பிலிப்பியர் 3 : 1 (OCVTA)
மாம்ச இயல்பில் மனவுறுதி வேண்டாம் கடைசியாக, பிரியமானவர்களே, கர்த்தரில் சந்தோஷமாயிருங்கள். எழுதியதையே மீண்டும் எழுதுவது எனக்கு கஷ்டமானதல்ல. அது உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்கும்.
பிலிப்பியர் 3 : 2 (OCVTA)
நாய்களுக்கு ஜாக்கிரதையாயிருங்கள், விருத்தசேதனம் வேண்டும் என்பவர்களைக்குறித்து கவனமாயிருங்கள். தீமை செய்கிறவர்களுக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
பிலிப்பியர் 3 : 3 (OCVTA)
மாம்சத்தில் மனவுறுதி வைக்காமல் இறைவனின் ஆவியானவரின் துணையுடன் வழிபட்டு, கிறிஸ்து இயேசுவை மகிமைப்படுத்தும் நாமே, உண்மையான விருத்தசேதனமுள்ளவர்கள்.
பிலிப்பியர் 3 : 4 (OCVTA)
மாம்சத்தின்மேல் மனவுறுதிகொள்வதற்கு என்னிடமும் தன்மைகள் உண்டு. யாராவது மனுஷிக விஷயத்தில் மனவுறுதி வைக்கும் தன்மைகள் தன்னிடம் இருப்பதாக எண்ணினால், என்னிடம் அது அதிகமாய் இருக்கிறது:
பிலிப்பியர் 3 : 5 (OCVTA)
ஏனெனில் நான் பிறந்து எட்டாம் நாளிலேயே விருத்தசேதனம் பெற்றவன். இஸ்ரயேல் வம்சத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். எபிரெயரில் பிறந்த எபிரெயன்; மோசேயின் சட்டத்தின்படி நான் ஒரு பரிசேயன்.
பிலிப்பியர் 3 : 6 (OCVTA)
பக்தி வைராக்கியத்தின் நிமித்தம் திருச்சபையைத் துன்புறுத்தியவன்; மோசேயினுடைய சட்டத்தின் நீதியைப் பொறுத்தவரையில் குற்றமற்றவன்.
பிலிப்பியர் 3 : 7 (OCVTA)
ஆனால் எனக்கு எவைகளெல்லாம் பயனுள்ளவைகளாய் இருந்தனவோ, அவை எல்லாமே இப்பொழுது கிறிஸ்து என்னில் செய்தவற்றின் நிமித்தம், எனக்கு பயனற்றவை என்று கருதுகிறேன்.
பிலிப்பியர் 3 : 8 (OCVTA)
அதுமட்டுமல்ல, நான் என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறியும் அந்த அறிவின் மேன்மையுடன் அவைகளை ஒப்பிடும்போது, எல்லாமே நஷ்டம் என்று கருதுகிறேன். நான் அவருக்காக எல்லாவற்றையும் அகற்றி, கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள, அவைகளைக் குப்பையாக எண்ணுகிறேன்.
பிலிப்பியர் 3 : 9 (OCVTA)
நான் அவரோடு, இணைந்திருக்கவே விரும்புகிறேன். மோசேயின் சட்டத்தினால் வரும் சுயநீதியை உடையவனாயிராமல், கிறிஸ்துவில் வைக்கும் விசுவாசத்தின்மூலம் கொடுக்கப்பட்ட அவருடைய நீதியை உடையவனாய் இருக்கவே விரும்புகிறேன். இந்த நீதி இறைவனிலிருந்து விசுவாசத்தினால் வருகிறதாயிருக்கிறது.
பிலிப்பியர் 3 : 10 (OCVTA)
நான் கிறிஸ்துவை அறியவும், அவரின் உயிர்த்தெழுதலின் வல்லமையை அறியவும் விரும்புகிறேன். அத்துடன் அவருடைய மரணத்தில் அவரைப் போலாகி, அவருடைய துன்பத்தைப் பகிர்ந்துகொள்வதன் ஐக்கியத்தையும் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
பிலிப்பியர் 3 : 11 (OCVTA)
இவ்வாறு எப்படியாகிலும், மரித்தோரின் உயிர்த்தெழுதலை நானும் அடைந்துகொள்ள முடியும்.
பிலிப்பியர் 3 : 12 (OCVTA)
இவை எல்லாவற்றையும் நான் ஏற்கெனவே பெற்றுவிட்டேன் என்றோ, ஏற்கெனவே முழுமை நிலையை அடைந்துவிட்டேன் என்றோ நான் கூறவில்லை. ஆனால் கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கத்தை நிறைவேற்றவேண்டும் என்றே தொடர்ந்து கடும் முயற்சிசெய்கிறேன்.
பிலிப்பியர் 3 : 13 (OCVTA)
பிரியமானவர்களே, நான் அந்த இலக்கை அடைந்துவிட்டேன் என்று எண்ணவில்லை. ஆனால் நான் ஒன்றுசெய்கிறேன்: கடந்து போனவற்றை மறந்து, எனக்கு முன்னதாக உள்ளவற்றை நோக்கி, அவற்றை அடைவதற்காக கடும் முயற்சி எடுக்கிறேன்.
பிலிப்பியர் 3 : 14 (OCVTA)
நான் இறைவன் கொடுக்கப்போகும் பரிசை வென்றெடுப்பதற்காக, இலக்கை நோக்கி முன்னேற கடுமையாய் தொடருகிறேன். அந்தப் பரிசை, அதாவது பரலோக வாழ்வைப் பெறும்படியாகவே, இறைவன் என்னை கிறிஸ்து இயேசுவின் மூலமாக அழைத்திருக்கிறார்.
பிலிப்பியர் 3 : 15 (OCVTA)
பவுலின் முன்மாதிரியை பின்பற்றுதல் எனவே நம்மில் முதிர்ச்சி அடைந்தோர் யாவரும், இவ்வாறான சிந்தையே கொண்டிருக்கவேண்டும். எதைப்பற்றியாவது உங்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்குமானால், அதையும்கூட, இறைவனே உங்களுக்குத் தெளிவுபடுத்துவார்.
பிலிப்பியர் 3 : 16 (OCVTA)
ஆனால் நாம் ஏற்கெனவே அடைந்திருந்த வளர்ச்சிக்கு ஏற்றவிதமாய் வாழமுயல்வோம்.
பிலிப்பியர் 3 : 17 (OCVTA)
பிரியமானவர்களே, என்னுடைய முன்மாதிரியைப் பின்பற்றுபவர்களோடு, நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். நாங்கள் உங்களுக்குக் காட்டிய எடுத்துக்காட்டின்படி வாழ்கிறவர்களையும் கவனித்துக் கற்றுக்கொள்ளுங்கள்.
பிலிப்பியர் 3 : 18 (OCVTA)
ஏனெனில், அநேகர் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைவர்களாகவே வாழ்கிறார்கள். இதைப்பற்றி நான் உங்களுக்கு அடிக்கடி சொல்லியிருக்கிறேன். இப்பொழுது மீண்டும் அதைக் கண்ணீருடன் உங்களுக்குச் சொல்கிறேன்.
பிலிப்பியர் 3 : 19 (OCVTA)
பேரழிவே அவர்களது முடிவு, அவர்களுடைய வயிறே அவர்களது தெய்வம், வெட்கக்கேடானது அவர்களது மேன்மை, பூமிக்குரியவைகளைப் பற்றியே அவர்களது சிந்தனை.
பிலிப்பியர் 3 : 20 (OCVTA)
ஆனால் நமது குடியுரிமை பரலோகத்திற்கே உரியது. அங்கிருந்தே கர்த்தராகிய இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வருவாரென எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம்.
பிலிப்பியர் 3 : 21 (OCVTA)
அவர் எல்லாவற்றையும் தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவர தமது வல்லமையான ஆற்றலைக் கொடுக்கும்படியே நமது பலவீனமான அழிவுக்குரிய உடல்களை மகிமையுள்ள உடலைப்போல் மாற்றுவார்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21