சங்கீதம் 22 : 1 (OCVTA)
என் இறைவனே, என் இறைவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்? என்னைக் காப்பாற்றாமல், நான் கதறிச் சொல்லும் வார்த்தைகளை நீர் கேளாமலும் ஏன் தூரமாயிருக்கிறீர்?
சங்கீதம் 22 : 2 (OCVTA)
என் இறைவனே, நான் பகலில் கூப்பிடுகிறேன், ஆனால் நீர் பதில் தருகிறதில்லை; இரவிலும் நான் மன்றாடுகிறேன், எனக்கு அமைதியில்லை.
சங்கீதம் 22 : 3 (OCVTA)
ஆனாலும் இஸ்ரயேலின் துதி சிங்காசனத்தில் அமர்ந்திருக்கும் நீர் பரிசுத்தர்.
சங்கீதம் 22 : 4 (OCVTA)
உம்மிலேயே எங்கள் முன்னோர்கள் நம்பிக்கை வைத்தார்கள்; நம்பிக்கை வைத்த அவர்களை நீர் விடுவித்தீர்.
சங்கீதம் 22 : 5 (OCVTA)
அவர்கள் உம்மை நோக்கிக் கூப்பிட்டார்கள், நீர் அவர்களைக் காப்பாற்றினீர்; உம்மில் நம்பிக்கை வைத்து அவர்கள் வெட்கப்பட்டுப் போகவில்லை.
சங்கீதம் 22 : 6 (OCVTA)
ஆனால் நானோ ஒரு புழு, மனிதனேயல்ல; மனிதரால் பழிக்கப்பட்டும், மக்களால் அவமதிக்கப்பட்டும் இருக்கிறேன்.
சங்கீதம் 22 : 7 (OCVTA)
என்னைக் காண்பவர்கள் அனைவரும் என்னை ஏளனம் செய்கிறார்கள்; அவர்கள் தங்கள் தலைகளை அசைத்து பரியாசம்செய்கிறார்கள்
சங்கீதம் 22 : 8 (OCVTA)
“அவன் யெகோவாவை நம்பியிருக்கிறான், யெகோவா அவனை இரட்சிக்கட்டும். அவரிலே அவன் மகிழ்ச்சியாக இருக்கிறபடியால் அவர் அவனை விடுவிக்கட்டும்” என்கிறார்கள்.
சங்கீதம் 22 : 9 (OCVTA)
ஆனாலும், நீரே என்னைத் தாயின் கர்ப்பத்திலிருந்து வெளியே கொண்டுவந்தவர். நான் என் தாயின் மார்பின் அணைப்பில் இருக்கும்போதே என்னை உம்மில் நம்பிக்கையாய் இருக்கப்பண்ணினீர்.
சங்கீதம் 22 : 10 (OCVTA)
நான் பிறப்பிலிருந்தே உமது பாதுகாப்பில் இருந்தேன்; நான் என் தாயின் கர்ப்பத்தில் இருந்ததுமுதல் நீரே என் இறைவனாக இருக்கிறீர்.
சங்கீதம் 22 : 11 (OCVTA)
நீர் என்னைவிட்டுத் தூரமாயிராதேயும்; ஏனென்றால் துன்பம் நெருங்கியுள்ளது, உதவிசெய்ய ஒருவருமில்லை.
சங்கீதம் 22 : 12 (OCVTA)
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்து கொள்கின்றன; பாசான் நாட்டு பலத்த காளைகள் என்னை வளைத்து கொள்கின்றன.
சங்கீதம் 22 : 13 (OCVTA)
தங்கள் இரையை கிழிக்கிற கெர்ச்சிக்கும் சிங்கங்களைப் போல, அவர்கள் எனக்கு விரோதமாக தங்கள் வாய்களை விரிவாய்த் திறக்கிறார்கள்.
சங்கீதம் 22 : 14 (OCVTA)
என் பெலன் தரையில் ஊற்றப்பட்ட தண்ணீரைப்போல் இருக்கிறது; என் எலும்புகளெல்லாம் மூட்டுகளை விட்டுக் கழன்று போயின; என் இருதயம் மெழுகு போலாகி எனக்குள்ளே உருகிப் போயிற்று.
சங்கீதம் 22 : 15 (OCVTA)
என் பெலன் ஓட்டுத்துண்டைப் போல் வறண்டுபோயிற்று; என் நாவும் மேல்வாயுடன் ஒட்டிக்கொண்டது; என்னை சவக்குழியின் தூசியில் போடுகிறீர்.
சங்கீதம் 22 : 16 (OCVTA)
நாய்கள் என்னைச் சூழ்ந்துகொண்டன; தீயவர்களின் கூட்டம் என்னை வளைத்து கொண்டது; என் கைகளையும் என் கால்களையும் ஊடுருவக் குத்தினார்கள்.
சங்கீதம் 22 : 17 (OCVTA)
என் எலும்புகள் எல்லாவற்றையும் என்னால் எண்ண முடியும்; மக்கள் என்னை உற்றுப்பார்த்து ஏளனம் செய்து மகிழுகிறார்கள்.
சங்கீதம் 22 : 18 (OCVTA)
அவர்கள் என் அங்கிகளைத் தங்களுக்குள் பங்கிட்டு, என் உடைக்காக சீட்டுப் போடுகிறார்கள்.
சங்கீதம் 22 : 19 (OCVTA)
ஆனால் யெகோவாவே, நீர் எனக்குத் தூரமாகாதிரும்; என் பெலனே, எனக்கு உதவிசெய்ய விரைந்து வாரும்.
சங்கீதம் 22 : 20 (OCVTA)
என்னை வாளுக்குத் தப்புவியும்; என் விலைமதிப்பற்ற உயிரை நாய்களின் வலிமையிலிருந்து விடுவியும்.
சங்கீதம் 22 : 21 (OCVTA)
சிங்கங்களின் வாயிலிருந்து என்னைத் தப்புவியும்; காட்டெருதுகளின் கொம்புகளிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
சங்கீதம் 22 : 22 (OCVTA)
அப்பொழுது நான் என் ஜனங்களுக்கு உம்முடைய பெயரை அறிவிப்பேன், திருச்சபையில் நான் உம்மைத் துதிப்பேன்.
சங்கீதம் 22 : 23 (OCVTA)
யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, நீங்கள் அவரைத் துதியுங்கள்; யாக்கோபின் சந்ததிகளே, நீங்கள் அனைவரும் அவரைக் கனம்பண்ணுங்கள்; இஸ்ரயேலின் சந்ததிகளே, நீங்கள் அவரிடத்தில் பயபக்தியாய் இருங்கள்.
சங்கீதம் 22 : 24 (OCVTA)
ஏனெனில் யெகோவா துன்புறுத்தப்பட்டவனுடைய வேதனையை, அலட்சியம் பண்ணவுமில்லை அவமதிக்கவுமில்லை. அவனிடத்திலிருந்து தமது முகத்தை மறைத்துக் கொள்ளவுமில்லை; ஆனால் அவன் உதவிகேட்டுக் கதறுகையில் அவர் செவிகொடுத்தார்.
சங்கீதம் 22 : 25 (OCVTA)
நீர் செய்த செயல்களுக்காக மகா சபையில் நான் உம்மைத் துதிப்பேன்; உமக்குப் பயப்படுகிறவர்களுக்கு முன்பாக நான் என் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவேன்.
சங்கீதம் 22 : 26 (OCVTA)
ஏழைகள் சாப்பிட்டு திருப்தியடைவார்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்கள் எல்லோரும் அவரைத் துதிப்பார்கள்; அவர்கள் இருதயங்கள் என்றும் வாழ்வதாக.
சங்கீதம் 22 : 27 (OCVTA)
பூமியின் கடைசிகளெல்லாம் யெகோவாவை நினைத்து அவரிடம் திரும்பும்; நாடுகளின் குடும்பங்கள் எல்லாம் அவருக்கு முன்பாகத் தாழ்ந்து வணங்கும்.
சங்கீதம் 22 : 28 (OCVTA)
ஏனென்றால், அரசாட்சி யெகோவாவினுடையது; அவர் நாடுகளை ஆளுகை செய்கிறார்.
சங்கீதம் 22 : 29 (OCVTA)
பூமியிலுள்ள செல்வந்தர் அனைவரும் விருந்துண்டு யெகோவாவை வழிபடுவார்கள்; மரித்து மண்ணுக்குத் திரும்புவோரும், தன் உயிரைக் காத்துக்கொள்ளாதோரும் அவருக்கு முன்பாக முழங்காற்படியிடுவார்கள்.
சங்கீதம் 22 : 30 (OCVTA)
பிள்ளைகள் அவரை சேவிப்பார்கள்; வருங்கால சந்ததியினருக்கு, யெகோவாவைப் பற்றிச் சொல்லப்படும்.
சங்கீதம் 22 : 31 (OCVTA)
அவர்கள் அவருடைய நீதியை, இன்னும் பிறவாமல் இருக்கும் மக்களுக்கு பிரசித்தப்படுத்துவார்கள்: அவரே இதையெல்லாம் செய்து முடித்தார்! என்பார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31