எண்ணாகமம் 12 : 1 (OCVTA)
மிரியாமும் ஆரோனும் மோசேயை எதிர்த்தல் மோசே ஒரு எத்தியோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தான். அந்த எத்தியோப்பியப் பெண்ணின் நிமித்தம் மிரியாமும் ஆரோனும் அவனுக்கு விரோதமாகப் பேசத் தொடங்கினார்கள்.
எண்ணாகமம் 12 : 2 (OCVTA)
அவர்கள், “யெகோவா மோசே மூலம் மட்டும்தான் பேசியிருக்கிறாரோ? எங்கள் மூலமாகவும் அவர் பேசவில்லையோ?” என்றார்கள். யெகோவா அதைக் கேட்டார்.
எண்ணாகமம் 12 : 3 (OCVTA)
மோசே மிகவும் தாழ்மையுள்ளவன். அவன் பூமியிலுள்ள எல்லா மனிதரைப் பார்க்கிலும் தாழ்மையுள்ளவனாயிருந்தான்.
எண்ணாகமம் 12 : 4 (OCVTA)
உடனே யெகோவா மோசே, ஆரோன், மிரியாம் ஆகியோரிடம், “நீங்கள் மூவரும் வெளியே சபைக் கூடாரத்திற்கு வாருங்கள்” என்றார். மூவரும் வெளியே வந்தார்கள்.
எண்ணாகமம் 12 : 5 (OCVTA)
அப்பொழுது யெகோவா மேகத்தூணில் இறங்கிவந்து, சபைக் கூடாரத்தின் வாசலில் நின்றார். அவர் ஆரோனையும், மிரியாமையும் அழைத்தார். அவர்கள் இருவரும் முன்னே வந்தார்கள்.
எண்ணாகமம் 12 : 6 (OCVTA)
அப்பொழுது யெகோவா அவர்களிடம் சொன்னது: “என் வார்த்தைகளைக் கேளுங்கள்: “உங்களுக்குள் இறைவாக்குரைப்பவன் ஒருவன் இருந்தால், யெகோவாவாகிய நான் அவனுக்குத் தரிசனங்களில் என்னை வெளிப்படுத்துவேன், கனவுகளில் அவனோடு பேசுவேன்.
எண்ணாகமம் 12 : 7 (OCVTA)
ஆனால் என் அடியவன் மோசேயுடனோ அப்படியல்ல; என் முழு வீட்டிலுமே அவன் உண்மையுள்ளவனாயிருக்கிறான்.
எண்ணாகமம் 12 : 8 (OCVTA)
ஆகையால் நான் அவனோடு நேரடியாகவே பேசுகிறேன், புரியாதவிதமாக அல்ல தெளிவாகவே பேசுகிறேன்; அவன் யெகோவாவின் சாயலைக் காண்கிறான். அப்படியிருக்க, என் அடியான் மோசேக்கு விரோதமாய்ப் பேசுவதற்கு நீங்கள் ஏன் பயப்படவில்லை?”
எண்ணாகமம் 12 : 9 (OCVTA)
அப்பொழுது யெகோவாவின் கோபம் அவர்களுக்கெதிராக மூண்டது, அவர் அவர்களைவிட்டு விலகிப்போனார்.
எண்ணாகமம் 12 : 10 (OCVTA)
அந்த மேகம் கூடாரத்திலிருந்து எழும்பியவுடன் மிரியாம் உறைபனியைப்போல் குஷ்டரோகியாய் நின்றாள். ஆரோன் அவளைத் திரும்பிப் பார்த்தபோது, அவளுக்குக் குஷ்டரோகம் இருப்பதைக் கண்டான்.
எண்ணாகமம் 12 : 11 (OCVTA)
அப்பொழுது ஆரோன் மோசேயிடம், “என் ஆண்டவனே, தயவுசெய்து நாங்கள் மூடத்தனமாய் செய்த பாவத்திற்காக எங்களுக்கு விரோதமாயிராதேயும்.
எண்ணாகமம் 12 : 12 (OCVTA)
தாயின் கருப்பையிலேயே பாதி சதை அழிந்து செத்துப்பிறந்த குழந்தையைப்போல் அவளை இருக்கவிடாதேயும்” என்றான்.
எண்ணாகமம் 12 : 13 (OCVTA)
அப்பொழுது மோசே யெகோவாவிடம், “இறைவனே, தயவுசெய்து அவளைக் குணமாக்கும்” என அழுது வேண்டிக்கொண்டான்.
எண்ணாகமம் 12 : 14 (OCVTA)
அப்பொழுது யெகோவா மோசேயிடம், “அவள் தகப்பன் அவள் முகத்தில் காறித் துப்பியிருந்தால் ஏழுநாட்களுக்கேனும் அவள் அவமானத்துடன் இருக்கமாட்டாளோ? எனவே ஏழுநாட்களுக்கு அவளை முகாமுக்கு வெளியே வையுங்கள். அதற்குப்பின் திரும்பவும் அவளைச் சேர்த்துக்கொள்ளலாம்” என்றார்.
எண்ணாகமம் 12 : 15 (OCVTA)
அப்படியே மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் அடைத்து வைக்கப்பட்டாள். அவள் திரும்பி வரும்வரை மக்கள் அவ்விடம் விட்டு அசையவில்லை.
எண்ணாகமம் 12 : 16 (OCVTA)
அதன்பின் மக்கள் ஆஸ்ரோத்தை விட்டுப் பிரயாணமாகி, பாரான் பாலைவனத்தில் முகாமிட்டார்கள்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16