1 சாமுவேல் 1 : 1 (RCTA)
எபிராயீம் என்ற மலையில் சொப்பீம் என அழைக்கப்பட்ட ராமாத்தாயீம் ஊரானாகிய ஒரு மனிதன் இருந்தான். அவன் பெயர் ஏல்கானா. அவன் எரோவாம் மகன்; இவன் எலியூ மகன்; இவன் தோயு மகன்; இவன் எபிராயீம் கோத்திரத்தானான சூபுடைய மகன்.
1 சாமுவேல் 1 : 2 (RCTA)
அவனுக்கு இரு மனைவிகள்: ஒருத்தியின் பெயர் அன்னா, மற்றொருத்தியின் பெயர் பெனென்னா. பெனென்னாவுக்குப் பிள்ளைகள் இருந்தனர். அன்னாவுக்கோ பிள்ளைகள் இல்லை.
1 சாமுவேல் 1 : 3 (RCTA)
அம்மனிதன் குறிக்கப்பட்ட நாட்களில் சேனைகளின் ஆண்டவரை வழிபடவும், அவருக்குப் பலி செலுத்தவும் தன் ஊரினின்று சீலோவுக்குப் போவான். ஏலியின் புதல்வர் ஓப்னி, பினேசு இருவரும் அங்கே ஆண்டவரின் குருக்களாய் இருந்தனர்.
1 சாமுவேல் 1 : 4 (RCTA)
ஒரு நாள் ஏல்கானா பலி செலுத்திய பின் அப்பலியின் பங்குகளைத் தன் மனைவி பெனென்னாவுக்கும், அவளுடைய புதல்வர் புதல்வியர் எல்லாருக்கும் கொடுத்தான்.
1 சாமுவேல் 1 : 5 (RCTA)
அன்னாவுக்கோ ஒரு பங்கு கொடுத்தான். தான் அன்னாவுக்கு அன்பு செய்து வந்ததைப் பற்றி வருந்தினான். ஆண்டவரோ அவளை மலடியாக்கியிருந்தார்.
1 சாமுவேல் 1 : 6 (RCTA)
அவளுடைய சக்களத்தி அவளை வருத்தி மிகவும் துன்பப்படுத்துவாள். ஆண்டவர் அவளை மலடியாக்கியிருந்ததைப் பற்றியே பலமுறை அவளை ஏசுவாள்.
1 சாமுவேல் 1 : 7 (RCTA)
ஆண்டவரின் ஆலயத்திற்குப் போக வேண்டிய காலம் வரும்போதெல்லாம் ஆண்டுதோறும் அவ்வாறு செய்வாள்; அவளைப் பரிகாசம் செய்வாள். ஆகவே அன்னா அழுவாள்; உண்ணமாட்டாள்.
1 சாமுவேல் 1 : 8 (RCTA)
இதனால் அவள் கணவன் ஏல்கானா அவளை நோக்கி, "அன்னா, ஏன் அழுகிறாய்? ஏன் சாப்பிடாதிருக்கிறாய்? ஏன் உன் உள்ளம் துன்பப்படுகிறது? பத்துப் பிள்ளைகளை விட உனக்கு நான் மேலன்றோ?" என்பான்.
1 சாமுவேல் 1 : 9 (RCTA)
அன்னா சீலோவில் உண்டு குடித்த பின் எழுந்தாள். ஏலி என்ற குரு ஆண்டவரின் ஆலயத்து வாசற்படி முன் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்த போது,
1 சாமுவேல் 1 : 10 (RCTA)
அன்னா துயரம் நிறைந்தவளாய் வெகுவாய் அழுது ஆண்டவரை நோக்கி,
1 சாமுவேல் 1 : 11 (RCTA)
சேனைகளின் ஆண்டவரே, உம் அடியாளின் துன்பத்தைக் கண்ணோக்கிப் பாரும். உம் அடிமையை மறவாது நினைவு கூர்ந்தருளும். உம் அடியாளுக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொடுத்தால், அவனை அவன் வாழ்நாள் முழுவதும் ஆண்டவருக்கு ஒப்புக் கொடுப்பேன். சவரக்கத்தி அவன் தலை மேல் படாது" என்று பொருத்தனை செய்து கொண்டாள்.
1 சாமுவேல் 1 : 12 (RCTA)
அவள் ஆண்டவர் திருமுன் அதிகம் வேண்டிக்கொண்டிருக்க, ஏலி அவளது வாயைக் கவனிக்க நேரிட்டது.
1 சாமுவேல் 1 : 13 (RCTA)
ஏனெனில், அன்னா தன் மனதுக்குள்ளே பேசுவாள். அவள் உதடுகள் மட்டும் அசைந்தன; ஆனால் குரல் ஒலி கேட்கப்படவில்லை. அவள் குடிவெறியில் இருப்பதாக ஏலி எண்ணி,
1 சாமுவேல் 1 : 14 (RCTA)
அவளை நோக்கி, "எத்தனை காலம் குடிவெறியில் இருப்பாய்? உனக்குப் போதை தரும் திராட்சை இரசத்தைக் கொஞ்சம் செரிக்கும்படி விடக் கூடாதா?" என்றார்.
1 சாமுவேல் 1 : 15 (RCTA)
அன்னா மறுமொழியாக, "குருவே அப்படியன்று, நானோ மிகவும் அபாக்கியவதி. திராட்சை இரசத்தையோ, போதை தரும் வேறு எதையுமோ நான் குடிக்கவில்லை. என் ஆன்மாவை ஆண்டவர் திருமுன் திறந்து காட்டினேன்.
1 சாமுவேல் 1 : 16 (RCTA)
பெலியால் புதல்விகளில் ஒருத்தியாக அடியாளை எண்ண வேண்டாம். ஏனெனில், என் துன்ப துயரத்தின் மிகுதியால் நான் இதுவரை பேசினேன்" என்றாள்.
1 சாமுவேல் 1 : 17 (RCTA)
அப்போது ஏலி, "இஸ்ராயேலின் ஆண்டவரிடத்தில் நீ கேட்ட மன்றாட்டை அவர் உனக்குத் தந்தருள்வார். நீ சமாதானமாய்ப் போய் வா" என்று பதில் உரைத்தார்.
1 சாமுவேல் 1 : 18 (RCTA)
அவளோ மறுமொழியாக, "உம் அடியாள் மேல் உமது அருள் இருப்பதாக" என்றாள். மேலும் அப்பெண் தன் இல்லம் சென்று சாப்பிட்டாள். அதற்குப் பின் அவள் முகம் துக்கமின்றி இருந்தது.
1 சாமுவேல் 1 : 19 (RCTA)
அவர்கள் அதிகாலையில் எழுந்து, ஆண்டவரை வழிபட்டபின் புறப்பட்டு ராமாத்தாவிலுள்ள தம் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். மேலும் ஏல்கானா தன் மனைவி அன்னாவோடு கூடினான். ஆண்டவர் அவள் மேல் இரக்கம் கொண்டார்.
1 சாமுவேல் 1 : 20 (RCTA)
உண்மையில், சில நாள் கழித்து அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றாள். ஆண்டவரிடத்தில் அவனைக் கேட்டு அடைந்த படியால், அவனுக்குச் சாமுவேல் என்று பெயரிட்டாள்.
1 சாமுவேல் 1 : 21 (RCTA)
மேலும், அவள் கணவன் ஏல்கானா தன் வீட்டார் அனைவருடனும் ஆண்டவருக்கு வழக்கமான பலியையும் தன் பொருத்தனையும் செலுத்தப் போனான்.
1 சாமுவேல் 1 : 22 (RCTA)
அன்னா அவனுடன் போகவில்லை; அவளோ, "பிள்ளை பால்குடி மறக்கும் வரை நான் போகமாட்டேன்" என்றும், "அதன் பிறகு அவனை ஆண்டவருக்கு ஒப்புக் கொடுக்கவும், அவன் எப்பொழுதும் அங்கு இருக்கவும் பிள்ளையைக் கூட்டிக் கொண்டு போவேன்" என்றும் தன் கணவனுக்குச் சொன்னாள்.
1 சாமுவேல் 1 : 23 (RCTA)
அவள் கணவன் ஏல்கானா அவளை நோக்கி, "உனக்கு நலம் என்று தோன்றுகிறபடியே செய்; பிள்ளை பால்குடி மறக்கும் வரை இரு. ஆண்டவர் தம் வாக்கை நிறைவேற்ற மன்றாடுகிறேன்" என்றான். ஆகவே அன்னா வீட்டில் தங்கிவிட்டாள். பிள்ளை பால்குடி மறக்கும் வரை அவனைப் பாலூட்டி வளர்த்தாள்.
1 சாமுவேல் 1 : 24 (RCTA)
பால்குடி மறந்தபின் அன்னா தன்னுடன் மூன்று கன்றுகளையும் மூன்று மரக்கால் மாவையும் ஒரு சாடி திராட்சை இரசத்தையும் எடுத்துக் கொண்டு சீலோவிலுள்ள கோயிலுக்குத் தன் மகனை எடுத்துக்கொண்டு போனாள்; பிள்ளையோ மிகச் சிறியவனாய் இருந்தான்.
1 சாமுவேல் 1 : 25 (RCTA)
அவர்கள் ஒரு கன்றைப் பலியிட்டபின் பிள்ளையை ஏலி என்பவரிடம் ஒப்படைத்தனர்.
1 சாமுவேல் 1 : 26 (RCTA)
அன்னா அவரை நோக்கி, "குருவே, நீர் உயிரோடு இருப்பது எப்படி உண்மையோ, அப்படியே உண்மையாகச் சொல்கிறேன்: இங்கு நின்று உமக்கு முன் ஆண்டவரை மன்றாடி வந்த அப்பெண் நானே.
1 சாமுவேல் 1 : 27 (RCTA)
இப்பிள்ளைக்காக மன்றாடினேன்; ஆண்டவரும் என் மன்றாட்டைக் கேட்டருளினார்.
1 சாமுவேல் 1 : 28 (RCTA)
(27b) ஆகவே, இவனை ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தேன்; இவன் வாழ்நாளெல்லாம் ஆண்டவருக்குச் சொந்தமாய் இருப்பான்" என்று சொன்னாள். பிறகு அவர்கள் அங்கு ஆண்டவரை வழிபட்டனர். அன்னா வேண்டிக்கொண்ட செபமாவது:
❮
❯