1 யோவான் 3 : 1 (RCTA)
பரம தந்தை நம்மிடம் காட்டிய அன்பு எவ்வளவு என்று பாருங்கள்! நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுகிறோம். அவருடைய மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்து கொள்ளாததால் தான், நாம் எத்தன்மையரென்பதையும் அது அறிந்துகொள்வதில்லை.
1 யோவான் 3 : 2 (RCTA)
அன்புக்குரியவர்களே, இப்போது நாம் கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் வெளிப்படும்போது, அவரைப்போலவே நாமும் இருப்போம் என்று அறிந்திருக்கிறோம். ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.
1 யோவான் 3 : 3 (RCTA)
அவர்மேல் இந்த நம்பிக்கை கொள்ளும் எவனும் அவர் குற்றமற்றவராய் இருப்பதுபோலத் தன்னையும் குற்றமற்றவனாய்க் காத்துக் கொள்வான்.
1 யோவான் 3 : 4 (RCTA)
பாவஞ்செய்கிற எவனும் திருச்சட்டத்தை மீறுகிறான். ஏனெனில் திருச்சட்டத்தை மீறுதலே பாவம்
1 யோவான் 3 : 5 (RCTA)
பாவங்களைப் போக்குவதற்காகவே அவர் தோன்றினார் என்று உங்களுக்குத் தெரியும். அவரிடமோ பாவமென்பது இல்லை.
1 யோவான் 3 : 6 (RCTA)
அவருள் நிலைத்திருக்கிற எவனும் பாவத்திலே வாழ்வதில்லை; பாவத்தின் வாழும் எவனும் அவரைக் கண்டதுமில்லை, அறிந்ததுமில்லை.
1 யோவான் 3 : 7 (RCTA)
அன்புக் குழந்தைகளே, எவனும் உங்களை ஏமாற்ற இடங்கொடாதீர்கள். இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்பவனே கிறிஸ்து இறைவனுக்கு எற்புடையவராய் இருப்பதுபோல, தானும் ஏற்புடையவனாய் இருக்கிறான்.
1 யோவான் 3 : 8 (RCTA)
பாவஞ்செய்பவன் அலகையைச் சார்ந்தவன்; ஏனெனில் அலகை ஆதிமுதல் பாவஞ்செய்துகொண்டு வருகிறது. இவ்வலகையின் செயல்களைத் தொலைக்கவே கடவுளின் மகன் தோன்றினார்.
1 யோவான் 3 : 9 (RCTA)
கடவுளிடமிருந்து பிறந்தவன் பாவஞ்செய்வதில்லை; ஏனெனில் அவர் இட்ட வித்து அவனுக்குள் நிலைத்திருக்கிறது. அவன் பாவத்தில் வாழமுடியாது; ஏனெனில் அவன் கடவுளிடமிருந்து பிறந்திருக்கிறான்.
1 யோவான் 3 : 10 (RCTA)
இறைவனுக்கு ஏற்புடையதைச் செய்யாதவனும், தன் சகோதரனுக்கு அன்பு செய்யாதவனும் கடவுளிடமிருந்து வந்தவன் அல்லன். இதனின்று, கடவுளின் மக்கள் யாரென்றும் அலகையின் மக்கள் யாரென்றும் புலப்படும்.
1 யோவான் 3 : 11 (RCTA)
தொடக்கத்திலிருந்து நீங்கள் கேட்டறிந்த செய்தி இதுவே; நாம் ஒருவர்க்கு ஒருவர் அன்பு செய்ய வேண்டும்.
1 யோவான் 3 : 12 (RCTA)
காயீனைப்போல் இராதீர்கள்; தீயோனைச் சார்ந்த அவன் தன் தம்பியைக் கொன்றான். ஏன் அவனைக் கொன்றான்? அவனுடைய செயல்கள் தீயனவாகவும், அவன் தம்பியின் செயல்கள் நல்லனவாகவும் இருந்தன.
1 யோவான் 3 : 13 (RCTA)
சகோதரர்களே, உலகம் உங்களை வெறுக்கிறதென்றால் வியப்புறவேண்டாம்.
1 யோவான் 3 : 14 (RCTA)
சாவிலிருந்து வாழ்வுக்குக் கடந்துவந்துள்ளோம்; நாம் நம் சகோதர்களுக்கு அன்புசெய்வதால் அதை அறிகிறோம். அன்பு செய்யாதவன் சாவில் நிலைகொள்ளுகிறான்.
1 யோவான் 3 : 15 (RCTA)
தன் சகோரதனை வெறுக்கிற எவனும் கொலைகாரன். கொலைகாரன் எவனிடத்திலும் முடிவில்லா வாழ்வு நிலைத்திருப்பதில்லை; இது உங்களுக்குத் தெரியும்.
1 யோவான் 3 : 16 (RCTA)
கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்; இதனால் அன்பு இன்னதென்று அறிந்தோம். ஆகவே நாமும் நம்முடைய சகோதரர்களுக்காக நம் உயிரைக் கொடுக்கவேண்டும்.
1 யோவான் 3 : 17 (RCTA)
இவ்வுலக செல்வங்களை உடையவன் ஒருவன், தன் சகோதரன் வறுமையுற்றிருப்பதைக் கண்டு. மனமிரங்காவிடில், அவனுள் கடவுளன்பு நிலைத்திருக்கிறதென்று எவ்வாறு சொல் முடியும்?
1 யோவான் 3 : 18 (RCTA)
அன்புக் குழந்தைகளே, நம் அன்பு சொல்லிலும் பேச்சிலும் இராமல், செயலில் விளங்கும் உண்மையான அன்பாய் இருக்கட்டும்.
1 யோவான் 3 : 19 (RCTA)
இதனால் நாம் உண்மையைச் சார்ந்தவர்கள் என்றறிவதோடு, அவர்முன் நம் மனச்சான்றை அமைதிப்படுத்த முடியும்.
1 யோவான் 3 : 20 (RCTA)
ஏனெனில், நம் மனச்சான்று நம்மைக் கண்டனம் செய்தால், நம் மனச்சான்றை விடக் கடவுள் மேலானவர், அனைத்தையும் அறிபவர் என்பதை நினைவில் கொள்வோம்.
1 யோவான் 3 : 21 (RCTA)
அன்புக்குரியவர்களே, நம் மனச்சான்று நம்மைக் கண்டனம் செய்யாதிருந்தால், கடவுள் முன் நாம் நம்பிக்கையோடு நிற்க முடியும்.
1 யோவான் 3 : 22 (RCTA)
அப்போதுதான் நாம் கேட்பதையெல்லாம் அவரிடமிருந்து பெறுவோம். ஏனெனில், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து, அவருக்குகந்ததைச் செய்கிறோம்.
1 யோவான் 3 : 23 (RCTA)
நாம் அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவின் பெயர்மீது விசுவாசம் வைத்து, அவர் தந்த கட்டளைப்படி ஒருவர்க்கொருவர் அன்பு செய்ய வேண்டும்; இதுவே அவரது கட்டளை.
1 யோவான் 3 : 24 (RCTA)
அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவன் அவருள் நிலைத்திருக்கிறான்; அவரும் அவனுள் நிலைத்திருக்கிறார்; அவர் நம்முள் நிலைத்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய ஆவியினால் அறிகிறோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24