1 இராஜாக்கள் 5 : 1 (RCTA)
சாலமோனை அவருடைய தந்தைக்குப் பின் அரசராக அபிஷுகம் செய்துள்ளார்கள்" என்று தீரின் அரசன் ஈராம் கேள்விப்பட்டுத் தன் ஊழியரை அவரிடம் அனுப்பினான். ஏனெனில் ஈராம் என்றும் தாவீதின் நண்பனாய் இருந்து வந்திருந்தான்.
1 இராஜாக்கள் 5 : 2 (RCTA)
அப்பொழுது சாலமோனும் ஈராமிடம் தம் ஆட்களை அனுப்பி,
1 இராஜாக்கள் 5 : 3 (RCTA)
என் தந்தை தாவீதின் எதிரிகளை ஆண்டவர் அவர் தம் தாள் பணியச் செய்யும் வரை சுற்றிலும் நடந்து வந்த போரின் காரணத்தால், அவர்தம் ஆண்டவராகிய கடவுளின் பெயருக்கு ஆலயம் எழுப்ப அவரால் முடியவில்லை என்று நீர் அறிவீர்.
1 இராஜாக்கள் 5 : 4 (RCTA)
இப்பொழுதோ என் கடவுளாகிய ஆண்டவர் சுற்றிலும் எனக்குச் சமாதானத்தைத் தந்துள்ளார். எனக்கு எதிரியுமில்லை; இடையூறுமில்லை.
1 இராஜாக்கள் 5 : 5 (RCTA)
ஆகையால் 'உனக்குப்பின், உன் அரியணையில் நாம் அமர்த்தும் உன் மகனே நமது பெயருக்கு ஆலயத்தைக் கட்டுவான்' என்று ஆண்டவர் என் தந்தை தாவீதுக்குச் சொன்னபடியே, என் கடவுளாகிய ஆண்டவரின் பெயருக்கு ஆலயம் எழுப்ப எண்ணியுள்ளளேன்.
1 இராஜாக்கள் 5 : 6 (RCTA)
ஆதலால், லீபானின் கேதுரு மரங்களை எனக்கென்று வெட்டிவர உம் ஊழியர்களுக்குக் கட்டளையிடும்; சீதோனியரைப் போல் மரம் வெட்ட அறிந்தவர்கள் என் குடிகளுள் ஒருவரும் இல்லை என்று உமக்குத் தெரியுமே. ஆதலால் என் ஊழியர் உம் ஊழியரோடு வேலை செய்வார்கள்; நீர் கேட்கும் கூலியை உம் ஊழியர்களுக்குக் கொடுப்பேன்" என்று சொல்லச் சொன்னார்.
1 இராஜாக்கள் 5 : 7 (RCTA)
ஈராம் சாலமோனின் வார்த்தைகளைக் கேட்ட போது, மிகவும் மகிழ்ச்சியுற்று, "இத்தனை ஏராள மக்களை ஆளும்படி தாவீதுக்கு ஞானமுள்ள ஒரு மகனைக் கொடுத்த ஆண்டவராகிய கடவுள் இன்று வாழ்த்தப் பெறுவாராக" என்று சொன்னான்.
1 இராஜாக்கள் 5 : 8 (RCTA)
மேலும் சாலமோனிடம் ஆட்களை அனுப்பி, "நீர் எனக்குச் சொல்லி அனுப்பிய எல்லாவற்றையும் தெரிந்து கொண்டேன்; கேதுரு மரங்களைக் குறித்தும், சப்பீன் மரங்களைக் குறித்தும் உமது விருப்பப்படியே செய்வேன்.
1 இராஜாக்கள் 5 : 9 (RCTA)
என் வேலைக்காரர் லீபானிலிருந்து அவற்றைக் கொண்டு வந்து கடலோரத்தில் சேர்ப்பார்கள்; அங்கே நான் அவற்றைத் தெப்பங்களாகக் கட்டி, நீர் குறிக்கும் இடத்திற்குக் கடல் வழியாய் அனுப்பி அவற்றைக் கரையேற்றுவேன். அவற்றை நீர் பெற்றுக் கொண்டு என் வீட்டாருக்குத் தேவையான உணவுப் பொருட்களை நீர் எனக்கு அனுப்பிவைக்க வேண்டும்" என்று சொல்லி அனுப்பினான்.
1 இராஜாக்கள் 5 : 10 (RCTA)
அப்படியே ஈராம் சாலமோனுக்கு வேண்டிய மட்டும் கேதுரு மரங்களையும் சப்பீன் மரங்களையும் கொடுத்து வந்தான்.
1 இராஜாக்கள் 5 : 11 (RCTA)
சாலமோனோ ஈராமின் அரண்மனைக்கு உணவுக்காக இருபதாயிரம் மரக்கால் கோதுமையும் இருபது மரக்கால் சுத்தமான ஒலிவ எண்ணெயும் கொடுத்தார். இவ்வாறு சாலமோன் ஈராமுக்கு ஆண்டுதோறும் கொடுத்து வந்தார்.
1 இராஜாக்கள் 5 : 12 (RCTA)
ஆண்டவரும் தாம் சாலமோனுக்கு வாக்களித்திருந்தபடி அவருக்கு ஞானத்தைத் தந்தருளினார். ஈராமுக்கும் சாலமோனுக்கும் இடையே அமைதி நிலவிற்று; இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.
1 இராஜாக்கள் 5 : 13 (RCTA)
சாலமோன் அரசர் இஸ்ராயேலர் அனைவரிலும் வேலை செய்வதற்காக முப்பதாயிரம் பேரைத் தேர்ந்து கொண்டார்.
1 இராஜாக்கள் 5 : 14 (RCTA)
ஒவ்வொரு மாதமும் அவர்களுள் பத்தாயிரம் பேரை மாற்றி மாற்றி லீபானுக்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர்கள் இரண்டு மாதம் வீட்டில் இருக்க வாய்ப்புக் கிட்டியது. அதோனிராம் அக்கூலியாட்களுக்குக் கண்காணிப்பாளனாய் இருந்தான்.
1 இராஜாக்கள் 5 : 15 (RCTA)
சாலமோனிடம் சுமை சுமப்பவர்கள் எழுபதாயிரம் பேரும், மலையில் கல் வெட்டுகிறவர்கள் எண்பதாயிரம் பேரும் இருந்தனர்.
1 இராஜாக்கள் 5 : 16 (RCTA)
இவர்களைத் தவிர ஒவ்வொரு வேலையையும் கவனிக்க மூவாயிரம் மேற்பார்வையாளர்கள் இருந்தனர்; மக்களையும் வேலையாட்களையும் கவனித்து வர முந்நூறு ஆளுநரும் இருந்தனர்.
1 இராஜாக்கள் 5 : 17 (RCTA)
ஆலயத்துக்கு அடித்தளம் இட மிக விலையுர்ந்த கற்களைக் கொண்டு வந்து அவற்றைச் சீர்படுத்த அவர் கட்டளையிட்டார்.
1 இராஜாக்கள் 5 : 18 (RCTA)
ஆலயத்தைக் கட்டுவதற்காக சாலமோனின் கொத்தர்களும், ஈராமின் கொத்தர்களும் கற்களைச் செதுக்க, கிப்லியர் மரங்களையும் கற்களையும் தயார்படுத்தினார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18