1 கொரிந்தியர் 7 : 1 (RCTA)
இப்பொழுது நீங்கள் எழுதிக்கேட்டவற்றைக் குறித்துப் பேசுகிறேன். பெண்ணைத் தொடாமலிருப்பது நன்று.
1 கொரிந்தியர் 7 : 2 (RCTA)
ஆனால் கெட்ட நடத்தை எங்கும் மிகுதியாயிருப்பதால், ஒவ்வொருவனுக்கும் மனைவி இருக்கட்டும். ஒவ்வொருத்திக்கும் கணவன் இருக்கட்டும்.
1 கொரிந்தியர் 7 : 3 (RCTA)
கணவன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யட்டும். அவ்வாறே மனைவியும் கணவனுக்குச் செய்யட்டும்.
1 கொரிந்தியர் 7 : 4 (RCTA)
மனைவிக்குத் தன் உடல்மேல் உரிமையில்லை; கணவனுக்கே அந்த உரிமையுண்டு. அவ்வாறே கணவனுக்கும் தன் உடல் மேல் உரிமையில்லை; மனைவிக்கே அந்த உரிமையுண்டு.
1 கொரிந்தியர் 7 : 5 (RCTA)
ஒருவர்க்கொருவர் செய்யவேண்டிய கடமையை மறுக்காதீர்கள் செபத்தில் ஈடுபடுவதற்காகச் சிறிது காலத்திற்கு அக்கடமையைச் செய்யாமலிருக்கலாம். ஆனால், அதற்கு இருவரும் உடன்படவேண்டும். அதன்பின் முன்போல் கூடி வாழுங்கள். இல்லாவிட்டால் தன்னடக்கக் குறையைப் பயன்படுத்தி, சாத்தான் உங்களைச் சோதிப்பான்
1 கொரிந்தியர் 7 : 6 (RCTA)
இதையெல்லாம் நான் கட்டளையாகச் சொல்லவில்லை. உங்கள் நிலைமைக்கு இரங்கியே சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 7 (RCTA)
எல்லாரும் என்னைப்போல இருக்க வேண்டுமென்பதே என் விருப்பம். ஆயினும் கடவுள் தரும் தனிப்பட்ட வரத்தை ஒவ்வொருவனும் கொண்டிருக்கிறான் ஒருவனுக்கு ஒருவகையான வரமும், வேறொருவனுக்கு வேறு வகையான வரமும் கிடைக்கிறது.
1 கொரிந்தியர் 7 : 8 (RCTA)
மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்லுவது: நான் இருப்பதுபோல அவர்களும் இருந்துவிடுவதுதான் நல்லது.
1 கொரிந்தியர் 7 : 9 (RCTA)
ஆனால் இச்சையை அடக்க இயலாமற் போனால் திருமணம் செய்துகொள்ளட்டும். ஏனெனில் காமத்தால் தீய்வதைவிடத் திருமணம் செய்து கொள்வதே நல்லது.
1 கொரிந்தியர் 7 : 10 (RCTA)
மணமானவர்களுக்கு நான் தரும் கட்டளையாவது உண்மையில் இக்கட்டளை என்னுடையதன்று, ஆண்டவருடையதே மனைவி கணவனை விட்டுப் பிரியலாகாது
1 கொரிந்தியர் 7 : 11 (RCTA)
பிரிந்தால் மறுமணம் ஆகாமலே இருக்கவேண்டும் அல்லது கணவனோடு ஒப்புரவாக வேண்டும். கணவனும் மனைவியைக் கைவிடலாகாது.
1 கொரிந்தியர் 7 : 12 (RCTA)
மற்றவர்களுக்கு நான் சொல்லுவது - இது ஆண்டவர் சொன்னதன்று; நான் சொல்லுவது சகோதரன் ஒருவனுக்கு அவிசுவாசியான மனைவி இருந்து அவள் அவனோடு கூடிவாழ உடன்பட்டால், அவன் அவளைக் கைவிடலாகாது.
1 கொரிந்தியர் 7 : 13 (RCTA)
பெண் ஒருத்திக்கு அவிசுவாசியான கணவன் இருந்து, அவன் அவளோடு கூடிவாழ உடன்பட்டால் அவள் கணவனைக் கைவிடக்கூடாது.
1 கொரிந்தியர் 7 : 14 (RCTA)
அவிசுவாசியான கணவன் தன் மனைவியால் புனிதமடைகிறான்; அங்ஙனமே அவிசுவாசியான மனைவி அந்தச் சகோதரனால் புனிதமடைகிறாள்; இல்லையெனில் உங்கள் பிள்ளைகள் மாசுபட்டவர்களாய் இருப்பார்கள். இப்பொழுதோ புனிதமாய் இருக்கிறார்கள்.
1 கொரிந்தியர் 7 : 15 (RCTA)
ஆனால் இருவருள் அவிசுவாசியாயிருப்பவர் பிரிந்துபோனால் போகட்டும். இத்தகைய சூழ்நிலையில் சகோதரனோ சகோதரியோ திருமணப் பிணைப்பால் கட்டுப்பட்டவர் அல்லர். அமைதியாக வாழவே கடவுள் உங்களை அழைத்திருக்கிறார்.
1 கொரிந்தியர் 7 : 16 (RCTA)
மாதே, உன் கணவனை நீ மீட்பாயென உனக்கு எப்படித் தெரியும்? கணவனே, உன் மனைவியை நீ மீட்பாயென உனக்கு எப்படித் தெரியும்?
1 கொரிந்தியர் 7 : 17 (RCTA)
எது எப்படியிருப்பினும், ஆண்டவர் ஒவ்வொருவனுக்கும் பகிர்ந்தளித்த வரத்தின்படியே, கடவுள் ஒவ்வொருவனையும் அழைத்திருக்கும் நிலையின்படியே ஒவ்வொருவனும் நடக்க வேண்டும். எல்லாச் சபைகளிலும் நான் கற்பித்துவரும் ஒழுங்கு முறை இதுவே.
1 கொரிந்தியர் 7 : 18 (RCTA)
கடவுள் அழைத்தபோது ஒருவன் விருத்தசேதனமுள்ளவனாயிருந்தால் அவன் விருத்தசேதனத்தின் அடையாளத்தை நீக்கவேண்டியதில்லை. அழைக்கப்பட்டபோது ஒருவன் விருத்தசேதனமில்லாதவனாய் இருந்தால் அவன் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டியதில்லை.
1 கொரிந்தியர் 7 : 19 (RCTA)
விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமின்மையும் ஒன்றுமில்லை; கடவுளின் கட்டளைகளைக் கடைப்பித்தல் ஒன்றே தேவை.
1 கொரிந்தியர் 7 : 20 (RCTA)
எந்த நிலையில் ஒருவன் அழைக்கப்பட்டானோ அந்த நிலையிலேயே அவன் இருக்கட்டும்.
1 கொரிந்தியர் 7 : 21 (RCTA)
அழைக்கப்பட்டபோது நீ அடிமை நிலையில் இருந்தாயா? கவலைப்படாதே. ஆயினும், விடுதலைபெற வாய்ப்பிருந்தால், அதைப் பயன்படுத்திக் கொள்.
1 கொரிந்தியர் 7 : 22 (RCTA)
ஏனெனில் ஆண்டவருக்குள் வாழும்படி அழைக்கப்பட்ட அடிமை ஆண்டவர் விடுவித்த உரிமைக் குடிமகனாயிருக்கிறான். அழைக்கப்பட உரிமைக் குடிமகனோ கிறிஸ்துவின் அடிமையாயிருக்கிறான்.
1 கொரிந்தியர் 7 : 23 (RCTA)
நீங்கள் விலைகொடுத்து வாங்கப்பட்டீர்கள்; மனிதர்களுக்கு அடிமையாக வேண்டாம்.
1 கொரிந்தியர் 7 : 24 (RCTA)
சகோதரர்களே, ஒருவன் எந்த நிலையில் அழைக்கப்பட்டானோ, அந்த நிலையிலேயே அவன் கடவுள் திருமுன் நிலைத்திருக்கட்டும்.
1 கொரிந்தியர் 7 : 25 (RCTA)
மணமாகாதவர்களைக் குறித்து அண்டவர் அளித்த கட்டளை எதுவுமே எனக்குத் தெரியாது. நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும்படி ஆண்டவரின் இரக்கத்தால் வரம் பெற்றவன் என்ற முறையில் என் கருத்தைச் சொல்லுகிறேன்;
1 கொரிந்தியர் 7 : 26 (RCTA)
அதாவது, மணமாகாத ஒருவன் தான் இருக்கும் நிலையில் இருந்துவிடுவதே நல்லது. இப்போதைய நெருக்கடியை முன்னிட்டே அது நல்லதென எண்ணுகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 27 (RCTA)
திருமணத்தால் பிணைக்கப்பட்டிருக்கிறாயா? மண முறிவைத் தேடாதே. திருமணத்தால் பிணைக்கப்படாமல் இருக்கிறாயா? மணம்செய்யத் தேடாதே.
1 கொரிந்தியர் 7 : 28 (RCTA)
அப்படி நீ மணஞ்செய்து கொண்டாலும், அது பாவமில்லை. அங்ஙனமே கன்னிப் பெண் மணஞ்செய்துகொண்டாலும் அது பாவமில்லை. ஆனால் இவர்களெல்லாரும் இவ்வுலக வாழ்வில் வேதனை அடைவார்கள். இதற்கு நீங்கள் உள்ளாகக் கூடாதென்று இவ்வாறு சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 29 (RCTA)
சகோதரர்களே, நான் சொல்வது இதுதான்: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவர்களும் மனைவி இல்லாதவர்களைப்போல் இருக்கட்டும்.
1 கொரிந்தியர் 7 : 30 (RCTA)
துயருறுவோர் துயரத்திலேயே ஆழ்ந்தவர்கள் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியிலேயே மயங்கினவர்கள் போலவும் இருத்தலாகாது. பொருளை விலைக்கு வாங்குவோர். அதைத் தமக்கென்றே வைத்துக் கொள்ளாமலும், இவ்வுலகப் பயனைத் துய்ப்போர்,
1 கொரிந்தியர் 7 : 31 (RCTA)
அதிலேயே ஆழ்ந்துவிடாமலும் இருக்கட்டும். ஏனெனில், இவ்வுலகத்தின் அமைப்பு கடந்து செல்கிறது.
1 கொரிந்தியர் 7 : 32 (RCTA)
நீங்கள் கவலைக்கு ஆளாகதவர்களாய் இருக்கவேண்டுமென நான் விழைகிறேன். மணமாகாதவன் ஆண்டவர்க்குரியதில் கவலையாய் இருக்கிறான்; அவரை எவ்வாறு மகிழ்விக்கலாம் என்ற நினைவாகவே இருக்கிறான்.
1 கொரிந்தியர் 7 : 33 (RCTA)
மணமானவனோ உலகத்துக்குரியதில் கவலையாய் இருக்கிறான்; மனைவியை எவ்வாறு மகிழ்விக்கலாம். என்ற நினைவாகவே இருக்கிறான். இவ்வாறு பிளவுபட்டதொரு நிலையில் அவன் இருக்கிறான்.
1 கொரிந்தியர் 7 : 34 (RCTA)
மணமாகாதவளும் கன்னிப்பெண்ணும் ஆண்டவர்க்குரியதிலேயே கவலையாய் இருக்கிறார்கள்; உடலிலும் உள்ளத்திலும் பரிசுத்தராய் இருக்கவேண்டுமென்பதே அவர்கள் நோக்கம். மணமானவளோ உலகத்திற்குரியதில் கவலையாய் இருக்கிறாள்; கணவனை எவ்வாறு மகிழ்விக்கலாம் என்ற நினைவாகவே இருக்கிறாள்.
1 கொரிந்தியர் 7 : 35 (RCTA)
நான் இதைச் சொல்வது உங்களைக் கட்டுப்படுத்துவதற்கன்று, உங்கள் நன்மைக்கே; எல்லாம் ஒழுங்காய் இருக்கவும் மனச்சிதைவின்றி நீங்கள் ஆண்டவரிடம் பற்றுக் கொண்டிருக்கவும் வேண்டுமென்றே நான் இதைச் சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 7 : 36 (RCTA)
தனக்கு மண உறுதி செய்யப்பட்ட ஒருத்தியோடு ஒருவன் கன்னிமையைக் கடைப்பிடிக்கத் தீர்மானித்தபின், அவளிடம் தான் தகாதமுறையில் நடந்துகொள்வதாக அவனுக்குத் தோன்றலாம். ஆசையின் மேலீட்டால் மணம் செய்துகொள்ள வேண்டுமென்று அவன் நினைத்தால் தன் விருப்பம்போல் செய்யட்டும்; அவர்கள் மணம் செய்து கொள்ளட்டும். அதுபாவம் இல்லை.
1 கொரிந்தியர் 7 : 37 (RCTA)
ஆனால், தன் எண்ணத்தில் நிலையாய் இருந்து, எவ்விதக் கட்டாயத்திற்கும் உட்படாமல், தன் சொந்த விருப்பத்தின்படி செய்ய ஆற்றல் உள்ள ஒருவன், தனக்கு மண உறுதி செய்யப்பட்ட கன்னியை அந்நிலையிலேயே வைத்திருக்க முடிவு செய்தால் அவன் நல்லதே செய்கிறான்.
1 கொரிந்தியர் 7 : 38 (RCTA)
ஆகவே மண உறுதி செய்யப்பட்ட கன்னியை ஒருவன் மணஞ்செய்து கொள்வது நன்றே; மணஞ்செய்து கொள்ளாமலிருப்பதோ அதனினும் நன்று.
1 கொரிந்தியர் 7 : 39 (RCTA)
கணவன் உயிரோடிருக்கும்வரை மனைவி அவனுடன் பிணைக்கப் பட்டிருக்கிறாள் கணவன் இறந்தால், தான் விரும்பும் ஒருவனை மணந்துகொள்ள உரிமை பெறுகிறாள். ஆனால் அவன் கிறிஸ்தவனாய் இருக்க வேண்டும்,
1 கொரிந்தியர் 7 : 40 (RCTA)
ஆயினும் அவள் அப்படியே இருந்துவிட்டால் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழ்வாள். என் கருத்து இதுவே. என்னிடத்திலும் கடவுளின் ஆவி உண்டென்று எண்ணுகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40

BG:

Opacity:

Color:


Size:


Font: