1 இராஜாக்கள் 13 : 1 (RCTA)
எரோபோவாம் தூபம் காட்டப் பலிபீடத்தண்டையில் நிற்கையில், இதோ கடவுளின் மனிதர் ஒருவர் ஆண்டவரின் கட்டளைப்படியே யூதாவிலிருந்து பேத்தலுக்கு வந்தார்.
1 இராஜாக்கள் 13 : 2 (RCTA)
ஆண்டவருடைய பெயரால் அப்பலிபீடத்தை நோக்கி, "பலிபீடமே, பலிபீடமே, இதோ, தாவீதின் கோத்திரத்தில் யோசியாசு என்ற பெயருள்ள ஒரு மகன் பிறப்பான்; அவன் உனக்கு இன்று தூபம் காட்டுகிற மேடுகளில் இருக்கும் குருக்களை உம்மேல் பலியிடுவான். மனித எலும்புகளையும் உன்மேல் சுட்டெரிப்பான் என்று கடவுள் உரைக்கிறார்" எனக் கூறினார்.
1 இராஜாக்கள் 13 : 3 (RCTA)
இது ஆண்டவரின் வாக்கு என்று அரசன் உணரும்படி, அன்றே அதற்கு ஓர் அடையாளம் காண்பித்து, "இதோ, இப்பலிபீடம் இடிய அதன் மேல் உள்ள சாம்பல் கீழே சிந்தும்" என்றார்.
1 இராஜாக்கள் 13 : 4 (RCTA)
பேத்தலில் இருந்த அப்பலிபீடத்திற்கு எதிராய்க் கடவுளின் மனிதர் கூறின வார்த்தையை அரசன் எரோபோவாம் கேட்டவுடன் பலிபீடத்திலிருந்து தன் கையை நீட்டி, "அவனைப் பிடியுங்கள்" என்றான். அவருக்கு எதிராய் அரசன் நீட்டிய கை மரத்துப் போக அவனால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
1 இராஜாக்கள் 13 : 5 (RCTA)
கடவுளின் மனிதர் ஆண்டவரின் பெயரால் முன்னறிவித்த அடையாளத்தின் படியே பலிபீடம் இடிய அதன் மேல் இருந்த சாம்பல் கீழே சிந்தியது.
1 இராஜாக்கள் 13 : 6 (RCTA)
அப்போது அரசன் கடவுளின் மனிதரைப் பார்த்து, "நீர் உம் கடவுளாகிய ஆண்டவரை நோக்கி எனக்காக இறைஞ்சி என் கை வழங்குமாறு மன்றாடும்" என்றான். எனவே கடவுளின் மனிதர் ஆண்டவரை நோக்கி மன்றாட, மன்னனுக்கு முன்போல் கை வழங்கிற்று.
1 இராஜாக்கள் 13 : 7 (RCTA)
அப்பொழுது அரசன் கடவுளின் மனிதரை நோக்கி, "நீர் என்னோடு உணவு அருந்த என் வீட்டுக்கு வாரும். நான் உமக்குப் பரிசில் தருவேன்" என்றான்.
1 இராஜாக்கள் 13 : 8 (RCTA)
ஆனால் கடவுளின் மனிதர், "நீர் எனக்கு உம் வீட்டில் பாதி கொடுத்தாலும், நான் உம்மோடு வரவும் மாட்டேன்; வந்து உம்மோடு உண்டு குடிக்கவும் மாட்டேன்.
1 இராஜாக்கள் 13 : 9 (RCTA)
ஏனென்றால், 'நீ அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும், போன வழியாய்த் திரும்பாமலும் இருப்பாயாக' என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டிருக்கிறார்" என்று சொன்னார்.
1 இராஜாக்கள் 13 : 10 (RCTA)
பின்னர், தான் வந்த வழியாய்த் திரும்பாமல் வேறு வழியாய்ப் பேத்தலிலிருந்து போய்விட்டார்.
1 இராஜாக்கள் 13 : 11 (RCTA)
வயது முதிர்ந்த ஓர் இறைவாக்கினர் பேத்தலில் வாழ்ந்து வந்தார். அவர் புதல்வர்கள் வந்து, கடவுளின் மனிதர் அன்று பேத்தலில் செய்தவை அனைத்தையும், அவர் அரசனுக்குக் கூறினவற்றையும் தம் தந்தைக்கு அறிவித்தனர்.
1 இராஜாக்கள் 13 : 12 (RCTA)
அவர்களின் தந்தை அவர்களை நோக்கி, "அம் மனிதன் எவ்வழியாய்ச் சென்றான்?" என, அதற்கு அவர்கள், யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதர் சென்ற வழியைச் சுட்டிக் காட்டினார்கள்.
1 இராஜாக்கள் 13 : 13 (RCTA)
அவர் தம் புதல்வரிடம், "கழுதைக்குச் சேணமிடுங்கள்" என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணமிட்டுக் கொண்டுவர,
1 இராஜாக்கள் 13 : 14 (RCTA)
அவர் அதன்மேல் ஏறி, கடவுளின் மனிதரைத் தொடர்ந்து சென்றார். அவர் ஒரு தெரேபிந்த் மரத்தடியில் அமர்ந்திருக்கக் கண்டு, "யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதர் நீர் தானா?" என்று அவரைக் கேட்டார். அதற்கு அவர், "நான் தான்" என்றார்.
1 இராஜாக்கள் 13 : 15 (RCTA)
அதைக் கேட்ட அவர், "நீர் என்னோடு வீட்டுக்கு வாரும்; வந்து உணவருந்தும்" என்றார்.
1 இராஜாக்கள் 13 : 16 (RCTA)
அதற்கு அவர், "நான் உம்மோடு திரும்பவும் மாட்டேன்; உமது வீட்டுக்குள் நுழையவும் மாட்டேன்; அவ்விடம் உண்டு குடிக்கவும் மாட்டேன்.
1 இராஜாக்கள் 13 : 17 (RCTA)
ஏனென்றால், 'நீ அப்பம் உண்ணாமலும், தண்ணீர் குடியாமலும், நீ போன வழியாய்த் திரும்பாமலும் இருப்பாயாக' என்று ஆண்டவர் எனக்கு கட்டளையிட்டிருக்கிறார்" என்றார்.
1 இராஜாக்கள் 13 : 18 (RCTA)
அதற்கு அவர், "உம்மைப்போல நானும் ஓர் இறைவாக்கினர் தான். 'அவர் சாப்பிட்டுத் தண்ணீர் குடிக்க நீ அவரை உன் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போ' என்று ஒரு தூதர் ஆண்டவருடைய பெயரால் எனக்குச் சொன்னார்" என்று உரைத்து அவரை ஏமாற்றினார்.
1 இராஜாக்கள் 13 : 19 (RCTA)
அப்போது கடவுளின் மனிதர் அவரோடு திரும்பிப் போய் அவரது வீட்டில் உண்டு குடித்தார்.
1 இராஜாக்கள் 13 : 20 (RCTA)
அவர்கள் பந்தியில் அமர்ந்திருந்த போது அவரைத் திருப்பி அழைத்துக் கொண்டு வந்த இறைவாக்கினர் மூலம் ஆண்டவர் பேசினார்.
1 இராஜாக்கள் 13 : 21 (RCTA)
யூதாவிலிருந்து வந்த கடவுளின் மனிதரை நோக்கிச் சத்தமிட்டு, "உம் கடவுளாகிய ஆண்டவர் உமக்கு இட்ட கட்டளையை நீர் கைக் கொள்ளாமல், ஆண்டவரின் வாக்கை மீறி,
1 இராஜாக்கள் 13 : 22 (RCTA)
'அப்பம் உண்ணவும், தண்ணீர் குடிக்கவும் வேண்டாம்' என்று கடவுள் உமக்குக் கட்டளை கொடுத்திருக்க, நீர் அவர் விலக்கின இடத்திற்குத் திரும்பி வந்து அப்பம் உண்டு தண்ணீர் பருகினதால், 'உமது சடலம் உம் முன்னோரின் கல்லறையில் வைக்கப்பட மாட்டாது' என்று ஆண்டவர் திருவுளம்பற்றினார்" என்றார்.
1 இராஜாக்கள் 13 : 23 (RCTA)
அவர் உண்டு குடித்த பிறகு தாம் திருப்பி அழைத்து வந்திருந்த இறைவாக்கினருக்காகத் தம் கழுதைக்குச் சேணமிட்டுக் கொடுத்தார்.
1 இராஜாக்கள் 13 : 24 (RCTA)
அவர் திரும்பிப் போகையில், ஒரு சிங்கம் வழியில் அவரைக் கண்டு அவரைக் கொன்றது. அவரது சடலம் வழியில் கிடந்தது. கழுதை அதனருகில் நின்றது. சிங்கமும் அங்கேயே நின்று கொண்டிருந்தது.
1 இராஜாக்கள் 13 : 25 (RCTA)
அவ்வழியே சென்ற சில மனிதர்கள் வழியில் கிடந்த சவத்தையும் சவத்தருகில் நின்று கொண்டிருந்த சிங்கத்தையும் கண்டு வயது சென்ற அவ்விறைவாக்கினர் வாழ்ந்து வந்த நகரில் அதைப் பறைசாற்றினர்.
1 இராஜாக்கள் 13 : 26 (RCTA)
அவ்வழியினின்று அவரைத் திரும்பச் செய்த இறைவாக்கினர் அதைக் கேள்விப்பட்டபோது, "அவர் ஆண்டவரின் வாக்கை மீறினதாலன்றோ ஆண்டவர் அவரை ஒரு சிங்கத்துக்கு இரையாக்க, அது ஆண்டவருடைய வாக்கின்படி அவரை அடித்துக் கொன்று போட்டது1" என்று சொன்னார்.
1 இராஜாக்கள் 13 : 27 (RCTA)
பின்னர் தம் புதல்வரை நோக்கி, "கழுதைக்குச் சேணமிடுங்கள்" என்றார். அவர்களும் கழுதைக்குச் சேணமிட்டுக் கொண்டு வந்தார்கள்.
1 இராஜாக்கள் 13 : 28 (RCTA)
அப்பொழுது அவர் புறப்பட்டுச் சென்று வழியில் அவரது சவம் கிடப்பதையும், அதனருகில் கழுதையும் சிங்கமும் நிற்பதையும் கண்டார். அந்தச் சிங்கமோ சவத்தைத் தின்னவுமில்லை, கழுதைக்குத் தீங்கு செய்யவுமில்லை.
1 இராஜாக்கள் 13 : 29 (RCTA)
அப்போது வயது சென்ற அவ்விறைவாக்கினர் கடவுளின் மனிதருடைய சவத்தை எடுத்துக் கழுதையின் மேல் ஏற்றி, துக்கம் கொண்டாடத் தம் நகருக்குக் கொண்டுவந்தார்.
1 இராஜாக்கள் 13 : 30 (RCTA)
அவர்கள் அவரது சவத்தைத் தங்களுடைய கல்லறையில் வைத்து, "ஐயோ, ஐயோ, என் சகோதரனே!" என்று புலம்பித் துக்கம் கொண்டாடினார்கள்.
1 இராஜாக்கள் 13 : 31 (RCTA)
அவர்கள் துக்கம் கொண்டாடின பின்பு அவர் தம் புதல்வரை நோக்கி, "நான் இறந்த பின் இக் கடவுளின் மனிதர் அடக்கம் செய்யப்படும் கல்லறையிலேயே என்னையும் நீங்கள் அடக்கம் செய்து, அவர் எலும்புகள் அருகே என் எலும்புகளையும் வையுங்கள்.
1 இராஜாக்கள் 13 : 32 (RCTA)
பேத்தலில் இருக்கிற பலிபீடத்திற்கும், சமாரியாவின் நகர்களிலிருக்கிற மேட்டுக் கோயில்கள் எல்லாவற்றிற்கும் எதிராய் அவர் கூறின ஆண்டவருடைய வார்த்தை கட்டாயம் நிறைவேறும்" என்றார்.
1 இராஜாக்கள் 13 : 33 (RCTA)
இவற்றின் பின்னும் எரோபோவாம் தன் கெட்ட நடத்தையை மாற்றிக் கொள்ளாது, மறுபடியும் மக்களில் ஈனமானவர்களை மேட்டுக்கோயில்களின் குருக்களாக்கினான். யார் யார் விரும்பினரோ அவர்கள் அனைவரையும் மேட்டுக் கோயில்களின் குருக்களாக அவன் அபிஷுகம் செய்தான்.
1 இராஜாக்கள் 13 : 34 (RCTA)
எரோபோவாமின் சந்ததி பூமியின் மேல் நிலை கொள்ளாது சிதறுண்டு அழிந்து போனதற்கு இப்பாவமே காரணமாய் இருந்தது.
❮
❯