1 பேதுரு 4 : 1 (RCTA)
ஆகவே, கிறிஸ்து தம் ஊன் உடலில் பாடுபட்டதை நினைத்து, அவர் அப்போது கொண்டிருந்த உள்ளக் கருத்தை நீங்களும் படைக்கலமாக அணிந்து கொள்ளுங்கள்.
1 பேதுரு 4 : 2 (RCTA)
உடலில் துன்புற்றவன், பாவத்தினின்று விலகிவிடடான்; இனி அவன் தன் வாழ்வின் எஞ்சிய நாட்களில் மனித இச்சைகளின்படி வாழாமல், கடவுளின் திருவுளப்படி வாழ்பவன் ஆகிறான்.
1 பேதுரு 4 : 3 (RCTA)
புறமதத்தினர் செய்ய விரும்புவதையெல்லாம் நீங்கள் கடந்த காலத்தில் செய்து வந்தது போதும். அப்போது காமவெறி, தீய இச்சை, மது மயக்கம், களியாட்டம், குடிவெறி, வெறுப்புக்குரிய சிலை வழிபாடு இவற்றில் உழன்றீர்கள்.
1 பேதுரு 4 : 4 (RCTA)
இப்போதோ நீங்கள் அத்தகைய வெறி கொண்ட வாழ்க்கையில் தங்களோடு சேர்ந்து உழலாததைக் கண்டு, அவர்கள் அதைப் புரிந்துகொள்ள முடியாமல், உங்களைப் பழித்துரைக்கின்றனர்.
1 பேதுரு 4 : 5 (RCTA)
வாழ்வோருக்கும், இறந்தோருக்கும் தீர்ப்பிடத் தயாராயிருப்பவரிடம் அவர்கள் கணக்குக் கொடுப்பார்கள்.
1 பேதுரு 4 : 6 (RCTA)
இறந்தோர்க்கு நற்செய்தி அறிவிக்கப்பட்டது எதற்காகவெனில், அவர்கள் உடலைப் பொருத்த மட்டில் எல்லா மனிதர்க்குமுரிய தீர்ப்புப் பெற்றிருந்தாலும், தேவ ஆவியைப் பெற்ற நிலையில் கடவுளுக்குரிய வாழ்வு பெறுவதற்காகவே.
1 பேதுரு 4 : 7 (RCTA)
அனைத்தின் முடிவும் நெருங்கிவிட்டது. எனவே, நீங்கள் செபத்தில் ஈடுபடுவதற்குச் சம நிலையோடும், மட்டுமிதத்தோடும் வாழுங்கள்.
1 பேதுரு 4 : 8 (RCTA)
அனைத்திற்கும் மேலாக, ஒருவர்க்கொருவர் எப்போதும் அன்பு காட்டுங்கள்; ஏனெனில், அன்பு திரளான பாவங்களை அகற்றி விடும்.
1 பேதுரு 4 : 9 (RCTA)
முணுமுணுக்காமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
1 பேதுரு 4 : 10 (RCTA)
உங்களுள் ஒவ்வொருவரும் தாம் பெற்ற வரத்திற்கு ஏற்றவாறு கடவுளுடைய பலவகைப்பட்ட அருளின் சீரிய கண்காணிப்பாளர் என, கிடைத்த வரத்தைப் பிறர்க்குப் பணிபுரியப் பயன் படுத்துங்கள்.
1 பேதுரு 4 : 11 (RCTA)
பேசும் வரத்தைப் பெற்றவன், கடவுள் மொழியையே பேசுபவன்போல் பேசட்டும்; பணிசெய்யும் வரத்தைப் பெற்றவன், கடவுள் அளிக்கும் ஆற்றலை அடைந்தவன் போல் பணி செய்யட்டும்; இவ்வாறு இயேசு கிறிஸ்துவின் வழியாகக் கடவுள் அனைத்திலும் மகிமை அடைவார். அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றும் உரித்தாகும். ஆமென்.
1 பேதுரு 4 : 12 (RCTA)
அன்பிற்குரியவர்களே, துன்பத் தீயில் நீங்கள் புடமிடப்படுகையில், ஏதோ எதிர்பாராதது நேர்ந்து விட்டதென மலைத்துப் போகாதீர்கள்.
1 பேதுரு 4 : 13 (RCTA)
எந்த அளவிற்குக் கிறிஸ்துவின் பாடுகளில் நீங்கள் பங்கு கொள்ளுகிறீர்களோ, அந்த அளவிற்கு அகமகிழுங்கள்; அவரது மகிமை வெளிப்படும்போது, உவப்புடன் அக்களிப்புக் கொள்வீர்கள்.
1 பேதுரு 4 : 14 (RCTA)
இயேசுவினுடைய பெயரின் பொருட்டுப் பிறர் உங்களை வசை கூறினால், நீங்கள் பேறுபெற்றவர்கள்; அப்போது இறைமாட்சிமையும் கடவுளின் ஆவியும் உங்கள் மீது தங்கும்.
1 பேதுரு 4 : 15 (RCTA)
ஆனால், உங்களுள் எவனும் கொலைஞன் என்றோ, திருடன் தீமை செய்பவன் என்றோ, பிறர் காரியங்களில் தலையிடுபவன் என்றோ துன்பத்திற்குள்ளாதல் கூடாது.
1 பேதுரு 4 : 16 (RCTA)
மாறாக, ஒருவன் கிறிஸ்தவன் என்பதற்காகத் துன்பத்திற்கு உள்ளானால், அதைப் பற்றி வெட்கப்பட வேண்டாம்; அப்பெயரை பெற்றிருப்பதால், அவன் கடவுளை மகிமைப் படுத்துவானாக.
1 பேதுரு 4 : 17 (RCTA)
இதோ, தீர்ப்புத் தொடங்க வேண்டிய காலம் வந்துவிட்டது. முதலில் அது கடவுளுடைய குடும்பத்திலேயே தொடங்குகிறதென்றால், கடவுளின் நற்செய்தியை ஏற்காதவர்களின் முடிவு என்னவாகும்?
1 பேதுரு 4 : 18 (RCTA)
நீதிமான்களே மீட்படைவது அரிதென்றால் இறைப்பற்றில்லாதவர், பாவிகள் இவர்கள் கதி என்னவாகும்?"
1 பேதுரு 4 : 19 (RCTA)
எனவே, கடவுளின் திருவுளப்படி துன்பத்துக்கு ஆளாகிறவர்களும் நன்மை செய்வதில் நிலைத்திருந்து, படைத்தவரிடம் தம் ஆன்மாக்களை ஒப்படைப்பார்களாக; அவர் சொல் தவற மாட்டார்.
❮
❯