நீதிமொழிகள் 26 : 1 (OCVTA)
கோடைகாலத்தில் உறைபனியும் அறுவடை காலத்தில் மழையும் தகாததுபோல், மூடருக்கு மேன்மை பொருத்தமற்றது.
நீதிமொழிகள் 26 : 2 (OCVTA)
சிறகடித்துப் பறக்கும் அடைக்கலான் குருவியைப்போலவும் விரைந்து பறக்கும் இரட்டைவால் குருவியைப்போலவும் காரணமின்றி இடப்பட்ட சாபமும் தங்காது.
நீதிமொழிகள் 26 : 3 (OCVTA)
குதிரைக்கு சவுக்கும், கழுதைக்கு கடிவாளமும், மூடரின் முதுகிற்கு பிரம்பும் ஏற்றது.
நீதிமொழிகள் 26 : 4 (OCVTA)
மூடர்களுக்கு அவர்களுடைய மூடத்தனத்தின்படி பதில் சொல்லாதே; சொன்னால் நீயும் அவர்களைப்போல் இருப்பாய்.
நீதிமொழிகள் 26 : 5 (OCVTA)
மூடருக்கு அவர்களுடைய மூடத்தனத்திற்கேற்ற பதிலைக் கொடு; இல்லாவிட்டால் அவர்கள் தங்களை ஞானமுள்ளவர்கள் என்று எண்ணிக்கொள்வார்கள்.
நீதிமொழிகள் 26 : 6 (OCVTA)
மூடருடைய கையில் செய்தி கொடுத்து அனுப்புவது, தன் காலைத் தானே வெட்டுவதைப் போலவும் கேடு விளைவிப்பது போலவும் இருக்கும்.
நீதிமொழிகள் 26 : 7 (OCVTA)
மூடரின் வாயிலுள்ள பழமொழி, பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும்.
நீதிமொழிகள் 26 : 8 (OCVTA)
மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும்.
நீதிமொழிகள் 26 : 9 (OCVTA)
மூடரின் வாயிலுள்ள பழமொழி, குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும்.
நீதிமொழிகள் 26 : 10 (OCVTA)
மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான்.
நீதிமொழிகள் 26 : 11 (OCVTA)
நாய் தான் கக்கினதை மீண்டும் தேடிப்போகிறது போல, மூடரும் தம் மூடத்தனத்திற்குத் திரும்புகிறார்கள்.
நீதிமொழிகள் 26 : 12 (OCVTA)
தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம்.
நீதிமொழிகள் 26 : 13 (OCVTA)
“வீதியிலே சிங்கம் நிற்கிறது, ஒரு பயங்கர சிங்கம் வீதிகளில் நடமாடித் திரிகிறது!” என்று சோம்பேறி சொல்லுகிறான்.
நீதிமொழிகள் 26 : 14 (OCVTA)
ஒரு கதவு அதின் கீழ்ப்பட்டையில் முன்னும் பின்னும் திரும்புகிறது போல, சோம்பேறியும் தனது படுக்கையில் திரும்பத்திரும்ப புரளுகிறான்.
நீதிமொழிகள் 26 : 15 (OCVTA)
சோம்பேறிகள் தங்கள் கையில் உணவை எடுத்துக்கொள்வார்கள்; அதைத் தங்கள் வாய்க்கு கொண்டுவர முடியாத அளவுக்கு அவர்கள் சோம்பேறியாய் இருக்கிறார்கள்.
நீதிமொழிகள் 26 : 16 (OCVTA)
விவேகமாய் பதில்சொல்கிற ஏழு மனிதரைவிட, சோம்பேறி தன் பார்வையில் தன்னை ஞானமுள்ளவன் என எண்ணுகிறான்.
நீதிமொழிகள் 26 : 17 (OCVTA)
வேறு ஒருவரின் வாக்குவாதத்தில் தலையிடுகிறவன், தெருநாயின் காதைப்பிடித்து இழுக்கிறவனைப் போலிருக்கிறான்.
நீதிமொழிகள் 26 : 18 (OCVTA)
தீப்பந்தங்களையும் கொல்லும் அம்புகளையும் எய்கிற பைத்தியக்காரனைப் போலவே,
நீதிமொழிகள் 26 : 19 (OCVTA)
தன் அயலானை ஏமாற்றிவிட்டு, “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான்.
நீதிமொழிகள் 26 : 20 (OCVTA)
விறகில்லாமல் நெருப்பு அணைந்து போவதுபோல, புறங்கூறுகிறவன் இல்லாவிட்டால் வாக்குவாதங்கள் அடங்கும்.
நீதிமொழிகள் 26 : 21 (OCVTA)
தணலுக்குக் கரியும், நெருப்புக்கு விறகும் தேவைப்படுவதுபோலவே, சச்சரவை மூட்டி விடுவதற்குச் சண்டைக்காரன் தேவை.
நீதிமொழிகள் 26 : 22 (OCVTA)
புறங்கூறுகிறவர்களின் வார்த்தைகள் சுவையான உணவைப் போன்றவை; அவை மனிதருடைய உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துவிடும்.
நீதிமொழிகள் 26 : 23 (OCVTA)
தீய இருதயத்தை இனிய பேச்சால் மறைப்பது, மண் பாத்திரத்தை வெள்ளிப் பூச்சால் பளபளக்கச் செய்வது போலிருக்கிறது.
நீதிமொழிகள் 26 : 24 (OCVTA)
தீயநோக்கமுள்ள மனிதன் தன் உதடுகளினால் தன் எண்ணங்களை மறைக்கிறான்; ஆனால் தன் இருதயத்திலோ வஞ்சனையை நிறைத்து வைத்திருக்கிறான்.
நீதிமொழிகள் 26 : 25 (OCVTA)
அவனுடைய பேச்சு கவர்ச்சியாயிருந்தாலும், நீ அவனை நம்பாதே; அவனுடைய இருதயம் ஏழு அருவருப்புகளால் நிறைந்திருக்கின்றது.
நீதிமொழிகள் 26 : 26 (OCVTA)
அவனுடைய பகை ஏமாற்றத்தால் மறைக்கப்பட்டிருந்தாலும், அவனுடைய கொடுமையோ மக்கள் மத்தியில் வெளியரங்கமாகும்.
நீதிமொழிகள் 26 : 27 (OCVTA)
ஒருவன் இன்னொருவனுக்குக் குழி தோண்டினால், அவன் தானே அதற்குள் விழுவான்; ஒருவன் கல்லை மேல்நோக்கி உருட்டிவிட்டால், அந்தக் கல் திரும்பி அவன் மேலேயே உருண்டு விழும்.
நீதிமொழிகள் 26 : 28 (OCVTA)
பொய்பேசும் நாவு தான் புண்படுத்தியவர்களையே வெறுக்கிறது; முகஸ்துதி பேசும் வாய் அழிவைக் கொண்டுவரும்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28