சங்கீதம் 104 : 1 (OCVTA)
என் ஆத்துமாவே, யெகோவாவைத் துதி. என் இறைவனாகிய யெகோவாவே, நீர் எவ்வளவு பெரியவர்; மேன்மையையும், மகத்துவத்தையும் நீர் அணிந்திருக்கிறீர்.
சங்கீதம் 104 : 2 (OCVTA)
யெகோவா ஆடையைப்போல ஒளியை அணிந்துள்ளார்; அவர் வானங்களை ஒரு கூடாரத்தைப்போல் விரித்துள்ளார்.
சங்கீதம் 104 : 3 (OCVTA)
அவர் தமது மேலறைகளை மழைமேகங்களின் மேலாக அமைக்கிறார்; அவர் மேகங்களைத் தமது தேராக்கி, காற்றின் சிறகுகள்மேல் செல்கிறார்.
சங்கீதம் 104 : 4 (OCVTA)
அவர் காற்றுகளைத் தமது இறைத்தூதுவர்களாவும், நெருப்பு ஜூவாலைகளைத் தம்முடைய ஊழியர்களாகவும் ஆக்குகிறார்.
சங்கீதம் 104 : 5 (OCVTA)
அவர் பூமியை அதின் அடித்தளங்கள்மீது அமைத்தார்; அது ஒருபோதும் அசைக்கப்படாது.
சங்கீதம் 104 : 6 (OCVTA)
உடையினால் மூடுவது போல் நீர் அதை ஆழ்கடலினால் மூடினீர்; வெள்ளம் மலைகளுக்கு மேலாய் நின்றது.
சங்கீதம் 104 : 7 (OCVTA)
ஆனாலும் உமது கண்டிப்பின்முன் வெள்ளம் விலகி ஓடியது; உமது முழக்கத்தின் சத்தத்தைக் கேட்டு அது விரைந்து ஓடியது.
சங்கீதம் 104 : 8 (OCVTA)
அவைகள் மலைகளுக்கு மேலாய் ஓடி, பள்ளத்தாக்குகளில் இறங்கி, நீர் அவைகளுக்கு ஏற்படுத்திய இடத்தில் நின்றன.
சங்கீதம் 104 : 9 (OCVTA)
அவைகள் கடக்கமுடியாத ஓர் எல்லையை நீர் ஏற்படுத்தினீர்; அவை இனி ஒருபோதும் பூமியை மூடிக்கொள்ளாது.
சங்கீதம் 104 : 10 (OCVTA)
அவர் நீரூற்றுகளை பள்ளத்தாக்குகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்படி செய்கிறார்; அது மலைகளுக்கிடையே ஓடுகின்றது.
சங்கீதம் 104 : 11 (OCVTA)
அவை வெளியின் மிருகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் கொடுக்கின்றன; காட்டுக் கழுதைகளும் அங்கே தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக்கொள்கின்றன.
சங்கீதம் 104 : 12 (OCVTA)
ஆகாயத்துப் பறவைகள் நீர்நிலைகளின் அருகே கூடு கட்டுகின்றன; கிளைகளின் மத்தியிலே அவை பாடுகின்றன.
சங்கீதம் 104 : 13 (OCVTA)
அவர் தமது மேலறைகளிலிருந்து மலைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறார்; பூமி அவருடைய செய்கையின் பலனால் திருப்தியடைகிறது.
சங்கீதம் 104 : 14 (OCVTA)
அவர் மந்தைகளுக்காகப் புல்லையும், மனிதன் பயிரிடும் தாவரங்களையும் வளரச்செய்கிறார், அவர் பூமியிலிருந்து அவர்களுக்கு உணவு கிடைக்கச் செய்கிறார்:
சங்கீதம் 104 : 15 (OCVTA)
மனிதனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சை இரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டுபண்ணும் எண்ணெயையும், அவர்களைப் பெலப்படுத்தும் உணவையும் விளைவிக்கிறார்.
சங்கீதம் 104 : 16 (OCVTA)
யெகோவாவினுடைய மரங்களுக்கு, அவர் நாட்டிய லெபனோனின் கேதுரு மரங்களுக்கு நல்ல நீர்ப்பாய்ச்சலை கொடுக்கிறார்.
சங்கீதம் 104 : 17 (OCVTA)
அங்கே பறவைகள் தம் கூடுகளைக் கட்டுகின்றன; கொக்குகள் தேவதாரு மரங்களில் குடியிருக்கின்றன.
சங்கீதம் 104 : 18 (OCVTA)
உயர்ந்த மலைகள் காட்டாடுகளுக்குச் சொந்தமாயும், செங்குத்தான பாறைகள் குழிமுயல்களுக்குப் புகலிடமாயும் இருக்கின்றன.
சங்கீதம் 104 : 19 (OCVTA)
காலங்களைக் குறிக்க அவர் நிலவைப் படைத்தார்; சூரியன் தான் எப்போது மறையவேண்டும் என்பதை அறியும்.
சங்கீதம் 104 : 20 (OCVTA)
நீர் இருளைக் கொண்டுவருகிறீர், அப்பொழுது இரவாகின்றது; காட்டு மிருகங்கள் எல்லாம் பதுங்கித் திரிகின்றன.
சங்கீதம் 104 : 21 (OCVTA)
சிங்கங்கள் தங்கள் இரைக்காகக் கர்ஜிக்கின்றன; இறைவனிடமிருந்து அவை தங்களுடைய உணவைத் தேடுகின்றன.
சங்கீதம் 104 : 22 (OCVTA)
சூரியன் உதித்ததும் அவை ஒளிந்து ஓடுகின்றன; அவை திரும்பிப்போய் தங்கள் குகைகளில் படுத்துக் கொள்கின்றன.
சங்கீதம் 104 : 23 (OCVTA)
அப்பொழுது மனிதன் தன் வேலைக்குப் போகிறான்; மாலையாகும்வரை தன் தொழிலில் ஈடுபடுகின்றான்.
சங்கீதம் 104 : 24 (OCVTA)
யெகோவாவே, உமது செயல்கள் எண்ணற்றவை! அவை அனைத்தையும் நீர் ஞானத்தில் படைத்திருக்கிறீர்; பூமி நீர் படைத்த உயிரினங்களால் நிறைந்திருக்கின்றது.
சங்கீதம் 104 : 25 (OCVTA)
அங்கே விரிந்து பரந்த கடல் உண்டு; பெரிதும் சிறிதுமான எண்ணிலடங்கா வாழும் உயிரினங்கள் அங்கே உண்டு.
சங்கீதம் 104 : 26 (OCVTA)
அங்கே கப்பல்கள் இங்குமங்கும் போகின்றன; நீர் உருவாக்கிய லிவியாதானும் அங்கே துள்ளி விளையாடும்.
சங்கீதம் 104 : 27 (OCVTA)
நீர் அவைகளுக்கு உரிய நேரத்தில் உணவு கொடுப்பீர் என்று அவைகளெல்லாம் உம்மையே பார்த்திருக்கின்றன.
சங்கீதம் 104 : 28 (OCVTA)
நீர் அதை அவர்களுக்கு வழங்கும்போது, அவை சேகரித்துக்கொள்கின்றன; நீர் உமது கரத்தைத் திறக்கும்போது, அவை நன்மைகளால் திருப்தியடைகின்றன.
சங்கீதம் 104 : 29 (OCVTA)
நீர் உமது முகத்தை மறைக்கும்போது, அவை திகைக்கின்றன; நீர் அவைகளின் சுவாசத்தை எடுத்துவிட, அவை இறந்து தூசிக்குத் திரும்புகின்றன.
சங்கீதம் 104 : 30 (OCVTA)
நீர் உமது ஆவியை அனுப்புகையில், அவை படைக்கப்படுகின்றன; நீர் பூமியின் மேற்பரப்பைப் புதுப்பிக்கிறீர்.
சங்கீதம் 104 : 31 (OCVTA)
யெகோவாவின் மகிமை என்றென்றும் நிலைத்திருப்பதாக; யெகோவா தமது செயல்களில் மகிழ்வாராக.
சங்கீதம் 104 : 32 (OCVTA)
அவர் பூமியைப் பார்க்கும்போது அது நடுங்குகின்றது; மலைகளைத் தொடும்போது அவை புகைகின்றன.
சங்கீதம் 104 : 33 (OCVTA)
நான் என் வாழ்நாளெல்லாம் யெகோவாவைப் பாடுவேன்; நான் உயிரோடிருக்குமட்டும் என் இறைவனுக்குத் துதி பாடுவேன்.
சங்கீதம் 104 : 34 (OCVTA)
நான் யெகோவாவிடம் களிகூரும்பொழுது, என் தியானமும் அவருக்கு மகிழ்ச்சியாய் இருப்பதாக.
சங்கீதம் 104 : 35 (OCVTA)
ஆனால் பாவிகள் பூமியிலிருந்து இல்லாமல் போவார்களாக; கொடியவர்கள் இனி இல்லாமல் போவார்கள். என் ஆத்துமாவே யெகோவாவைத் துதி. அல்லேலூயா.
❮
❯