1 இராஜாக்கள் 8 : 1 (RCTA)
அப்பொழுது கடவுளுடைய உடன்படிக்கைப் பேழையைத் தாவீதின் நகர் சீயோனினின்று கொண்டு வரும்படி இஸ்ராயேலின் மூப்பரும் இஸ்ராயேலின் கோத்திரத் தலைவர்களும் குடும்பத் தலைவர்களும் யெருசலேமிற்கு சாலமோன் அரசரைக் காண வந்தனர்.
1 இராஜாக்கள் 8 : 2 (RCTA)
இஸ்ராயேலர் அனைவரும் ஏழாம் மாதமாகிய எத்தானீம் மாதப் பண்டிகையின் போது சாலமோன் அரசரிடம் வந்தனர்.
1 இராஜாக்கள் 8 : 3 (RCTA)
இஸ்ராயேலின் மூப்பர் அனைவரும் வந்தவுடன் குருக்கள் ஆண்டவருடைய பேழையை எடுத்து,
1 இராஜாக்கள் 8 : 4 (RCTA)
ஆண்டவருடைய பேழையையும் வாக்குறுதியின் பேழையையும் திருத்தலத்தின் பரிசுத்த தட்டு முட்டுகள் அனைத்தையும் குருக்களும் லேவியரும் தூக்கிச் சென்றனர்.
1 இராஜாக்கள் 8 : 5 (RCTA)
சாலமோன் அரசரும் அவரோடு இஸ்ராயேல் மக்கள் அனைவரும் பேழைக்கு முன்பாக நடந்து சென்றனர். கணக்கற்ற ஆடுகளையும் மாடுகளையும் பலியிட்டனர்.
1 இராஜாக்கள் 8 : 6 (RCTA)
அப்படியே குருக்கள் ஆண்டவருடைய உடன்படிக்கைப் பேழையை ஆலயத்தின் திருத்தலமாகிய மகா பரிசுத்த இடத்தில் கெருபீம்களுடைய இறக்கைகளின் கீழ் கொண்டுவந்து வைத்தனர்.
1 இராஜாக்கள் 8 : 7 (RCTA)
அக்கெருபீம்கள் பேழையிருக்கும் இடத்தில் தங்கள் இரு இறக்கைகளையும் விரித்து, மேலிருந்து பேழையையும் அதன் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.
1 இராஜாக்கள் 8 : 8 (RCTA)
திருத்தலத்திற்கு முன்னால் பரிசுத்த இடத்தில் காணப்படக்கூடிய தண்டுகள் இப்போது வெளியே காணப்படவில்லை. அவை இன்று வரை அங்கே தான் இருக்கின்றன.
1 இராஜாக்கள் 8 : 9 (RCTA)
இஸ்ராயேல் மக்கள் எகிப்து நாட்டிலிருந்து புறப்பட்ட பின் கடவுள் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்ட போது, மோயீசன் ஒரேபில் அப்பேழையில் வைத்த இரு கற்பலகைகளேயன்றி அதில் வேறொன்றும் இல்லை.
1 இராஜாக்கள் 8 : 10 (RCTA)
குருக்கள் பரிசுத்த இடத்திலிருந்து புறப்படவே ஒரு மேகம் கடவுளுடைய ஆலயத்தை நிரப்பிற்று.
1 இராஜாக்கள் 8 : 11 (RCTA)
அம் மேகத்தின் பொருட்டு குருக்கள் திருப்பணி புரிய அங்கு நிற்கக் கூடாமல் போயிற்று. ஆண்டவருடைய மாட்சி ஆண்டவருடைய ஆலயத்தை நிரப்பிற்று.
1 இராஜாக்கள் 8 : 12 (RCTA)
அப்பொழுது சாலமோன், "நாம் மேகத்தில் தங்கி வாழ்வோம்' என்று ஆண்டவர் சொல்லியிருக்கிறார்.
1 இராஜாக்கள் 8 : 13 (RCTA)
ஆண்டவரே, நீர் தங்கி வாழத் தகுந்த வீடும், நீர் என்றென்றும் இருக்கத்தக்க அரியணையுமான ஆலயத்தை நான் கட்டியுள்ளேன்" என்று சொன்னார்.
1 இராஜாக்கள் 8 : 14 (RCTA)
பின்னர் இஸ்ராயேல் மக்கள் பக்கம் திரும்பி அவர்களை ஆசீர்வதித்தார். அவர்கள் எல்லாரும் அவ்விடத்திலேயே நின்றனர்.
1 இராஜாக்கள் 8 : 15 (RCTA)
சாலமோன் சொன்னதாவது: "இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப் பெறுவாராக! அவர் என் தந்தை தாவீதுக்குத் தம் வாயினால் சொல்லியிருந்ததைத் தம் கைகளினால் நிறைவேற்றியுள்ளார்.
1 இராஜாக்கள் 8 : 16 (RCTA)
அவர், 'நம் மக்களாகிய இஸ்ராயேலை நாம் எகிப்திலிருந்து மீட்ட நாள்முதல், நமது பெயர் விளங்கும்படி ஓர் ஆலயம் எழுப்புவதற்காக இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமுள்ள ஒரு நகரை நாம் தேர்ந்து கொள்ளாமல், நம் இஸ்ராயேல் மக்கள்மேல் தலைவனாய் இருக்கும்படி தாவீதையே தேர்ந்துகொண்டோம்' என்றார்.
1 இராஜாக்கள் 8 : 17 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயருக்குக் கோயிலைக் கட்ட வேண்டும் என்ற விருப்பம் என் தந்தை தாவீதுக்கு இருந்தது.
1 இராஜாக்கள் 8 : 18 (RCTA)
ஆயினும் ஆண்டவர் என் தந்தை தாவீதை நோக்கி, 'நம் பெயருக்கு ஆலயத்தைக் கட்ட வேண்டும் என்று நீ உன் மனத்தில் விரும்பினதும், அதுபற்றி யோசித்ததும் நல்ல காரியந்தான்.
1 இராஜாக்கள் 8 : 19 (RCTA)
ஆயினும் நீ அவ்வாலயத்தைக் கட்டப் போகிறதில்லை. உன்னிலிருந்து உதிக்கும் உன் மகனே நம் பெயருக்கு அவ்வாலயத்தைக் கட்டுவான்' என்றார்.
1 இராஜாக்கள் 8 : 20 (RCTA)
இப்பொழுது ஆண்டவர் தாம் கூறிய வார்த்தையை நிறைவேற்றினார். ஆண்டவர் சொன்னபடியே நான் என் தந்தை தாவீதின் வழித்தோன்றலாய் இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருந்து இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் பெயருக்கு ஆலயத்தைக் கட்டினேன்.
1 இராஜாக்கள் 8 : 21 (RCTA)
ஆண்டவர் நம் முன்னோர்களை எகிப்து நாட்டிலிருந்து மீட்டு வந்த போது அவர்களோடு அவர் செய்து கொண்ட உடன்படிக்கை பேழைக்குள் இருக்கின்றதே; அதற்காக ஓர் இடத்தை ஏற்படுத்தினேன்' என்றார்.
1 இராஜாக்கள் 8 : 22 (RCTA)
பின்பு சாலமோன் ஆண்டவருடைய பீடத்துக்கு முன் இஸ்ராயேல் சபையார் முன்னிலையில் நின்று வானத்தை நோக்கித் தம் கைகளை விரித்து சொன்னதாவது:
1 இராஜாக்கள் 8 : 23 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, மேலே விண்ணிலும் கீழே மண்ணிலும் உமக்கு இணையான கடவுள் இல்லை. உம் திருமுன் தங்கள் முழு இதயத்தோடும் நடந்த உம் அடியார்களோடு நீர் உடன்படிக்கை செய்து உமது இரக்கத்தையும் அவர்களுக்குக் காட்டி வருகிறீர்.
1 இராஜாக்கள் 8 : 24 (RCTA)
நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காத்தருளினீர். அதை உம் வாயினால் சொல்லி உம் கைகளினால் நிறைவேற்றினீர்.
1 இராஜாக்கள் 8 : 25 (RCTA)
அதற்கு இந்நாளே சாட்சி. இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, நீர் உம் அடியானாகிய என் தந்தை தாவீதை நோக்கி, 'நீ நமக்கு முன்பாக நடந்ததுபோல் உன் புதல்வரும் நமக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால் இஸ்ராயேலின் அரியணையில் வீற்றிருக்கும் உரிமையாளன் நமக்கு முன்பாக உனக்கு இல்லாமல் போவதில்லை' என்று சொன்னதை இப்பொழுது நிறைவேற்றும்.
1 இராஜாக்கள் 8 : 26 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியானாகிய என் தந்தை தாவீதுக்கு நீர் சொன்ன உமது வார்த்தையை உறுதிப்படுத்தியருளும்.
1 இராஜாக்கள் 8 : 27 (RCTA)
கடவுள் உண்மையில் பூமியில் தங்கி வாழ்வாரா? வானகங்களும் வானாதி வானகங்களும் உம்மைக் கொள்ள இயலாதென்றால், நான் கட்டியுள்ள இவ்வாலயம் எம்மாத்திரம்!
1 இராஜாக்கள் 8 : 28 (RCTA)
என் கடவுளாகிய ஆண்டவரே, உம் அடியான் இன்று உம் திருமுன் செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு உம் அடியானுடைய மன்றாட்டுக்கும் வேண்டுதலுக்கும் இரங்கியருளும்.
1 இராஜாக்கள் 8 : 29 (RCTA)
உம் அடியான் இவ்விடத்தில் செய்யும் விண்ணப்பத்தை நீர் கேட்டருளும்படி, 'நம்முடைய பெயர் இவ்விடத்தில் விளங்கும்' என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மீது இரவும் பகலும் உமது திருக்கண் நோக்கியருளும்.
1 இராஜாக்கள் 8 : 30 (RCTA)
உம் அடியானும், இவ்விடத்தில் விண்ணப்பம் செய்யவிருக்கிற உம் மக்கள் இஸ்ராயேலரும் எவ்வித விண்ணப்பத்தைக் கொண்டுவந்தாலும், அவர்களுக்குச் செவிமடுத்தருளும். விண்ணகமாகிய உமது உறைவிடத்தில் அதை நீர் கேட்பீராக; கேட்டு, அவர்களை மன்னிப்பீராக.
1 இராஜாக்கள் 8 : 31 (RCTA)
ஒருவன் தன் அயலானுக்குத் தீங்கு இழைத்ததன் பொருட்டு அந்த அயலான் அவன் மீதுபழி சுமத்தி, ஆலயப் பீடத்தின் முன் அவன் ஆணையிடும்படி செய்தால்,
1 இராஜாக்கள் 8 : 32 (RCTA)
அப்போது நீர் விண்ணில் அவனது வழக்கை விசாரித்து, நீதி வழங்கி, அநியாயக்காரனைக் கண்டித்து. அவனது கெட்ட நடத்தையை அவன் தலையின்மேல் சுமத்தி, அவனைக் குற்றவாளியாகத் தீர்த்து, நீதிமானுக்கு அவனது நீதிக்குத் தகுந்தபடி அவனை நீதிமானாக்கி, இவ்வாறு உம் அடியாருக்கு நீதி வழங்குவீராக.
1 இராஜாக்கள் 8 : 33 (RCTA)
உம் மக்களாகிய இஸ்ராயேலர் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததினால் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஓடி, பிறகு மனம் வருந்தி உம்மிடம் திரும்பி, உம் பெயரை அறிக்கையிட்டு இவ்வாலயத்துக்கு முன்பாக வந்து, உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால்,
1 இராஜாக்கள் 8 : 34 (RCTA)
விண்ணிலிருந்து நீர் அவர்களது மன்றாட்டைக் கேட்டு, உம் மக்களாகிய இஸ்ராயேலரின் பாவத்தை மன்னித்து, அவர்களின் முன்னோர்க்கு நீர் கொடுத்த நாட்டுக்கு அவர்களைத் திரும்பி வரச்செய்வீராக.
1 இராஜாக்கள் 8 : 35 (RCTA)
அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்ததினால் வானம் அடைபட்டு மழை பெய்யாதிருக்கும் போது, அவர்கள் இவ்விடத்திற்கு வந்து மன்றாடி உமது பெயர் விளங்கத் தவம் புரிந்து தாங்கள் படும் துன்பத்தின் பொருட்டுத் தங்கள் பாவங்களை விட்டு மனம் திரும்பினால்,
1 இராஜாக்கள் 8 : 36 (RCTA)
விண்ணிலிருந்து நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, உம் அடியாரும் உம் மக்களுமாகிய இஸ்ராயேலர் செய்த பாவத்தை மன்னித்தருளும். அவர்கள் நடக்க வேண்டிய நல்வழியை அவர்களுக்குக் காட்டி நீர் உம் மக்களுக்குச் சொந்தமாகக் கொடுத்த உமது நாட்டில் மழை பொழியச் செய்தருளும்.
1 இராஜாக்கள் 8 : 37 (RCTA)
நாட்டில் பஞ்சம், கொள்ளைநோய், வறட்சி, சாவி, வெட்டுகிளி, பூஞ்சுணம் உண்டாகிற போதும், அவர்களின் எதிரிகள் நகர்களை முற்றுகையிட்டு அவர்களைத் துன்புறுத்தும் போதும், கொள்ளை நோயாவது வேறெந்த நோயாவது வருகிற போதும்,
1 இராஜாக்கள் 8 : 38 (RCTA)
உம் மக்கள் இஸ்ராயேலருக்கு எவ்விதச் சாபமோ துன்பமோ வருகிற போதும், அவர்கள் தங்கள் இதய நோயை உணர்ந்து இவ்வாலயத்துக்கு வந்து தங்கள் கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பங்களையும் வேண்டுதல்களையும்,
1 இராஜாக்கள் 8 : 39 (RCTA)
உமது உறைவிடமாகிய விண்ணினின்று நீர் கேட்டு மன்னித்து, அவனவன் இதய நோக்கத்துக்கும் விருப்பத்துக்கும் செய்கைகளுக்கும் தகுந்தபடி பிரதிபலன் அளிப்பீராக. ஏனெனில், நீர் ஒருவரே எல்லா மனிதரின் இதயத்தையும் அறிந்தவர்.
1 இராஜாக்கள் 8 : 40 (RCTA)
அவ்விதம் செய்தால், நீர் எங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் உமக்கு அஞ்சி நடப்பார்கள்.
1 இராஜாக்கள் 8 : 41 (RCTA)
உம் மக்களாகிய இஸ்ராயேல் அல்லாத புறவினத்தார் உமது புகழ்பெற்ற பெயரையும் உமது கைவன்மையையும் உமது தோள் வலிமையையும் கேள்வியுற்று, உம் பெயரின் பொருட்டுத் தொலை நாட்டிலிருந்து வந்து,
1 இராஜாக்கள் 8 : 42 (RCTA)
எங்கும் புகழ் பெற்ற இச்செய்தியால் அவர்கள் இங்கு வந்து விண்ணப்பம் செய்யும் போது,
1 இராஜாக்கள் 8 : 43 (RCTA)
உமது உறைவிடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களது குரலைக் கேட்டு, அவர்கள் கேட்பவற்றை எல்லார்ம அருள்வீராக. இதனால் பூமியின் மக்கள் எல்லாரும் உம் மக்கள் இஸ்ராயேலைப் போல் உமக்கு அஞ்சி, நான் கட்டின இவ்வாலயத்தில் உமது பெயர் விளங்குகிறதென்று அறிந்து கொள்வார்கள்.
1 இராஜாக்கள் 8 : 44 (RCTA)
நீர் உம் மக்களை அனுப்பும் வழியிலேயே அவர்கள் தங்கள் பகைவர்களோடு போரிடப் புறப்படும் போது, நீர் தேர்ந்துகொண்ட இந்நகருக்கும், உமது பெயர் விளங்க நான் கட்டியுள்ள இவ்வாலயத்துக்கும் நேராக அவர்கள் திரும்பி உம்மை நோக்கி விண்ணப்பம் செய்தால்,
1 இராஜாக்கள் 8 : 45 (RCTA)
விண்ணிலிருந்து நீர் அவர்களது விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்களுக்கு நீதி செலுத்துவீராக.
1 இராஜாக்கள் 8 : 46 (RCTA)
அவர்கள் உமக்கு எதிராய்ப் பாவம் செய்து (ஏனெனில் பாவம் செய்யாத மனிதன் ஒருவனுமில்லை), நீர் அவர்கள்மேல் கோபம் கொண்டு, அவர்களை எதிரிகள் கையில் ஒப்படைத்து, அப்பகைவர்கள் அவர்களைத் தூரத்திலாவது அருகிலாவது இருக்கிற தங்கள் நாட்டிற்குச் சிறை பிடித்துக் கொண்டு போகும் போதும்,
1 இராஜாக்கள் 8 : 47 (RCTA)
அவர்கள் சிறைப்படுத்தப்பட்ட நாட்டில் தாங்கள் மனம் வருந்தி மனந்திரும்பி, 'நாங்கள் பாவம் செய்து, அக்கிரமம் புரிந்து, தீயவழியில் நடந்தோம்' என்று தங்கள் அடிமைத் தளையிலிருந்து உம்மை நோக்கி வேண்டும்போதும்,
1 இராஜாக்கள் 8 : 48 (RCTA)
தாங்கள் சிறைப்படுத்தப்பட்ட தங்கள் பகைவரின் நாட்டில், தங்கள் முழு இதயத்தோடும் தங்கள் முழு ஆன்மாவோடும் உமது பக்கம் திரும்பி நீர் அவர்களின் முன்னோர்களுக்குக் கொடுத்த நாட்டிற்கும், நீர் தேர்ந்துகொண்ட இந்நகருக்கும், உமது பெயர் விளங்கும் பொருட்டு நான் கட்டியுள்ள இந்த ஆலயத்திற்கும் நேராகத் திரும்பி உம்மை மன்றாடும்போதும்,
1 இராஜாக்கள் 8 : 49 (RCTA)
உமது அரியணையின் நிலையான இடமாகிய விண்ணிலிருந்து நீர் அவர்களது விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு அவர்களுக்கு நீதி வழங்கும்.
1 இராஜாக்கள் 8 : 50 (RCTA)
உம் மக்கள் உமக்கு எதிராய்ச் செய்த பாவத்தையும், உமது கட்டளையை மீறிய அவர்களுடைய எல்லாத் துரோகங்களையும் மன்னியும். அவர்களைச் சிறைபிடித்தவர்கள் அவர்கள் மேல் இரங்க உம் இரக்கத்தை அவர்களுக்கு காட்டியருளும்.
1 இராஜாக்கள் 8 : 51 (RCTA)
ஏனென்றால், அவர்கள் எகிப்து எனும் இரும்புக் காளவாயின் நடுவிலிருந்து நீர் புறப்படச் செய்த உம் மக்களும் உமது வாரிசுமாய் இருக்கிறார்கள் அன்றோ?
1 இராஜாக்கள் 8 : 52 (RCTA)
அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக் கொள்வதின்படி எல்லாம், நீர் அவர்களுக்குச் செய்யும்படி உம் அடியானின் வேண்டுதலுக்கும், உம் மக்கள் இஸ்ராயேலின் வேண்டுதலுக்கும் நீர் செவி சாய்ப்பீராக.
1 இராஜாக்கள் 8 : 53 (RCTA)
ஏனென்றால், என் கடவுளாகிய ஆண்டவரே! நீரே, எம் முன்னோர்களை எகிப்திலிருந்து மீட்ட போது, உம் ஊழியன் மோயீசன் மூலம் சொன்னபடி நீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சொந்தமாகத் தேர்ந்தெடுத்தீர்."
1 இராஜாக்கள் 8 : 54 (RCTA)
சாலமோன் ஆண்டவரை நோக்கி இச் செபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்த பின்பு, ஆண்டவருடைய பலிபீடத்திற்கு முன்பாக எழுந்து நின்றார். ஏனெனில் அவர் முழந்தாட்படியிட்டு வானத்தை நோக்கித் தம் கைகளை விரித்திருந்தார்.
1 இராஜாக்கள் 8 : 55 (RCTA)
அவர் நின்றுகொண்டு இஸ்ராயேல் சபைபை எல்லாம் ஆசீர்வதித்து உரத்த குரலில் சொன்னதாவது:
1 இராஜாக்கள் 8 : 56 (RCTA)
தாம் மொழிந்தபடியே தம் மக்கள் இஸ்ராயேலுக்குச் சமாதானத்தை அருளிய ஆண்டவர் போற்றி! அவர்தம் அடியான் மோயீசன் மூலம் சொன்ன நல்வாக்குகளில் ஒன்றாவது வீண்போகவில்லை.
1 இராஜாக்கள் 8 : 57 (RCTA)
நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மைக் கைவிடாமலும், நம்மைத் தள்ளிவிடாமலும், நம் முன்னோரோடு இருந்ததுபோல் நம்மோடும் இருப்பாராக.
1 இராஜாக்கள் 8 : 58 (RCTA)
நாம் அவருடைய வழிகளிலெல்லாம் நடப்பதற்கும், அவர் நம் முன்னோருக்குக் கொடுத்த கட்டளைகளையும் சடங்கு முறைகளையும் தீர்ப்புகளையும் கைக்கொள்வதற்கும் அவர் நம் இதயங்களைத் தம் பக்கம் திருப்புவாராக.
1 இராஜாக்கள் 8 : 59 (RCTA)
அவர் தம் ஊழியனுக்கும் தம் மக்களாம் இஸ்ராயேலுக்கும் அந்தந்த நாளில் நீதி வழங்குவதற்கு நான் ஆண்டவர் முன் சமர்ப்பித்த இவ்விண்ணப்பங்கள் இரவும் பகலும் நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் இருப்பனவாக.
1 இராஜாக்கள் 8 : 60 (RCTA)
அப்போதல்லோ நீர் ஆண்டவர் என்றும், உம்மை அன்றி வேறொரு கடவுள் இல்லை என்றும் எல்லா மக்களும் அறிவார்கள்!
1 இராஜாக்கள் 8 : 61 (RCTA)
ஆதலால் நாம் இன்று செய்கிறது போல் அவருடைய கட்டளைகளின் படி நடக்கவும், அவருடைய சட்டங்களைக் கைக்கொள்ளவும் நம் இதயம் நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் நிறைவுள்ளதாய் இருக்கக் கடவதாக" என்பதாம்.
1 இராஜாக்கள் 8 : 62 (RCTA)
பின்பு அரசரும் அவருடன் இருந்த இஸ்ராயேலர்அனைவரும் ஆண்டவர் திருமுன் பலிகளைச் செலுத்தினார்கள்.
1 இராஜாக்கள் 8 : 63 (RCTA)
சாலமோன் ஆண்டவருக்குச் சமாதானப் பலிகளாக இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்து இருபதினாயிரம் ஆடுகளையும் வெட்டிப் பலியிட்டார். இவ்விதமாய் அரசரும் இஸ்ராயேல் மக்களும் ஆண்டவருடைய ஆலயத்தை அபிஷுகம் செய்தார்கள்.
1 இராஜாக்கள் 8 : 64 (RCTA)
ஆண்டவர் திருமுன் இருந்த பித்தளைப் பலிபீடம் தகனப்பலிகளையும் உணவுப் பலிகளையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் கொள்ள மாட்டாமல் சிறியதாயிருந்தபடியால், அரசர் ஆலயத்துக்கு முன்னிருந்த முற்றத்தின் நடுப்பகுதியைப் பரிசுத்தப்படுத்தி, அன்று அங்கே தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளின் கொழுப்பையும் செலுத்தினார்.
1 இராஜாக்கள் 8 : 65 (RCTA)
அக்காலத்தில் தான் சாலமோனும், ஏமாத்தின் எல்லை முதல் எகிப்தின் நதி வரை அவரோடு வாழ்ந்து வந்த இஸ்ராயேலர் அனைவரும் நம் கடவுளாகிய ஆண்டவர் திருமுன் ஏழு நாளும் அதற்குப் பின்பு வேறு ஏழு நாளும், ஆகப் பதிநான்கு நாட்களாக ஆடம்பரமான திருவிழாக் கொண்டாடினார்கள்.
1 இராஜாக்கள் 8 : 66 (RCTA)
எட்டாம் நாளில் அவர் மக்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார். அவர்கள் வேந்தனை வாழ்த்தி, ஆண்டவர் தம் ஊழியன் தாவீதுக்கும் தம் மக்கள் இஸ்ராயேலுக்கும் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் அக்களித்து மனமகிழ்ச்சியோடு தத்தம் இல்லம் ஏகினர்.
❮
❯