1 சாமுவேல் 10 : 1 (RCTA)
அப்போது சாமுவேல் ஓர் எண்ணெய்ச் சிமிழை எடுத்து அவன் தலையின் மேல் ஊற்றி, அவனை முத்தமிட்டு, "இதோ ஆண்டவர் தமது உரிமையின் பேரில் மன்னனாக உன்னை அபிஷுகம் செய்தார். நீ அவருடைய மக்களைச் சூழ்ந்திருக்கும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களை மீட்பாய்; ஆண்டவர் உன்னை மன்னனாக அபிஷுகம் செய்ததற்கு அடையாளம் இதுதான்:
1 சாமுவேல் 10 : 2 (RCTA)
இன்று நீ என்னை விட்டுப் போகும் போது நண்பகல் வேளையில் பெஞ்சமின் எல்லைகளில் இராக்கேல் கல்லறை அருகே இரண்டு மனிதர்களைக் காண்பாய். அவர்கள் உன்னைப் பார்த்து, 'நீ தேடப்போன கழுதைகள் அகப்பட்டன; உன் தந்தை கழுதைகளைப் பற்றிய கவலையை விடுத்து உங்களைப் பற்றிக் கவலையோடு, "என் மகனைக் குறித்து என்ன செய்வேன்?" என்கிறார்' என்று சொல்வார்கள்.
1 சாமுவேல் 10 : 3 (RCTA)
நீ அவ்விடம் விட்டு அப்பால் சென்று தாபோரிலுள்ள கருவாலி மரத்தருகே வரும் போது கடவுளைத் தொழுது வரும்படி பேத்தலுக்குச் சென்று கொண்டிருக்கும் மூன்று மனிதர்களை அங்குக் காண்பாய். அவர்களுள் ஒருவன் மூன்று ஆட்டுக்குட்டிகளையும், இன்னொருவன் மூன்று வட்டமான அப்பளங்களையும், மூன்றாமவன் ஒரு துருத்திச் திராட்சை இரசத்தையும் கொண்டிருப்பார்கள்.
1 சாமுவேல் 10 : 4 (RCTA)
அவர்கள் உனக்கு வாழ்த்துக் கூறினபின் உனக்கு இரண்டு அப்பங்களைக் கொடுப்பார்கள்; அவர்கள் கையினின்று அவற்றைப் பெற்றுக் கொள்.
1 சாமுவேல் 10 : 5 (RCTA)
அதற்குப்பின் பிலிஸ்தியர் பாளையம் இருக்கிற கடவுளின் மலைக்கு வா. அங்கு நீ ஊரில் நுழையும் போது, மேட்டினின்று இறங்கும் இறைவாக்கினர்கள் கூட்டத்தைச் சந்திப்பாய்.
1 சாமுவேல் 10 : 6 (RCTA)
அவர்களுக்கு முன் யாழ், மேளம், குழல், சுரமண்டலம் முதலியன செல்லும். அவர்கள் இறைவாக்கினர்கள். அப்பொழுது ஆண்டவருடைய ஆவி உன்மேல் இறங்கும். அவர்களுடன் நீயும் இறைவாக்கு உரைத்து, புது மனிதனாவாய்.
1 சாமுவேல் 10 : 7 (RCTA)
இந்த அடையாளங்கள் எல்லாம் உனக்கு நேரிடும் போது உன்னால் செய்ய முடிந்தவற்றை எல்லாம் செய். ஏனெனில் ஆண்டவர் உன்னோடு இருக்கிறார்.
1 சாமுவேல் 10 : 8 (RCTA)
தகனப் பலியை ஒப்புக்கொடுக்கவும், சமாதானப் பலிகளைச் செலுத்தவும், நீ எனக்கு முன் கல்கலாவுக்கு இறங்கிப்போ. நான் உன்னிடம் வருவேன். நான் உன்னிடம் வரும் வரை ஏழுநாள் காத்திருப்பாய்; நீ செய்ய வேண்டியதை நான் உனக்குக் காண்பிப்பேன்" என்றார்.
1 சாமுவேல் 10 : 9 (RCTA)
அவன் சாமுவேலை விட்டுப் போகத் திரும்பினவுடன் கடவுள் அவன் உள்ளத்தை மாற்றினார். அன்று அந்த அடையாளங்கள் எல்லாம் நிறைவேறின.
1 சாமுவேல் 10 : 10 (RCTA)
அவர்கள் முன் கூறப்பட்ட மலைக்கு வந்த போது, இதோ இறைவாக்கினர் கூட்டம் அவனுக்கு எதிரே வந்தது. ஆண்டவருடைய ஆவி அவர் மேல் இறங்கினது. அவரும் அவர்கள் நடுவில் இறைவாக்கு உரைத்தார்.
1 சாமுவேல் 10 : 11 (RCTA)
நேற்றும் முந்தின நாளும் அவரை அறிந்திருந்தவர்கள் எல்லாம் அவர் இறைவாக்கினர் நடுவில் இருப்பதையும், இறைவாக்கு உரைப்பதையும் கண்டனர்; "சீஸ் மகனுக்கு என்ன நேர்ந்தது? சவுலும் இறைவாக்கினர்களில் ஒருவனோ?" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.
1 சாமுவேல் 10 : 12 (RCTA)
அதற்கு ஒருவருக்கு ஒருவர் மறுமொழியாக, "அவர்கள் தகப்பன் யார்?" என்றனர். இதனால், "சவுலும் இறைவாக்கினருள் ஒருவனோ?" என்ற பழமொழி வழங்கிற்று.
1 சாமுவேல் 10 : 13 (RCTA)
பிறகு அவர் இறைவாக்கு உரைப்பதை விட்டு விட்டு மேட்டை அடைந்தார்.
1 சாமுவேல் 10 : 14 (RCTA)
சவுலுடைய சிற்றப்பன் அவரையும் அவர் ஊழியனையும் கண்டு, "நீங்கள் எங்கே போனீர்கள்?" என்று கேட்டான். அவர்கள், "கழுதை தேடப்போனோம்; அவற்றைக் காணாததால் சாமுவேலிடம் போனோம்" என்று மறுமொழி சொன்னார்கள்.
1 சாமுவேல் 10 : 15 (RCTA)
அவருடைய சிற்றப்பன், "சாமுவேல் உனக்குச் சொன்னதை எனக்குத் தெரிவி" என்று அவரைக் கேட்டுக் கொண்டான்.
1 சாமுவேல் 10 : 16 (RCTA)
சிற்றப்பனைப் பார்த்து சவுல், "கழுதைகள் கண்டு பிடிக்கப்பட்டதாக அவர் எங்களுக்குத் தெரிவித்தார்" என்றார். சாமுவேல் தம்மிடத்தில் கூறியிருந்த அரசாங்க காரியங்களைப் பற்றி அவனுக்கு ஒன்றும் அறிவிக்கவில்லை.
1 சாமுவேல் 10 : 17 (RCTA)
பிறகு சாமுவேல் மக்களை மாஸ்பாவில் ஆண்டவர் திருமுன் வரவழைத்தார்.
1 சாமுவேல் 10 : 18 (RCTA)
இஸ்ராயேல் மக்களை நோக்கி, "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் சொல்வதாவது: 'இஸ்ராயேலை எகிப்தினின்று புறப்படச் செய்து எகிப்தியர் கையினின்றும், உங்களைத் துன்பப்படுத்தின எல்லா அரசர்கள் கையினின்றும் உங்களை மீட்டது நாமே.
1 சாமுவேல் 10 : 19 (RCTA)
நீங்களோ எல்லாத் தீமைகளினின்றும் இன்னல்கள் அனைத்தினின்றும் உங்களை மீட்ட உங்கள் கடவுளையே இன்று புறக்கணித்துத் தள்ளி, எங்களை ஆள எங்களுக்கு அரசனை ஏற்படுத்தும் என்று சொன்னீர்கள்' என்றார். இப்போது உங்கள் கோத்திரப்படியும் குடும்பப்படியும் ஆண்டவர் திருமுன் நில்லுங்கள்" என்றார்.
1 சாமுவேல் 10 : 20 (RCTA)
சாமுவேல் இஸ்ராயேல் கோத்திரத்துக்கெல்லாம் சீட்டுப்போட்டார். சீட்டு பெஞ்சமின் கோத்திரத்தின் மேல் விழுந்தது.
1 சாமுவேல் 10 : 21 (RCTA)
பெஞ்சமின் கோத்திரத்துக்கும் அவன் உறவினர்களுக்கும் சீட்டுப்போட்டார். அது மேத்ரி வம்சத்தின் மேல் விழுந்தது. இவ்விதமாகச் சீஸ் மகனாகிய சவுல் வரை வந்தது. அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஆனால் காணவில்லை.
1 சாமுவேல் 10 : 22 (RCTA)
அதன் பின், "அவர் இங்கு வருவாரா?" என்று ஆண்டவரைக் கேட்டார்கள். "இதோ, அவன் வீட்டில் ஒளிந்திருக்கிறான்" என்று ஆண்டவர் மறுமொழி சொன்னார்.
1 சாமுவேல் 10 : 23 (RCTA)
அவர்கள் ஓடி அவரை அங்கிருந்து கொண்டு வந்தார்கள். அவர் மக்களின் நடுவில் நின்றார்; எல்லா மக்களும் அவர் தோள் உயரமே இருந்தார்கள்.
1 சாமுவேல் 10 : 24 (RCTA)
அப்பொழுது சாமுவேல் எல்லா மக்களையும் நோக்கி, "மக்கள் அனைவரிலும் அவருக்கு இணை யாரும் இல்லாததால், ஆண்டவர் யாரைத் தேர்ந்து கொண்டுள்ளார் என்று நன்றாய்க் கண்டுகொண்டீர்கள்" என்றார். அப்பொழுது மக்கள் எல்லாரும், "அரசே, வாழி!" என்று ஆர்ப்பரித்தனர்.
1 சாமுவேல் 10 : 25 (RCTA)
சாமுவேல் அரச சட்டத்தை மக்களுக்கு வெளிப்படுத்தி அதை ஒரு நூலில் எழுதி ஆண்டவருக்கு முன் வைத்தார். சாமுவேல் மக்கள் அனைவரையும் ஒவ்வொருவராய் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.
1 சாமுவேல் 10 : 26 (RCTA)
சவுலும் காபாவிலுள்ள தம் வீட்டுக்குப் போனார். படையில் சேரும்படி எவரெவரைக் கடவுள் தூண்டினாரோ அவர்கள் அவருடன் போனார்கள்.
1 சாமுவேல் 10 : 27 (RCTA)
ஆனால் பெலியாலின் மக்கள், "இவனா நம்மைக் காப்பாற்றப்போகிறான்?" என்று சொன்னார்கள். இவர்கள் அவரை இகழ்ந்து அவருக்குப் பரிசில்கள் அளிக்கவில்லை. அவரோ காது கோளாதவர் போல் இருந்தார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27

BG:

Opacity:

Color:


Size:


Font: