எண்ணாகமம் 25 : 1 (OCVTA)
இஸ்ரயேலரை வீழ்த்த மோவாபின் சூழ்ச்சி இஸ்ரயேலர் சித்தீமில் தங்கியிருக்கையில், இஸ்ரயேல் மனிதர் மோவாபிய பெண்களுடன் பாலியல் முறைகேட்டில் ஈடுபடத் தொடங்கினார்கள்.
எண்ணாகமம் 25 : 2 (OCVTA)
அப்பெண்கள் தங்கள் தெய்வங்களுக்குச் செலுத்திய பலிகளில் பங்குபெற்ற அவர்களை அழைத்தார்கள். எனவே அம்மனிதர், பலியிட்டதையும் சாப்பிட்டு, மோவாபிய தெய்வங்களை விழுந்து வணங்கினார்கள்.
எண்ணாகமம் 25 : 3 (OCVTA)
இவ்வாறு இஸ்ரயேலர் பாகால்பேயோர் தெய்வத்தை வணங்குவதற்கு இணைந்துகொண்டனர். அப்பொழுது யெகோவாவின் கோபம் இஸ்ரயேலருக்கு எதிராக மூண்டது.
எண்ணாகமம் 25 : 4 (OCVTA)
யெகோவா மோசேயிடம், “நீ இந்த மக்களில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர்கள் எல்லோரையும் கூட்டிக்கொண்டுபோய் அவர்களைக் கொன்றுவிடு. யெகோவாவின் முன்பாக பகல்* பகல் அல்லது சூரிய ஒளியில். வெளிச்சத்தில் அவர்களின் உடல்களைப்போடு. அப்பொழுது யெகோவாவின் கோபம் இஸ்ரயேலைவிட்டு நீங்கும்” என்றார்.
எண்ணாகமம் 25 : 5 (OCVTA)
எனவே மோசே இஸ்ரயேலின் நீதிபதிகளிடம், “நீங்கள் ஒவ்வொருவரும் பாகால்பேயோரின் வழிபாட்டில் ஈடுபட்ட உங்கள் மனிதர்களைக் கொன்றுபோடுங்கள்” என்று சொன்னான்.
எண்ணாகமம் 25 : 6 (OCVTA)
மோசேயும், இஸ்ரயேல் மக்களனைவரும் சபைக்கூடார வாசலில் அழுதுகொண்டு நிற்கும்போது, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகவே இஸ்ரயேல் மனிதன் ஒருவன், ஒரு மீதியானிய பெண்ணை அழைத்துக்கொண்டு தன் கூடாரத்திற்கு வந்தான்.
எண்ணாகமம் 25 : 7 (OCVTA)
ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் அதைக் கண்டபோது, மக்கள் கூட்டத்திலிருந்து எழுந்து தன் கையில் ஒரு ஈட்டியை எடுத்துக்கொண்டு,
எண்ணாகமம் 25 : 8 (OCVTA)
அந்த இஸ்ரயேல் மனிதனின் பின்னால் கூடாரத்திற்குள் போனான். அங்கே அந்த இஸ்ரயேலனையும், அப்பெண்ணையும் ஊடுருவக் குத்தினான். அப்பொழுது இஸ்ரயேலர் மத்தியில் பரவியிருந்த கொள்ளைநோய் அவர்களைவிட்டு நீங்கியது.
எண்ணாகமம் 25 : 9 (OCVTA)
ஆனாலும் 24,000 பேர் கொள்ளைநோயினால் இறந்தார்கள்.
எண்ணாகமம் 25 : 10 (OCVTA)
அப்பொழுது யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
எண்ணாகமம் 25 : 11 (OCVTA)
“ஆசாரியன் ஆரோனின் மகனான எலெயாசாரின் மகன் பினெகாஸ் என் கோபத்தை இஸ்ரயேலரை விட்டுத் திருப்பிவிட்டான். ஏனெனில், அவர்கள் மத்தியில் எனக்குரிய கனத்தைக்குறித்து அவனும் என்னைப்போலவே வைராக்கியமாய் இருந்தான். அதனால் நான் என் வைராக்கியத்தில் அவர்களை முற்றிலும் அழிக்கவில்லை.
எண்ணாகமம் 25 : 12 (OCVTA)
ஆகையால் நான் என் சமாதானத்தின் உடன்படிக்கையை அவனுடன் ஏற்படுத்துகிறேன் என்று அவனுக்குச் சொல்.
எண்ணாகமம் 25 : 13 (OCVTA)
ஏனெனில், அவன் தன் இறைவனின் கனத்தைக்குறித்து, பக்திவைராக்கியமாய் இருந்து இஸ்ரயேலருக்காகப் பாவநிவிர்த்தி செய்தான். அதனால் அவனுக்கும், அவன் சந்ததியினருக்கும் ஒரு நிரந்தரமான ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை இருக்கும்” என்றார்.
எண்ணாகமம் 25 : 14 (OCVTA)
அந்த மீதியானிய பெண்ணுடன் குத்தப்பட்டு இறந்த இஸ்ரயேலனின் பெயர் சிம்ரி. அவன் சல்லூவின் மகனும், சிமியோன் குடும்பங்களில் ஒன்றுக்குத் தலைவனுமாயிருந்தான்.
எண்ணாகமம் 25 : 15 (OCVTA)
குத்தப்பட்டு இறந்த மீதியானிய பெண்ணின் பெயர் கஸ்பி. மீதியானிய குடும்பம் ஒன்றுக்குத் தலைவனான சூர் என்பவனின் மகள்.
எண்ணாகமம் 25 : 16 (OCVTA)
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது,
எண்ணாகமம் 25 : 17 (OCVTA)
“மீதியானியரைப் பகைவர்களாய் நடத்தி, அவர்களைக் கொன்றுபோடுங்கள்.
எண்ணாகமம் 25 : 18 (OCVTA)
ஏனெனில் அவர்கள் பேயோரை வழிபடச்செய்ததிலும், மீதியானியத் தலைவனுடைய மகளும், தங்கள் சகோதரியுமான கஸ்பியின் மூலமாகவும் உங்களை வஞ்சித்தார்கள். பேயோர் வழிபாட்டில் நீங்கள் இணைந்ததினால் கொள்ளைநோய் வந்தபோது, கொல்லப்பட்ட பெண்ணும் இவளே. இவற்றிலெல்லாம் அவர்கள் உங்களைப் பகைவர்களாகவே நடத்தினார்கள்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18