சங்கீதம் 78 : 1 (OCVTA)
என் மக்களே, என் போதனையைக் கேளுங்கள்; என் வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள்.
சங்கீதம் 78 : 2 (OCVTA)
நான் என் வாயைத் திறந்து உவமைகளால் பேசுவேன்; நான் முற்காலத்து மறைபொருட்களை எடுத்துச்சொல்வேன்.
சங்கீதம் 78 : 3 (OCVTA)
நாங்கள் கேட்டதையும் அறிந்ததையும் எங்கள் முற்பிதாக்கள் எங்களுக்குச் சொன்னார்கள்.
சங்கீதம் 78 : 4 (OCVTA)
நாங்கள் எங்கள் பிள்ளைகளிடமிருந்து அவைகளை மறைக்கமாட்டோம்; யெகோவாவின் புகழத்தக்கச் செயல்களையும், அவருடைய வல்லமையையும், அவர் செய்த அதிசயங்களையும் அடுத்துவரும் தலைமுறையினருக்குச் சொல்வோம்.
சங்கீதம் 78 : 5 (OCVTA)
அவர் யாக்கோபுக்கு நியமங்களை ஆணையிட்டு, இஸ்ரயேலிலே சட்டத்தை நிலைநாட்டி, அவற்றைத் தமது பிள்ளைகளுக்குப் போதிக்கும்படி, நமது முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டார்.
சங்கீதம் 78 : 6 (OCVTA)
அடுத்த தலைமுறையினர் உமது சட்டத்தை அறிந்துகொள்வார்கள்; இனி பிறக்கவிருக்கும் பிள்ளைகளும் அறிந்துகொள்வார்கள், அவர்களுடைய பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
சங்கீதம் 78 : 7 (OCVTA)
அதினால் அவர்கள் இறைவனில் தங்கள் நம்பிக்கையை வைத்து, அவருடைய செயல்களை மறவாமல், அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்ளுவார்கள்.
சங்கீதம் 78 : 8 (OCVTA)
அவர்கள் தங்கள் முற்பிதாக்களைப்போல் இருக்கமாட்டார்கள்; ஏனெனில் அவர்களுடைய முற்பிதாக்கள் பிடிவாதமும் கலகமும் உள்ள தலைமுறையினராயும் நேர்மையற்ற இருதயமுள்ளவர்களாகவும், அவர்களுடைய ஆவி இறைவனிடம் உண்மையற்றதாய் இருந்தது.
சங்கீதம் 78 : 9 (OCVTA)
எப்பிராயீமின் மனிதர்கள் வில்லேந்தியவர்களாய் இருந்தபோதிலும், யுத்தநாளிலே புறமுதுகு காட்டி ஓடினார்கள்;
சங்கீதம் 78 : 10 (OCVTA)
அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல், அவருடைய சட்டத்தின்படி வாழ மறுத்தார்கள்.
சங்கீதம் 78 : 11 (OCVTA)
அவர்கள் அவருடைய செயல்களையும், அவர் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும் மறந்தார்கள்.
சங்கீதம் 78 : 12 (OCVTA)
அவர் சோவான் பிரதேசத்திலே எகிப்து நாட்டில், அவர்களுடைய முற்பிதாக்களுக்கு முன்பாக அற்புதங்களைச் செய்தார்.
சங்கீதம் 78 : 13 (OCVTA)
அவர் கடலைப் பிரித்து அதற்குள் அவர்களை நடத்தினார்; அவர் தண்ணீரை ஒரு சுவர்போல் உறுதியாய் நிற்கச்செய்தார்.
சங்கீதம் 78 : 14 (OCVTA)
அவர் பகலில் மேகத்தினாலும், இரவு முழுவதும் நெருப்பு வெளிச்சத்தினாலும் அவர்களை வழிநடத்தினார்.
சங்கீதம் 78 : 15 (OCVTA)
அவர் பாலைவனத்திலே கற்பாறைகளைப் பிளந்து, கடலளவு நிறைவான தண்ணீரை அவர் குடிக்கக் கொடுத்தார்.
சங்கீதம் 78 : 16 (OCVTA)
அவர் கற்பாறை வெடிப்புகளிலிருந்து நீரோடைகளை வருவித்து, தண்ணீரை ஆறுகளைப்போல் பாயும்படி செய்தார்.
சங்கீதம் 78 : 17 (OCVTA)
ஆனாலும் அவர்களோ அவருக்கு விரோதமாய் தொடர்ந்து பாவம் செய்தார்கள்; மகா உன்னதமானவருக்கு விரோதமாய்ப் பாலைவனத்தில் கலகம் செய்தார்கள்.
சங்கீதம் 78 : 18 (OCVTA)
அவர்கள் தாம் ஆசைப்பட்ட உணவைக் கேட்டு, வேண்டுமென்றே இறைவனைச் சோதித்தார்கள்.
சங்கீதம் 78 : 19 (OCVTA)
அவர்கள் இறைவனுக்கு விரோதமாய்ப் பேசி, “பாலைவனத்தில் விருந்தளிக்க இறைவனால் முடியுமோ?
சங்கீதம் 78 : 20 (OCVTA)
ஆம், அவர் கற்பாறையை அடித்தபோது, தண்ணீர் பீறிட்டுப் பாய்ந்தது, நீரோடைகள் நிரம்பி வழிந்தன, ஆனால் உணவையும் அவரால் கொடுக்க முடியுமோ? தமது மக்களுக்கு இறைச்சியைக் கொடுக்கவும் அவரால் முடியுமோ?” என்றார்கள்.
சங்கீதம் 78 : 21 (OCVTA)
யெகோவா அவைகளைக் கேட்டபோது, மிகுந்த கோபமடைந்தார்; அவருடைய நெருப்பு யாக்கோபுக்கு விரோதமாய்ப் பற்றியெரிந்தது; அவருடைய கடுங்கோபம் இஸ்ரயேலுக்கு விரோதமாய் எழும்பியது.
சங்கீதம் 78 : 22 (OCVTA)
ஏனெனில் அவர்கள் இறைவனை விசுவாசிக்கவுமில்லை, அவருடைய மீட்பில் நம்பிக்கை வைக்கவுமில்லை.
சங்கீதம் 78 : 23 (OCVTA)
ஆனாலும் அவர் மேலேயுள்ள மேகங்களுக்குக் கட்டளையிட்டார்; வானங்களின் கதவுகளைத் திறந்தார்.
சங்கீதம் 78 : 24 (OCVTA)
அவர் மக்கள் உண்பதற்காக மன்னாவைப் பொழியப்பண்ணினார்; பரலோகத்தின் தானியத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.
சங்கீதம் 78 : 25 (OCVTA)
இறைவனுடைய தூதர்களின் உணவை மனிதர்கள் சாப்பிட்டார்கள்; அவர்கள் வேண்டியமட்டும் உண்ணுவதற்குத் தேவையான உணவை இறைவன் அவர்களுக்கு அனுப்பினார்.
சங்கீதம் 78 : 26 (OCVTA)
அவர் வானங்களிலிருந்து கீழ்க்காற்றை வீசப்பண்ணினார்; தம் வல்லமையினால் தென்காற்றை வழிநடத்தினார்.
சங்கீதம் 78 : 27 (OCVTA)
அவர் இறைச்சியை அவர்கள்மேல் தூசியைப்போல் திரளாய் பொழியச் செய்தார், பறக்கும் பறவைகளை கடற்கரை மணலைப்போல் பொழியச் செய்தார்.
சங்கீதம் 78 : 28 (OCVTA)
அவர் அவற்றை அவர்களுடைய முகாமின் நடுவிலும், அவர்களுடைய கூடாரங்களைச் சுற்றிலும் விழச்செய்தார்.
சங்கீதம் 78 : 29 (OCVTA)
அவர்கள் திருப்தியடையுமட்டும் சாப்பிட்டார்கள்; அவர்கள் எதை ஆசைப்பட்டார்களோ அதையே அவர்களுக்குக் கொடுத்தார்.
சங்கீதம் 78 : 30 (OCVTA)
ஆனாலும் அவர்கள் ஆசைப்பட்ட உணவைச் சாப்பிட்டு முடிக்குமுன், அது அவர்களுடைய வாய்களில் இருக்கும்போதே,
சங்கீதம் 78 : 31 (OCVTA)
இறைவனுடைய கோபம் அவர்களுக்கு விரோதமாய் எழுந்தது; அவர் அவர்கள் மத்தியிலுள்ள பலமானவர்களைக் அழித்து, இஸ்ரயேலின் இளைஞர்களை வீழ்த்தினார்.
சங்கீதம் 78 : 32 (OCVTA)
இவைகளெல்லாம் ஏற்பட்டபோதிலும், அவர்கள் தொடர்ந்து பாவம் செய்துகொண்டே இருந்தார்கள்; அவருடைய அதிசயங்களைக் கண்டும் அவர்கள் அவரை நம்பவில்லை.
சங்கீதம் 78 : 33 (OCVTA)
ஆகவே அவர் அவர்களுடைய நாட்களைப் பயனற்றதாயும், அவர்களுடைய வருடங்களைப் பயங்கரமானதாயும் முடியப்பண்ணினார்.
சங்கீதம் 78 : 34 (OCVTA)
இறைவன் அவர்களில் பலரை அழிக்கும்போதெல்லாம் அவர்கள் அவரைத் தேடினார்கள்; ஆர்வத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள்.
சங்கீதம் 78 : 35 (OCVTA)
இறைவன் தங்கள் கன்மலையாய் இருந்தார் என்றும், மகா உன்னதமான இறைவன் தங்கள் மீட்பராய் இருந்தார் என்றும் நினைவில் கொண்டார்கள்.
சங்கீதம் 78 : 36 (OCVTA)
ஆனாலும் அவர்கள் தங்கள் வாயினால் அவரைப் புகழ்ந்து, தங்கள் நாவினால் பொய் சொன்னார்கள்.
சங்கீதம் 78 : 37 (OCVTA)
அவர்களுடைய இருதயங்கள் அவரிடத்தில் உறுதியாய் இருக்கவில்லை; அவர்கள் அவருடைய உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்ததுமில்லை.
சங்கீதம் 78 : 38 (OCVTA)
ஆகிலும் அவர் இரக்கம் உள்ளவராகவே இருந்தார்; அவர் அவர்களை அழித்துவிடாமல் அவர்களுடைய அநியாயங்களை மன்னித்தார். அவர் அநேகமுறை கோபங்கொள்ளவில்லை, அவர் தமது கடுங்கோபத்தை முழுமையாக வெளிப்படுத்தவில்லை.
சங்கீதம் 78 : 39 (OCVTA)
அவர்கள் மனிதர்கள் மட்டுமே என்பதையும், அவர்கள் ஒருபோதும் திரும்பிவராத காற்று என்பதையும் அவர் நினைவிற்கொண்டார்.
சங்கீதம் 78 : 40 (OCVTA)
அவர்கள் எத்தனை முறை பாலைவனத்திலே அவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; பாழ்நிலத்திலே அவரைத் துக்கப்படுத்தினார்கள்.
சங்கீதம் 78 : 41 (OCVTA)
அவர்கள் திரும்பத்திரும்ப இறைவனைச் சோதித்தார்கள்; அவர்கள் இஸ்ரயேலின் பரிசுத்தரை வேதனைப்படுத்தினார்கள்.
சங்கீதம் 78 : 42 (OCVTA)
அவர்கள் அவருடைய வல்லமையையும், ஒடுக்கியவனிடமிருந்து அவர் தங்களை மீட்ட நாளையும் நினைவில்கொள்ளவில்லை.
சங்கீதம் 78 : 43 (OCVTA)
அந்நாளில் எகிப்திலே அவர் அடையாளங்களையும், சோவான் பிரதேசத்தில் அற்புதங்களையும் செய்தார்.
சங்கீதம் 78 : 44 (OCVTA)
அவர் அவர்களுடைய நதிகளை இரத்தமாக மாறப்பண்ணினார்; அவர்களுடைய நீரோடைகளிலிருந்து அவர்களால் தண்ணீர் குடிக்க முடியவில்லை.
சங்கீதம் 78 : 45 (OCVTA)
அவர் பறக்கும் வண்டு கூட்டங்களை அனுப்பினார், அவைகள் அவர்களை தாக்கின. அவர் தவளைகளை அனுப்பினார், அவைகள் அவர்களைப் பாழாக்கின.
சங்கீதம் 78 : 46 (OCVTA)
அவர் அவர்களுடைய பயிர்களைப் பச்சைப் புழுக்களுக்கும், அவர்களுடைய விளைச்சல்களை வெட்டுக்கிளிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
சங்கீதம் 78 : 47 (OCVTA)
அவர் அவர்களுடைய திராட்சைக் கொடிகளை பனிக்கட்டி மழையாலும், அவர்களுடைய காட்டத்தி மரங்களை கல்மழையாலும் அழித்தார்.
சங்கீதம் 78 : 48 (OCVTA)
அவர் அவர்களுடைய மாடுகளை பனிக்கட்டி மழைக்கும், அவர்களுடைய மந்தை மிருகங்களை மின்னல் தாக்கத்திற்கும் ஒப்புக்கொடுத்தார்.
சங்கீதம் 78 : 49 (OCVTA)
அவர் தமது கடுங்கோபத்தையும், சினத்தையும், எதிர்ப்பையும், இன்னலையும் அழிவின் தூதர் கூட்டமாக அவர்கள்மேல் கட்டவிழ்த்தார்.
சங்கீதம் 78 : 50 (OCVTA)
அவர் தமது கோபத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வழியை அமைத்தார்; அவர் அவர்களை மரணத்திலிருந்து தப்பவிடாமல், கொள்ளைநோய்க்கு ஒப்புக்கொடுத்தார்.
சங்கீதம் 78 : 51 (OCVTA)
அவர் எகிப்தின் எல்லா மூத்த மகன்களையும் காமின் கூடாரங்களில்* காமின் கூடாரங்களில் என்பது எகிப்தைப் பற்றி பேசும் ஒரு வழியாகும். அவர்களுக்கு பிறந்த மூத்த மகன்களையும் அழித்தார்.
சங்கீதம் 78 : 52 (OCVTA)
ஆனால் அவர் தமது மக்களை செம்மறியாடுகளைப்போல் வெளியே கொண்டுவந்து, அவர்களை மந்தையைப்போல் பாலைவனத்தின் வழியே,
சங்கீதம் 78 : 53 (OCVTA)
பாதுகாப்பாய் அவர்களை அழைத்துச் சென்றபடியால், அவர்கள் பயப்படாதிருந்தார்கள்; ஆனால் அவர்களுடைய பகைவர்களையோ, கடல் மூடிப்போட்டது.
சங்கீதம் 78 : 54 (OCVTA)
இறைவன் தமது பரிசுத்த நாட்டின் எல்லைக்கு, தமது வலதுகரத்தினால் கைப்பற்றியிருந்த மலைநாட்டிற்கு, அவர்களைக் கொண்டுவந்தார்.
சங்கீதம் 78 : 55 (OCVTA)
அவர் அவர்களுக்கு முன்பாகப் பிற நாட்டு மக்களைத் துரத்தி, அவர்களுடைய நிலங்களைப் பங்கிட்டு சொத்துரிமையாகப் பிரித்துக் கொடுத்தார்; அவர் இஸ்ரயேலின் கோத்திரங்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்தினார்.
சங்கீதம் 78 : 56 (OCVTA)
ஆனால், அவர்களோ இறைவனைச் சோதித்து, உன்னதமானவருக்கு விரோதமாய்க் கலகம் செய்தார்கள்; அவர்கள் அவருடைய நியமங்களைக் கைக்கொள்ளவில்லை.
சங்கீதம் 78 : 57 (OCVTA)
அவர்கள் தங்களுடைய முன்னோர்களைப் போலவே வழிதவறி, துரோகம் செய்தார்கள்; இலக்குத் தவறும் வில்லைப்போல் நம்பமுடியாதவர்களாய் இருந்தார்கள்.
சங்கீதம் 78 : 58 (OCVTA)
அவர்கள் தங்கள் வழிபாட்டு மேடைகளால் அவருக்குக் கோபமூட்டினார்கள்; அவர்கள் தங்களுடைய இறைவனல்லாதவைகளால் அவருக்கு எரிச்சலை மூட்டினார்கள்.
சங்கீதம் 78 : 59 (OCVTA)
இறைவன் அவற்றைக் கேட்டபோது மிகவும் கோபங்கொண்டார்; அவர் இஸ்ரயேலரை முழுமையாகப் புறக்கணித்தார்.
சங்கீதம் 78 : 60 (OCVTA)
மனிதர் மத்தியில் தாம் அமைத்திருந்த கூடாரமாகிய சீலோவின் இறைசமுகக் கூடாரத்தைவிட்டு அகன்றார்.
சங்கீதம் 78 : 61 (OCVTA)
அவர் தமது வல்லமையின் உடன்படிக்கைப் பெட்டியைச் சிறைப்பட்டுப் போகச்செய்து, தமது மகிமையைப் பகைவரின் கைகளில் ஒப்புக்கொடுத்தார்.
சங்கீதம் 78 : 62 (OCVTA)
அவர் தமது மக்களை வாளுக்கு ஒப்புக்கொடுத்தார்; அவர் தமது உரிமைச்சொத்தான அவர்கள்மீது மிகவும் கோபங்கொண்டார்.
சங்கீதம் 78 : 63 (OCVTA)
அவர்களுடைய இளைஞரை நெருப்பு சுட்டெரித்தது; அவர்களுடைய இளம்பெண்களுக்குத் திருமணப் பாடல்கள் இல்லாமல் போனது.
சங்கீதம் 78 : 64 (OCVTA)
அவர்களுடைய ஆசாரியர்கள் வாளுக்கு இரையாக்கப்பட்டார்கள்; அவர்களுடைய விதவைகளினால் அழவும் முடியவில்லை.
சங்கீதம் 78 : 65 (OCVTA)
அதின்பின் யெகோவா நித்திரையிலிருந்து எழும்புவது போலவும், போர்வீரன் மதுமயக்கத்திலிருந்து எழும்புவது போலவும் விழித்தெழுந்தார்.
சங்கீதம் 78 : 66 (OCVTA)
அவர் தமது பகைவர்களை விரட்டிப் பின்வாங்கச் செய்தார்; அவர்களை நித்திய வெட்கத்திற்கு உள்ளாக்கினார்.
சங்கீதம் 78 : 67 (OCVTA)
அவர் யோசேப்பின் வம்சங்களைப் புறக்கணித்தார்; எப்பிராயீம் கோத்திரத்தை அவர் தெரிந்துகொள்ளவில்லை.
சங்கீதம் 78 : 68 (OCVTA)
ஆனால் அவர் யூதா கோத்திரத்தையும், தாம் நேசித்த சீயோன் மலையையும் தெரிந்துகொண்டார்.
சங்கீதம் 78 : 69 (OCVTA)
அவர் தாம் வாழும் தமது பரிசுத்த இடத்தை உயர்ந்த வானங்களைப் போலவும், நித்தியமாய் தாம் நிலைப்படுத்தின பூமியைப்போலவும் கட்டினார்.
சங்கீதம் 78 : 70 (OCVTA)
அவர் தமது அடியானாகிய தாவீதைத் தெரிந்தெடுத்து, அவனை செம்மறியாட்டுத் தொழுவங்களிலிருந்து கொண்டுவந்தார்.
சங்கீதம் 78 : 71 (OCVTA)
ஆடுகளை மேய்ப்பதைவிட்டுத் தமது மக்களாகிய யாக்கோபுக்கும், தமது உரிமைச்சொத்தான இஸ்ரயேலுக்கும் மேய்ப்பனாக இருக்கும்படியாக அவனைக் கொண்டுவந்தார்.
சங்கீதம் 78 : 72 (OCVTA)
தாவீது அவர்களை தன் இருதயத்தின் உத்தமத்தோடு மேய்த்தான்; கைத்திறமையால் அவர்களை வழிநடத்தினான்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72