தீத்து 2 : 1 (OCVTA)
போதிக்கப்பட வேண்டியவை ஆனாலும் நீயோ, ஆரோக்கியமான போதனைகளுக்கு ஏற்றவைகளையே போதிக்கவேண்டும்.
தீத்து 2 : 2 (OCVTA)
வயதில் முதிர்ந்த ஆண்கள் தன்னடக்கம் உள்ளவர்களும், மதிப்புக்குரியவர்களும், சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களுமாய், ஆழ்ந்த விசுவாசத்திலும், அன்பிலும் நிலைத்திருந்து, சகிப்புத்தன்மை உடையவர்களாய் இருக்கவேண்டும் என்று, அவர்களுக்குக் கற்றுக்கொடு.
தீத்து 2 : 3 (OCVTA)
அவ்வாறே முதியவர்களான பெண்களும், தாங்கள் வாழும் முறையில் பயபக்தியுடையவர்களாய் இருக்கும்படி, அவர்களுக்குக் கற்றுக்கொடு. அவர்கள் அவதூறு பேசுகிறவர்களாகவோ, மதுபானத்திற்கு அடிமைப்பட்டவர்களாகவோ இருக்கக்கூடாது. அவர்கள் நலமானதை போதிக்கிறவர்களாய் இருக்கவேண்டும்.
தீத்து 2 : 4 (OCVTA)
அப்பொழுதே அவர்கள் இளம்பெண்களை தங்களுடைய கணவர்களிலும் பிள்ளைகளிலும் அன்பு செலுத்தப் பயிற்றுவிக்கலாம்;
தீத்து 2 : 5 (OCVTA)
அவர்களை சுயக்கட்டுப்பாடுள்ளவர்களாகவும், தூய்மையுள்ளவர்களாகவும், வீட்டுவேலையில் சுறுசுறுப்புள்ளவர்களாகவும், தயவுள்ளவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களாகவும் இருக்க பயிற்றுவிக்கலாம். இப்படி நடந்தால், அவர்கள் இறைவனுடைய வார்த்தைக்கு அவமதிப்பைக் கொண்டுவரமாட்டார்கள்.
தீத்து 2 : 6 (OCVTA)
அப்படியே இளைஞர்களையும் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாக இருக்க உற்சாகப்படுத்து.
தீத்து 2 : 7 (OCVTA)
நீ அவர்களுக்கு நல்ல செயல்களைச் செய்வதன்மூலம் எல்லாக் காரியங்களிலும் உன்னையே முன்மாதிரியாக ஏற்படுத்திக்கொள். நீ போதிக்கும்போது, கண்ணியத்துடனும், பொறுப்புணர்ச்சியுடனும் போதிக்கவேண்டும்.
தீத்து 2 : 8 (OCVTA)
மற்றவர்கள் குற்றம்காண இயலாதபடி, நலமான பேச்சுக்களையே பேசவேண்டும். அப்பொழுது உன்னை எதிர்க்கிறவர்கள் வெட்கமடைவார்கள். ஏனெனில் நம்மைப்பற்றி தீமையாய்ப் பேசுவதற்கு அவர்களுக்கு எதுவும் இருக்காது.
தீத்து 2 : 9 (OCVTA)
அடிமைகள் தங்கள் எஜமான்களுக்கு எல்லாக் காரியங்களிலும் அடங்கியிருக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடு. எஜமான்களைத் திருப்திப்படுத்தும் வகையிலேயே இவர்கள் நடந்துகொள்ள வேண்டும். அடிமைகள் எஜமான்களுடன் எதிர்த்துப் பேசவோ,
தீத்து 2 : 10 (OCVTA)
அவர்களிடமிருந்து எதையும் களவாடவோ கூடாது. அவர்களுடைய முழுமையான நம்பிக்கைக்குத் தாங்கள் தகுந்தவர்கள் என்று காட்டத்தக்கதாக அடிமைகள் நடந்துகொள்ள வேண்டும். அப்பொழுது அவர்கள் நம்முடைய இரட்சகராகிய இறைவனைப்பற்றிய போதனை சிறப்பானது என்று எல்லாவிதத்திலும் காண்பிப்பார்கள்.
தீத்து 2 : 11 (OCVTA)
ஏனெனில், இரட்சிப்பைக் கொண்டுவரும் இறைவனுடைய கிருபை எல்லா மனிதருக்கும் வெளிப்பட்டிருக்கிறது.
தீத்து 2 : 12 (OCVTA)
அந்த கிருபை இறைவனை மறுதலிக்கிற வாழ்வையும், உலகத்துக்குரிய ஆசைகளையும் “வேண்டாம்” என்று சொல்லும்படி, நமக்கு போதிக்கிறது. தற்போதுள்ள இந்தக் காலத்தில் நாம் சுயக்கட்டுப்பாடும், நீதியும் உள்ளவர்களாய், இறை பக்தியுள்ள வாழ்வை வாழும்படி, அது நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது.
தீத்து 2 : 13 (OCVTA)
நம்முடைய மகத்துவமான இறைவனும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்து, மகிமையுடன் வெளிப்படும் ஆசீர்வாதமுள்ள எதிர்பார்ப்புக்கு நாம் காத்திருக்கும்படி வாழ அந்த கிருபை கற்றுத்தருகிறது.
தீத்து 2 : 14 (OCVTA)
எல்லாவித தீமைகளிலிருந்தும் நம்மை மீட்டு, நற்செயல்களைச் செய்ய ஆர்வமுள்ள தம்முடைய மக்களாகும்படி, நம்மைத் தமக்கென்று தூய்மைப்படுத்தி, தமக்குச் சொந்தமானவர்களாய் ஆக்கும்படியுமே, கிறிஸ்து தம்மையே நமக்காகக் கொடுத்தார்.
தீத்து 2 : 15 (OCVTA)
இவையே நீ போதிக்கவேண்டிய காரியங்கள்; எல்லா அதிகாரத்துடனும் கண்டித்து, உற்சாகப்படுத்து. யாரும் உன்னை அவமதிக்க இடங்கொடாதே.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15