1 கொரிந்தியர் 8 : 1 (RCTA)
இனி, தெய்வங்களின் சிலைகளுக்குப் படைத்த பொருளைக் குறித்துச் சொல்ல வேண்டியது: ' நம் எல்லோருக்கும் அறிவுண்டு ' என்கிறீர்கள். சரி, தெரியும் ஆனால் அறிவு இறுமாப்பையே உண்டாக்கும்; அன்பு தான் ஞான வளர்ச்சி தரும்.
1 கொரிந்தியர் 8 : 2 (RCTA)
தனக்கு அறிவு உண்டு என நினைக்கிறவன் அறியவேண்டிய முறையில் எதையும் இன்னும் அறிந்து கொள்ளாதவன்.
1 கொரிந்தியர் 8 : 3 (RCTA)
ஆனால் கடவுளிடம் ஒருவனுக்கு அன்பிருந்தால், அவனை அவர் அறிந்திடுவார்.
1 கொரிந்தியர் 8 : 4 (RCTA)
இனி, சிலைகளுக்குப் படைத்த பொருளைக் குறித்து நீங்கள் அறியவேண்டியது: தெய்வத்தின் சிலையென்பது ஒன்றுமே இல்லை, ஒரே கடவுளைத் தவிர வேறில்லை. இது நமக்குத் தெரிந்ததே.
1 கொரிந்தியர் 8 : 5 (RCTA)
கடவுளர் எனக் கருதப்படுவோர் வானத்திலும் வையத்திலும் பலர் இருக்கலாம்; இத்தகைய கடவுளர் பலரும், ஆண்டவர்கள் பலரும் இருந்தே வருகிறார்கள்.
1 கொரிந்தியர் 8 : 6 (RCTA)
நமக்கோ கடவுள் ஒருவரே; அவர் பரம தந்தை; அவரிடம் இருந்தே எல்லாம் வந்தன; அவருக்காகவே நாம் இருக்கிறோம்; ஆண்டவரும் ஒருவர் தான்; அவரே இயேசு கிறிஸ்து; அவராலேயே எல்லாம் உண்டாயின; நாமும் அவராலேயே உண்டானோம்.
1 கொரிந்தியர் 8 : 7 (RCTA)
ஆனால் இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. இது வரையில் இருந்து வந்த சிலை வழிபாட்டுப் பழக்கத்தால், படைக்கப்பட்ட உணவைத் தெய்வத்திற்கு அர்ப்பணித்ததாகக் கருதி உண்போரும் சிலர் உள்ளனர். அவர்களுடைய மனச்சான்று வலுவற்றிருப்பதால் மாசுபடுகிறது.
1 கொரிந்தியர் 8 : 8 (RCTA)
நாம் உண்ணும் உணவு நம்மைக் கடவுள் முன் கொண்டுபோய்ச் சேர்க்கமுடியாது. உண்ணாவிடில் நமக்குக் குறைவுமில்லை, உண்டால் நமக்கு நிறைவுமில்லை,
1 கொரிந்தியர் 8 : 9 (RCTA)
ஆயினும் உங்களுக்கு இருக்கும் இந்தச் செயலுரிமை வலிமையற்றவர்களுக்கு ஒருவேளை இடைஞ்சலாய் இராதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
1 கொரிந்தியர் 8 : 10 (RCTA)
எனெனில், அறிவு உண்டென்று சொல்லும் நீ சிலைவழிபாட்டுக் கோயிலில் பந்தியமர்வதை வலிமையற்ற மனச்சான்றுள்ள ஒருவன் கண்டால் அவனும் படையலை உண்ணத் துணிவு கொள்வான் அன்றோ?
1 கொரிந்தியர் 8 : 11 (RCTA)
இங்ஙனம் உனக்குள்ள அறிவால், வலிமையற்றவன் அழிந்து போகிறான்; அவன் உன் சகோதரன் அல்லனோ? அவனுக்காகக் கிறிஸ்து உயிர் துறந்தாரல்லரோ?
1 கொரிந்தியர் 8 : 12 (RCTA)
இவ்வாறு நீங்கள் சகோதரர்களுடைய வலிமையற்ற மனச்சான்றைக் காயப்படுத்தி, அவர்களுக்கு எதிராகப் பாவஞ்செய்தால், கிறிஸ்துவுக்கு எதிராகவே பாவஞ் செய்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 8 : 13 (RCTA)
ஆகையால், நான் உண்ணும் உணவு என் சகோதரனுக்கு இடறலாயிருக்குமாயின், சகோதரனுக்கு இடறல் ஆகாதபடி நான் ஒரு போதும் புலால் உண்ணவே மாட்டேன்.
❮
❯