மத்தேயு 7 : 1 (OCVTA)
தீர்ப்பு அளித்தல் “தீர்ப்புச் செய்யாதிருங்கள், நீங்களும் தீர்க்கப்படாதிருப்பீர்கள்.
மத்தேயு 7 : 2 (OCVTA)
நீங்கள் மற்றவர்களுக்கு அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ, அந்த அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.
மத்தேயு 7 : 3 (OCVTA)
“நீ உனது கண்ணிலுள்ள உத்திரத்தைக் கவனிக்காமல், உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பைப் பார்ப்பது ஏன்?
மத்தேயு 7 : 4 (OCVTA)
உன் கண்ணில் உத்திரம் இருக்கையில், நீ உனது சகோதரனிடம், ‘நான் உனது கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடுகிறேன்,’ என எப்படிச் சொல்லலாம்?
மத்தேயு 7 : 5 (OCVTA)
வேஷக்காரனே, முதலில் உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துப்போடு; அப்பொழுது உனது சகோதரனின் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துப் போடத்தக்கதாக நீ தெளிவாகப் பார்க்கக்கூடும்.
மத்தேயு 7 : 6 (OCVTA)
“பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடுக்கவேண்டாம்; உங்கள் முத்துக்களைப் பன்றிகளுக்கு முன் வீச வேண்டாம். அப்படிச் செய்தால், அவை முத்துக்களை மிதித்துவிட்டு, திரும்பி உங்களையும் பீறிப்போடும்.
மத்தேயு 7 : 7 (OCVTA)
கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள் “கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது கதவு உங்களுக்குத் திறக்கப்படும்.
மத்தேயு 7 : 8 (OCVTA)
ஏனெனில், கேட்கிற ஒவ்வொருவரும் பெற்றுக்கொள்கிறார்கள்; தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள்; தட்டுகிறவர்களுக்குக் கதவு திறக்கப்படுகிறது.
மத்தேயு 7 : 9 (OCVTA)
“அப்பத்தைக் கேட்கும் தன் மகனுக்கு, உங்களில் யார் கல்லைக் கொடுப்பான்?
மத்தேயு 7 : 10 (OCVTA)
அல்லது மீனைக் கேட்கும் மகனுக்கு யார் பாம்பைக் கொடுப்பான்?
மத்தேயு 7 : 11 (OCVTA)
தீயவர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல அன்பளிப்புகளைக் கொடுக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியிருக்க, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் கேட்பவர்களுக்கு, நல்ல அன்பளிப்புகளைக் கொடுப்பது அதிக நிச்சயம்!
மத்தேயு 7 : 12 (OCVTA)
ஆகவே, மற்றவர்கள் உங்களுக்கு எவைகளைச் செய்யவேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் மற்றவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் ஆகும்.
மத்தேயு 7 : 13 (OCVTA)
இடுக்கமான வாசலும் அகன்ற வாசலும் “இடுக்கமான வாசல் வழியாக உள்ளே செல்லுங்கள். ஏனெனில் அழிவுக்கு செல்லும் வாசல் அகலமானது, வழியும் விரிவானது. பலர் அதன் வழியாகவே உள்ளே செல்லுகிறார்கள்.
மத்தேயு 7 : 14 (OCVTA)
ஆனால் இடுக்கமான வாசலும், குறுகலான வழியுமே வாழ்வுக்கு வழிநடத்துகின்றன. ஒரு சிலர் மட்டுமே அதைக் கண்டுபிடிக்கிறார்கள்.
மத்தேயு 7 : 15 (OCVTA)
மரமும் அதன் கனியும் “பொய் தீர்க்கதரிசிகளைக்குறித்து விழிப்பாயிருங்கள். அவர்கள் ஆட்டுத் தோலைப் போர்த்திக்கொண்டு உங்களிடம் வருவார்கள். ஆனால் உள்ளத்திலோ அவர்கள் கடித்துக் குதறுகிற ஓநாய்கள்.
மத்தேயு 7 : 16 (OCVTA)
அவர்களது கனியினால் நீங்கள் அவர்கள் யாரென்று அடையாளம் கண்டுகொள்வீர்கள். மக்கள் முட்புதர்களில் இருந்து திராட்சைப் பழங்களையும், முட்செடிகளிலிருந்து அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?
மத்தேயு 7 : 17 (OCVTA)
இல்லையே, அதேபோல், ஒவ்வொரு நல்ல மரமும் நல்ல கனியைக் கொடுக்கும். கெட்ட மரமோ, கெட்ட கனியையே கொடுக்கும்.
மத்தேயு 7 : 18 (OCVTA)
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரமும் நல்ல கனிகளைக் கொடுப்பதில்லை.
மத்தேயு 7 : 19 (OCVTA)
நல்ல கனிகொடாத ஒவ்வொரு மரமும், வெட்டி வீழ்த்தப்பட்டு நெருப்பில் வீசப்படும்.
மத்தேயு 7 : 20 (OCVTA)
இவ்வாறு, அதனதன் கனியினால் மரங்களை அடையாளம் கண்டுகொள்வீர்கள்.
மத்தேயு 7 : 21 (OCVTA)
உண்மையான மற்றும் கள்ள சீடர்கள் “என்னை நோக்கி, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என்று, சொல்லுகிற எல்லோரும், பரலோக அரசிற்குள் செல்வதில்லை. மாறாக பரலோகத்தில் இருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவர்கள் மட்டுமே அதின் உள்ளே செல்வார்கள்.
மத்தேயு 7 : 22 (OCVTA)
அந்நாளில் அநேகர் என்னிடம், ‘ஆண்டவரே, ஆண்டவரே, நாங்கள் உமது பெயரில் இறைவாக்கு உரைக்கவில்லையா? உமது பெயரில் பிசாசுகளைத் துரத்தவில்லையா? உமது பெயரில் பல அற்புதங்களைச் செய்யவில்லையா?’ என்று சொல்வார்கள்.
மத்தேயு 7 : 23 (OCVTA)
அப்பொழுது நான் அவர்களிடம், ‘அக்கிரம செய்கைக்காரர்களே! நான் ஒருபோதும் உங்களை அறியவில்லை, என்னைவிட்டு அகன்றுபோங்கள்’ என்று வெளிப்படையாகச் சொல்வேன்.
மத்தேயு 7 : 24 (OCVTA)
இருவகை வீடுகள் “எனவே, நான் சொல்லும் இவ்வார்த்தைகளைக் கேட்டு, இவற்றின்படி செய்கிற ஒவ்வொருவனும், கற்பாறையின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியுள்ளவனைப் போலிருப்பான்.
மத்தேயு 7 : 25 (OCVTA)
மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது; அப்படி இருந்தும், வீடு விழவில்லை. ஏனெனில் அதன் அஸ்திபாரம் கற்பாறையின்மேல் போடப்பட்டிருந்தது.
மத்தேயு 7 : 26 (OCVTA)
ஆனால், எனது இவ்வார்த்தைகளைக் கேட்டும், அதன்படி செயல்படாத ஒவ்வொருவனும், மணலின்மேல் தன் வீட்டைக் கட்டிய புத்தியில்லாதவன் போலிருப்பான்.
மத்தேயு 7 : 27 (OCVTA)
மழை பெய்தது, வெள்ளம் மேலெழுந்தது, காற்று வீசி வீட்டைத் தாக்கியது, அந்த வீடோ பலத்த சேதத்துடன் இடிந்து விழுந்தது.”
மத்தேயு 7 : 28 (OCVTA)
இவற்றை இயேசு சொல்லி முடித்தபோது, மக்கள் அவருடைய போதனையைக் கேட்டு வியப்படைந்தார்கள்.
மத்தேயு 7 : 29 (OCVTA)
ஏனெனில் அவர் மோசேயின் சட்ட ஆசிரியர்களைப்போல் போதிக்காமல், அதிகாரமுள்ளவராய் அவர்களுக்கு போதித்தார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29