1 யோவான் 5 : 1 (RCTA)
இயேசு தான் கிறிஸ்து என்று விசுவசிக்கும் எவனுக்கும் கடவுளே தந்தை. தந்தைக்கு அன்பு செய்பவன், தந்தை பெற்ற மகனுக்கும் அன்பு செய்கிறான்.
1 யோவான் 5 : 2 (RCTA)
நாம் கடவுளுக்கு அன்பு செய்து அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளுடைய மக்களுக்கும் அன்பு செய்கிறோம். என்பது தெளிவாகிறது.
1 யோவான் 5 : 3 (RCTA)
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே கடவுள் அன்பு. அவருடைய கட்டளைகள் நமக்குச் சுமையல்ல.
1 யோவான் 5 : 4 (RCTA)
ஏனெனில், கடவுளிடமிருந்து பிறந்தவன் எவனும் உலகை வெல்கிறான். உலகைத் தோற்கடித்து நாம் அடைந்த வெற்றி நம் விசுவாசமே.
1 யோவான் 5 : 5 (RCTA)
உலகை வெல்பவன் யார்? இயேசு, கடவுளின் மகன் என்று விசுவசிப்பவனே.
1 யோவான் 5 : 6 (RCTA)
இந்த இயேசு கிறிஸ்து நீராலும் இரத்தத்தாலும் வந்தவர். நீரோடு மட்டுமன்று, நீரோடும் இரத்தத்தோடும் வந்தார். இதற்குத் தேவ ஆவியே சாட்சி; ஏனெனில், தேவ ஆவி உண்மையானவர்.
1 யோவான் 5 : 7 (RCTA)
ஆகவே, தேவ ஆவி, நீர், இரத்தம் ஆகிய மூன்று சாட்சிகள் உள்ளன;
1 யோவான் 5 : 8 (RCTA)
இம் மூன்றின் நோக்கமும் ஒன்றே.
1 யோவான் 5 : 9 (RCTA)
நாம் மனிதரின் சாட்சியத்தை ஏற்கிறோமே. கடவுளின் சாட்சியம் அதைவிட மேலானதன்றோ? இந்த மூன்றும் கடவுள் தந்த சாட்சியமே. தம் மகனைப்பற்றி அவர் தந்த சாட்சியமே இது.
1 யோவான் 5 : 10 (RCTA)
கடவுளின் மகன் மீது விசுவாசம் கொள்பவன் இந்தச் சாட்சியத்தைத் தன்னுள் கொண்டிருக்கிறான். கடவுளை விசுவசியாதவன் அவரைப் பொய்யனாக்குகிறான். ஏனெனில், கடவுள் தம் மகனைப்பற்றித் தந்த சாட்சியத்தை அவன் விசுவசிக்கவில்லை.
1 யோவான் 5 : 11 (RCTA)
கடவுள் நமக்கு முடிவில்லா வாழ்வைத் தந்தார்; இவ்வாழ்வு அவர் மகனுள் இருக்கிறது; இதுவே அவர் தரும் சாட்சியம்.
1 யோவான் 5 : 12 (RCTA)
யாரிடம் இறைமகன் இருக்கிறாரோ, அவனுக்கு வாழ்வு உண்டு; யாரிடம் கடவுள் மகன் இல்லையோ அவனுக்கு வாழ்வு இல்லை.
1 யோவான் 5 : 13 (RCTA)
கடவுளுடைய மகனின் பெயர்மீது விசுவாசம் வைத்துள்ள உங்களுக்கு முடிவில்லா வாழ்வு உண்டு என்பதை நீங்கள் அறியவே இதையெல்லாம் எழுதினேன்.
1 யோவான் 5 : 14 (RCTA)
நாம் இறைவனிடம் கேட்பது அவரது திருவுளத்திற்கேற்றதாய் இருந்தால், அவர் நமக்குச் செவிசாய்க்கிறார்; இந்த நம்பிக்கையுடன் நாம் அவர் முன் நிற்க முடியும்.
1 யோவான் 5 : 15 (RCTA)
நாம் கேட்கும்போதெல்லாம் அவர் செவிசாய்க்கிறார். என்ற உறுதி நமக்கிருந்தால், அவரிடம் கேட்டதனைத்தும் கிடைத்துவிட்டது என்ற உறுதியும் இருக்கும்.
1 யோவான் 5 : 16 (RCTA)
இறுதிச்சாவை வருவிக்காத பாவம் ஒன்றைச் சகோதரன் செய்வதை ஒருவன் கண்டால், அவனுக்காக வேண்டுவானாக; இறைவன் அவனுக்கு வாழ்வளிப்பார். இறுதிச்சாவை வருவிக்காத பாவத்தைச் செய்பவர்களைப் பற்றியே நான் சொல்லுகிறேன். இறுதிச்சாவை வருவிக்கும் பாவம் ஒன்றுண்டு; வேண்டுதல் செய்யும்படி நான் சொல்வது அதைப்பற்றியன்று.
1 யோவான் 5 : 17 (RCTA)
தீய செயலனைத்தும் பாவம்; ஆயினும், இறுதிச்சாவை வருவிக்காத பாவமும் உண்டு.
1 யோவான் 5 : 18 (RCTA)
கடவுளிடமிருந்து பிறக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை; கடவுளிடமிருந்து பிறந்தவர் அவனைக் காப்பாற்றுகிறார்; தீயோன் அவனைத் தீண்டுவதில்லை; இது நமக்குத் தெரியும்.
1 யோவான் 5 : 19 (RCTA)
நாம் கடவுளைச் சார்ந்தவர்கள், ஆனால் உலகனைத்தும் தீயோனின் பிடியில் இருக்கிறது; இதுவும் நமக்குத் தெரியும்.
1 யோவான் 5 : 20 (RCTA)
கடவுளின் மகன் வந்தார்; உண்மை இறைவனை அறியும் ஆற்றலை நமக்குத் தந்தார்; இதுவும் நமக்குத் தெரியும். அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் நாம் உண்மை இறைவனுக்குள் இருக்கிறோம்; இவரே உண்மைக் கடவுள். இவரே முடிவில்லா வாழ்வு.
1 யோவான் 5 : 21 (RCTA)
அன்புக் குழந்தைகளே, பொய்த் தேவர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.
❮
❯