நெகேமியா 4 : 1 (OCVTA)
திருத்திக் கட்டுதலுக்கு எதிர்ப்பு நாங்கள் திரும்பவும் மதிலைக் கட்டத் தொடங்கியதை சன்பல்லாத் கேள்விப்பட்டபோது, கோபங்கொண்டு, கடும் சீற்றமடைந்தான். அவன் யூதரை அவமதித்து,
நெகேமியா 4 : 2 (OCVTA)
தன்னுடைய கூட்டாளிகளுக்கும் சமாரிய இராணுவத்திற்கும் முன்பாக, “பலவீனமான இந்த யூதர் என்ன செய்கிறார்கள்? அவர்கள் தங்கள் மதிலைத் திரும்பவும் கட்டுவார்களோ? அவர்கள் பலிகளைச் செலுத்துவார்களோ? ஒரே நாளில் முடித்து விடுவார்களோ? இடிபாட்டுக் குவியல்களில் கருகிப்போன கற்களைத் திரும்பவும் உயிர்ப்பிப்பார்களோ?” என்றான்.
நெகேமியா 4 : 3 (OCVTA)
சன்பல்லாத்தின் அருகே நின்ற அம்மோனியனான தொபியா, “அவர்கள் என்ன கட்டுகிறார்கள்? அதற்கு மேலாக ஒரு நரி ஏறினாலும்கூட அவர்களின் கல்மதில் உடைந்துவிடும்” என்று கூறினான்.
நெகேமியா 4 : 4 (OCVTA)
எங்கள் இறைவனே, எங்களுக்குச் செவிகொடும்; ஏனெனில் நாங்கள் அவமதிக்கப்படுகிறோம். அவர்களின் ஏளனங்களை அவர்கள் தலைமீதே திருப்பிவிடும். அவர்களை சிறைப்பிடிக்கும் ஒரு நாட்டுக்குக் கொள்ளைப்பொருளாக ஒப்புக்கொடும்.
நெகேமியா 4 : 5 (OCVTA)
அவர்களுடைய குற்றத்தை மூடாதிரும்; உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றி விடாதிரும்; ஏனெனில் கட்டுபவர்களை முகத்துக்கு முன்பாகவே மனவேதனை உண்டாகும்படி செய்தார்களே.
நெகேமியா 4 : 6 (OCVTA)
மக்கள் முழு இருதயத்துடன் வேலைசெய்தபடியால் நாங்கள் மதிலை அதன் பாதி உயரத்திற்குக் கட்டி முடித்தோம்.
நெகேமியா 4 : 7 (OCVTA)
ஆனால் எருசலேம் மதிலின் திருத்த வேலைகள் தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், அதன் பிளவுகள் திருத்தப்படுகின்றன என்றும் சன்பல்லாத்து, தொபியா, அரபியர், அம்மோனியர், அஸ்தோத்தியர் ஆகியோர் கேள்விப்பட்டபோது கோபம் கொண்டார்கள்.
நெகேமியா 4 : 8 (OCVTA)
எருசலேமுக்கு விரோதமாக வந்து சண்டையிடவும், அதற்கு எதிராகக் கலகம் உண்டுபண்ணவும் அவர்கள் ஒன்றுகூடி சதி செய்தார்கள்.
நெகேமியா 4 : 9 (OCVTA)
ஆனால் நாங்களோ எங்கள் இறைவனிடம் ஜெபம்பண்ணி, இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள இரவும் பகலும் ஒரு காவலை ஏற்படுத்தினோம்.
நெகேமியா 4 : 10 (OCVTA)
இதற்கிடையில் யூதாவின் மக்களோ, “வேலையாட்களின் பெலன் குறைந்திருக்கிறது, இடிபாட்டுக் குவியலோ அதிகமாயிருக்கிறது; அதனால் மதிலைக் கட்ட எங்களால் முடியாது” என்றார்கள்.
நெகேமியா 4 : 11 (OCVTA)
அதேவேளையில் எங்கள் பகைவர்கள், “அவர்கள் எங்கள் திட்டத்தை அறியவோ, எங்களைக் காணவோ முன்பதாக நாங்கள் அவர்களுக்குள்ளே இருந்து அவர்களைக் கொன்று அந்த வேலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்போம்” என்றார்கள்.
நெகேமியா 4 : 12 (OCVTA)
அந்த வார்த்தைகளை எங்கள் பகைவர்கள் மத்தியில் வாழ்ந்த யூதர்கள் கேள்விப்பட்டு, எங்களிடம் வந்து, “நீங்கள் எங்கு திரும்பினாலும் அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்” என்று கிட்டத்தட்ட பத்து தடவைகள் சொன்னார்கள்.
நெகேமியா 4 : 13 (OCVTA)
அதனால் நான்: மதிலின் பின்னே மிகத் தாழ்வான இடங்களில் திறந்தவெளியில் மக்களைக் குடும்பம் குடும்பமாக அவர்களின் வாள்கள், ஈட்டிகள், வில்லுகள் ஆகியவற்றுடன் காவல் செய்யும்படி நிறுத்தி வைத்தேன்.
நெகேமியா 4 : 14 (OCVTA)
அப்பொழுது ஏற்பட்டிருந்த சூழ்நிலையைக் கண்ட நான் எழுந்து நின்று, உயர்குடி மனிதர்களிடமும், அதிகாரிகளிடமும், மீதியாயிருந்த மக்களிடமும், “அவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். மகத்துவமுள்ளவரும், பயபக்திக்குரியவருமாயிருக்கிற யெகோவாவை நினைத்து, உங்கள் சகோதரர், மகன்கள், மகள்கள், மனைவிகள் ஆகியோருக்காகவும் உங்கள் குடும்பங்களுக்காகவும் போராடுங்கள்” என்றேன்.
நெகேமியா 4 : 15 (OCVTA)
எங்கள் பகைவர்களின் திட்டம் எங்களுக்குத் தெரியவந்ததென்றும், இறைவன் அதை முறியடித்துவிட்டார் என்றும் அவர்கள் கேள்விப்பட்டார்கள்; நாங்களோ யாவரும் மீண்டும் அவரவர் வேலையைச் செய்ய மதிலுக்குத் திரும்பினோம்.
நெகேமியா 4 : 16 (OCVTA)
அன்றிலிருந்து எனது வேலைக்காரர்களில் பாதிப்பேர் வேலையைத் தொடர்ந்து செய்தார்கள், மற்ற பாதிப்பேர் காவல் செய்யும்படி ஈட்டிகள், கேடயங்கள், வில்லுகள், கவசம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள். அதிகாரிகளோ யூதா நாட்டு மக்களுக்குப் பின்னாக நின்று மேற்பார்வையிட்டனர்.
நெகேமியா 4 : 17 (OCVTA)
கட்டடப் பொருட்களைத் தூக்குபவர்கள் ஒரு கையால் வேலைசெய்தார்கள். ஆனால் மற்றக் கையில் ஆயுதம் பிடித்திருந்தார்கள்.
நெகேமியா 4 : 18 (OCVTA)
கட்டுகிறவர்களில் ஒவ்வொருவனும் தான் வேலை செய்கையில் தனது இடுப்பில் வாளை சொருகியிருந்தான். தேவையானபோது எச்சரிக்கை செய்வதற்கு, எக்காளம் ஊதுகிறவர்கள் என்னோடு நின்றார்கள்.
நெகேமியா 4 : 19 (OCVTA)
அப்பொழுது நான் உயர்குடி மக்களிடமும், அதிகாரிகளிடமும், மற்ற மக்களிடமும், “எங்கள் வேலை பெரிதும் விசாலமானதாய் இருக்கிறது, நாங்களும் சுவர் நெடுகிலும் ஒருவரைவிட்டு ஒருவர் தூரமாய் பிரிந்திருக்கிறோம்.
நெகேமியா 4 : 20 (OCVTA)
நீங்கள் எங்கே எக்காள சத்தத்தைக் கேட்டாலும், அங்கே எங்களுடன் வந்துசேருங்கள். நம்முடைய இறைவன் நமக்காக யுத்தம் செய்வார்” என்று கூறினேன்.
நெகேமியா 4 : 21 (OCVTA)
அதன்படி அதிகாலை வெளிச்சத்திலிருந்து நட்சத்திரங்கள் வானில் தோன்றும்வரை எங்களில் பாதிப்பேர் ஈட்டியைப் பிடித்தவர்களாக நிற்க, நாங்கள் வேலையைத் தொடர்ந்து செய்தோம்.
நெகேமியா 4 : 22 (OCVTA)
மேலும் நான் மக்களிடம், “ஒவ்வொரு மனிதனும் அவனுடைய உதவியாளனும் எருசலேமுக்குள்ளேயே இரவைக் கழிக்கும்படி செய்யுங்கள்; அப்பொழுது அவர்கள் இரவில் காவலர்களாகவும், பகலில் வேலையாட்களாகவும் நமக்கு வேலை செய்யலாம்” என்றேன்.
நெகேமியா 4 : 23 (OCVTA)
அப்படியே நானோ, என்னுடன் இருந்த சகோதரரோ, எனது மனிதரோ, எனது காவலரோ எங்கள் உடைகளை மாற்றிக்கொள்ளவில்லை. ஒவ்வொருவனும் தண்ணீருக்கு போனபோதும்கூட, எங்கள் வலதுகையில் ஆயுதம் தாங்கியபடியே இருந்தோம்.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23