1 இராஜாக்கள் 21 : 1 (RCTA)
நிற்க, ஜெஸ்ராயேலனாகிய நாபோத்துக்கு ஜெஸ்ராயேலில் ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது. அது சமாரியாவின் அரசன் ஆக்காபின் அரண்மனை அருகில் தான் இருந்தது.
1 இராஜாக்கள் 21 : 2 (RCTA)
ஆக்காப் நாபோத்தைப் பார்த்து, "உன் திராட்சைத் தோட்டம் என் வீட்டை அடுத்திருக்கிறதால், நான் அதைக் காய்கறித் தோட்டமாக்கும்படி எனக்குக் கொடு. அதை விட நல்ல திராட்சைத் தோட்டத்தை அதற்குப் பதிலாய் உனக்குத் தருவேன்; அல்லது உனக்கு வேண்டுமானால் அதன் விலையைத் தருகிறேன்" என்றான்.
1 இராஜாக்கள் 21 : 3 (RCTA)
அதற்கு நாபோத், "நான் என் முன்னோரது உடைமையை உமக்குக் கொடாதபடி ஆண்டவர் என்னைக் காப்பாராக" என்றான்.
1 இராஜாக்கள் 21 : 4 (RCTA)
இப்படி, "என் முன்னோரின் உடைமையை உமக்குக் கொடேன்" என்று ஜெஸ்ராயேலனாகிய நாபோத் தனக்குச் சொன்ன வார்த்தைக்காக ஆக்காப் சினந்து எரிச்சலோடு தன் வீட்டிற்கு வந்தான். அங்கே உண்ணாமல் தன் கட்டிலில் படுத்துத் தன் முகத்தைச் சுவர்ப் பக்கமாய்த் திருப்பிக் கொண்டிருந்தான்.
1 இராஜாக்கள் 21 : 5 (RCTA)
அப்போது அவனுடைய மனைவி எசாபேல் அவனிடம் வந்து, "நீர் ஏன் சாப்பிடவில்லை? உமது மனம் சஞ்சலப்படுவதேன்?" என்று அவனைக் கேட்டாள்.
1 இராஜாக்கள் 21 : 6 (RCTA)
அதற்கு அவன், "நான் ஜெஸ்ராயேலனாகிய நாபோத்தோடு பேசி, 'உன் திராட்சைத் தோட்டத்தை எனக்கு விலைக்குக் கொடு, அல்லது உனக்கு விருப்பமானால் அதற்குப் பதிலாக வேறு திராட்சைத் தோட்டத்தை உனக்குத் தருவேன்' என்றேன். அதற்கு அவன் அவன் 'என் திராட்சைத் தோட்டத்தை உமக்குக் கொடுக்கமாட்டேன்' என்று சொல்லிவிட்டான்" என்றான்.
1 இராஜாக்கள் 21 : 7 (RCTA)
அப்பொழுது அவன் மனைவி எசாபேல் அவனை நோக்கி, "உம்முடைய அதிகாரம் இவ்வளவுதானா? இஸ்ராயேலை இப்படித்தான் ஆட்சி செய்து வருகிறீர்களோ? எழுந்திருங்கள். சாப்பிட்டு விட்டு மன அமைதியுடன் இருங்கள். ஜெஸ்ராயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன்" என்று சொன்னாள்.
1 இராஜாக்கள் 21 : 8 (RCTA)
எசாபேல் ஆக்காபின் பெயரால் கடிதங்களை எழுதி, அவற்றில் அவனது முத்திரையை இட்டு, அக்கடிதங்களை நாபோத் இருக்கும் நகரில் குடியிருக்கிற மூப்பரிடமும் பெரியோரிடமும் அனுப்பினான்.
1 இராஜாக்கள் 21 : 9 (RCTA)
அக்கடிதங்களில் அவள், "நீங்கள் ஒரு நோன்பைப் பறைசாற்றி, நாபோத்தைப் பெரியோர் நடுவில் அமரச் செய்யுங்கள்.
1 இராஜாக்கள் 21 : 10 (RCTA)
அவனுக்கு எதிராய்ப் பெலியாலின் மக்கள் இருவரை ஏவி விட்டு, 'நாபோத் கடவுளையும் அரசனையும் பழித்துரைத்தான்' என்று அவர்களைப் பொய்ச்சாட்சி சொல்லச் செய்யுங்கள். பின்னர் அவனை ஊருக்கு வெளியே கொண்டுபோய்க் கல்லால் எறிந்து கொன்று போடுங்கள்" என்று எழுதியிருந்தாள்.
1 இராஜாக்கள் 21 : 11 (RCTA)
நாபோத்தோடு அவ்வூரில் குடியிருந்த மூப்பர்களும் பெரியோர்களும் எசாபேல் தமக்கு அனுப்பியிருந்த கடிதங்களில் எழுதியிருந்தபடியே செய்தனர்.
1 இராஜாக்கள் 21 : 12 (RCTA)
அவர்கள் ஒரு நோன்பைப் பறைசாற்றி, நாபோத்தைப் பெரியோர் முன்னிலையில் அமர்த்தினர்.
1 இராஜாக்கள் 21 : 13 (RCTA)
அப்பொழுது அவர்கள் பேயின் மக்களாகிய இருவரை வரவழைத்து அவனுக்கு எதிராக அமர்த்தி வைத்தனர். இந்தப் பேயின் மக்களோ மக்கட் கூட்டத்தைப் பார்த்து, "நாபோத் கடவுளையும் அரசனையும் பழித்துரைத்தான்" என்று அவனுக்கு எதிராய்ச் சாட்சி சொன்னார்கள். அச்சாட்சியத்தின் பேரில் மக்கள் நாபோத்தை ஊருக்கு வெளியே கொண்டு போய்க் கல்லால் எறிந்து கொன்று போட்டனர்.
1 இராஜாக்கள் 21 : 14 (RCTA)
பிறகு, "நாபோத் கல்லால் எறியுண்டு மடிந்தான்" என்று எசாபேலுக்குச் செய்தி அனுப்பினர்.
1 இராஜாக்கள் 21 : 15 (RCTA)
நாபோத் கல்லால் எறியுண்டு மடிந்ததை எசாபேல் கேட்ட போது, அவள் ஆக்காபை நோக்கி, ' நீர் போய் ஜெஸ்ராயேலனாகிய நாபோத் உமது விருப்பத்துக்கு இசையாமல், 'உமக்கு விலைக்குக் கொடேன்' என்று சொன்ன திராட்சைத் தோட்டத்தை நீர் சொந்தமாய் எடுத்துக் கொள்ளும்; நாபோத் உயிரோடில்லை; அவன் இறந்து போனான்" என்றாள்.
1 இராஜாக்கள் 21 : 16 (RCTA)
நாபோத் இறந்துபோனதை ஆக்காப் கேட்டு எழுந்து, ஜெஸ்ராயேலனாகிய நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ளப் போனான்.
1 இராஜாக்கள் 21 : 17 (RCTA)
அந்நேரத்திலேயே தெசுபித்தரான எலியாசுக்கு ஆண்டவர் திருவுளம்பற்றி,
1 இராஜாக்கள் 21 : 18 (RCTA)
சமாரியாவிலிருக்கிற இஸ்ராயேலின் அரசன் ஆக்காபை நீ சந்திக்கும்படி போ. அதோ அவன் நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தைச் சொந்தமாக்கிக் கொள்ள அங்கே போகிறான்.
1 இராஜாக்கள் 21 : 19 (RCTA)
நீ அவனைப் பார்த்து, 'ஆண்டவர் சொல்வதாவது: "நீ நாபோத்தைக் கொன்றதுமன்றி அவனது திராட்சைத் தோட்டத்தையும் அபகரித்துக் கொண்டாய்" என்று சொல். மீண்டும் அவனை நோக்கி, 'ஆண்டவர் சொல்லுகிறதாவது: "நாய்கள் நாபோத்தின் இரத்தத்தை நக்கின இடத்திலேயே உனது இரத்தத்தையும் நக்கும்" என்று சொல்" என்றார்.
1 இராஜாக்கள் 21 : 20 (RCTA)
அப்போது ஆக்காப் எலியாசை நோக்கி, "நான் உனக்கு எதிரியாக எப்போதாவது இருக்கக் கண்டதுண்டா?" என்றான். அதற்கு அவர், "ஆம்; நீ ஆண்டவர் திருமுன் தீயன புரியத் துணிந்துள்ளதை நான் அறியேனோ?
1 இராஜாக்கள் 21 : 21 (RCTA)
இதோ! நாம் உன்மேல் தீங்கு வரச் செய்வோம். உன் சந்ததியை அழித்து விட்டு, உன் வீட்டின் ஆண் மக்கள் அனைவரையும் இஸ்ராயேலில் கடைசியானவனையும், இன்னும் கருவில் அடைபட்டுள்ள குழந்தையையும் கொன்றொழிப்போம்.
1 இராஜாக்கள் 21 : 22 (RCTA)
நீ உன் தீச்செயல்களினால் நமக்குக் கோபமுண்டாக்கி இஸ்ராயேலைப் பாவத்திற்கு ஆளாக்கியதின் பொருட்டு நாம் உன் குடும்பத்தை நாபோத்தின் மகன் எரோபோவாமின் குடும்பத்துக்கும், ஆகியாவின் மகன் பாசாவின் குடும்பத்துக்கும் நிகராக்குவோம்" என்றார்;
1 இராஜாக்கள் 21 : 23 (RCTA)
எசாபேலைக் குறித்தும் ஆண்டவர் சொல்வதாவது: 'ஜெஸ்ராயேலின் நிலத்திலே நாய்கள் எசாபேலைத் தின்னும்.
1 இராஜாக்கள் 21 : 24 (RCTA)
ஆக்காப் நகரில் மடிந்தால் நாய்களுக்கு இரையாவான்; நகருக்கு வெளியே இறந்தால் வானத்துப் பறவைகளுக்கு இரையாவான்' என்பதாம்" என்றார்.
1 இராஜாக்கள் 21 : 25 (RCTA)
ஆண்டவர் திருமுன் தீயன புரியத் துணிந்த ஆக்காபைப் போல் கெட்டவன் ஒருவனுமில்லை; ஏனெனில், அவனுடைய மனைவி எசாபேல் அவனை ஏவி விட்டாள்.
1 இராஜாக்கள் 21 : 26 (RCTA)
அவன் எவ்வளவு வெறுப்புக்குரியவன் என்றால், இஸ்ராயேல் மக்கள் முன்னிலையில் ஆண்டவர் அழித்தொழித்த அமோறையரின் விக்கிரகங்களையும் அவன் தொழுது வந்தான்.
1 இராஜாக்கள் 21 : 27 (RCTA)
இவ்வார்த்தைகளை ஆக்காப் கேட்ட பிறகு தன் ஆடைகளைக் கிழித்துத் தன் உடலின் மேல் மயிராடையைப் போட்டுக் கொண்டு நோன்பு காத்து சாக்கின் மீது படுத்துறங்கினான். மேலும், அவன் தலை கவிழ்ந்தே நடந்து வந்தான்.
1 இராஜாக்கள் 21 : 28 (RCTA)
அப்பொழுது தெசுபித்தரான எலியாசுக்கு ஆண்டவர் திருவுளம் பற்றி,
1 இராஜாக்கள் 21 : 29 (RCTA)
நமக்கு முன்பாக ஆக்காப் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயன்றோ? அவன் நமக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதால் நாம் அவனது காலத்தில் அத்தீமைகளை வரச்செய்யாமல் அவனுடைய மகனின் நாட்களிலே அவன் சந்ததியின் மேல் அவைகளை வரச்செய்வோம்" என்றார்.
❮
❯