சங்கீதம் 90 : 1 (OCVTA)
சங்கீதம் 90–106 இறைவனின் மனிதனாகிய மோசேயின் மன்றாட்டு. யெகோவாவே, தலைமுறைதோறும் நீரே எங்கள் வாழ்விடமாய் இருக்கிறீர்.
சங்கீதம் 90 : 2 (OCVTA)
மலைகள் தோன்றுமுன்னும், பூமியையும் உலகத்தையும் நீர் உருவாக்குமுன்னும், நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் நீரே இறைவனாய் இருக்கிறீர்.
சங்கீதம் 90 : 3 (OCVTA)
நீர் மனிதனை மீண்டும் தூசிக்குத் திருப்பி, “மனுமக்களே, தூசியாகுங்கள்” என்கிறீர்.
சங்கீதம் 90 : 4 (OCVTA)
உமது பார்வையில் ஆயிரம் வருடங்கள் கழிந்துபோன ஒரு நாளைப் போலவும், இரவின் ஒரு சாமத்தைப் போலவும் இருக்கின்றன.
சங்கீதம் 90 : 5 (OCVTA)
ஆனாலும் மரண நித்திரையில் நீர் மானிடரை வெள்ளம்போல வாரிக்கொண்டு போகிறீர்; அவர்கள் காலையில் முளைக்கும் பசும்புல்லைப்போல் இருக்கிறார்கள்:
சங்கீதம் 90 : 6 (OCVTA)
அது காலையில் புதிதாக முளைத்துப் பூத்தாலும், மாலையாகும்போது உலர்ந்து வாடிப்போகும்.
சங்கீதம் 90 : 7 (OCVTA)
நாங்கள் உமது கோபத்தால் சோர்ந்துபோகிறோம், உமது கடுங்கோபத்தால் திகிலடைகிறோம்.
சங்கீதம் 90 : 8 (OCVTA)
நீர் எங்கள் அநியாயங்களை உமக்கு முன்பாகவும், எங்கள் இரகசிய பாவங்களை உமது முகத்தின் வெளிச்சத்திலும் நிறுத்தினீர்.
சங்கீதம் 90 : 9 (OCVTA)
எங்கள் நாட்கள் எல்லாம் உமது கடுங்கோபத்தால் கடந்துபோய்விட்டது; நாங்கள் எங்களுடைய வருடங்களைப் புலம்பலோடே முடிக்கின்றோம்.
சங்கீதம் 90 : 10 (OCVTA)
எங்கள் வாழ்நாட்கள் எழுபது வருடங்களே; நாங்கள் பெலனுள்ளவர்களாய் இருந்தால், அது எண்பது வருடங்களாகவும் இருக்கலாம், ஆனாலும் அவை கஷ்டமும் துன்பமும் நிறைந்தவையாகவே இருக்கின்றன; எங்கள் வாழ்நாட்கள் விரைவாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
சங்கீதம் 90 : 11 (OCVTA)
உமது கோபத்தின் வல்லமையை யார் அறிவார்? உமக்குப் பயப்படத்தக்கதாய் உமது கோபத்தை யார் அறிவார்?
சங்கீதம் 90 : 12 (OCVTA)
எங்கள் நாட்களை சரியாகக் கணக்கிட எங்களுக்குப் போதியும், அதினால் நாங்கள் ஞானமுள்ள இருதயத்தைப் பெற்றுக்கொள்வோம்.
சங்கீதம் 90 : 13 (OCVTA)
யெகோவாவே, மனமிரங்கும்; எவ்வளவு காலத்திற்கு இந்த நிலை? உமது பணியாளர்கள்மேல் கருணையாய் இரும்.
சங்கீதம் 90 : 14 (OCVTA)
காலையிலே எங்களை உமது உடன்படிக்கையின் அன்பினால் திருப்தியாக்கும்; அப்பொழுது நாங்கள் இன்பமாய்ப் பாடி, எங்கள் வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியாய் இருப்போம்.
சங்கீதம் 90 : 15 (OCVTA)
நீர் எங்களைத் துன்புறுத்திய நாட்களுக்கும், நாங்கள் துன்பங்களைக் கண்ட வருடங்களுக்கும் ஈடாக எங்களை மகிழச் செய்யும்.
சங்கீதம் 90 : 16 (OCVTA)
உமது செயல்கள் உம்முடைய பணியாளர்களுக்கும், உமது மகிமை அவர்களுடைய பிள்ளைகளுக்கும் காண்பிக்கப்படுவதாக.
சங்கீதம் 90 : 17 (OCVTA)
எங்கள் இறைவனாகிய யெகோவாவின் தயவு எங்கள்மேல் இருப்பதாக; எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்; ஆம், எங்கள் கைகளின் வேலையை நிலைப்படுத்தும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17