1 நாளாகமம் 20 : 1 (RCTA)
ஓராண்டு உருண்டோடியது. அரசர்கள் போருக்குப் புறப்பட வழக்கமான காலத்தில் யோவாப் தன் படை பலத்தோடு, அம்மோனியரின் நாட்டை அழித்துப் போட்டான். பின் இராப்பாவுக்குச் சென்று அதை முற்றுகையிட்டான். யோவாப் இராப்பாவைத் தாக்கி அழித்த போது தாவீது யெருசலேமில் இருந்தார்.
1 நாளாகமம் 20 : 2 (RCTA)
தாவீது மெல்கோம் அணிந்திருந்த முடியை எடுத்துக் கொண்டார். அதில் ஒரு தாலந்து எடையுள்ள பொன் இருந்தது. விலையுயர்ந்த மணிகள் அதில் பதிக்கப்பட்டிருந்தன. தாவீது அதை அறிந்து, அதைக் கொண்டு தமக்கொரு முடியைச் செய்துகொண்டார். மேலும் நகரினின்றும் ஏராளமான கொள்ளைப் பொருட்களையும் கொண்டு சென்றார்.
1 நாளாகமம் 20 : 3 (RCTA)
பிறகு அங்குக் குடியிருந்த மக்களைச் சிறைப்படுத்தி, வாள், கடப்பாரை, கோடரி முதலியவற்றால் அவர்கள் வேலைசெய்ய வைத்தார். தாவீது அம்மோனியரின் எல்லா நகர்களுக்கும் இவ்விதமே செய்து தம் மக்களனைவருடனும் யெருசலேமுக்குத் திரும்பி வந்தார்.
1 நாளாகமம் 20 : 4 (RCTA)
பிறகு காசேரில் பிலிஸ்தியரோடு போர் நிகழ்ந்தது. அதில் குசாத்தி குலத்தவனான சபாக்காயி என்பவன் அரக்க இனத்தைச் சேர்ந்த சாப்பாயியைக் கொன்று போட்டான். அதனால் அவர்களுக்கு அவமானம் ஏற்பட்டது.
1 நாளாகமம் 20 : 5 (RCTA)
பிலிஸ்தியரோடு வேறொரு போரும் மூண்டது. அதில் யாயீரின் மகனான எல்கனான் கேத் நாட்டைச் சேர்ந்த கோலியாத்தின் சகோதரன் லாமியைக் கொன்றான். இவனது ஈட்டியின் பிடியானது நெசவாளரின் படைமரம் போலிருந்தது.
1 நாளாகமம் 20 : 6 (RCTA)
மேலும் கேத் என்ற ஊரிலே மற்றோரு போர் நடந்தது. அவ்வூரில் மிகவும் உயர்ந்த மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வோரு கையிலும் காலிலும் ஆறு ஆறு விரல்களாக இருபத்து நான்கு விரல்கள் இருந்தன. அவனும் ராப்பாவின் இனத்தைச் சேர்ந்தவனே.
1 நாளாகமம் 20 : 7 (RCTA)
அவன் இஸ்ராயேலைப் பழித்துரைத்தான். எனவே அவனைத் தாவீதின் சகோதரனான சாமாவின் மகன், யோனத்தான் கொன்று போட்டான்.
1 நாளாகமம் 20 : 8 (RCTA)
கேத்தில் இருந்த ராப்பாவின் புதல்வர்கள் தாவீதின் கையாலும், அவர் ஊழியர்களின் கையாலும் மடிந்தனர்.

1 2 3 4 5 6 7 8

BG:

Opacity:

Color:


Size:


Font: