நாகூம் 2 : 1 (OCVTA)
நினிவேயின் வீழ்ச்சி நினிவே பட்டணமே, உன்னைத் தாக்குகிறவன் உனக்கெதிரே முன்னேறி வருகிறான்; கோட்டையைக் காவல் செய், வீதியை கண்காணி, உன்னைத் திடப்படுத்திக்கொள், உன் முழுப் பெலத்தையும் ஒன்றுதிரட்டு.
நாகூம் 2 : 2 (OCVTA)
அசீரியர் இஸ்ரயேலைப் பாழாக்கி, அவர்களின் திராட்சைத் தோட்டங்களை அழித்துப்போட்டாலும், யெகோவா இஸ்ரயேலின் மாட்சிமையை, யாக்கோபின் மாட்சிமையைப்போல் திரும்பவும் அமைத்துக்கொடுப்பார்.
நாகூம் 2 : 3 (OCVTA)
நினிவேயைத் தாக்குகிற இராணுவவீரர்களின் கேடயங்கள் சிவப்பாய் இருக்கின்றன. போர்வீரர்கள் சிவப்பு உடை உடுத்தியிருக்கிறார்கள். தேர்கள் ஆயத்தப்படும் நாளிலே அவற்றிலுள்ள உலோகம் மினுங்குகிறது. தேவதாரு மரத்தினால் செய்யப்பட்ட ஈட்டிகள் ஆயத்தமாக்கப்படுகின்றன.
நாகூம் 2 : 4 (OCVTA)
தேர்கள் நகரத்திற்கு வெளியே வீதிகளின் வழியாக சதுக்கங்களில் ஓடி, கடகடவென்றோடி, இங்கும் அங்கும் விரைகின்றன. அவை சுடர் விட்டெரியும் தீப்பந்தம்போல் காணப்படுகின்றன, அவை மின்னலைப்போல் பறக்கின்றன.
நாகூம் 2 : 5 (OCVTA)
நினிவேயின் அரசன் தான் தெரிந்தெடுத்த வீரர்களை அழைப்பிக்கிறான். இருந்தும் அவர்கள் தங்கள் வழியில் இடறுகிறார்கள். அவர்கள் பட்டணத்து சுவரை நோக்கி விரைகிறார்கள். பாதுகாப்புக்கான கேடயம் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
நாகூம் 2 : 6 (OCVTA)
ஆனாலும் தாக்குகிறவன் உட்புகுந்துவிட்டான், ஆற்றின் மதகுகள் திறந்து விடப்படுகின்றன; அரண்மனை சரிந்து விழுகிறது.
நாகூம் 2 : 7 (OCVTA)
இது நினிவே என்று தீர்மானிக்கப்படுகிறது பட்டணத்திலுள்ளவர்களை நாடுகடத்திக் கொண்டுபோக உத்தரவிடப்பட்டது. பட்டணத்துப் பணிப்பெண்கள் தங்கள் மார்பில் அடித்து, புறாக்களைப்போல் புலம்புகிறார்கள்.
நாகூம் 2 : 8 (OCVTA)
நினிவே தண்ணீர் நிறைந்த குளம்போல் இருக்கிறது. அதன் தண்ணீரோ வடிந்து ஓடுகிறது. “நில்லுங்கள், நில்லுங்கள்!” என்று அவர்கள் அழுகிறார்கள். ஆனால் ஒருவனும் திரும்பி வருவதில்லை.
நாகூம் 2 : 9 (OCVTA)
வெள்ளியைக் கொள்ளையிடுங்கள், தங்கத்தையும் கொள்ளையிடுங்கள்; அதன் கருவூலங்களில் இருக்கும் திரவியங்களுக்குக் குறைவில்லை, என்று தாக்குகிறவர்கள் சொல்கிறார்கள்.
நாகூம் 2 : 10 (OCVTA)
நினிவே கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டு, வெறுமையாக்கப்பட்டுள்ளது! உள்ளங்கள் கலங்குகின்றன, முழங்கால்கள் தள்ளாடுகின்றன, உடல்கள் நடுங்குகின்றன, எல்லா முகங்களும் வெளிறிப்போய் இருக்கின்றன.
நாகூம் 2 : 11 (OCVTA)
அசீரியன் ஒரு சிங்கம்போல் இருந்தான். ஆனால் இப்பொழுதோ சிங்கங்களின் குகை எங்கே? அவை தமது குட்டிகளுக்கு இரை கொடுத்த இடம் எங்கே? சிங்கமும், அதன் பெண் சிங்கமும் குட்டிகளுடன் பயமின்றிபோன இடம் எங்கே?
நாகூம் 2 : 12 (OCVTA)
சிங்கம் தன் குட்டிகளுக்குப் போதிய அளவு இரையைக் கொன்று. தன் துணைச் சிங்கத்திற்குத் தேவையான இரையைத் பிடித்துக் கொன்று. தான் கொன்றவைகளினால் தன் இடங்களையும், இரையினால் தன் குகையையும் நிரப்பியது.
நாகூம் 2 : 13 (OCVTA)
நினிவேயே, “நான் உனக்கு விரோதமாக இருக்கிறேன்” என்று சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார். “புகை எழும்பும்படி உன் தேர்களை எரிப்பேன், உன் சிங்கக்குட்டிகள் வாளினால் அழியும். பூமியில் உங்களுக்கு இரையில்லாமல் போகச்செய்வேன். உங்கள் தூதுவர்களின் குரல்கள் இனிமேலும் கேட்கப்படுவதில்லை.”
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13