1 கொரிந்தியர் 12 : 1 (RCTA)
சகோதரர்களே, ஆவிக்குரிய வரங்களைப் பற்றி நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்.
1 கொரிந்தியர் 12 : 2 (RCTA)
நீங்கள் புறச் சமயத்தினராய் இருந்தபோது உங்களுக்கு உண்டான ஏவுதல் எல்லாம் ஊமைச் சிலைகள்பால் தான் உங்களை ஈர்த்தது. இது உங்களுக்குத் தெரிந்ததே அன்றோ?
1 கொரிந்தியர் 12 : 3 (RCTA)
ஆதலால் உங்களுக்கு நான் அறிவிப்பது: கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் பேசும் போது, ' இயேசுவுக்குச் சாபம்' என்று யாரும் சொல்லுவதில்லை. அப்படியே பரிசுத்த ஆவியின் ஏவுதலாலன்றி ' இயேசு ஆண்டவர் ' என்று யாரும் சொல்லமுடியாது.
1 கொரிந்தியர் 12 : 4 (RCTA)
வரங்கள் பலவகை; ஆவியானவரோ ஒருவர்தான்.
1 கொரிந்தியர் 12 : 5 (RCTA)
திருப்பணிகள் பலவகை; ஆண்டவரோ ஒருவர் தான்.
1 கொரிந்தியர் 12 : 6 (RCTA)
ஆற்றல் மிக்க செயல்கள் பல வகை; கடவுளோ ஒருவர் தான். அவரே அனைத்தையும் அனைவரிலும் செயலாற்றுகிறார்.
1 கொரிந்தியர் 12 : 7 (RCTA)
ஆவியானவரின் செயல் வெளிப்படும் ஆற்றல் அவனவனுக்கு அருளப்படுவது பொது நன்மைக்காகவே.
1 கொரிந்தியர் 12 : 8 (RCTA)
ஒருவனுக்கு ஆவியின் வழியாக ஞானம் நிறைந்த பேச்சு அருளப்படுகிறது. மற்றவனுக்கு அறிவு செறிந்த பேச்சு அளிக்கப்படுவது அதே ஆவியின் ஆற்றலால்தான்.
1 கொரிந்தியர் 12 : 9 (RCTA)
வேறொருவனுக்கு விசுவாசம் அருளப்படுவது அதே ஆவியால்தான். பிறிதொருவனுக்கு நோய்களைக் குணமாக்கும் வரம் கிடைப்பது அவ்வொரே ஆவியால் தான்.
1 கொரிந்தியர் 12 : 10 (RCTA)
ஒருவனுக்குப் புதுமை செய்யும் ஆற்றலும், இன்னொருவனுக்கு இறைவாக்கு வரமும், வேறொருவனுக்கு ஆவிகளைத் தேர்ந்து தெளியும் திறனும் வேறொருவனுக்குப் பல்வகைப் பரவசப் பேச்சும், பிறிதொருவனுக்கு அதை விளக்கும் திறனும் கிடைக்கின்றன.
1 கொரிந்தியர் 12 : 11 (RCTA)
இவற்றையெல்லாம தம் விருப்பம்போல் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்துச் செயலாற்றுகிறவர் அந்த ஒரே ஆவிதான்.
1 கொரிந்தியர் 12 : 12 (RCTA)
உடல் ஒன்று, உறுப்புகள் பல; உடலின் உறுப்புகள் பலவகையாயினும், ஒரே உடலாய் உள்ளன; கிறிஸ்துவும் அவ்வாறே என்க.
1 கொரிந்தியர் 12 : 13 (RCTA)
ஏனெனில், யூதர் அல்லது கிரேக்கர், அடிமைகள் அல்லது உரிமைக்குடிகள் யாராயினும் நாம் அனைவரும் ஒரே ஆவியால் ஒரே உடலுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றோம்; ஒரே ஆவியால் தாகந்தணியப் பெற்றோம்.
1 கொரிந்தியர் 12 : 14 (RCTA)
உடல் ஒரே உறுப்பன்று; பல உறுப்புகளால் ஆனது.
1 கொரிந்தியர் 12 : 15 (RCTA)
நான் கையல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று கால் சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா?
1 கொரிந்தியர் 12 : 16 (RCTA)
'நான் கண்ணல்லேன், ஆகவே உடலைச் சேர்ந்தவன் அல்லேன்' என்று காது சொன்னால், அதனால் உடலைச் சேராதது ஆகிவிடுமா?
1 கொரிந்தியர் 12 : 17 (RCTA)
முழு உடலும் கண்ணாயிருந்தால் கேட்பது எப்படி? முழு உடலும் காதாயிருந்தால் முகர்வது எப்படி?
1 கொரிந்தியர் 12 : 18 (RCTA)
ஆனால், கடவுள் ஒவ்வொரு உறுப்பையும் தாம் விரும்பியவாறு உடலில் அமைத்தார்.
1 கொரிந்தியர் 12 : 19 (RCTA)
அவையெல்லாம் ஒரே உறுப்பாய் இருப்பின், உடல் என்பது ஒன்று இருக்குமா?
1 கொரிந்தியர் 12 : 20 (RCTA)
உண்மையில் உறுப்புகள் பல உள்ளன; உடலோ ஒன்றுதான்.
1 கொரிந்தியர் 12 : 21 (RCTA)
கண் கையைப் பார்த்து, 'நீ எனக்குத் தேவையில்லை" என்றோ, தலை கால்களைப் பார்த்து, "நீங்கள் எனக்குத் தேவையில்லை" என்றோ சொல்ல இயலாது.
1 கொரிந்தியர் 12 : 22 (RCTA)
அதுமட்டுமன்று; வலுவற்றவையாய்த் தோன்றும் உறுப்புகளே மிகத் தேவையானவை;
1 கொரிந்தியர் 12 : 23 (RCTA)
மதிப்புக் குறைவானவை என நாம் கருதும் உடலுறுப்புகளுக்கே மிகுதியான மதிப்பளித்துக் காக்கிறோம்; இழிவான உறுப்புகளே மிகுந்த மரியாதை பெறுகின்றன.
1 கொரிந்தியர் 12 : 24 (RCTA)
மாண்புள்ளவற்றுக்கு அது தேவையில்லை; உடலை உருவாக்கியபோது கடவுள் மதிப்பில்லாதவற்றுக்குச் சிறப்பான மதிப்புத் தந்தார்.
1 கொரிந்தியர் 12 : 25 (RCTA)
உடலில் பிளவு ஏற்படாமல் ஒவ்வொன்றும் மற்ற உறுப்புகள்மேல் அக்கறை காட்டவேண்டும் என்றே இப்படிச் செய்தார்.
1 கொரிந்தியர் 12 : 26 (RCTA)
உறுப்பு ஒன்று துன்புற்றால், எல்லா உறுப்புகளும் அதனுடன் சேர்ந்து துன்புறும்; உறுப்பு ஒன்று மாண்புற்றால், எல்லா உறுப்புகளும் சேர்ந்து இன்புறும்.
1 கொரிந்தியர் 12 : 27 (RCTA)
நீங்களோ கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொருவரும் ஓர் உறுப்பு.
1 கொரிந்தியர் 12 : 28 (RCTA)
அவ்வாறே, திருச்சபையிலும் கடவுள், முதலாவது அப்போஸ்தலரையும், இரண்டாவது இறைவாக்கினரையும், மூன்றாவது போதகரையும் எற்படுத்தினார்; பின்னர் புதுமை செய்யும் ஆற்றல், பின்பு நோய்களைக் குணமாக்கும் வரம், பிறர் சேவை, ஆளும் வரம், பல்வகைப் பரவசப் பேச்சு இவையுள்ளன.
1 கொரிந்தியர் 12 : 29 (RCTA)
அனைவருமா அப்போஸ்தலர்? எல்லாருமா இறைவாக்கினர்?
1 கொரிந்தியர் 12 : 30 (RCTA)
யாவரும் போதகரோ? எல்லாரும் நோய்களைக் குணமாக்கும் வரமுடையவரோ? எல்லாருமா பரவசப் பேச்சு பேசுகிறார்கள்? எல்லாருமா விளக்கம் சொல்லுகிறார்கள்?
1 கொரிந்தியர் 12 : 31 (RCTA)
ஆனால், நீங்கள் ஆர்வமாய்த் தேடவேண்டியது மேலான வரங்களையே. அனைத்திலும் சிறந்த நெறியை நான் உங்களுக்குக் காட்டப் போகிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31