ரூத் 1 : 1 (OCVTA)
நகோமி கணவனையும், மகன்களையும் இழப்பது இஸ்ரயேல் நாட்டில் நீதிபதிகள் ஆளுகை செய்த காலத்தில் பஞ்சம் உண்டாயிற்று. அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த ஒரு மனிதன் தன் மனைவியுடனும், தன் இரண்டு மகன்களுடனும் கொஞ்சக்காலம் மோவாப் நாட்டில் வாழ்வதற்காக அங்கு போனான்.
ரூத் 1 : 2 (OCVTA)
அந்த மனிதனின் பெயர் எலிமெலேக்கு. அவன் மனைவி பெயர் நகோமி. அவனுடைய இரண்டு மகன்களின் பெயர்கள் மக்லோன், கிலியோன் என்பதாகும். அவர்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமைச் சேர்ந்த எப்பிராத்தியராவர். அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று மோவாபிலே குடியேறினார்கள்.
ரூத் 1 : 3 (OCVTA)
அங்கே நகோமியின் கணவன், எலிமெலேக் இறந்தான், அப்பொழுது நகோமி தன் இரண்டு மகன்களுடனும் தனித்து விடப்பட்டாள்.
ரூத் 1 : 4 (OCVTA)
நகோமியின் மகன்கள் மோவாபிய பெண்களைத் திருமணம் செய்துகொண்டார்கள். ஒருவன் ஒர்பாள் என்பவளையும், மற்றவன் ரூத் என்பவளையும் திருமணம் செய்தனர். அங்கு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் வாழ்ந்தனர்.
ரூத் 1 : 5 (OCVTA)
அதன்பின் மக்லோன், கிலியோன் ஆகிய இருவரும் இறந்துபோனார்கள். இப்படியாக நகோமி தன் கணவனையும் தன் மகன்கள் இருவரையும் இழந்து தனியாக விடப்பட்டாள்.
ரூத் 1 : 6 (OCVTA)
நகோமியும் ரூத்தும் பெத்லெகேமுக்குத் திரும்புதல் யெகோவா தம் மக்களுக்கு உணவளித்து உதவி செய்கிறார் என்பதை நகோமி மோவாப் நாட்டில் இருக்கும்போது கேள்விப்பட்டாள். அப்பொழுது அவள் தன் இரு மருமகள்களுடன் அங்கிருந்து தனது நாட்டிற்குத் திரும்பிச்செல்வதற்கு ஆயத்தம் செய்தாள்.
ரூத் 1 : 7 (OCVTA)
அவள் தன் மருமகள்களான ஒர்பாள், ரூத் என்பவர்களுடன் தான் வசித்த நாட்டைவிட்டு புறப்பட்டு, யூதா நாட்டை நோக்கிப் போகும்படி புறப்பட்டாள்.
ரூத் 1 : 8 (OCVTA)
அப்பொழுது நகோமி தன் இரு மருமகள்களிடமும், “நீங்கள் இருவரும் உங்கள் தாய் வீட்டிற்குத் திரும்பிப்போங்கள். இறந்துபோன உங்கள் கணவர்களுக்கும், எனக்கும் நீங்கள் இரக்கம் காட்டியதுபோல் யெகோவா உங்களுக்கும் இரக்கம் காட்டுவாராக.
ரூத் 1 : 9 (OCVTA)
யெகோவா உங்கள் ஒவ்வொருவருக்கும் வேறு கணவனைத் தந்து அவர்கள் வீட்டிலே நீங்கள் ஆறுதலாய் வாழ்ந்திருக்க உதவுவாராக” என்று சொல்லி. நகோமி அவர்களை முத்தமிட்டாள். அப்பொழுது அவர்கள் சத்தமிட்டு அழுது
ரூத் 1 : 10 (OCVTA)
அவளிடம், “நாங்கள் உங்களுடனேயே, உங்களுடைய மக்களிடத்திற்கே வருவோம்” என்று சொன்னார்கள்.
ரூத் 1 : 11 (OCVTA)
நகோமியோ அவர்களிடம், “என் மகள்களே. நீங்கள் உங்கள் வீட்டிற்குத் திரும்பிப்போங்கள்; நீங்கள் ஏன் என்னுடனே வரவேண்டும்? நான் இனிமேலும் மகன்களைப் பெறுவேனோ? அவர்கள் உங்களுக்கு கணவர்களாக முடியுமோ?
ரூத் 1 : 12 (OCVTA)
என் மகள்களே; உங்கள் வீட்டிற்கு திரும்பிப்போங்கள். எனக்கு வயது போய்விட்டதனால் இன்னொருவனைக் கணவனாக அடையவும் முடியாது. இனியும் எனக்குப் பிள்ளைகள் பிறக்கும் என்ற நம்பிக்கையிருந்து, இன்றிரவு நான் ஒரு கணவனுக்கு வாழ்க்கைப்பட்டு, மகன்களைப் பெற்றாலும்,
ரூத் 1 : 13 (OCVTA)
நீங்கள் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும்வரை காத்திருப்பீர்களோ? அவர்களுக்காகத் திருமணம் செய்யாது தனித்திருப்பீர்களோ? வேண்டாம் என் மகள்களே. உங்களைவிட எனது துக்கம் அதிகமாயிருக்கிறது. ஏனெனில் யெகோவாவின் கை எனக்கெதிராக நீட்டப்பட்டுள்ளது!” என்றாள்.
ரூத் 1 : 14 (OCVTA)
இதைக் கேட்டு அவர்கள் திரும்பவும் அழுதார்கள். ஒர்பாளோ தன் மாமியை முத்தமிட்டு அவளிடமிருந்து விடைபெற்றுத் திரும்பிச்சென்றாள், ஆனால் ரூத்தோ அவளைப் பற்றிப் பிடித்துக்கொண்டாள்.
ரூத் 1 : 15 (OCVTA)
அப்பொழுது நகோமி அவளிடம், “பார், உன் சகோதரி தன் மக்களிடத்திற்கும், தன் தெய்வங்களிடத்திற்கும் திரும்பிப் போகிறாள். நீயும் அவளுடன் திரும்பிப்போ” என்றாள்.
ரூத் 1 : 16 (OCVTA)
ஆனால் ரூத் அவளிடம், “நான் உங்களைவிட்டுப் போகவோ, திரும்பவும் என் வீட்டிற்குப் போகவோ என்னை வற்புறுத்த வேண்டாம்; ஏனெனில் நீங்கள் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீங்கள் தங்கும் இடத்தில் நானும் தங்குவேன்; உங்கள் மக்களே எனது மக்களாயிருப்பார்கள். உங்கள் இறைவனே என் இறைவனாயிருப்பார்.
ரூத் 1 : 17 (OCVTA)
நீங்கள் சாகும் இடத்தில் நானும் சாவேன், அங்கேயே நான் அடக்கம் செய்யப்படுவேன். மரணத்தைத் தவிர வேறேதாவது உங்களையும், என்னையும் பிரித்தால் யெகோவா அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் என்னைத் தண்டிக்கட்டும்” என்றாள்.
ரூத் 1 : 18 (OCVTA)
ரூத் தன்னுடன் வருவதற்கு மனவுறுதியாயிருப்பதைக் கண்ட நகோமி, அதற்குப் பின்னும் அவளை வற்புறுத்தவில்லை.
ரூத் 1 : 19 (OCVTA)
எனவே அந்த இரு பெண்களும் தொடர்ந்து பெத்லெகேம்வரை பயணம் செய்தார்கள். அவர்கள் பெத்லெகேமுக்கு வந்தபோது, அவர்களைக்குறித்து பட்டணத்து மக்கள் எல்லோரும் பரபரப்படைந்தார்கள். பெண்களோ வியப்புற்று, “இவள் நகோமியாயிருக்குமோ?” என்று சொல்லிக்கொண்டார்கள்.
ரூத் 1 : 20 (OCVTA)
அப்பொழுது அவள் அவர்களிடம், “நீங்கள் என்னை நகோமி, என்று அழைக்கவேண்டாம். என்னை மாரா என்றழையுங்கள். ஏனெனில் எல்லாம் வல்லவர் என் வாழ்வை மிகக் கசப்படையச் செய்துள்ளார்.
ரூத் 1 : 21 (OCVTA)
நான் நிறைவுள்ளவளாகப் போனேன்; ஆனால் யெகோவாவோ என்னை வெறுமையாகவே திருப்பிக் கொண்டுவந்துள்ளார். இப்படியிருக்க நீங்கள் ஏன் என்னை நகோமி என்று அழைக்கவேண்டும்? யெகோவா என்னைத் துன்புறுத்தினார். எல்லாம் வல்லவர் என்மேல் அவலத்தைக் கொண்டுவந்தார்” என்றாள்.
ரூத் 1 : 22 (OCVTA)
இவ்வாறு நகோமி தன் மருமகளான மோவாபிய பெண் ரூத்துடன் மோவாபிலிருந்து பெத்லெகேமுக்குத் திரும்பிவந்தாள். அப்பொழுது வாற்கோதுமை அறுவடை தொடங்கியிருந்தது.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22