சங்கீதம் 55 : 1 (OCVTA)
இறைவனே, என் மன்றாட்டைக் கேளும்; என் வேண்டுதலை அசட்டை பண்ணாதிரும்.
சங்கீதம் 55 : 2 (OCVTA)
எனக்குச் செவிகொடுத்து, எனக்குப் பதில் தாரும்; என் சிந்தனைகள் என்னைக் கலங்கப்பண்ணுகின்றன; நான் மிகவும் கலக்கமடைந்துள்ளேன்.
சங்கீதம் 55 : 3 (OCVTA)
எதிரியின் வார்த்தையினாலும் கொடியவர்களின் அழுத்தத்தினாலும் கலக்கமடைந்துள்ளேன்; அவர்கள் என்மேல் வேதனையைக் கொண்டுவந்து, கோபத்தில் என்னை பகைக்கிறார்கள்.
சங்கீதம் 55 : 4 (OCVTA)
என் இருதயம் எனக்குள்ளே கடுந்துயரப்படுகிறது; மரணபயம் என்னைத் தாக்குகின்றன.
சங்கீதம் 55 : 5 (OCVTA)
பயமும் நடுக்கமும் என்னைப் பற்றிக்கொண்டன; பயங்கரம் என்னை மூடிக்கொண்டது.
சங்கீதம் 55 : 6 (OCVTA)
நானோ, “புறாவின் சிறகுகள் எனக்கு இருந்திருந்தால்! பறந்துபோய் இளைப்பாறுவேன்.
சங்கீதம் 55 : 7 (OCVTA)
நான் தொலைவில் தப்பிப்போய் பாலைவனத்தில் தங்குவேன்.
சங்கீதம் 55 : 8 (OCVTA)
கடும் காற்றுக்கும் புயலுக்கும் தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.
சங்கீதம் 55 : 9 (OCVTA)
யெகோவாவே, அவர்களுக்கு குழப்பத்தை உண்டுபண்ணி, அவர்களுடைய பேச்சிலும் பிளவுண்டாக்கும்; ஏனெனில், நான் வன்முறையையும் போராட்டத்தையுமே பட்டணத்தில் காண்கிறேன்.
சங்கீதம் 55 : 10 (OCVTA)
அவர்கள் இரவும் பகலும் பட்டண மதில்களின்மேல் பதுங்கித் திரிகிறார்கள்; கொடுமையும் பிரச்சனையும் அதனுள்ளே காணப்படுகின்றன.
சங்கீதம் 55 : 11 (OCVTA)
பேரழிவு பட்டணத்தின் நடுவே இருக்கிறது; அச்சுறுத்தல்களும் பொய்களும் அதின் வீதிகளைவிட்டு ஒருபோதும் நீங்குவதில்லை.
சங்கீதம் 55 : 12 (OCVTA)
என்னை நிந்திப்பவன் என் பகைவனல்ல; அப்படியிருந்தால், அதை நான் சகித்துக்கொள்ளலாம்; எனக்கு விரோதமாக ஒரு எதிரி எழும்பியிருந்தால், நான் அவனிடமிருந்து மறைந்துகொள்வேன்.
சங்கீதம் 55 : 13 (OCVTA)
ஆனால் எதிர்த்தவன் என்னைப்போன்ற மனிதனும், எனக்கு அறிமுகமான, என் நெருங்கிய நண்பனுமே.
சங்கீதம் 55 : 14 (OCVTA)
நாங்கள் ஒன்றுகூடி இனிய ஆலோசனைபண்ணி, மக்கள் கூட்டத்துடன் இறைவனின் ஆலயத்திற்குச் சென்றோம்.
சங்கீதம் 55 : 15 (OCVTA)
மரணம் என் எதிரிகளைத் திடீரெனப் பற்றிக்கொள்ளட்டும்; தீமை அவர்கள் மத்தியில் குடியிருப்பதால், அவர்கள் உயிருடன் பாதாளத்தில் இறங்குவார்களாக.
சங்கீதம் 55 : 16 (OCVTA)
நானோ இறைவனை நோக்கிக் கூப்பிடுகிறேன்; யெகோவா என்னைக் காப்பாற்றுவார்.
சங்கீதம் 55 : 17 (OCVTA)
மாலையிலும் காலையிலும் மத்தியான வேளையிலும் நான் துயரத்தால் முறையிடுவேன்; அவர் என் குரலைக் கேட்பார்.
சங்கீதம் 55 : 18 (OCVTA)
பலர் என்னை எதிர்த்தபோதும், எனக்கு விரோதமாய் நடத்தப்படும் யுத்தத்தில் இருந்து அவர் என்னைத் தீங்கின்றி மீட்டுக்கொண்டார்.
சங்கீதம் 55 : 19 (OCVTA)
சிங்காசனத்தில் என்றென்றும் அமர்ந்திருக்கும் இறைவன் கேட்டு, அவர்களைத் தாழ்த்திவிடுவார்; அவர்கள் இறைவனுக்குப் பயப்படவும் இல்லை, ஒருபோதும் தங்கள் வழிகளை மாற்றிக்கொள்ளவுமில்லை.
சங்கீதம் 55 : 20 (OCVTA)
என் தோழன் தனது நண்பர்களைத் தாக்குகிறான்; அவன் தன் உடன்படிக்கையையும் மீறுகிறான்.
சங்கீதம் 55 : 21 (OCVTA)
அவனுடைய பேச்சு வெண்ணெயைப் போல் மிருதுவானது, ஆனாலும் அவனுடைய இருதயத்தில் யுத்தம் மறைந்திருக்கிறது; அவனுடைய வார்த்தைகள் எண்ணெயைப் பார்க்கிலும் மென்மையானவை, ஆனாலும் அவை கூர்மையான வாள்களைப்போல் இருக்கின்றன.
சங்கீதம் 55 : 22 (OCVTA)
உங்கள் கவலைகளை யெகோவாமேல் வைத்து விடுங்கள்; அவர் உங்களைத் தாங்குவார்; நீதிமான்களை அவர் ஒருபோதும் விழுந்துபோக விடமாட்டார்.
சங்கீதம் 55 : 23 (OCVTA)
ஆனால் இறைவனே, நீரோ கொடுமையானவனை அழிவின் குழியில் இறங்கப்பண்ணுவீர்; இரத்த வெறியரும் ஏமாற்றுக்காரர்களும் தங்கள் ஆயுளின் பாதிநாட்கள்கூட உயிர் வாழமாட்டார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரையில், நான் உம்மிடத்திலேயே நம்பிக்கையாய் இருக்கிறேன்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23