மாற்கு 2 : 1 (OCVTA)
இயேசு முடக்குவாதக்காரனைக் குணப்படுத்துதல் சில நாட்களுக்குப்பின், இயேசு மீண்டும் கப்பர்நகூமுக்குச் சென்றபோது, அவர் வீட்டிற்கு வந்திருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டார்கள்.
மாற்கு 2 : 2 (OCVTA)
எனவே மக்கள் அங்கு திரளாய் கூடிவந்தார்கள்; இதனால் வீட்டின் வாசலுக்கு வெளியேயும் இடம் இல்லாமல் போயிற்று. இயேசு மக்களுக்கு வார்த்தையைப் போதித்தார்.
மாற்கு 2 : 3 (OCVTA)
அப்பொழுது சிலர் முடக்குவாதக்காரன் ஒருவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவர்களில் நாலுபேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்திருந்தார்கள்.
மாற்கு 2 : 4 (OCVTA)
ஆனால் மக்கள் கூட்டம் அதிகமாய் இருந்தபடியால், அவர்களால் அவனை இயேசுவினிடத்தில் கொண்டு வரமுடியவில்லை; எனவே அவர்கள் இயேசு இருந்த இடத்துக்கு மேலாக உள்ள கூரையைப் பிரித்துத் திறப்பு உண்டாக்கி, முடக்குவாதக்காரனைப் படுத்திருந்த படுக்கையோடு கீழே இறக்கினார்கள்.
மாற்கு 2 : 5 (OCVTA)
இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டபோது, அந்த முடக்குவாதக்காரனிடம், “மகனே, உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
மாற்கு 2 : 6 (OCVTA)
அங்கிருந்த சில மோசேயின் சட்ட ஆசிரியர்கள், தங்கள் இருதயங்களில்,
மாற்கு 2 : 7 (OCVTA)
“இவன் ஏன் இப்படிப் பேசுகிறான்? இவன் இறைவனை நிந்திக்கிறானே! இறைவனால் மாத்திரமேயன்றி, வேறு யாரால் பாவங்களை மன்னிக்க முடியும்?” என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள்.
மாற்கு 2 : 8 (OCVTA)
உடனே இயேசு தமது ஆவியில் அவர்கள் தங்களுடைய இருதயங்களில் இவ்வாறு சிந்திக்கிறார்கள் என அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நீங்கள் ஏன் இவ்விதமாகச் சிந்திக்கிறீர்கள்?
மாற்கு 2 : 9 (OCVTA)
நான் இந்த முடக்குவாதக்காரனிடம், ‘உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதா, அல்லது, ‘நீ எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட’ என்று சொல்வதா, எது எளிது?” என்று கேட்டார்.
மாற்கு 2 : 10 (OCVTA)
ஆனால், “பூமியிலே பாவங்களை மன்னிப்பதற்கு மானிடமகனாகிய எனக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும்” என்று விரும்புகிறேன்.
மாற்கு 2 : 11 (OCVTA)
பின்பு இயேசு அந்த முடக்குவாதக்காரனிடம், “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு உன் வீட்டுக்குப்போ” என்றார்.
மாற்கு 2 : 12 (OCVTA)
உடனே அவன் எழுந்து தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக நடந்துபோனான். இதனால் எல்லோரும் வியப்படைந்து, “இப்படிப்பட்ட காரியத்தை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்று சொல்லி, இறைவனைத் துதித்தார்கள்.
மாற்கு 2 : 13 (OCVTA)
இயேசு லேவியை அழைத்தல் மீண்டும் இயேசு புறப்பட்டு, கடற்கரை அருகே சென்றார். மக்கள் கூட்டமாகத் திரண்டு அவரிடம் வந்தார்கள்; இயேசு அவர்களுக்குப் போதித்தார்.
மாற்கு 2 : 14 (OCVTA)
பின்பு அவர் தொடர்ந்து நடந்துபோகையில் அல்பேயுவின் மகனான லேவி, வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். இயேசு அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அப்பொழுது லேவி எழுந்து, அவரைப் பின்பற்றிச் சென்றான்.
மாற்கு 2 : 15 (OCVTA)
இயேசு லேவியின் வீட்டில் விருந்து சாப்பிடுகையில், வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் பந்தியில் இருந்தார்கள்; ஏனெனில் இவர்களில் அநேகர் இயேசுவைப் பின்பற்றினார்கள்.
மாற்கு 2 : 16 (OCVTA)
பாவிகளோடும் வரி வசூலிக்கிறவர்களோடும் இயேசு சாப்பிட்டுக் கொண்டிருப்பதை மோசேயின் சட்ட ஆசிரியர்களான பரிசேயர் கண்டபோது, அவர்கள் இயேசுவின் சீடர்களிடம், “அவர் ஏன் வரி வசூலிக்கிறவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறார்?” என்று கேட்டார்கள்.
மாற்கு 2 : 17 (OCVTA)
இதைக் கேட்டபோது, இயேசு அவர்களிடம், “சுகமாயிருப்பவர்களுக்கு வைத்தியன் தேவையில்லை, வியாதியாய் இருப்பவர்களுக்கே வைத்தியன் தேவை. நான் நீதிமான்களை அழைப்பதற்காக வரவில்லை, பாவிகளையே அழைக்கவந்தேன்” என்றார்.
மாற்கு 2 : 18 (OCVTA)
உபவாசத்தைப் பற்றி இயேசுவிடம் கேள்வி அந்நாட்களில் யோவானின் சீடர்களும் பரிசேயரும் உபவாசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது சிலர் இயேசுவினிடத்தில் வந்து, “யோவானின் சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் உபவாசிக்கிறார்கள், ஆனால் உம்முடைய சீடர்கள் ஏன், உபவாசிப்பதில்லை?” என்று கேட்டார்கள்.
மாற்கு 2 : 19 (OCVTA)
அதற்கு இயேசு, “மணமகன் தங்களுடன் இருக்கும்போது, மணமகனின் விருந்தினர் எப்படி உபவாசிப்பார்கள்? மணமகன் தங்களோடு இருக்கும்வரைக்கும், அவர்களால் உபவாசிக்கமுடியாது.
மாற்கு 2 : 20 (OCVTA)
ஆனால், மணமகன் அவர்களைவிட்டு எடுக்கப்படும் காலம் வரும்; அந்த நாளில், அவர்கள் உபவாசிப்பார்கள்.
மாற்கு 2 : 21 (OCVTA)
“யாரும் பழைய ஆடையில் புதிய துணியை ஒட்டுப் போடுவதில்லை. அப்படி ஒட்டுப் போட்டால், அந்தப் புதிய துணி பழையதிலிருந்து கிழியும்; கிழிசலும் இன்னும் அதிகமாகும்.”
மாற்கு 2 : 22 (OCVTA)
யாரும் புதிய திராட்சை இரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைப்பதில்லை. இல்லையென்றால், அந்த திராட்சை இரசம் தோல் பைகளை வெடிக்கச்செய்யும்; திராட்சை இரசம், தோல் பை ஆகிய இரண்டுமே பாழாய்ப்போகும். அப்படிச் செய்யாமல், புதிய திராட்சை இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும்.
மாற்கு 2 : 23 (OCVTA)
இயேசு ஓய்வுநாளின் கர்த்தர் ஒரு ஓய்வுநாளில் இயேசுவும் அவருடைய சீடர்களும் தானியம் விளைந்திருந்த வயல்வழியாகப் போகையில், சீடர்கள் தானியக்கதிர்கள் சிலவற்றைப் பறிக்கத் தொடங்கினார்கள்.
மாற்கு 2 : 24 (OCVTA)
பரிசேயர்கள் இயேசுவிடம், “ஓய்வுநாளில் மோசேயின் சட்டத்தினால் தடைசெய்யப்பட்ட காரியத்தை அவர்கள் ஏன் செய்கிறார்கள்?” என்று கேட்டார்கள்.
மாற்கு 2 : 25 (OCVTA)
இயேசு அதற்குப் பதிலாக அவர்களிடம், “தாவீதும் அவனுடைய கூட்டாளிகளும், பசியாயிருந்தபோது என்ன செய்தார்கள் என்பதைப்பற்றி நீங்கள் ஒருபோதும் வாசிக்கவில்லையா?
மாற்கு 2 : 26 (OCVTA)
அபியத்தார் பிரதான ஆசாரியனாக இருந்த நாட்களில், தாவீது இறைவனுடைய வீட்டிற்குள் போய், மோசேயின் சட்டத்தின்படி ஆசாரியர்கள் மட்டுமே சாப்பிடக்கூடிய தேவசமுகத்து அப்பத்தை அவன் சாப்பிட்டு அதில் சிலவற்றைத் தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தானே” என்றார்.
மாற்கு 2 : 27 (OCVTA)
பின்பு இயேசு அவர்களிடம், “ஓய்வுநாளுக்காக மனிதன் அல்ல; மனிதனுக்காக ஓய்வுநாள் உண்டாக்கப்பட்டது.
மாற்கு 2 : 28 (OCVTA)
அந்தப்படியே மானிடமகனாகிய நான் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராய் இருக்கிறேன்” என்றார்.
❮
❯
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28