உம் அயலானுக்குக் கொடுப்பார்.
1 சாமுவேல் 15 : 29 (RCTA)
இஸ்ராயேலுக்கு வெற்றி கொடுத்தவர் இரக்கம் காட்ட மாட்டார்; மனம் மாறவும் மாட்டார்; வருத்தப்படுவதற்கு அவர் மனிதர் அல்லர்" என்றார்.
1 சாமுவேல் 15 : 30 (RCTA)
அதற்கு அவர், "நான் பாவம் செய்தேன்; ஆயினும் இப்போது என் மக்களின் மூப்பர்கள் முன்பாகவும் இஸ்ராயேலுக்கு முன்பாகவும் நீர் என்னை மாட்சிப்படுத்தி, உம் கடவுளாகிய ஆண்டவரை வழிபடப் போகிற என்னுடன் திரும்பி வாரும்" என்று கெஞ்சிக் கேட்டார்.
1 சாமுவேல் 15 : 31 (RCTA)
ஆகையால் சாமுவேல் திரும்பிச் சவுலைப் பின் தொடர்ந்தார். சவுல் ஆண்டவரை வழிபட்டார்.
1 சாமுவேல் 15 : 32 (RCTA)
பின்பு சாமுவேல், "அமலேக்கியருடைய அரசன் ஆகாகை என்னிடம் கூட்டி வாருங்கள்" என்றார். அப்படியே மிகவும் தடித்த ஆகாக் கொண்டு வரப்பட்டான். இவன் உடல் நடுங்கி, "ஐயோ! கசப்பான சாவு என்னை இப்படி எல்லாவற்றிலுமிருந்து பிரிக்கிறதே!" என்றான்.
1 சாமுவேல் 15 : 33 (RCTA)
அவனைப் பார்த்துச் சாமுவேல், "உன் வாள் பெண்களைப் பிள்ளைகள் அற்றவர்களாய்ச் செய்தது போல, பெண்களுக்குள் உன் தாயும் பிள்ளைகள் இல்லாதவளாய் இருப்பாள்" என்று சொல்லி, கல்கலாவின் ஆண்டவர் திருமுன் ஆகாகைத் துண்டு துண்டாய் வெட்டினார்.
1 சாமுவேல் 15 : 34 (RCTA)
பின்பு சாமுவேல் ராமாத்தாவுக்குப் போனார். சவுல் காபாவில் இருந்த தம் வீட்டுக்குத் திரும்பினார்.
1 சாமுவேல் 15 : 35 (RCTA)
அதற்குப் பின் சவுல் சாகும் வரை சாமுவேல் அவரைப் பார்க்கவே இல்லை. ஆயினும் இஸ்ராயேலின் அரசனாகச் சவுலை ஏற்படுத்தியது குறித்து ஆண்டவர் வருத்தப்படவே, சாமுவேல் சவுலைப்பற்றி மிகவும் வேதனைப்பட்டார்.
❮
❯