தீத்து 3 : 1 (OCVTA)
நன்மைசெய்ய ஆலோசனைகள் ஆளுகை செய்கிறவர்களுக்கும், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் பணிந்திருக்கும்படி மக்களுக்கு ஞாபகப்படுத்து. அவர்களுக்கு கீழ்ப்படியவும், எல்லா நல்ல செயல்களையும் செய்ய ஆயத்தமாயும்,
தீத்து 3 : 2 (OCVTA)
ஒருவரையும் அவதூறாய் பேசாதவர்களாயும், எல்லோருடனும் சமாதானமாய் வாழ்கிறவர்களாயும், கரிசனை உடையவர்களாயும், எல்லா மனிதருக்கு முன்பாகவும் எப்பொழுதும் தாழ்மையுள்ளவர்களாயும் இருக்கவேண்டுமென்று ஞாபகப்படுத்து.
தீத்து 3 : 3 (OCVTA)
ஒருகாலத்தில் நாமும்கூட மூடர்களாயும் கீழ்ப்படியாதவர்களாயும் இருந்தோம். இதனால் ஏமாந்து, பலவித தீய ஆசைகளுக்கும் சிற்றின்பங்களுக்கும் அடிமைப்பட்டிருந்தோம். தீங்குசெய்யும் எண்ணமுடையவர்களாயும், பொறாமையுடையவர்களாயும், ஒருவரிலொருவர் வெறுக்கப்படுகிறவர்களாயும், ஒருவரையொருவர் வெறுக்கிறவர்களாயும் வாழ்ந்தோம்.
தீத்து 3 : 4 (OCVTA)
ஆனாலும் நமது இரட்சகராகிய இறைவனுடைய தயவும் அன்பும் வெளிப்பட்டபோது,
தீத்து 3 : 5 (OCVTA)
அவர் நம்மை இரட்சித்தது, நாம் செய்த நீதியான செயல்களின் காரணமாக அல்ல, அவருடைய இரக்கத்தின் காரணமாகவே அவர் இரட்சித்தார். மறுபிறப்பின் கழுவப்படுதலின் மூலமாகவும் பரிசுத்த ஆவியானவரின் புதுவாழ்வின் மூலமாகவுமே அவர் நம்மை இரட்சித்தார்.
தீத்து 3 : 6 (OCVTA)
இறைவன் அந்தப் பரிசுத்த ஆவியானவரை நம்முடைய இரட்சகராகிய இயேசுகிறிஸ்துவின் மூலமாய் நம்மேல் அளவில்லாமல் ஊற்றினார்.
தீத்து 3 : 7 (OCVTA)
இதனால் நாம் அவருடைய கிருபையின் மூலமாய் நீதிமான்களாக்கப்பட்டு, அவருடைய வாரிசுகளாகிறோம். நித்திய வாழ்வைப் பெறும் எதிர்பார்ப்பையும் அடைவோம்.
தீத்து 3 : 8 (OCVTA)
இது நம்பத்தகுந்த வாக்கு. ஆகவே, நீ இவற்றை வலியுறுத்திச் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பொழுதே இறைவனை சார்ந்திருக்கிறவர்கள், நன்மை செய்வதற்குத் தங்களை அர்ப்பணித்துக்கொள்ளும்படி கவனமுடையவர்களாய் இருப்பார்கள். இந்தக் காரியங்கள் ஒவ்வொருவருக்கும் நலமானதாயும் பயனுள்ளதாயும் இருக்கின்றன.
தீத்து 3 : 9 (OCVTA)
ஆனால், மோசேயின் சட்டத்தைப்பற்றிய மூடத்தனமான கருத்து வேறுபாடுகளையும், வம்ச வரலாறுகளையும், வாக்குவாதங்களையும், தர்க்கங்களையும் தவிர்த்துக்கொள்; ஏனெனில் இவை பயனற்றதும், வீணானதுமே.
தீத்து 3 : 10 (OCVTA)
பிரிவினையை உண்டு பண்ணுகிறவர்களை ஒருமுறை எச்சரிக்கை செய். பின்பு இரண்டாவது முறையும் எச்சரிக்கை செய். அதற்குப் பின்பு, அவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம்.
தீத்து 3 : 11 (OCVTA)
அப்படிப்பட்டர்கள் சீர்கெட்டவர்களும், பாவத்தில் வாழ்கிறவர்களும், தன்னைத்தானே தண்டனைக்குள் ஆக்குகிறவர்களுமாய் இருக்கிறார்கள் என்று நீ நிச்சயமாக அறிந்துகொள்.
தீத்து 3 : 12 (OCVTA)
கடைசி வாழ்த்து அர்த்தொமாவையோ அல்லது தீகிக்குவையோ நான் உன்னிடம் அனுப்பியவுடனே, நீ புறப்பட்டு நிக்கொப்போலிக்கு என்னிடம் வர உன்னால் இயன்ற முயற்சியைச் செய். ஏனெனில் குளிர்க்காலத்தை அங்கே கழிக்கவே நான் தீர்மானித்திருக்கிறேன்.
தீத்து 3 : 13 (OCVTA)
சட்ட அறிஞரான சேனாவுக்கும், அப்பொல்லோவுக்கும் அவர்களுடைய தேவைகளை ஒரு குறைவுமில்லாமல் பார்த்து அவர்களை அனுப்பிவை.
தீத்து 3 : 14 (OCVTA)
நமது மக்களும், அன்றாட அவசிய தேவைகளை பிறருக்குக் கொடுத்து உதவத்தக்கதாக நற்செயல்களைச் செய்யக் கற்றுக்கொள்ளவார்களாக. அவர்கள் ஒரு பயனற்ற வாழ்க்கையை வாழக்கூடாது.
தீத்து 3 : 15 (OCVTA)
என்னுடன் இருக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு வாழ்த்துதல்களை அனுப்புகிறார்கள். விசுவாசத்திற்குள்ளாக நம்மில் அன்பாய் இருக்கிறவர்களுக்கும் வாழ்த்துதலைச் சொல். கிருபை உங்கள் எல்லோருடனும் இருப்பதாக.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15