1 சாமுவேல் 13 : 1 (RCTA)
சவுல் அரியணை ஏறியபோது அவர் ஒரு வயதுப்பிள்ளை. அவர் இஸ்ராயேலை ஈராண்டுகள் ஆண்டு வந்தார்.
1 சாமுவேல் 13 : 2 (RCTA)
சவுல் இஸ்ராயேலரில் மூவாயிரம் பேரைத் தமக்குத் தேர்ந்து கொண்டார். ஈராயிரம் பேர் சவுலுடன் மக்மாசிலும் பேத்தல் மலையிலும், ஆயிரம் பேர் யோனத்தாசோடு பெஞ்சமின் நாடாகிய காபாவிலும் இருந்தார்கள். மற்ற மக்களை அவரவர் கூடாரத்திற்கு அனுப்பி விட்டார்.
1 சாமுவேல் 13 : 3 (RCTA)
யோனத்தாசு காபாவிலிருந்த பிலிஸ்தியர் பாளையத்தை முறியடித்தான். இதைப் பிலிஸ்தியர் கேள்விப்பட்ட போது, சவுல், "இதை எபிரேயரும் கேட்கக்கடவர்" என்று நாடெங்கும் எக்காளம் முழங்கச் செய்தார்.
1 சாமுவேல் 13 : 4 (RCTA)
பிலிஸ்தியரின் பாளையத்தைச் சவுல் முறியடித்தார் என்ற செய்தியை இஸ்ராயேலர் அனைவரும் கேள்விப்பட்டனர். இஸ்ராயேலர் பிலிஸ்தியருக்கு எதிராய்க் கிளம்பினார்கள். மக்கள் கல்கலாவிலிருந்த சவுலுக்குப்பின் ஆர்ப்பரித்துச் சென்றார்கள்.
1 சாமுவேல் 13 : 5 (RCTA)
பிலிஸ்தியரில் முப்பதாயிரம் தேர்ப்படையினரும் ஆறாயிரம் குதிரைப் படையினரும் கடற்கரை மணல் போன்ற எண்ணற்ற மற்ற மக்களும் இஸ்ராயேல் மேல் போரிடக் கூடினார்கள். அவர்கள் புறப்பட்டுப் பெத்தாவனுக்குக் கிழக்கே மக்மாசில் பாளையம் இறங்கினர்.
1 சாமுவேல் 13 : 6 (RCTA)
இஸ்ராயேல் மனிதர்கள் தங்களுக்குண்டான நெருக்கடியைக் கண்டபோது (மக்கள் துன்புற்றனர்). கெபிகளிலும் மறைவிடங்களிலும் கற்பாறைகளிலும் குகைகளிலும் பாழ்ங்கிணறுகளிலும் ஒளிந்து கொண்டனர்.
1 சாமுவேல் 13 : 7 (RCTA)
எபிரேயரில் பலர் யோர்தான் நதியைக் கடந்து காத், காலாத் நாடுகளுக்கு வந்து நேர்ந்தனர். இதுவரை சவுல் கல்கலாவில் இருந்தார்; அவரைப் பின்சென்ற மக்கள் அனைவரும் நடுக்கமுற்று இருந்தனர்.
1 சாமுவேல் 13 : 8 (RCTA)
அவர் தமக்குச் சாமுவேல் குறித்திருந்தபடி ஏழுநாள் வரை காத்திருந்தார். சாமுவேலும் கல்கலாவுக்கு வரவில்லை. மக்களும் அவரை விட்டுச் சிதறுண்டு போயினர்.
1 சாமுவேல் 13 : 9 (RCTA)
அப்போது சவுல், "தகனப்பலியையும் சமாதானப்பலியையும் என்னிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்லி, தகனப்பலியை ஒப்புக்கொடுத்தார்.
1 சாமுவேல் 13 : 10 (RCTA)
அவர் தகனப்பலியை ஒப்புக்கொடுத்து முடிக்கும் வேளையில் சாமுவேல் வந்தார். சவுல் அவரை வரவேற்கச் சென்றார்.
1 சாமுவேல் 13 : 11 (RCTA)
நீர் என்ன செய்தீர் என்று சாமுவேல் அவரைக் கேட்டார். சவுல் மறுமொழியாக, "மக்கள் என்னை விட்டுச் சிதறிப்போகிறதையும், நீர் குறித்த நாளில் வராததையும், பிலிஸ்தியர் மக்மாசில் ஒன்று திரண்டிருப்பதையும் நான் கண்டேன்.
1 சாமுவேல் 13 : 12 (RCTA)
எனவே, 'பிலிஸ்தியர் இந்நேரம் கல்கலாவில் இறங்கியிருப்பர். நானோ ஆண்டவருடைய இரக்கத்தை இன்னும் பெறவில்லை' என்று எனக்குள் சொல்லிக் கொண்டு, தேவையை முன்னிட்டு தகனப் பலியை ஒப்புக்கொடுத்தேன்' என்றார்.
1 சாமுவேல் 13 : 13 (RCTA)
சாமுவேல் சவுலைப்பார்த்து, "மூடத்தனம் செய்தீர்; உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு இட்ட கட்டளையை நீர் காப்பாற்றவில்லை; இவ்விதம் செய்யாமல் இருந்திருப்பீரானால் ஆண்டவர் இஸ்ராயேல் மேல் உமது அரசை என்றென்றும் உறுதிப்படுத்தி இருந்திருப்பார்.
1 சாமுவேல் 13 : 14 (RCTA)
இனி உமது அரசு நிலைத்து நிற்காது. ஆண்டவர் கட்டளையை நீர் மீறினதால் அவர் தமக்குப் பிடித்த மனிதனைத் தேர்ந்து கொண்டு, அவனைத் தம் மக்களுக்குத் தலைவனாய் இருக்கக் கட்டளையிட்டுள்ளார்" என்றார்.
1 சாமுவேல் 13 : 15 (RCTA)
சாமுவேல் கல்கலாவிலிருந்து புறப்பட்டுப் பெஞ்சமின் நாடாகிய காபாவுக்கு வந்தார். எஞ்சியோர் தங்களுடன் போர்புரிய வந்திருந்த மக்களுக்கு எதிராகச் சவுலைப்பின் தொடர்ந்து, கல்கலாவிலிருந்து பெஞ்சமின் குன்றிலுள்ள காபாவுக்குப் போனார்கள். சவுல் மக்களை எண்ணிப் பார்த்தார். ஏறக்குறைய அறுநூறு பேர் இருந்தனர்.
1 சாமுவேல் 13 : 16 (RCTA)
சவுலும் அவர் மகன் யோனத்தாசும் அவர்களைச் சார்ந்திருந்த மக்களும் பெஞ்சமின் நாடாகிய காபாவில் இருந்தனர். அப்போது பிலிஸ்தியர் மக்மாசில் பாளையம் இறங்கியிருந்தனர்.
1 சாமுவேல் 13 : 17 (RCTA)
பிலிஸ்தியர் பாளையத்தினின்று முப்பிரிவினர் கொள்ளையடிக்கப் புறப்பட்டனர். ஒரு பிரிவு சுவால் நாட்டிலுள்ள எப்ராவை நோக்கிப் போனது.
1 சாமுவேல் 13 : 18 (RCTA)
மற்றொன்று பெத்தரோன் வழியாய் நடந்தது. மூன்றாம் பிரிவும் பாலைவனத்துக்கு எதிரில் செபோயீம் பள்ளத்தாக்கை அடுத்த எல்லை வழியாய்ச் சென்றது.
1 சாமுவேல் 13 : 19 (RCTA)
நிற்க, இஸ்ராயேல் நாடு முழுவதிலும் ஒரு கொல்லன் கூடக் காணப்படவில்லை. எபிரேயர் வாள், ஈட்டி செய்யாதபடி, பிலிஸ்தியர் எச்சரிக்கையாய் இருந்தனர்.
1 சாமுவேல் 13 : 20 (RCTA)
ஆகையால் இஸ்ராயேலர் யாவரும் தத்தம் கொழு, மண்வெட்டி, கோடரி, களைவெட்டிகளைக் கூராக்குவதற்குப் பிலிஸ்தியரிடத்திற்குப் போக வேண்டியதாயிருந்தது.
1 சாமுவேல் 13 : 21 (RCTA)
ஆகவே, அவர்களுடைய கொழுக்கள், மண்வெட்டிகள், முப்பல் கொண்ட ஆயுதங்கள் முதலியன மழுங்கிப் போயிருந்தன. தார்க்குச்சியைக் கூடச் சீர்படுத்த வழியில்லை.
1 சாமுவேல் 13 : 22 (RCTA)
போர் தொடங்கின போது சவுலுக்கும் அவர் மகன் யோனத்தாசுக்குமேயன்றி அவர்களுடன் இருந்த மக்களில் ஒருவர் கையிலும் வாளோ ஈட்டியோ இல்லை.
1 சாமுவேல் 13 : 23 (RCTA)
பிலிஸ்தியரின் பாளையம் மக்மாசைக் கடந்து போகப் புறப்பட்டது.
❮
❯