செப்பனியா 1 : 1 (OCVTA)
யூதாவின் அரசனான ஆமோனின் மகன் யோசியாவின் ஆட்சிக்காலத்தில், யெகோவாவின் வார்த்தை செப்பனியாவுக்கு வந்தது. செப்பனியா கூசியின் மகன், கூசி கெதலியாவின் மகன், கெதலியா அமரியாவின் மகன், அமரியா எசேக்கியாவின் மகன்.
செப்பனியா 1 : 2 (OCVTA)
வரப்போகும் அழிவைப்பற்றிய எச்சரிக்கை “பூமியின் மேற்பரப்பில் காணப்படும் அனைத்தையும், நான் வாரிக்கொண்டு போவேன்” என யெகோவா அறிவிக்கிறார்.
செப்பனியா 1 : 3 (OCVTA)
“நான் மனிதர்களையும், மிருகங்களையும் வாரிக்கொண்டு போவேன்; நான் ஆகாயத்துப் பறவைகளையும், கடலின் மீன்களையும் வாரிக்கொண்டு போவேன்.” “நான் பூமியின் மேற்பரப்பிலிருந்து மனிதர்களை அகற்றும்போது, கொடியவர்களையும் அவர்களுடைய தெய்வங்களையும் அழிப்பேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
செப்பனியா 1 : 4 (OCVTA)
நான் யூதாவுக்கு எதிராகவும், எருசலேமில் வாழும் அனைவருக்கு எதிராகவும் என் கையை நீட்டுவேன்; நான் இந்த இடத்திலிருந்து பாகால் வணக்கத்தின் மீதியான எல்லாவற்றையும் அகற்றுவேன். விக்கிரக வணக்கத்தில் ஈடுபடுகிறவர்களையும் அவர்களுடைய பூசாரிகளையும் அவர்களுடைய பெயர்களே இல்லாமல் போகும்படி அழிப்பேன்.
செப்பனியா 1 : 5 (OCVTA)
நட்சத்திரக் கூட்டங்களை வணங்குவதற்காக, வீட்டின் மேல்மாடங்களில் விழுந்து வணங்குகிறவர்களையும் அகற்றுவேன். யெகோவாவை விழுந்து வழிபட்டும், அவர் பேரில் ஆணையிடுவதோடு, மோளேக்கு தெய்வத்தின் பெயரிலும் ஆணையிடுகிறவர்களை அகற்றுவேன்.
செப்பனியா 1 : 6 (OCVTA)
யெகோவாவைப் பின்பற்றுவதிலிருந்து பின்வாங்கியவர்களையும், யெகோவாவின் ஆசீர்வாதத்தைத் தேடாமலும், அவரிடமிருந்து ஆலோசனைக் கேட்டு அறியாமல் இருப்பவர்களையும் அகற்றுவேன்.
செப்பனியா 1 : 7 (OCVTA)
ஆண்டவராகிய யெகோவாவுக்கு முன்பாக மவுனமாயிருங்கள். ஏனெனில் யெகோவாவின் நாள் சமீபமாயுள்ளது. யெகோவா ஒரு பலியை ஆயத்தம் செய்திருக்கிறார். அவர் தாம் அழைத்திருக்கிறவர்களைப் பரிசுத்தப்படுத்தியிருக்கிறார்.
செப்பனியா 1 : 8 (OCVTA)
யெகோவாவினுடைய பலியின் நாளில், நான் பிரபுக்களையும், இளவரசர்களையும், பிற நாட்டவரின் பழக்கவழக்கங்களைப் பின்பற்றுகிறவர்களையும் தண்டிப்பேன்.
செப்பனியா 1 : 9 (OCVTA)
அந்நாளில் போலியான தெய்வங்களை வணங்கி, அதன் வழிபாட்டில் பங்குகொள்கிறவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் தங்கள் தெய்வங்களின் கோயில்களை வன்முறையாலும் வஞ்சனையினாலும் நிரப்புகிறார்கள்.
செப்பனியா 1 : 10 (OCVTA)
யெகோவா அறிவிக்கிறதாவது: அந்த நாளில் எருசலேம் மதிலிலுள்ள மீன் வாசலில் இருந்து அழுகை கேட்கும். அந்த நகரத்தின் புதிய பகுதியிலிருந்து புலம்பலும், குன்றுகளிலிருந்து அது இடிந்துவிழும் சத்தமும் உண்டாகும்.
செப்பனியா 1 : 11 (OCVTA)
எருசலேமின் சந்தைப் பகுதியில் வாழும் மக்களே; அழுது புலம்புங்கள், உங்கள் வர்த்தகர் எல்லோரும் அழிந்துபோவார்கள். வெள்ளி வியாபாரிகள் யாவரும் பாழாய்ப் போவார்கள்.
செப்பனியா 1 : 12 (OCVTA)
அந்த வேளையில் நான் எருசலேமில் விளக்குகளைக்கொண்டு தேடுவேன். யெகோவா நன்மையோ தீமையோ ஒன்றும் செய்யவில்லை என்று சொல்லி, ஏனோ தானோ என்று இருப்பவர்களைத் தண்டிப்பேன். அவர்கள் திராட்சை மதுவின் மண்டியைப்போல் இருக்கிறார்கள்.
செப்பனியா 1 : 13 (OCVTA)
அவர்களுடைய செல்வம் சூறையாடப்படும், வீடுகள் உடைத்து அழிக்கப்படும். அவர்கள் வீடுகளைக் கட்டுவார்கள், அதில் அவர்கள் குடியிருக்கமாட்டார்கள், திராட்சைத் தோட்டத்தை நாட்டுவார்கள். அதன் திராட்சரசத்தைக் குடிக்கமாட்டார்கள்.
செப்பனியா 1 : 14 (OCVTA)
யெகோவாவின் பெரிய நாள் சமீபித்துள்ளது; அது மிக சமீபமாய் இருந்து விரைவாய் வருகிறது. கேளுங்கள்! யெகோவாவின் நாளில் ஏற்படும் அழுகை மிகவும் கசப்பாயிருக்கும். இராணுவவீரருங்கூட கூக்குரலிடுவார்கள்.
செப்பனியா 1 : 15 (OCVTA)
அந்த நாள் கடுங்கோபத்தின் நாள், துன்பமும் வேதனையும் நிறைந்த நாள், தொல்லையும் அழிவுமான நாள், அது இருளும் அந்தகாரமுமான நாள். மப்பும் மந்தாரமுமான நாள்.
செப்பனியா 1 : 16 (OCVTA)
அரணான நகரங்களுக்கு எதிராகவும், மூலைக் கோபுரங்களுக்கு எதிராகவும் எக்காள சத்தமும் போர் முரசும் எழுப்பப்படும் நாள்.
செப்பனியா 1 : 17 (OCVTA)
மக்கள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்ததால், நான் அவர்கள்மேல் துன்பத்தை வரப்பண்ணுவேன்; அவர்கள் குருடரைப்போல் தட்டித் தடவி நடப்பார்கள். அவர்களுடைய இரத்தம் புழுதியில் ஊற்றப்படும். அவர்களுடைய குடல்கள் சாணத்தைப்போல் நிலத்தில் கொட்டப்படும்.
செப்பனியா 1 : 18 (OCVTA)
யெகோவாவினுடைய கடுங்கோபத்தின் நாளிலே, அவர்களுடைய வெள்ளியோ தங்கமோ அவர்களைக் காப்பாற்றமாட்டாது. அவருடைய வைராக்கியத்தின் நெருப்பினால், முழு உலகமும் சுட்டெரிக்கப்படும். ஏனெனில் அவர் பூமியில் வாழும் யாவருக்கும் திடீரென ஒரு முடிவைக் கொண்டுவருவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18