1 இராஜாக்கள் 1 : 1 (RCTA)
தாவீது அரசர் முதியவரானபோது பல போர்வைகளைப் போர்த்தியும் சூடு உண்டாகவில்லை.
1 இராஜாக்கள் 1 : 2 (RCTA)
அப்போது அவருடைய ஊழியர்கள் அவரை நோக்கி, "நம் அரசர் முன்னிலையில் நிற்கவும், அரசராகிய நம் தலைவருக்குச் சூடு உண்டாக்கும்படி அவரது மார்பின் மீது படுத்துறங்கவும் ஓர் இளங்கன்னியை நம் அரசராகிய தலைவருக்குத் தேடுவோம்" என்று சொன்னார்கள்.
1 இராஜாக்கள் 1 : 3 (RCTA)
எனவே இஸ்ராயேல் முழுவதும் ஓர் அழகிய இளம் பெண்ணுக்காகத் தேடித் திரிந்து, சுனாமித் ஊராளாகிய அபிசாகைக் கண்டு அவளை அரசரிடம் கூட்டி வந்தனர்.
1 இராஜாக்கள் 1 : 4 (RCTA)
அந்நங்கை ஒரு பேரழகி, அவள் அரசருக்குப் பணிவிடை செய்து அவரோடு படுத்துறங்கியும் அரசர் அவளை அறியாதிருந்தார்.
1 இராஜாக்கள் 1 : 5 (RCTA)
ஆகீத்துக்குப் பிறந்த அதோனியாசு, "நான் அரசன் ஆவேன்", என்று சொல்லித் தற்பெருமை கொண்டு, தனக்கெனத் தேர்களையும் குதிரை வீரர்களையும், தனக்கு முன் ஓடத்தக்க ஐம்பது வீரர்களையும் தயார் படுத்தினான்.
1 இராஜாக்கள் 1 : 6 (RCTA)
அவன் தந்தை, "நீ ஏன் அப்படிச் செய்கிறாய்?" என்று அவனை ஒருகாலும் கடிந்துகொள்ளவில்லை. அவன் அப்சலோமுக்குப் பிறகு பிறந்தவனும் மிக அழகுள்ளவனுமாய் இருந்தான்.
1 இராஜாக்கள் 1 : 7 (RCTA)
அவன் சாப்வியாவின் மகன் யோவாபோடும், குருவாகிய அபியாத்தாரோடும் ஆலோசனை செய்திருந்தான். இவர்கள் அதோனியாசின் பக்கம் நின்று அவனுக்கு உதவி புரிந்து வந்தனர்.
1 இராஜாக்கள் 1 : 8 (RCTA)
ஆனால் குரு சாதோக்கும், யோயியாதாவின் மகன் பனாயாசும், இறைவாக்கினர் நாத்தானும், செமேயி, ரேயி மற்றும் தாவீதின் வலிமை வாய்ந்த படை வீரர்களும் அதோனியாசை ஆதரிக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 9 (RCTA)
ஆனால் அதோனியாசு ரோகேல் நீரூற்றருகே உள்ள சோகெலெத் என்ற கல்லின் அருகில் ஆட்டுக் கடாக்களையும் கன்றுகளையும் கொழுத்த எல்லா வித உயிரினங்களையும் பலியிட்ட பின் அரசரின் புதல்வராகிய தன் சகோதரர் எல்லாரையும், அரசருக்கு ஏவல் புரிந்து வந்த யூதா கோத்திரத்தார் அனைவரையும் அழைத்தான்.
1 இராஜாக்கள் 1 : 10 (RCTA)
ஆனால் இறைவாக்கினர் நாத்தானையும் பனாயாசையும் வலிமை வாய்ந்த படைவீரர்களையும் தன் சகோதரன் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 11 (RCTA)
அப்போது நாத்தான் சாலமோனின் தாய் பெத்சபேயை நோக்கி, "நம் தலைவராம் தாவீதுக்குத் தெரியாமல் ஆகீத்னின் மகன் அதோனியாசு அரசனாய் இருப்பதை நீர் அறியீரோ?
1 இராஜாக்கள் 1 : 12 (RCTA)
ஆகவே, இப்பொழுது உமது உயிரையும் உம் மகன் சாலமோனின் உயிரையும் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு நீர் வந்து நான் உமக்குச் சொல்லும் ஆலோசனையின்படி நடப்பீர்.
1 இராஜாக்கள் 1 : 13 (RCTA)
நீர் தாவீது அரசரிடம் சென்று, 'அரசராகிய என் தலைவ, "எனக்குப்பின் உம் மகன் சாலமோனே அரசாள்வான்; அவனே எனக்குப்பின் அரியணை ஏறுவான்" என்று நீர் உம் அடியாளுக்கு ஆணையிடவில்லையா? அப்படியிருக்க அதோனியாசு அரசனாய் இருக்கிறது எப்படி?' என்று அவரிடத்தில் நீர் கேளும்.
1 இராஜாக்கள் 1 : 14 (RCTA)
நீர் அரசருடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, நானும் உமக்குப்பின் வந்து உம் வார்த்தைகளை உறுதிப்படுத்துவேன்" என்றார்.
1 இராஜாக்கள் 1 : 15 (RCTA)
அப்படியே பெத்சபே அரசரைக் காணப்படுக்கை அறைக்குள் சென்றாள். அரசர் மிகவும் வயது சென்றவராய் இருந்தார். சுனாமித் ஊராகிய அபிசாக் அரசருக்குப் பணிவிடை செய்து சொண்டிருந்தாள்.
1 இராஜாக்கள் 1 : 16 (RCTA)
பெத்சபே நெடுங்கிடையாய் விழுந்து அரசரை வணங்கி நிற்க, அரசர், "உனக்கு என்ன வேண்டும்?" என்று வினவினார்.
1 இராஜாக்கள் 1 : 17 (RCTA)
அதற்கு அவள், "என் தலைவ, 'எனக்குப்பின் உன் மகன் சாலமோனே அரசாள்வான்; அவனே எனக்குப் பின் அரியணை ஏறுவான்' என்று நீர் உம்முடைய கடவுளாகிய ஆண்டவர் பெயரால் உம் அடியாளுக்கு ஆணையிட்டீரே.
1 இராஜாக்கள் 1 : 18 (RCTA)
அப்படியிருக்க, என் தலைவராகிய அரசே, இதோ உமக்குத் தெரியாதபடி அதோனியாசு அரசனாய் இருக்கிறான்.
1 இராஜாக்கள் 1 : 19 (RCTA)
அவன் மாடுகளையும் நன்கு கொழுத்த பலவித உயிரினங்களையும் பல ஆட்டுக் கடாக்களையும் பலியிட்டு, அரசரின் புதல்வர் அனைவரையும் குருவாகிய அபியாத்தாரையும், யோவாப் என்ற படைத் தலைவனையும் அழைத்தான். உம் ஊழியன் சாலமோனை மட்டும் அவன் அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 20 (RCTA)
அரசராகிய என் தலைவ, தங்களுக்குப் பின் அரியணை ஏறுபவன் யார் என்று தாங்களே அறிவிக்க வேண்டும் என்று இஸ்ராயேலர் அனைவரும் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
1 இராஜாக்கள் 1 : 21 (RCTA)
அப்படி அறிவிக்காமற் போனால், அரசராகிய என் தலைவர் தம்முடைய முன்னோரோடு துஞ்சிய பிறகு, நானும் என் மகன் சாலமோனும் குற்றவாளிகளாகக் கருதப்படுவோம்" என்றாள்.
1 இராஜாக்கள் 1 : 22 (RCTA)
இவ்வாறு இவள் அரசரோடு பேசிக்கொண்டிருக்கும் போது, இறைவாக்கினர் நாத்தான் வந்தார்.
1 இராஜாக்கள் 1 : 23 (RCTA)
இதோ, இறைவாக்கினர் நாத்தான் வந்திருக்கிறார் என்று அரசருக்கு அறிவிக்கப்பட்டது. அவரும் அரசர் முன் சென்று நெடுங்கிடையாய் விழுந்து அவரை வணங்கினார்.
1 இராஜாக்கள் 1 : 24 (RCTA)
அரசராகிய என் தலைவ, 'அதோனியாசு எனக்குப் பின் ஆளவும் அவனே என் அரியணையில் அமரவும் வேண்டும்' என்று நீர் சொன்னீரா?
1 இராஜாக்கள் 1 : 25 (RCTA)
இதோ, அதோனியாசு இன்று மாடுகளையும் கொழுத்த உயிரினங்களையும், பல கடாக்களையும் பலியிட்டு, அரசரின் புதல்வர் அனைவரையும் படைத் தலைவரையும், குரு அபியாத்தாரையுங் கூட அழைத்திருந்தான். அவர்கள் அவனோடு உண்டு குடித்து, 'அரசனாகிய அதோனியாசு வாழி!' என்று முழங்கினார்கள்.
1 இராஜாக்கள் 1 : 26 (RCTA)
ஆனால் உம் அடியானாகிய என்னையும் குரு சாதோக்கையும் யோயியாதாவின் மகன் பனாயாசையும் உம் அடியான் சாலமோனையும் அவன் அழைக்கவில்லை.
1 இராஜாக்கள் 1 : 27 (RCTA)
அரசராகிய என் தலைவர் இக்கட்டளையைப் பிறப்பித்ததுண்டோ? அரசராகிய என் தலைவருக்குப்பிறகு தமது அரியணை ஏறுபவன் யார் என்பது உம் அடியானாகிய எனக்கு நீர் தெரிவிக்கவில்லையா?" என்றார்.
1 இராஜாக்கள் 1 : 28 (RCTA)
தாவீது அரசர் மறுமொழியாக, "பெத்சபேயை என் முன்பாக வரவழையுங்கள்" என்றார்.
1 இராஜாக்கள் 1 : 29 (RCTA)
அவளும் அரசர் முன் வந்து நின்றாள். அரசர் அவளை நோக்கி, "எல்லாவித இடுக்கண்களிலுமிருந்து என் உயிரைக் காப்பாற்றிய ஆண்டவர் மேல் ஆணை!
1 இராஜாக்கள் 1 : 30 (RCTA)
இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் பேரில் நான் ஆணையிட்டு, 'உன் மகன் சாலமோனே எனக்குப் பிறகு அரசாள்வான்; அவனே எனக்குப்பின் அரியணை ஏறுவான்' என்று முன்பு உனக்குச் சொல்லியிருந்தேன் அல்லவா? அவ்வாறே இன்று அதைச் செய்து முடிப்பேன்" என்றார்.
1 இராஜாக்கள் 1 : 31 (RCTA)
அப்போது பெத்சபே முகம் குப்புற விழுந்து அரசருக்கு வணக்கம் செய்து, "என் தலைவராம் தாவீது நீடுழி வாழ்க!" என்றாள்.
1 இராஜாக்கள் 1 : 32 (RCTA)
பின்பு தாவீது அரசர், "குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயியாதாவின் மகன் பனாயாசையும் என்னிடம் அழைத்து வாருங்கள்" என்றார். அப்படியே அவர்கள் அரசர் முன் வந்து நிற்க,
1 இராஜாக்கள் 1 : 33 (RCTA)
அரசர் அவர்களை நோக்கி, "நீங்கள் உங்கள் தலைவரின் ஊழியர்களைக் கூட்டிக் கொண்டு என் மகன் சாலமோனை என் கோவேறு கழுதையின் மேல் ஏற்றி அவனைக் கீகோனுக்கு அழைத்துச் செல்லுங்கள்.
1 இராஜாக்கள் 1 : 34 (RCTA)
அங்கே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும், அவனை இஸ்ராயேலின் அரசனாக அபிஷுகம் செய்யக்கடவார்கள்; பின்பு எக்காளம் ஊதி, 'அரசனாகிய சாலமோன் வாழி!' என்று வாழ்த்துங்கள்.
1 இராஜாக்கள் 1 : 35 (RCTA)
அதன்பின் அவனோடு திரும்பி வாருங்கள். அவனோ வந்து என் அரியணையில் வீற்றிருந்து எனக்குப் பதிலாய் அரசாள்வான். இஸ்ராயேல் மீதும் யூதா மீதும் அவனைத் தலைவனாக நியமிப்பேன்" என்றார்.
1 இராஜாக்கள் 1 : 36 (RCTA)
அப்போது யோயியாதாவின் மகன் பனாயாசு அரசருக்கு மறுமொழியாக, "அப்படியே ஆகக்கடவது. அரசராகிய என் தலைவரின் ஆண்டவராகிய கடவுளின் திருவுளமும் அவ்வாறே இருக்கக்கடவது.
1 இராஜாக்கள் 1 : 37 (RCTA)
ஆண்டவர் என் அரசராகிய தலைவரோடு இருந்தது போல், அவர் சாலமோனோடும் இருந்து, தாவீது அரசராகிய என் தலைவரின் அரியணையை மேன்மைப் படுத்தினதை விட அவரது அரியணையை மேன்மைப் படுத்துவாராக" என்றான்.
1 இராஜாக்கள் 1 : 38 (RCTA)
அப்படியே குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் யோயியாதாவின் மகன் பனாயாசும் கெரேத்தியரும் பெலேத்தியரும் சேர்ந்து சாலமோனைத் தாவீது அரசரின் கோவேறு கழுதையின் மேல் ஏற்றி அவனைக் கீகோனுக்கு நடத்திச் சென்றார்கள்.
1 இராஜாக்கள் 1 : 39 (RCTA)
குரு சாதோக் கொம்பாலான எண்ணெய்ச் சிமிழைப் பரிசுத்த கூடாரத்திலிருந்து எடுத்து வந்து சாலமோனை அபிஷுகம் செய்தார். அப்போது எக்காளம் ஊதி மக்கள் எல்லாரும், "அரசன் சாலமோன் வாழி!" என்றனர்.
1 இராஜாக்கள் 1 : 40 (RCTA)
பிறகு மக்கள் அவனைப் பின்தொடர்ந்தனர். பலர் குழல் ஊத அனைவரும் மகிழ்ச்சி கொண்டாடி ஆர்ப்பரித்தனர். அப்பேரிரைச்சல் மண்ணகம் எங்கும் ஒலித்தது.
1 இராஜாக்கள் 1 : 41 (RCTA)
அதோனியாசும் அவனால் அழைக்கப் பெற்றிருந்தவர்களும் விருந்தாடிக் கொண்டிருந்தனர். அதன் முடிவில் அவ்விரைச்சலைக் கேட்டனர். எக்காளம் முழங்கக் கேட்ட யோவாப், "நகரில் இத்தனை கூக்குரலும் ஆர்ப்பரிப்பும் ஏன்?" என்று வினவினான்.
1 இராஜாக்கள் 1 : 42 (RCTA)
அவன் பேசிக்கொண்டிருக்கும் போதே, குரு அபியாத்தாரின் மகன் யோனத்தாசு வந்தான். அப்போது அதோனியாசு அவனை நோக்கி, "உள்ளே வா, ஏனெனில் நீ ஆற்றல் மிக்கவன். நல்ல செய்தி கொண்டு வருபவன்" என்றான்.
1 இராஜாக்கள் 1 : 43 (RCTA)
யோனத்தாசு அதோனியாசுக்கு மறுமொழியாக, "அப்படியன்று. நம் தலைவராம் தாவீது அரசர் சாலமோனை அரசனாக நியமித்து விட்டார்.
1 இராஜாக்கள் 1 : 44 (RCTA)
குரு சாதோக்கையும் இறைவாக்கினர் நாத்தானையும் யோயியாதாவின் மகன் பனாயாசையும் கெரேத்தியரையும் பெலேத்தியரையும் அவனோடு அனுப்பினார். அவர்கள் அவனை அரசரின் கோவேறு கழுதையின் மேல் ஏற்றினார்கள்.
1 இராஜாக்கள் 1 : 45 (RCTA)
அப்பொழுது குரு சாதோக்கும் இறைவாக்கினர் நாத்தானும் அவனைக் கீகோனில் அரசனாக அபிஷுகம் செய்தார்கள். பிறகு நகரெங்கும் முழங்கும்படி அங்கிருந்து பெரும் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் புறப்பட்டுப் போனார்கள்.
1 இராஜாக்கள் 1 : 46 (RCTA)
நீங்கள் கேட்ட இரைச்சல் அதுதான். சாலமோனும் இப்போது அரியணையில் வீற்றிருக்கிறான்.
1 இராஜாக்கள் 1 : 47 (RCTA)
அரசரின் ஊழியரும் நம் தலைவராம் தாவீது அரசருக்கு வாழ்த்துச் சொல்ல வந்து, 'கடவுள் சாலமோனின் பெயரை உமது பெயரை விட அதிகமாய் மேன்மையுறச் செய்து, அவரது அரசை உமது அரசை விடப் பெரிதாக்குவாராக' என்றனர். படுக்கையில் இருந்த அரசரும் ஆண்டவரை வணங்கி,
1 இராஜாக்கள் 1 : 48 (RCTA)
என் கண்கள் காணும்படி இன்று என் அரியணையில் என் மகனை வீற்றிருக்கச் செய்த இஸ்ராயேலின் கடவுளாகிய ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக' என்று கூறினார்" என்றான்.
1 இராஜாக்கள் 1 : 49 (RCTA)
அப்போது அதோனியாசின் விருந்தினர் அனைவரும் அச்சமுற்று தத்தம் வழியே போய் விட்டனர்.
1 இராஜாக்கள் 1 : 50 (RCTA)
அதோனியாசும் சாலமோனுக்கு அஞ்சி எழுந்து சென்று பலி பீடத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டான்.
1 இராஜாக்கள் 1 : 51 (RCTA)
அப்போது, "இதோ சாலமோன் அரசருக்கு அஞ்சி அதோனியாசு பலி பீடத்தின் கொம்பைப் பிடித்துக் கொண்டிருக்கிறான்" என்றும் "சாலமோன் அரசர் தம் ஊழியனை வாளால் கொன்று போடுவதில்லை என்று இன்று எனக்கு ஆணையிடுவாராக' என்கிறான்" என்றும் சாலமோனுக்கு அறிவிக்கப்பட்டது.
1 இராஜாக்கள் 1 : 52 (RCTA)
அப்போது சாலமோன், "அவன் நல்லவனாய் நடந்து கொண்டால், அவன் தலை மயிரில் ஒன்றாவது தரையில் விழப் போவதில்லை; தீயவனாய் நடந்து கொண்டாலோ அவன் சாகவே சாவான்" என்றார்.
1 இராஜாக்கள் 1 : 53 (RCTA)
சாலமோன் அரசர் ஆள் அனுப்பிப் பலிபீடத்தினின்று அவனைக் கொண்டு வந்தார். அவனும் வந்து அரசர் சாலமோனை வணங்கினான். சாலமோன் அவனைப் பார்த்து, "உன் வீட்டிற்குப் போ" என்றார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53