நீதிமொழிகள் 29 : 1 (OCVTA)
அநேகமுறை கண்டிக்கப்பட்டும், பிடிவாதமாகவே இருக்கிறவர்கள், திடீரென தீர்வு இல்லாமல் அழிந்துபோவார்கள்.
நீதிமொழிகள் 29 : 2 (OCVTA)
நீதிமான்கள் பெருகும்போது, மக்கள் மகிழ்ச்சியடைவார்கள்; கொடியவர்கள் ஆளும்போதோ, மக்கள் வேதனைக் குரல் எழுப்புவார்கள்.
நீதிமொழிகள் 29 : 3 (OCVTA)
ஞானத்தை விரும்புகிறவன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறான்; ஆனால் விபசாரிகளுடன் கூட்டாளியாய் இருப்பவன் தன்னுடைய செல்வத்தைச் சீரழிக்கிறான்.
நீதிமொழிகள் 29 : 4 (OCVTA)
அரசன் நியாயத்தினால் நாட்டை நிலைநிறுத்துகிறான்; ஆனால் இலஞ்சத்தின்மேல் பேராசை கொண்டவர்கள் நாட்டை அழிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 5 (OCVTA)
தனக்கு அடுத்திருப்போரை முகஸ்துதி செய்கிறவர்கள், அவருடைய கால்களுக்கு வலையை விரிக்கிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 6 (OCVTA)
தீயவர் தங்கள் பாவத்திலேயே சிக்கிக்கொள்கிறார்கள், ஆனால் நீதிமான்கள் ஆர்ப்பரித்து மகிழ்கிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 7 (OCVTA)
நீதிமான்கள் ஏழைகளுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதில் கவனமாயிருக்கிறார்கள்; ஆனால் கொடியவர்களுக்கு அந்த அக்கறையில்லை.
நீதிமொழிகள் 29 : 8 (OCVTA)
ஏளனம் செய்பவர்கள் பட்டணத்தில் குழப்பத்தை உண்டுபண்ணுகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் கோபத்தை விலக்குகிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 9 (OCVTA)
ஞானமுள்ளவர் மூடரை நீதிமன்றத்திற்குக் கொண்டுபோனால், மூடர் சினங்கொண்டு கேலிசெய்வார், அங்கு அமைதி இருக்காது.
நீதிமொழிகள் 29 : 10 (OCVTA)
இரத்தவெறியர் உத்தமமானவர்களை வெறுக்கிறார்கள்; நீதிமான்களைக் கொல்லும்படி தேடுகிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 11 (OCVTA)
மதியீனர்கள் தம் கோபத்தை அடக்காமல் வெளிப்படுத்துகிறார்கள்; ஆனால் ஞானமுள்ளவர்கள் அதை அடக்கிக் கொள்கிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 12 (OCVTA)
ஒரு ஆளுநர் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவருடைய ஊழியர்கள் எல்லோரும் கொடியவராவார்கள்.
நீதிமொழிகள் 29 : 13 (OCVTA)
ஏழைக்கும் அவரை ஒடுக்கிறவருக்கும் பொதுவானது ஒன்று உண்டு: யெகோவாவே அந்த இருவரின் கண்களுக்கும் பார்வையைக் கொடுத்திருக்கிறார்.
நீதிமொழிகள் 29 : 14 (OCVTA)
அரசன் ஏழைகளுக்கு நியாயத்துடன் தீர்ப்பளித்தால், அவனுடைய சிங்காசனம் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
நீதிமொழிகள் 29 : 15 (OCVTA)
பிரம்பும் கண்டனமும் ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் தன் விருப்பப்படி வளரவிடப்படுகிற பிள்ளையோ, தன் தாய்க்கு அவமானத்தைக் கொண்டுவரும்.
நீதிமொழிகள் 29 : 16 (OCVTA)
கொடியவர்கள் பெருகும்போது பாவமும் பெருகும், ஆனால் நீதிமான்கள் அவர்களுடைய வீழ்ச்சியைக் காண்பார்கள்.
நீதிமொழிகள் 29 : 17 (OCVTA)
உன் பிள்ளைகளை கண்டித்துத் திருத்து, அவர்கள் உனக்கு மன ஆறுதலைக் கொடுப்பார்கள்; அவர்கள் உன் மனதை சந்தோஷப்படுத்துவார்கள்.
நீதிமொழிகள் 29 : 18 (OCVTA)
இறைவெளிப்பாடு இல்லாத இடத்தில் மக்கள் கட்டுக்கடங்காதிருப்பார்கள்; ஆனால் ஞானத்தின் சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
நீதிமொழிகள் 29 : 19 (OCVTA)
வேலைக்காரர்களை வெறும் வார்த்தையினால் திருத்தமுடியாது; அவர்கள் அதை விளங்கிக்கொண்டாலும் அதை கவனத்தில் கொள்ளமாட்டார்கள்.
நீதிமொழிகள் 29 : 20 (OCVTA)
பதற்றப்பட்டுப் பேசுபவனை நீ பார்த்திருக்கிறாயா? அவரைவிட மூடராவது திருந்துவாரென்று நம்பலாம்.
நீதிமொழிகள் 29 : 21 (OCVTA)
ஒருவர் தன் வேலைக்காரர்களை இளமையில் கட்டுப்பாடில்லாமல் விட்டால், இறுதியில் அவர்கள் ஆணவம் பிடித்தவர்களாவார்கள்.
நீதிமொழிகள் 29 : 22 (OCVTA)
கோபக்காரர்கள் பிரிவினையைத் தூண்டிவிடுகிறார்கள்; முற்கோபிகள் அநேக பாவங்களைச் செய்கிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 23 (OCVTA)
ஒருவருடைய அகந்தை அவரை வீழ்த்தும், ஆனால் மனத்தாழ்மை கனத்தைக் கொண்டுவரும்.
நீதிமொழிகள் 29 : 24 (OCVTA)
திருடர்களுக்கு உடந்தையாய் இருப்பவர்கள் தங்களுக்கே பகைவராய் இருக்கிறார்கள்; அவர்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டதினால் சாட்சி சொல்லத் துணியமாட்டார்கள்.
நீதிமொழிகள் 29 : 25 (OCVTA)
மனிதருக்குப் பயப்படுவது கண்ணியாயிருக்கும்; ஆனால் யெகோவாவிடம் நம்பிக்கை வைப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
நீதிமொழிகள் 29 : 26 (OCVTA)
அநேகர் ஆளுநரின் தயவை தேடுகிறார்கள்; ஆனால் யெகோவாவிடமிருந்தே மனிதர் நியாயத்தைப் பெறுகிறார்கள்.
நீதிமொழிகள் 29 : 27 (OCVTA)
நீதிமான்கள் நேர்மையற்றவர்களை வெறுக்கிறார்கள்; கொடியவர்கள் நீதிமான்களை வெறுக்கிறார்கள்.
❮
❯