ரூத் 3 : 1 (OCVTA)
சூடடிக்கும் களத்தில் ரூத்தும், போவாஸும் ஒரு நாள் ரூத்தின் மாமியாராகிய நகோமி அவளிடம், “என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு ஒரு வாழ்க்கையைத் தேட வேண்டுமல்லவா?
ரூத் 3 : 2 (OCVTA)
போவாஸின் பணிப்பெண்களுடன் நீ இருந்தாயே. அந்த போவாஸ் எங்கள் நெருங்கிய உறவினன் அல்லவா? இன்றிரவு அவன் களத்தில் வாற்கோதுமை தூற்றிக்கொண்டிருப்பான்.
ரூத் 3 : 3 (OCVTA)
எனவே நீ குளித்து வாசனைத் தைலம் பூசி, உன்னிடத்திலுள்ள சிறந்த உடையை உடுத்திக்கொள். பின் நீ அந்த களத்திற்குப்போ. ஆனால் அவன் சாப்பிட்டுக் குடித்து முடிக்கும்வரை நீ அங்கிருப்பது அவனுக்குத் தெரியாதிருக்கட்டும்.
ரூத் 3 : 4 (OCVTA)
அவன் படுத்திருக்கிறபோது அவன் படுக்கும் இடத்தைக் கவனித்துக்கொள். அவன் படுத்தபின் நீ போய் போர்வையை விலக்கி அவன் கால்மாட்டில் படுத்துக்கொள்; பின்பு நீ என்ன செய்யவேண்டும் என்று அவனே உனக்குச் சொல்வான்” என்றாள்.
ரூத் 3 : 5 (OCVTA)
அதற்கு ரூத், “நீங்கள் எனக்குச் சொல்கிறபடி எல்லாம் நான் செய்வேன்” என்று சொன்னாள்.
ரூத் 3 : 6 (OCVTA)
அவ்வாறே அவள் சூடடிக்கும் களத்திற்குப் போய் தன் மாமியார் செய்யும்படி சொன்ன எல்லாவற்றையும் செய்தாள்.
ரூத் 3 : 7 (OCVTA)
போவாஸ் சாப்பிட்டு, குடித்து மிக மகிழ்ச்சியாயிருந்தான். அவன், தானியம் குவிந்திருந்த இடத்தின் ஒரு மூலையில் போய்ப்படுத்தான். அப்பொழுது ரூத் மெதுவாக அவனருகே போய் போர்வையை விலக்கி கால்மாட்டில் படுத்துக்கொண்டாள்.
ரூத் 3 : 8 (OCVTA)
நள்ளிரவில் ஏதோ ஒன்று அவனைத் திடுக்குறச் செய்தது. அவன் திரும்பிப் பார்த்தபோது, ஒரு பெண் தன் கால்மாட்டில் படுத்திருப்பதைக் கண்டான்.
ரூத் 3 : 9 (OCVTA)
உடனே அவன், “நீ யார்?” எனக் கேட்டான். “நான் உங்கள் அடியாளாகிய ரூத்; நீங்களே என்னை மீட்கும் உரிமையுடைய உறவினன்; ஆகையால் உங்கள் போர்வையின் தொங்கலை என்மேல் விரியுங்கள்”* விரியுங்கள் என்பதன் பொருள் என்னை மணந்துகொள்ளுங்கள் என்று அர்த்தம். என்றாள்.
ரூத் 3 : 10 (OCVTA)
அதற்கு அவன், “என் மகளே! உன்னை யெகோவா ஆசீர்வதிப்பாராக. நீ முன்பு காட்டிய தயவைவிட இப்போது காட்டும் தயவு மிகமேலானது. நீ பணக்கார வாலிபனையோ, ஏழை வாலிபனையோ நாடிப்போகவில்லை.
ரூத் 3 : 11 (OCVTA)
இப்பொழுதும் என் மகளே நீ பயப்படவேண்டாம். நீ கேட்பதெல்லாவற்றையும் நான் செய்வேன். நீ ஒரு உயர்ந்த குணாதிசயமுடையவள் என்பதை பட்டணத்திலுள்ள என் மக்களெல்லாரும் அறிவார்கள்.
ரூத் 3 : 12 (OCVTA)
நான் உனது நெருங்கிய உறவினன் என்பது உண்மைதான். ஆனாலும், என்னைவிட அதிக மீட்கும் உரிமையுடைய உறவினன் ஒருவன் இருக்கிறான்.
ரூத் 3 : 13 (OCVTA)
இன்றிரவு நீ இங்கே தங்கியிரு. காலையில் அவன் உன்னை மீட்க விரும்பினால் நல்லது. அவன் உன்னை மீட்கட்டும். அவன் விரும்பாவிட்டால் யெகோவா இருப்பது நிச்சயமெனில், நான் உன்னை மீட்பேன் என்பதும் நிச்சயம். ஆகவே காலைவரை நீ இங்கே படுத்திரு” என்றான்.
ரூத் 3 : 14 (OCVTA)
காலைவரை அவள் அவன் கால்மாட்டில் படுத்திருந்தாள். ஆனால் ஒருவரையொருவர் கண்டுகொள்ளத்தக்க வெளிச்சம் வரும்முன் அவள் படுக்கையை விட்டெழுந்தாள். ஏனெனில் போவாஸ், “சூடடிக்கும் களத்திற்கு ஒரு பெண் வந்ததாக ஒருவருக்கும் தெரியாமல் இருக்கட்டும்” என்று சொல்லியிருந்தான்.
ரூத் 3 : 15 (OCVTA)
மீண்டும் அவன் அவளிடம், “நீ உன் போர்வையைக் கொண்டுவந்து விரித்துப் பிடி” என்றான். அவள் அப்படியே விரித்துப்பிடிக்க அவன் அதில் ஆறுபடி† அதாவது, சுமார் 4 கிலோகிராம் வாற்கோதுமையை அளந்து அவளிடம் கொடுத்தான்; பின்பு அவன் ‡ பல எபிரெய கையெழுத்துப் பிரதிகளில் அவள் என்றுள்ளது. பட்டணத்திற்குத் திரும்பிப்போனான்.
ரூத் 3 : 16 (OCVTA)
ரூத் தன் மாமியார் நகோமியிடம் வந்தபோது, அவள் மாமியார், “என் மகளே, நீ போனகாரியம் என்னவாயிற்று” என்று கேட்டாள். அப்பொழுது அவள், போவாஸ் தனக்கு செய்ததெல்லாவற்றையும் சொன்னாள்.
ரூத் 3 : 17 (OCVTA)
அவள் தொடர்ந்து, “நீ உன் மாமியாரிடம் வெறுங்கையுடன் போகவேண்டாம் என்று சொல்லி, அவர் எனக்கு இந்த ஆறுபடி வாற்கோதுமையையும் தந்தார்” என்றாள்.
ரூத் 3 : 18 (OCVTA)
அப்பொழுது நகோமி, “என் மகளே! இது என்னவாக முடியும் என்று அறியும்வரை காத்திரு. அந்த மனிதன் இன்று இந்த விஷயம் நிறைவேறும்வரை ஓய்ந்திருக்க மாட்டான்” என்று சொன்னாள்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18