1 யோவான் 1 : 1 (RCTA)
ஆதிமுதல் இருந்ததை, நாங்கள் கேட்டதை, கண்ணால் பார்த்ததை உங்களுக்கு அறிவிக்கிறோம். அதை நாங்கள் நோக்கினோம். கையால் தொட்டுணர்ந்தோம். நாங்கள் அறிவிப்பது உயிரின் வார்த்தையைப் பற்றியது.
1 யோவான் 1 : 2 (RCTA)
அந்த உயிர் வெளிப்படுத்தப்பட்டது; அதனை நாங்கள் கண்டோம், அதற்குச் சான்று பகர்கின்றோம். தந்தையோடு இருந்து, நமக்கு வெளிப்படுத்தப்பட்ட முடிவில்லா வாழ்வுபற்றிய செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
1 யோவான் 1 : 3 (RCTA)
நீங்களும் எங்களோடு நட்புறவு கொள்ளும் படி, நாங்கள் பார்த்ததை, நாங்கள் கேட்டதை உங்களுக்கும் தெரிவிக்கிறோம். எங்களுக்குள்ள நட்புறவோ பரம தந்தையோடும் அவர் மகன் இயேசு கிறிஸ்துவோடும் உள்ளதாகும்.
1 யோவான் 1 : 4 (RCTA)
நம் மகிழ்ச்சி நிறைவுபெற இதனை எழுதுகிறோம்.
1 யோவான் 1 : 5 (RCTA)
நாங்கள் அவரிடமிருந்து கேட்டறிந்து உங்களுக்குத் தெரிவிக்கும் செய்தி இதுவே: கடவுள் ஒளியாய் இருக்கிறார். அவருள் இருள் என்பதே இல்லை.
1 யோவான் 1 : 6 (RCTA)
இருளிலே வாழ்ந்துகொண்டு அவரோடு நமக்கு நட்புறவு உண்டு என்போமானால் நாம் பொய்யர்கள், உண்மைக்கு ஏற்ப நடப்பவர்கள் அல்ல.
1 யோவான் 1 : 7 (RCTA)
மாறாக, அவர் ஒளியில் இருப்பதுபோல நாமும் ஒளியில் நடப்போமானால், ஒருவரோடு ஒருவர் நட்புறவு கொண்டவர்களாவோம். அப்போது அவர் மகனாகிய இயேசுவின் இரத்தம் எல்லாப் பாவத்தினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துகிறது.
1 யோவான் 1 : 8 (RCTA)
நம்மிடம் பாவமில்லை என்போமானால் நம்மையே நாம் ஏமாற்றிக்கொள்கிறோம்; உண்மை என்பது நம்மிடம் இல்லை.
1 யோவான் 1 : 9 (RCTA)
மாறாக, நம் பாவங்களை ஏற்றுக்கொள்வோமானால், அவர் நம்பிக்கைக்குரியவர், நீதியுள்ளவர் என விளங்குவார். நம் பாவங்களை மன்னிப்பார்; எல்லா அநீதியினின்றும் நம்மைத் தூய்மைப்படுத்துவார்.
1 யோவான் 1 : 10 (RCTA)
நாம் பாவம் செய்யவில்லை என்போமானால், அவரைப் பொய்யராக்குகிறோம். அவரது வார்த்தை நம்முள் இல்லை.

1 2 3 4 5 6 7 8 9 10