1 நாளாகமம் 5 : 1 (RCTA)
இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்களாவார்: இவரே இஸ்ராயேலின் தலைமகன். ஆயினும் இவர் தம் தந்தையின் மஞ்சத்தைத் தீட்டுப்படுத்தியதால், தமது பிறப்புரிமையை இழந்தார்; இதனால் தலைமுறை அட்டவணையிலும் அவர் தலைமகனாக எண்ணப்படவில்லை. மாறாக அவ்வுரிமை இஸ்ராயேலின் மகன் யோசேப்பின் புதல்வர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
1 நாளாகமம் 5 : 2 (RCTA)
யூதா தம் சகோதரர்களுக்குள் ஆற்றல் படைத்தவராய் இருந்தார்; அரசர் அவரது குலத்திலேயே உதித்தார். இருந்த போதிலும் பிறப்புரிமை யோசேப்புக்கே கொடுக்கப்பட்டது.
1 நாளாகமம் 5 : 3 (RCTA)
ஏனோக், பெல்லு, எசுரோன், கார்மி என்பவர்களே இஸ்ராயேலின் தலைமகனான ரூபனின் புதல்வர்கள்.
1 நாளாகமம் 5 : 4 (RCTA)
யோவேலின் புதல்வரில் ஒருவர் சமையா; இவருடைய மகன் பெயர் கோக்; கோக்கின் மகன் பெயர் செமெயி.
1 நாளாகமம் 5 : 5 (RCTA)
இவர் மிக்காவின் தந்தை; மிக்காவின் மகன் பெயர் ரெய்யா; செய்யா பால் என்ற மகனைப் பெற்றார்.
1 நாளாகமம் 5 : 6 (RCTA)
பாலின் மகன் பேரா என்று அழைக்கப்பட்டார். ரூபன் கோத்திரத்தின் தலைவராய் இருந்த பேராவை அசீரிய அரசன் தெல்காத்-பல்னசார் சிறைபிடித்துக் கொண்டு போனான்.
1 நாளாகமம் 5 : 7 (RCTA)
இவருடைய சகோரரும் இனத்தார் எல்லாரும் தத்தம் குடும்ப வரிசைப்படி கணக்கிடப்பட்டனர். அவர்களுக்கு எகியேல், சக்கரியாஸ் என்பவர்கள் தலைவர்களாய் இருந்தனர்.
1 நாளாகமம் 5 : 8 (RCTA)
யோவேலின் மகனான சம்மாவின் புதல்வன் ஆசாசுக்குப் பிறந்த பாலாவின் மக்கள் அரோவேர் முதல் நெபோ, பெல்மேயோன் என்ற நகர்கள் வரை வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 5 : 9 (RCTA)
மேலும் கிழக்கே யூப்ரட்டீஸ் நதி முதல் பாலைவனத்தின் எல்லை வரையிலும் வாழ்ந்து வந்தனர். ஏனெனில் கலாத் நாட்டிலே அவர்களுக்குக் கால்நடைகள் பல இருந்தன.
1 நாளாகமம் 5 : 10 (RCTA)
அவர்கள் சவுலின் ஆட்சிக் காலத்தில் ஆகாரியரோடு போரிட்டு அவர்களைக் கொன்று போட்டு, கலாத் நாட்டின் கிழக்குப் பகுதிகள் எங்கணும் அவர்கள் வாழ்ந்து வந்திருந்த கூடாரங்களில் குடியேறினார்கள்.
1 நாளாகமம் 5 : 11 (RCTA)
காத்தின் புதல்வரோ அவர்களுக்கு எதிரே பாசான் நாட்டில் செல்கா வரை வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 5 : 12 (RCTA)
அவர்களுக்கு யோவேல் தலைவராகவும், சாப்பான் துணைத் தலைவராகவும் பாசானில் விளங்கி வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் யானாயும் சாப்பாத்தும் இருந்தனர்.
1 நாளாகமம் 5 : 13 (RCTA)
அவர்களது குடும்ப வரிசைப்படி அவர்களுடைய சகோதரர் மிக்காயேல், மொசொல்லாம், சேபேயோராய், யாக்கான், சியே, எபேர் என்ற ஏழுபேர்.
1 நாளாகமம் 5 : 14 (RCTA)
இவர்கள் அபிகாயிலுடைய புதல்வர்கள். அபிகாயில் ஊரிக்குப் பிறந்தவர்; ஊரி யாராவுக்குப் பிறந்தவர்; யாரா கலாதுக்குப் பிறந்தவர்; இவர் மிக்காயேலுடைய மகன்; மிக்காயேல் எசேசியின் மகன்; இவர் ஏதோவின் மகன்; இவர் பூசுடைய மகன்.
1 நாளாகமம் 5 : 15 (RCTA)
மேலும் கூனியின் புதல்வரான அப்தியேலின் புதல்வர்கள் அவர்களுக்குச் சகோதரர்கள்; அப்தியேலின் புதல்வரோ தத்தம் குடும்பத்திற்குத் தலைவராய் இருந்தனர்.
1 நாளாகமம் 5 : 16 (RCTA)
அவர்கள் கலாதைச் சேர்ந்த பாசானிலும் பாசானுக்கு அடுத்த ஊர்களிலும், சாரோனைச் சேர்ந்த எல்லாப் புல்வெளிகளிலும் தங்கள் எல்லைகள் வரை வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 5 : 17 (RCTA)
யூதாவின் அரசர் யோவாத்தானின் ஆட்சிக்காலத்திலும், இஸ்ராயேல் அரசர் எரோபோவாமின் ஆட்சிக் காலத்திலும் இவர்கள் எல்லாரும் கணக்கிடப்பட்டனர்.
1 நாளாகமம் 5 : 18 (RCTA)
ரூபன் புதல்வரிலும் காத் சந்ததியாரிலும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிலும் வீரர்களின் தொகை நாற்பத்து நாலாயிரத்து எழுநூற்று இருபது. இவர்கள் கேடயமும் வாளும் அணிந்து வில் ஏந்திப் போரிடப் பழகிப் படைக்குப் போகத் தக்கவர்களாய் இருந்தனர்.
1 நாளாகமம் 5 : 19 (RCTA)
அவர்கள் ஆகாரியரோடு போரிட்டனர். ஆனால் இத்துரேயரும் நாபீஸ், நொதாப் என்பவர்களும்,
1 நாளாகமம் 5 : 20 (RCTA)
ஆகாரியருக்குத் துணையாக வந்தனர். ஆயினும் ஆகாரியரும் அவர்களோடு இருந்த யாவரும் முன்சொல்லப்பட்ட இஸ்ராயேலர் கையில் ஒப்படைக்கப்பட்டனர். ஏனெனில் இஸ்ராயேலர் போர் செய்யும்போது கடவுளை மன்றாடினார்கள். அவரிடத்தில் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்ததால் கடவுள் அவர்களின் மன்றாட்டைக் கேட்டருளினார்.
1 நாளாகமம் 5 : 21 (RCTA)
அவர்கள் தங்கள் பகைவருக்குச் சொந்தமான ஐம்பதினாயிரம் ஒட்டகங்களையும், இரண்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ஆடுகளையும், இரண்டாயிரம் கழுதைகளையும், ஒரு லட்சத்து மனிதர்களையும் கைப்பற்றினர்.
1 நாளாகமம் 5 : 22 (RCTA)
பலர் காயம்பட்டு விழுந்து மடிந்தனர். ஏனெனில் ஆண்டவரே போரை நடத்திக் கொண்டிருந்தார். இஸ்ராயேலர் நாடு கடத்தப்படும் வரை அவர்கள் அங்கேயே வாழ்ந்து வந்தனர்.
1 நாளாகமம் 5 : 23 (RCTA)
மனாசேயின் பாதிக் கோத்திரத்து மக்களும் மிகப்பலராய் இருந்தமையால், பாசான் எல்லை முதல் பாகால் எர்மோன் வரை உள்ள நாட்டையும் சனிரையும் எர்மோன் மலையையும் தமது உரிமையாக்கிக் கொண்டனர்.
1 நாளாகமம் 5 : 24 (RCTA)
அவர்களுடைய குடும்பத்தலைவர்கள்: எப்பேர், ஏசி, ஏலியேல், எஸ்ரியேல், எரேமியா, ஒதொய்யா, எதியேல், ஆகியோரே. இவர்கள் ஆற்றல் மிக்கவராகவும் ஆண்மையுடையவராகவும் விளங்கினார்கள்.
1 நாளாகமம் 5 : 25 (RCTA)
ஆயினும் அவர்கள் தங்கள் முன்னோர் வழிபட்டு வந்த கடவுளை விட்டு அகன்று, அவர் தங்கள் முன்னிலையிலேயே அழித்துப்போட்டிருந்த புறவினத்தாரின் தெய்வங்களை வழிபட்டு முறைகெட்டுப் போயினர்.
1 நாளாகமம் 5 : 26 (RCTA)
எனவே இஸ்ராயேலின் கடவுள் அசீரியருடைய அரசன் பூலையும், தெல்காத்பல்னசாரையும் தூண்டி விட்டார். அவர்களோ ரூபனையும் காத்தையும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தையும் நாடு கடத்தி, லகேலாவுக்கும் அபோருக்கும் ஆராவுக்கும் கோசான் நதிக்கும் கொண்டு போனார்கள். அங்கே அவர்கள் இன்றுவரை வாழ்ந்து வருகின்றார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26