1 கொரிந்தியர் 15 : 1 (RCTA)
சகோதரர்களே, உங்களுக்கு நான் அறிவித்த நற்செய்தியை நினைவுறுத்த விழைகிறேன்; நீங்கள் அதை ஏற்றுக்கொண்டீர்கள்; அதிலே நிலைத்திருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 : 2 (RCTA)
நான் உங்களுக்கு நற்செய்தியாக அறிவித்த வாக்கை நீங்கள் உறுதியாய்ப் பற்றிக் கொண்டிருந்தால், அதனாலேயே மீட்படைவீர்கள்; இல்லையேல் நீங்கள் விசுவசித்தது வீண் என்று சொல்ல வேண்டியிருக்கும்.
1 கொரிந்தியர் 15 : 3 (RCTA)
ஏனெனில், நான் பெற்றுக்கொண்டதும், முதன்மையானதாக உங்களுக்குக் கையளித்ததும் எதுவெனில், மறைநூலில் உள்ளபடி, கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக இறந்தார்.
1 கொரிந்தியர் 15 : 4 (RCTA)
அடக்கம் செய்யப்பட்டு, மறைநூலில் உள்ளபடியே, மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
1 கொரிந்தியர் 15 : 5 (RCTA)
கோபுவுக்கும் பின்னர் பன்னிருவர்க்கும் தோன்றினார்.
1 கொரிந்தியர் 15 : 6 (RCTA)
பின்பு ஒரே சமயத்தில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட சகோதரர்களுக்குத் தோன்றினார் அவர்களுள் பலர் இன்னும் உயிரோடு இருக்கின்றனர்; ஒரு சிலர் இறந்து போயினர்.
1 கொரிந்தியர் 15 : 7 (RCTA)
பின்னர் யாகப்பருக்கும், அடுத்து அப்போஸ்தலர் அனைவருக்கும் தோன்றினார்.,
1 கொரிந்தியர் 15 : 8 (RCTA)
எல்லாருக்கும் கடைசியாக, காலாந்தப்பிய பிறவி போன்ற எனக்கும் தோன்றினார்.
1 கொரிந்தியர் 15 : 9 (RCTA)
நானோ அப்போஸ்தலர்களுள் மிகச் சிறியன்; கடவுளின் திருச்சபையைத் துன்புறுத்திய நான் அப்போஸ்தலன் என்னும் பெயர்பெறத் தகுதியற்றவன்.
1 கொரிந்தியர் 15 : 10 (RCTA)
ஆயினும் நான் இப்பொழுது இந்த நிலையில் இருப்பது கடவுளின் அருளால் தான்; அவர் எனக்குத் தந்த அருளோ வீணாய்ப் போகவில்லை; அவர்கள் அனைவரையும் விட நான் மிகுதியாகவே உழைத்தேன் -- ஆனால் உழைத்தவன் நானல்லேன், என்னோடு இருக்கும் இறையருள்தான் உழைத்தது --
1 கொரிந்தியர் 15 : 11 (RCTA)
நானோ அவர்களோ யார் போதித்தாலும் நாங்கள் அறிவிப்பது இதுவே; நீங்கள் விசுவசித்ததும் இதுவே.
1 கொரிந்தியர் 15 : 12 (RCTA)
இனி, கிறிஸ்து இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார் என அறிவிக்கப்பட்டிருக்க, இறந்தோர் உயிர்ப்பதில்லை என உங்களுள் சிலர் சொல்வெதப்படி?
1 கொரிந்தியர் 15 : 13 (RCTA)
இறந்தோர் உயிர்த்தெழுதல் இல்லையென்றால், கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை.
1 கொரிந்தியர் 15 : 14 (RCTA)
கிறிஸ்து உயிர்த்தெழவில்லையென்றால், எங்கள் தூதுரை பொருளற்றதே, உங்கள் விசுவாசமும் பொருளற்றதே.
1 கொரிந்தியர் 15 : 15 (RCTA)
நாங்களும் கடவுளின் சார்பில் பொய்ச்சாட்சி சொல்பவர் ஆவோம். ஏனெனில், இறந்தோர் உயிர்த்தெழுவதில்லை என்பது உண்மையானால், கடவுள் உயிர்த்தெழச் செய்யாத கிறிஸ்துவை உயிர்த்தெழச் செய்தார் என்று நாங்கள் சொன்னபோது கடவுள் பெயரால் பொய்ச் சாட்சி சொன்னவர்கள் ஆனோம்.
1 கொரிந்தியர் 15 : 16 (RCTA)
ஏனெனில், இறந்தவர்கள் உயிர்த்தெழுவதில்லை யென்றால் கிறிஸ்துவும் உயிர்த்தெழவில்லை.
1 கொரிந்தியர் 15 : 17 (RCTA)
கிறிஸ்து உயிர்த்தெழவில்லை என்றாலோ உங்கள் விசுவாசம் வீணானதே. நீங்கள் இன்னும் பாவ நிலையிலேயே இருக்கிறீர்கள்.
1 கொரிந்தியர் 15 : 18 (RCTA)
அப்படியானால், கிறிஸ்துவுக்குள் துஞ்சியவர்களும் அழிந்துவிட்டனர்.
1 கொரிந்தியர் 15 : 19 (RCTA)
இம்மை வாழ்வுக்காக மட்டும் நாம் கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்தவர்களாயிருந்தால், எல்லாரையும் விட நாம் இரங்குவதற்குரியவர் ஆவோம்.
1 கொரிந்தியர் 15 : 20 (RCTA)
ஆனால் உள்ளபடி,. இறந்தோரிடமிருந்து கிறிஸ்து உயிர்த்தெழுந்தார்; துஞ்சினோரின் முதற் கனி அவரே.
1 கொரிந்தியர் 15 : 21 (RCTA)
மனிதன் வழியாய்ச் சாவு உண்டானது போல, மனிதன் வழியாகவே இறந்தோர்க்கு உயிர்த்தெழுதலும் உண்டு.
1 கொரிந்தியர் 15 : 22 (RCTA)
ஆதாமில் அனைவரும் இறந்ததுபோல கிறிஸ்துவில் எல்லாரும் உயிர்பெறுவர்.,
1 கொரிந்தியர் 15 : 23 (RCTA)
அதை ஒவ்வொருவனும் குறிப்பிட்ட வரிசையின்படி பெறுவான். முதற்கனியாகக் கிறிஸ்து உயிர்பெற்றார். அடுத்து, கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் அவருடைய வருகையின்போது உயிர்பெறுவார்.
1 கொரிந்தியர் 15 : 24 (RCTA)
அதன் பின்னர் முடிவு வரும்; அப்போது, தலைமை ஏற்போர், ஆட்சி புரிவோர், வலிமை மிக்கோர் அனைவரையும் அவர் தகர்த்துவிட்டுக் கடவுளும் தந்தையுமானவரிடம் அரசை ஒப்படைப்பார்.
1 கொரிந்தியர் 15 : 25 (RCTA)
பகைவர் அனைவரையும் அவரது கால்மணை ஆக்கும்வரை அவர் அரசாள வேண்டியிருக்கிறது.
1 கொரிந்தியர் 15 : 26 (RCTA)
இறுதிப் பகைவனாகத் தகர்க்கப்படுவது சாவு.
1 கொரிந்தியர் 15 : 27 (RCTA)
' அனைத்தையும் அவருக்கு அடிப்பணியச் செய்தார் ' என்றுள்ளதன்றோ? 'அனைத்தும் அடிபணிந்துள்ளன ' என்று சொல்லும்போது அனைத்தையும் அவருக்கு அடிபணியச் செய்த இறைவன் அடிபணியவில்லை என்பது சொல்லாமலே விளங்கும்.
1 கொரிந்தியர் 15 : 28 (RCTA)
அனைத்தும் அவருக்கு அடிபணிந்திருக்கும்போது, கடவுளே அனைத்திலும் அனைத்துமாய் இருக்கும்படி, மகனும் அனைத்தையும் தமக்குப் பணிச்செய்த இறைவனுக்குத் தாமே அடிபணிவார்.
1 கொரிந்தியர் 15 : 29 (RCTA)
மேலும் இறந்தவர்களுக்காகச் சிலர் ஞானஸ்நானம் பெறுகிறார்களே, உயிர்த்தெழுதல் இல்லையென்றால் ஏன் அப்படிச் செய்கிறார்கள்? இறந்தவர்கள் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவானேன்?
1 கொரிந்தியர் 15 : 30 (RCTA)
நாங்கள் கூட எந்நேரமும் ஆபத்துகளுக்கு உள்ளாவதேன் ?
1 கொரிந்தியர் 15 : 31 (RCTA)
ஆம் நாடோறும் நான் மரண வாயிலில் நிற்கிறேன். சகோதரர்களே, நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உங்களைக் குறித்து நான் கொண்டிருக்கிற பெருமையின்மேல் ஆணையாக இதைச் சொல்லுகிறேன்.
1 கொரிந்தியர் 15 : 32 (RCTA)
எபேசு நகரில் கொடிய விலங்குகளோடு நான் போராடினேனே, அதை நான் மனித நோக்கத்திற்காகச் செய்திருந்தால், அதனால் எனக்கு என்ன பயன்? இறந்தோர் உயிர்த்தெழவே மாட்டார்கள் என்றால், ' உண்போம், குடிப்போம்; நாளைக்கு மடிவோம். '
1 கொரிந்தியர் 15 : 33 (RCTA)
ஏமாந்து போக வேண்டாம்; ' தீய நட்பு நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் '
1 கொரிந்தியர் 15 : 34 (RCTA)
மயக்கம் தெளிந்து, நீதியோடு ஒழுகி, பாவத்தை விட்டு விலகுங்கள். உங்களுள் சிலர் கடவுளை அறியாதவர் போல் இருக்கின்றனர்; உங்களுக்கு வெட்கம் உண்டாகவே இதைச் சொல்கிறேன்.
1 கொரிந்தியர் 15 : 35 (RCTA)
ஆயினும், ' இறந்தோர் எப்படி உயிர்த்தெழுவார்கள்? எத்தகைய உடலோடு வருவார்கள் ?' என்று ஒருவன் கேட்கலாம்.
1 கொரிந்தியர் 15 : 36 (RCTA)
அறிவிலியே, நீ விதைப்பது மடிந்தாலொழிய, புத்துயிர் பெறாது;
1 கொரிந்தியர் 15 : 37 (RCTA)
முளைக்கபோகும் உருவத்தில் நீ அதை விதைக்கவில்லை; வெறும் கோதுமை மணியையோ மற்றெந்த விதையையோ நீ விதைக்கிறாய்.
1 கொரிந்தியர் 15 : 38 (RCTA)
கடவுளோ தமது விருப்பம்போல் அதற்கு உருவம் தருகிறார்; ஒவ்வொரு விதைக்கும் அதற்குரிய உருவத்தையே தருகிறார்.
1 கொரிந்தியர் 15 : 39 (RCTA)
எல்லா ஊனும் ஒரே ஊனன்று; மனிதரின் ஊன் வேறு, விலங்குகளின் ஊன் வேறு, மீன்களின் ஊன் வேறு
1 கொரிந்தியர் 15 : 40 (RCTA)
விண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு, மண்ணைச் சார்ந்த உடல்களும் உண்டு. விண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு, மண்ணைச் சார்ந்தவற்றின் சுடர் வேறு.
1 கொரிந்தியர் 15 : 41 (RCTA)
கதிரோனின் சுடர் வேறு, நிலவின் சுடர் வேறு, விண்மீன்களின் சுடர் வேறு. சுடரில் விண்மீனுக்கு விண்மீன் வேறுபடுகிறது.
1 கொரிந்தியர் 15 : 42 (RCTA)
இவ்வாறே, இறந்தோர் உயிர்த்தெழுதலும் இருக்கும். விதைக்கபடுவது அழிவுக்குரியது, உயிர்த்தெழுவதோ அழியாதது.
1 கொரிந்தியர் 15 : 43 (RCTA)
விதைக்கப்படுவது இழிவானது, உயிர்த்தெழுவதோ மாட்சிமைக்குரியது. விதைக்கப்படுவது வலுவற்றது. உயிர்த்தெழுவதோ வலிமையுள்ளது,.
1 கொரிந்தியர் 15 : 44 (RCTA)
விதைக்கப்டுவது மனித உயிர்கொண்ட உடல், உயிர்த்தெழுவது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடல்.
1 கொரிந்தியர் 15 : 45 (RCTA)
மனித உயிர் கொண்ட உடல் உள்ளதுபோல, தேவ ஆவிக்குரிய உயிர்கொண்ட உடலும் உள்ளது. மறைநூலில் உள்ளபடி முதல் மனிதனாகிய ஆதாம் மனித உயிருள்ளவன் ஆனான்.
1 கொரிந்தியர் 15 : 46 (RCTA)
கடைசி ஆதாமோ உயிர் தரும் ஆவியானார். முதலில் உண்டானது தேவ ஆவிக்குரிய உயிர்கொண்டதன்று, மனித உயிர்கொண்டது தான்; தேவ ஆவிக்குரியது பிந்தியதே.
1 கொரிந்தியர் 15 : 47 (RCTA)
முதல் மனிதன் மண்ணிலிருந்து வந்தான். அவன் மண்ணைச் சார்ந்தவன். இரண்டாம் மனிதனோ விண்ணிலிருந்து வந்தார்.
1 கொரிந்தியர் 15 : 48 (RCTA)
மண்ணைச் சார்ந்த அவன் எப்படியோ, அப்படியே மண்ணைச் சார்ந்த யாவரும் உள்ளனர்; விண்ணைச் சார்ந்த இவர் எப்படியோ, அப்படியோ விண்ணைச் சார்ந்த யாவரும் இருப்பர்.
1 கொரிந்தியர் 15 : 49 (RCTA)
ஆகவே, மண்ணைச் சார்ந்தவனின் சாயலைத் தாங்கியிருந்தது போல, விண்ணைச் சார்ந்தவரின் சாயலையும் தாங்கியிருப்போம்.
1 கொரிந்தியர் 15 : 50 (RCTA)
சகோதரர்களே, நான் சொல்வது இதுவே; ஊனும் இரத்தமும் கடவுளின் அரசை உரிமையாகப் பெற முடியாது; அழிவுள்ளது அழியாமையை உரிமையாகப் பெறாது.
1 கொரிந்தியர் 15 : 51 (RCTA)
இதோ உங்களுக்கு மறைபொருளானது ஒன்று சொல்லப்போகிறேன்; நாம் அனைவருமே சாகமாட்டோம்; ஆனால் அனைவருமே வேற்றுரு பெறுவோம்.
1 கொரிந்தியர் 15 : 52 (RCTA)
ஒரு நொடியில், கண்ணிமைப் பொழுதில், கடைசி எக்காளம் முழங்க இது நடைபெறும். ஆம், எக்காளம் முழங்கும்; அப்பொழுது இறந்தோர் அழிவில்லாதவர்களாய் உயிர்த்தெழுவர்; நாமும் வேற்றுரு பெறுவோம்.
1 கொரிந்தியர் 15 : 53 (RCTA)
ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்துகொள்ள வேண்டும்; சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்துகொள்ள வேண்டும்.
1 கொரிந்தியர் 15 : 54 (RCTA)
அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையையும், சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையையும் அணிந்துகொள்ளும் பொழுது, எழுதியுள்ள இவ்வாக்கு நிறைவேறும்:
1 கொரிந்தியர் 15 : 55 (RCTA)
' சாவு வீழ்ந்தது, வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?'
1 கொரிந்தியர் 15 : 56 (RCTA)
பாவமே சாவின் கொடுக்கு; பாவத்திற்கு வலிமை தருவது சட்டம்.
1 கொரிந்தியர் 15 : 57 (RCTA)
ஆனால் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வழியாய் நமக்கு இந்த வெற்றிதரும் கடவுளுக்கு நன்றி.
1 கொரிந்தியர் 15 : 58 (RCTA)
ஆகையால், என் அன்பார்ந்த சகோதரர்களே, உறுதியாய் இருங்கள், நிலை பெயராதீர்கள். உங்கள் உழைப்பு ஆண்டவருக்குள் வீணாவதில்லை என்பதை அறிந்து, ஆண்டவரின் வேலையைச் செய்வதில் சிறந்து விளங்குங்கள்.
❮
❯