சங்கீதம் 139 : 1 (OCVTA)
யெகோவாவே, நீர் என்னை ஆராய்ந்திருக்கிறீர், நீர் என்னை அறிந்துமிருக்கிறீர்.
சங்கீதம் 139 : 2 (OCVTA)
நான் உட்காரும்போதும் நான் எழும்பும்போதும் நீர் அறிகிறீர்; நீர் என் எண்ணங்களைத் தூரத்திலிருந்தே அறிகிறீர்.
சங்கீதம் 139 : 3 (OCVTA)
நான் வெளியே போவதையும் நான் படுப்பதையும் நீர் கவனித்துக்கொள்கிறீர்; என்னுடைய செயல்கள் எல்லாவற்றையும் நீர் நன்கு அறிவீர்.
சங்கீதம் 139 : 4 (OCVTA)
என் நாவில் ஒரு வார்த்தை பிறக்குமுன்பே, யெகோவாவே, நீர் அதை முற்றிலும் அறிந்திருக்கிறீர்.
சங்கீதம் 139 : 5 (OCVTA)
நீர் முன்னும் பின்னுமாய் என்னைச் சூழ்ந்து, நீர் உமது ஆசீர்வாதத்தின் கரத்தை என்மேல் வைத்திருக்கிறீர்.
சங்கீதம் 139 : 6 (OCVTA)
இந்த அறிவு எனக்கு மிகுந்த ஆச்சரியமும், விளங்கிக்கொள்ள முடியாததுமாயிருக்கிறது.
சங்கீதம் 139 : 7 (OCVTA)
உமது ஆவியானவரைவிட்டு என்னால் எங்கே போகமுடியும்? உமது சந்நிதியைவிட்டு என்னால் எங்கு ஓடமுடியும்?
சங்கீதம் 139 : 8 (OCVTA)
நான் வானங்கள்வரை மேலே போனாலும், நீர் அங்கே இருக்கிறீர்; என் படுக்கையை பாதாளத்தில் போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
சங்கீதம் 139 : 9 (OCVTA)
அதிகாலையின் சிறகுகளை எடுத்து நான் பறந்து சென்றாலும், கடல்களின் எல்லைகளுக்கப்பால் போய்த் தங்கினாலும்,
சங்கீதம் 139 : 10 (OCVTA)
அங்கேயும் உமது கரம் எனக்கு வழிகாட்டும்; உமது வலதுகரம் என்னை இறுக்கிப் பிடித்துக்கொள்ளும்.
சங்கீதம் 139 : 11 (OCVTA)
“நிச்சயமாகவே இருள் என்னை மறைத்துக்கொள்ளும், ஒளி என்னைச் சுற்றிலும் இரவாகும்” என்று நான் சொன்னாலும்,
சங்கீதம் 139 : 12 (OCVTA)
இருளும் உமக்கு இருட்டாய் இருக்காது; இரவும் பகலைப்போல் பிரகாசிக்கும்; ஏனெனில் இருள் உமக்கு ஒளியைப் போலவே இருக்கிறது.
சங்கீதம் 139 : 13 (OCVTA)
என் உள்ளுறுப்புகளை நீரே உருவாக்கினீர்; என் தாயின் கருப்பையில் என்னை நீரே ஒன்றாய் இணைத்தீர்.
சங்கீதம் 139 : 14 (OCVTA)
நான் மிக ஆச்சரியமாகவும் அதிசயிக்கத்தக்க வகையிலும் படைக்கப்பட்டிருக்கிறபடியால், நான் உம்மைத் துதிக்கிறேன்; உமது செயல்கள் ஆச்சரியமானவை, நான் அதை நன்றாய் அறிந்திருக்கிறேன்.
சங்கீதம் 139 : 15 (OCVTA)
நான் இரகசியமான இடத்தில் படைக்கப்பட்டபொழுது, நான் பூமியின் ஆழங்களில் ஒன்றாய் இணைக்கப்பட்ட போது, என் எலும்புகள் உமக்கு மறைவாய் இருக்கவில்லை.
சங்கீதம் 139 : 16 (OCVTA)
உருவம் பெற்றிராத என் உடலை உம்முடைய கண்கள் கண்டன; எனக்கு நியமிக்கப்பட்ட எல்லா நாட்களும், அவை ஒன்றாகிலும் வருமுன்பே உம்முடைய புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தன.
சங்கீதம் 139 : 17 (OCVTA)
இறைவனே, என்னைப்பற்றிய உம்முடைய எண்ணங்கள் எவ்வளவு அருமையானவை! அவைகளின் தொகை எவ்வளவு பெரியது!
சங்கீதம் 139 : 18 (OCVTA)
நான் அவைகளை எண்ணப்போனால், அவை மணலைப் பார்க்கிலும் அதிகமாயிருக்கும்; நான் விழிக்கும்போதோ இன்னும் உம்முடனேயே இருக்கிறேன்.
சங்கீதம் 139 : 19 (OCVTA)
இறைவனே, கொடியவர்களை நீர் கொன்றுபோட்டால் நலமாயிருக்கும்! இரத்தவெறியரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்!
சங்கீதம் 139 : 20 (OCVTA)
அவர்கள் உம்மைக் குறித்துத் தீயநோக்கத்துடன் பேசுகிறார்கள்; உம்முடைய விரோதிகள் உமது பெயரைத் தவறாய் பயன்படுத்துகிறார்கள்.
சங்கீதம் 139 : 21 (OCVTA)
யெகோவாவே, உம்மை வெறுக்கிறவர்களை நான் வெறுக்காதிருக்கிறேனோ? உமக்கு விரோதமாய் எழும்புகிறவர்களை அருவருக்காமல் இருக்கிறேனோ?
சங்கீதம் 139 : 22 (OCVTA)
ஆம், நான் அவர்களை முற்றிலும் வெறுக்கிறேன். அவர்களை என் பகைவர்களாகவே நான் எண்ணுகிறேன்.
சங்கீதம் 139 : 23 (OCVTA)
இறைவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னை சோதித்து என் வருத்தமான சிந்தனைகளை அறிந்துகொள்ளும்.
சங்கீதம் 139 : 24 (OCVTA)
உம்மை வருந்தும்படிச் செய்யும் வழி ஏதாவது என்னில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24