சங்கீதம் 27 : 1 (OCVTA)
யெகோவா என் வெளிச்சமும் இரட்சிப்புமாயிருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்? யெகோவா என் வாழ்க்கையின் அரணாய் இருக்கிறார், நான் யாருக்குப் பயப்படுவேன்?
சங்கீதம் 27 : 2 (OCVTA)
தீய மனிதர் என்னை விழுங்கும்படி எனக்கு விரோதமாக முன்னேறி வரும்போது, எனது பகைவரும் விரோதிகளுமான அவர்களே தடுமாறி விழுவார்கள்.
சங்கீதம் 27 : 3 (OCVTA)
ஒரு இராணுவம் என்னை முற்றுகையிட்டாலும், என் இருதயம் பயப்படாது; எனக்கு விரோதமாக யுத்தம் மூண்டாலும், அப்பொழுதுங்கூட நான் நம்பிக்கையோடே இருப்பேன்.
சங்கீதம் 27 : 4 (OCVTA)
நான் யெகோவாவிடத்தில் ஒன்றைக் கேட்கிறேன், அதையே நான் தேடுகிறேன்: நான் யெகோவாவின் அழகைக் காண்பதற்கும், அவருடைய ஆலயத்தில் அவரை தேடுவதற்கும் நான் என் வாழ்நாள் முழுவதும் யெகோவாவினுடைய வீட்டில் குடியிருப்பதையே வாஞ்சிக்கிறேன்.
சங்கீதம் 27 : 5 (OCVTA)
ஏனெனில் துன்ப நாளில், அவர் என்னைத் தமது அடைக்கலத்தில் வைத்து காத்துக்கொள்ளுவார்; அவர் என்னைத் தமது பரிசுத்த கூடார மறைவில் ஒளித்துவைத்து, கற்பாறையின்மேல் என்னை உயர்த்துவார்.
சங்கீதம் 27 : 6 (OCVTA)
அப்பொழுது என் தலை என்னைச் சுற்றியுள்ள பகைவர்களுக்கு மேலாக உயர்த்தப்படும்; அவருடைய பரிசுத்த கூடாரத்திலே நான் ஆனந்த சத்தத்தோடு பலிகளையிட்டு, யெகோவாவைப் புகழ்ந்து பாடுவேன்.
சங்கீதம் 27 : 7 (OCVTA)
யெகோவாவே, நான் உம்மைக் கூப்பிடும்போது என் குரலைக் கேளும்; என்னில் இரக்கமாயிருந்து, எனக்குப் பதில் தாரும்.
சங்கீதம் 27 : 8 (OCVTA)
என் இருதயம் உம்மிடத்தில், “அவர் முகத்தையே தேடு!” என்றதால், யெகோவாவே, உமது முகத்தையே நான் தேடுவேன்.
சங்கீதம் 27 : 9 (OCVTA)
உமது முகத்தை என்னிடமிருந்து மறைத்துக் கொள்ளாதேயும்; கோபங்கொண்டு உமது அடியேனைத் துரத்தி விடாதேயும்; நீரே எனக்கு உதவியாய் இருந்திருக்கிறீர். என் இரட்சிப்பின் இறைவனே, என்னைப் புறக்கணிக்கவோ, கைவிடவோ வேண்டாம்.
சங்கீதம் 27 : 10 (OCVTA)
என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும், யெகோவா என்னை ஏற்றுக்கொள்வார்.
சங்கீதம் 27 : 11 (OCVTA)
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும்; என்னைத் தீயநோக்கத்தோடு பார்த்துக் கொண்டிருப்பவர்களின் நிமித்தம் என்னை நேரான பாதையில் நடத்தும்.
சங்கீதம் 27 : 12 (OCVTA)
என் பகைவரின் ஆசைகளுக்கு என்னை ஒப்புக்கொடாதேயும்; ஏனெனில் பொய்ச்சாட்சி கூறுபவர்களும் என்னை குற்றஞ்சாட்டுபவர்களும் எனக்கு விரோதமாய் எழும்புகிறார்கள்.
சங்கீதம் 27 : 13 (OCVTA)
நானோ வாழ்வோரின் நாட்டில் யெகோவாவின் நன்மையைக் காண்பேன் என்று இதில் நான் நம்பிக்கையாயிருக்கிறேன்.
சங்கீதம் 27 : 14 (OCVTA)
யெகோவாவுக்குக் காத்திரு; பெலன்கொண்டு தைரியமாயிரு, யெகோவாவுக்கே காத்திரு.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14